ஏன் இப்படி விளையாடுகிறார்கள் – பெற்றோர்களும் சகோதரிகளும்?

பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா? - பாகம் 2

புதிதாகத் திருமணம் முடித்த கணவன் மனைவியருக்கு இரு தரப்புப் பெற்றோர்களும் தாங்கள் பெற்ற அனுபவங்களிலிருந்து நேர்மையான நல்ல அறிவுரைகளை வழங்கி வழிகாட்டுதல் நல்லதே! நன்மையே!

ஆனால் இங்கே பெரும்பாலான பெற்றோர்களின் நிலை வேறு விதமாகவே இருக்கின்றது! அளவுக்கு அதிகமான குறுக்கீடுகளையும், (interference), உள் நோக்கத்துடன் கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களையுமே இங்கே நாம் காண முடிகின்றது!


பெற்றோர்களின் இப்படிப்பட்ட தேவையற்ற குறுக்கீடுகள் - திருமண வாழ்வையே இறுக்கமானதாக (stressful) ஆக்கி விடுகின்றன! கணவன் மனைவி புரிந்துணர்வையே சிதைத்து விடுகின்றன!

இதனை எல்லோருக்கும் முன்னதாக கணவனும் மனைவி இருவருமே புரிந்து கொள்தல் அவசியம்.

கணவனும் மனைவியும் மிக அருகில் உள்ள நகரத்துக்குச் சென்று தாங்கள் புதிதாகக் குடியேற இருக்கும் வீட்டுக்கு ஜன்னல் திரைகளை வாங்கிடப் புறப்படுகின்றனர்!

"ஜன்னல் திரைகளை வாங்குவதற்கு ஆண்கள் போனால் போதாதா? நீ வேறு எதற்குப் போக வேண்டும்?"


துப்பட்டியைப் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்ட மருமகள் - அப்படியே மனம் குன்றி அமர்ந்து விடுகிறார்!!

அருகில் உள்ள ஊரில் ஒரு விஷேசம்! அண்ணன், அண்ணன் மனைவி, தம்பி, தம்பி மனைவி, இரண்டு சகோதரிகள், குழந்தைகளுடன் காரில் புறப்பட இருக்கும் சமயம். திடீரென்று செல்போன் அழைப்பு அம்மாவிடமிருந்து.

"ஏன் இத்தனை பேர்? தம்பி மனைவி போக வேண்டாம்! மற்றவர்கள் போய் வந்தால் போதும்!"

அந்தத் தம்பி மனைவிக்கு எப்படி இருக்கும்? இத்தனைக்கும் இந்தத் "தம்பி" தான் காருக்கு வாடகை தருபவர்!

"இல்லையம்மா! நான் மனைவியை அழைத்துக் கொண்டுதான் போகிறேன்!" என்று அந்தத் தம்பி சொல்லலாம் அல்லவா?

ஏன் சொல்லவில்லை என்பதே நம் கேள்வி!

திருமணம் முடித்து பயணம் சென்று விட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் பயணத்திலிருந்து வருகிறார் பெற்ற மகன்! இரண்டு மாத விடுமுறை; இரு வீட்டாருக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை! மகனை மாமியார் வீட்டுக்கு அனுப்பவில்லை தாய்! மனைவி வீட்டார் தங்கள் மகளை அனுப்பி வைக்கிறார்கள்; மருமகளை மகனுடன் படுப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை அந்தப் புனிதவதி!

தாய் பேச்சைத் தட்டாத அருமை மகன் - இரண்டு மாதங்களையும் கூடத்திலேயே பாய் போட்டுப் படுத்து விட்டு பயணம் புறப்பட்டுப் போய் விடுகிறார்! என்ன செய்வது? பெத்த தாயின் பேச்சை எப்படி மீறுவது?

