சகோதரிகளின் திருமணத்துக்கு செலவு செய்வதில் விவேகம் தேவை!

பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா? – பாகம் 6

அடுத்து நாம் நமது இளைஞர்களுக்குச் சொல்ல வரும் ஆலோசனை:

சகோதரிகளின் திருமணத்துக்கு செலவு செய்வதில் விவேகம் தேவை

ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒவ்வொரு சூழல்.


ஒரு சிலருக்கு தந்தை இறந்திருக்கலாம். வேறு சிலருக்கு தந்தை உடல் நலம் குன்றியவராக இருக்கலாம். அல்லது அவரால் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கலாம்.


ஒரு சில இளைஞர்களுக்கு திருமணம் ஆகாத ஒரே ஒரு சகோதரி; வேறு சிலருக்கோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சகோதரிகள்...

ஒரு சில இளைஞர்களின் தந்தைக்கு ஏராளமான சொத்துக்கள். வேறு சிலருக்கோ சொத்துக்கள் அவ்வளவாக கிடையாது...


உங்கள் தாய் அல்லது தாயும் தந்தையும் உங்களிடம் எதிர்பார்ப்பதென்ன? "அண்ணன் காரன்" தான் தன் தங்கைகளுக்கு எல்லா செலவுகளையும் செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும்!

இங்கே இந்தப் பிரச்சனையை நாம் இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம்.


ஒன்று

அவ்வளவாக சொத்துக்கள் இல்லாத குடும்பத்து இளைஞர்கள்:
இந்த இளைஞர்கள் நன்றாகப் படித்து நன்றாக சம்பாதித்து, நல்ல முறையில் தன் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைப்பது மறுமையில் நல்ல கூலியைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை!

ஆனால் இயன்ற வரை - மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற குடும்பத்தில் பெண் கொடுங்கள்; திறமையான மாப்பிள்ளையைத் தேடிப் பார்த்து திருமணம் செய்து கொடுங்கள்!

அத்தோடு சரி! ஆனால் - அவர்களின் திருமணத்துக்குப் பிறகும், உங்கள் சகோதரிகள், அவர்களுக்கு நீங்கள் தொடர்ந்து செலவு செய்து கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அழகாக மறுத்து விடுங்கள். ஏனெனில் - நீங்கள் உங்கள் குடும்பத்தையும் கவனித்திட வேண்டியிருக்கின்றது!

இரண்டு:

நிறைய சொத்து உள்ள குடும்பத்து இளைஞர்கள்:

இங்கே தான் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தந்தை இறந்து விட்டிருந்தால் - தந்தையின் சொத்துக்கள் பிரிக்கப்பட்டு வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான தாய்மார்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? "நான் உயிரோடு இருக்கும் வரை சொத்துக்களைப் பிரித்திட அனுமதித்திட மாட்டேன்!"

இவரே இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்திடும் தாய்!

ஆனால் இவரது மகன் அல்லது மகன்கள் என்ன செய்கிறார்கள்? "அம்மா" பேச்சைக் கேட்டுக்கொண்டு விடுவார்கள். அடுத்து சகோதரிகள் அனைவருக்கும் எல்லாச் செலவுகளையும் செய்து திருமணம் முடித்து வைப்பார்கள் சகோதரர்கள். அவர்களின் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து செல்வு செய்திட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். உங்களால் சேமிக்கவே முடியாது!

உங்கள் தாய் கடைசியில் வைக்கின்ற "ஆப்பு" என்ன தெரியுமா? உங்கள் தந்தையின் சொத்துக்களைப் பாகம் பிரித்திடும் போது எந்த அளவு மகள்களுக்கு சேர்க்க முடியுமோ அந்த அளவுக்கு முயற்சிப்பார்கள். இதிலே நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள் உங்கள் தாயும் சகோதரிகளும்!

சில சகோதரிகள் வழக்கு மன்றங்களுக்குக் கூட செல்லத் தயங்க மாட்டார்கள்! அவர்களது கணவன் மார்களும் வந்து நிற்பார்கள் - ஏதாவது எலும்புத்துண்டு சிக்காதா என்று பார்த்துக் கொண்டு!!

எனவே தான் - இப்படிப்பட்ட நிலையில் உள்ள இளைஞர்களுக்கு நாம் சொல்வது - மார்க்க முறைப்படி இறந்து விட்ட தந்தையின் சொத்துக்களைப் பிரித்து உங்கள் பங்கினை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களால் இயன்ற வரை உங்கள் சகோதரிகளுக்கு நடு நிலை தவறாமல் செலவு செய்திடுங்கள். தாயைக் கை விட்டு விடாதீர்கள்!

இன்னொரு நிலை என்ன தெரியுமா?

சொத்துக்களும் இருக்கின்றன. தந்தையும் தாயும் உயிருடன் இருக்கிறார்கள்.
இந்த சொத்துக்களைக் காட்டியே மகன்களை மிரட்டி வைக்கின்ற பெற்றோர்களை நான் பார்த்திருக்கின்றேன்!

மகன் சம்பாதிப்பார்! ஆனால் அவர் எதனையும் சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது! எல்லாவற்றையும் தாயிடமும் தந்தையிடமும் கொடுத்து விட வேண்டும்!