கணவன் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்; குடும்பத்துடன் தங்குவதற்கு வீடும் கம்பெனியில் தருகிறார்கள்; மனைவியுடன் சேர்ந்து வாழவும், நல்ல உணவுக்காகவும் மனைவியை அங்கு அழைத்துக் கொள்ள கணவன் விரும்பினால் அதில் தலையிட பெற்றோர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இங்கேயும் பெற்ற தாய்மார்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றேன் என்று தாம் ஏதோ பெரிய தியாகம் செய்வதாக எண்ணிக் கொள்கின்றனர் ஆண்மகன்கள்! மனைவியின் உரிமை? அது பற்றி யாருக்குக் கவலை?

தன் மகனுக்கு அழகான ஒரு பெண்ணைத் தேடுகிறார் ஒரு தாய்! உறவினர் ஒருவர் அந்தத் தாயிடம் கேட்ட கேள்வி: "நீ உனக்கு ஒரு மருமகளைப் பார்க்கிறாயா? உன் மகனுக்கு அழகு சுந்தரி ஒருவரைப் பார்க்கிறாயா?"

என்ன எச்சரிக்கை இது?


ஒரு குடும்பத்தில் தந்தைக்கு அடுத்த படி, குடும்பப் பொறுப்புகள் அனைத்தும் யார் மீது சுமத்தப் படுகிறது? அக்குடும்பத்தின் ஆண் மகன்களிடத்தில் தான்!

நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்த தந்தை உடல் நலம் குன்றி விட்டாலோ, அல்லது அவரால் போதுமான அளவுக்கு பொருளீட்ட இயலாமல் போய் விட்டாலோ, அல்லது தந்தை இறந்து போய் விட்டாலோ - அக்குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் அவரது மகன் அல்லது மகன்கள் சுமந்து கொள்கிறார்கள். அந்த சுமையை ஒரு சுமையாகக் கருதாமல் ஒரு சுகமாகக் கருதுகின்ற பல இளைஞர்களை நாம் பார்க்கலாம்.

இப்படிப் பட்ட குடும்பப் பொறுப்பு, ஒரு இளைஞனுக்கு எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். பள்ளிக் கூடத்திலோ கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்கும் போது கூட வரலாம். குடும்பப் பொறுப்புக்காக தன் படிப்பைக் கை விட வேண்டிய நிலை ஏற்படலாம். தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டது என்பதால், ப்ளஸ் டூ படித்து விட்டு மேற்படிப்புக் கனவைத் தூக்கி எறிந்து விட்டு ஜவுளிக்கடை வேலை ஒன்றுக்கு வருகிறான் ஒரு இளைஞன்.

தன் தந்தைக்கு அடுத்த படி ஒரு இளைஞன் தன் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய "கடமைகள்" என்று எவைகளைத் தன் தலை மீது சுமத்திக் கொண்டிருக்கின்றான்?

- தன் தந்தை வாங்கிய கடனை அடைப்பது. (அவர் அடகு வைத்த சொத்துக்களை மீட்பது)

- குடும்பச் செலவுகளை கவனித்துக் கொள்வது.

- தன் கூடப் பிறந்த அக்கா- தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது.

- குடும்பத்தின் இதர செலவுகளையும் கவனித்துக் கொள்வது.

இப்படி எந்த ஒரு சுய நலமும் இல்லாமல் - குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் தன் தலை மீது சுமந்து கொள்கின்ற அந்த ஆண் மகனிடம் அந்தக் குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் - அதாவது - தாயும் சகோதரிகளும் - எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

நன்றாகவே நடந்து கொள்கிறார்கள்! "எங்கள் அண்ணனைப் போல் வருமா?" என்கிறார்கள்! குறிப்பாக அண்ணன் பயணம் போய் வருபவனாக இருந்து விட்டால் நன்றாக ஆக்கிப் போட்டு விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள்!

ஆனால் அது எது வரை? அந்த இளைஞன் தான் சம்பாதிப்பதை எல்லாம் தன் தாயையும் சகோதரிகளையும் "கவனித்துக் கொள்கின்ற" காலம் வரை தான்!