இறுதியில் மகன் மீது திருப்தி இல்லை என்று எல்லாச் சொத்துக்களையும் மகள்களுக்கு எழுதி வைத்து விடுவார்கள்.

இந்த சொத்தை நம்பி, எல்லா செல்வத்தையும் கண்ணை மூடிக்கொண்டு பெற்றோர்களிடம் கொடுத்து விட்டு ஏமாந்த சோனகிரிகளையும் நாம் அறிவோம்!

ஒன்றை உங்களுக்குச் சொல்கிறோம்! உங்களுக்குத் தந்தை இருக்கும்போது, அவருக்கு சொத்துக்கள் இருக்கும்போது உங்கள் சகோதரிகளுக்குத் திருமணம் முடித்து வைத்திட வேண்டியது உங்கள் தந்தையின் பொறுப்பே!
நாம் சொல்ல வருவது என்னவெனில் - உங்கள் பெற்றோர்களுக்கு நியாய உணர்வே இல்லை என்பதை  நீங்கள் கண்டு கொண்டு விட்டால் - உங்கள் சேமிப்பு குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்! அவர்கள் உங்களுக்குரிய பாகத்தை மறுத்து விட்டால் கூட உங்கள் சேமிப்பிலிருந்து உங்கள் வாழக்கையைக் கட்டமைக்கலாம்.

உங்கள் பெற்றோர் நியாய உணர்வு மிக்கவர்களாக இருந்தால் - நான் மேலே சொன்னது எதுவும் உங்களுக்குப் பொருந்தாது! நாம் சொல்ல வருவதெல்லாம் நியாய உணர்வற்ற பெற்றோர் குறித்துத் தான்!

எனவே - இப்போதே - உங்கள் குடும்பத்தை எடை போடுங்கள்! அவர்கள் மார்க்கத்தைப் பின் பற்றி வாழ்கிறார்களா என்று பாருங்கள். - அவர்களிடம் நியாய உணர்வு இருக்கிறதா என்று பாருங்கள். - அவர்கள் இரட்டை வேடம் போடக் கூடியவர்களா என்றும் அவசியம் பாருங்கள். - அவர்கள் நியாய உணர்வு அற்றவர்களாக இருந்திட்டால், நீங்கள் சற்றே கவனமாக நடந்து கொள்ள வேண்டியது தான்.

அடுத்து பொதுவாக நாம் சொல்ல வருவது என்னவென்றால் - உங்கள் வருமானத்துக்கு ஏற்றவாறு - குடும்ப செலவுகளைத் திட்டமிடுங்கள்.

தாய்க்கும், தந்தைக்கும் - நல்ல உணவுக்காகவும், நல்ல உடைகளுக்காகவும் தாராளமாகக் கொடுங்கள். மருத்துவ செலவுகளுக்கும் குறை வைக்காமல் செலவு செய்திடுங்கள். அவ்வளவு தான். இதற்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் - உங்கள் எதிர்காலம் குறித்துத் திட்டம் தீட்டுவது தான்.
தாராளமாக சம்பாதிப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் தங்கைகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் நீங்கள் தாராளமாகவே செலவு செய்திடலாம்.

நீங்கள் செய்கின்ற அனைத்து செலவுகளும் "சதகா" வாக ஆகி விடும்.

ஆனால் - நாம் கவலைப் படுவது எல்லாம், நடுத்தர வர்க்கத்து இளைஞர்களைக் குறித்துத் தான். இவர்கள் என்ன செய்கிறார்கள்? பெற்றோர்களின் வரம்பு மீறிய செலவுகளுக்காக தான் சம்பாதித்ததை எல்லாம் அப்படியே அவர்களிடம் கொடுத்து விட்டு, அது போதாது என்று - அவர்கள் வற்புறுத்திக் கேட்கிறார்கள் என்பதற்காக கடனையும் வாங்கிக் கொடுத்து விட்டு, மனைவி மக்களுக்காக எதனையும் சேமித்து வைக்காமல், வாங்கிய கடனை அடைப்பதிலேயே காலத்தைக் கடத்துகின்றனர்! எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையாத அம்மாக்களிடம் ஏமாந்து போய் நிற்கின்றனர்!

மார்க்கத்தைக் கடை பிடிக்கின்ற, நியாய உணர்வு படைத்தவர்களா உங்கள் பெற்றோர்கள்? அப்படியானால் அவர்கள் சொல் பேச்சை அப்படியே கேட்டு நடந்து கொள்ளுங்கள்! ஏனெனில் அப்படிப்பட்ட தாயின் பாதங்களில் தான் சொர்க்கம் அமைந்துள்ளது! அப்படிப் பட்ட தந்தையின் திருப்தியில் தான் இறைவனின் திருப்தியும் உள்ளது.

அதுவல்லாமல், உங்களைப் பெற்றவர்கள் இரட்டை வேடம் போடுபவர்களாக இருந்தால் - அவர்கள் இழுக்கின்ற பக்கமெல்லாம் வளைந்து நெளிய வேண்டியது உங்கள் மீது கடமையே அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்!

Comments