அவனுக்குத் திருமணம் ஆகி , குழந்தை குட்டிகள் பெற்றுக் கொண்ட பின்பு  அவன் தன் எதிர் காலத்துக்கு என்று திட்டமிடத் தொடங்கி விட்டால் வந்து விடும் பேராபத்து! 

பயணம் சென்றவன் முன்பு போல் பணம் அனுப்புவதில்லை என்றால் அவ்வளவு தான்! மனைவிக்கு ஏதாவது நகை செய்து போட்டு விட்டாலோ அவ்வளவு தான்! நிலைமை தலை கீழாக மாறி விடும்.

தாயைப் பார்க்க வந்தால், முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளுவார்கள். தந்தை வீட்டில் இருந்தால் மகனிடம் "கணக்குக்" கேட்கத் துவங்கி விடுவார்.

அப்படியானால் ஒரு தாய் தன் மகனிடம், இன்னும் என்ன தான் எதிர் பார்க்கிறாள்?

தன் மகன் "கடைசி வரைக்கும்" குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டுமாம். சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டு தானும் திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கும் இளைஞன், தன் மனைவி மக்கள் குறித்து சிந்தித்திடக் கூடாது; தன் சகோதரிகளுக்கும், ஏன், இன்னும் ஒரு படி மேலே போய் சகோதரிகளின் குழந்தைகளுக்கும் "செலவு" செய்திட வேண்டும் என்று தாயும் சகோதரிகளும் எதிர் பார்க்கிறார்கள், இது எந்த விதத்தில் நியாயம்?

மகனிடமிருந்து காசு பறித்து அவற்றை தன் மகள்கள் வீட்டுக்கு சேர்த்து வைப்பதில் ஒரு தாய்க்கு இருக்கும் சுகம் அலாதியானது! அடடா!
மகன் சொத்து சேர்த்து விடக் கூடாது! அவன் சிறிது சேமித்து வைத்து விடக் கூடாது! மனைவிக்கு ஒரு நகை நட்டு செய்து விடக் கூடாது!

தன் எதிர் காலம் குறித்துத் திட்டமிடத் தொடங்கும் ஒரு மகனை - அவனது தாய் எப்படி "மூளைச் சலவை" செய்கிறாள் தெரியுமா?

இதோ - வெளி நாட்டில் இருக்கும் மகனிடத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. மனைவியிடத்தில் பேசலாம் என்று அழைக்கிறான் இளைஞன். ஆனால் போனை எடுத்துப் பேசுவது தாய்.....!

"தம்பீ! எப்படி இருக்கே! நல்லா இருக்கியா?" போன்ற நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு....

"தம்பீ! அவசரப் பட்டு ஊருக்கு இப்ப வந்துடாதேப்பா! அக்கா மகள் சமீமாவை பெண் கேட்டு வர்ராங்கப்பா! நல்ல இடமெல்லாம் நிறைய வருது. மச்சானைப் பத்தித் தான் உனக்குத் தெரியுமே! அவரை நம்ப முடியாதுப்பா! நம்ம தாம்ப்பா எப்படியாவது தோது செய்து ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும்"

அடுத்து அக்கா போனை வாங்கி "ஆமாம் தம்பி, அல்லாஹ்வுக்கு அடுத்த படி, உன்னைத் தான் தம்பி நான் மலை போல் நம்பியிருக்கேன்.... எப்படியாவது தோது பண்ணி பணம் அனுப்பி வை தம்பி...... "

மனைவியிடம் பேசுவதை மறந்தே போய் போனை வைத்து விடுகிறான் நமது இளைஞன்!

ஏன் இப்படி விளையாடுகிறார்கள் - பெற்றோர்களும் சகோதரிகளும்?

இது நமது சமூகத்தில் புரையோடிப் போய் விட்ட ஆழமான ஒரு நோய்! இந்த நோய்க்கான காரணத்தையும், அதற்கான மருந்தையும் நாம் கண்டுபிடித்தே ஆக வேண்டும்.

கணவன் மனைவி திருமண வாழ்வில் பெற்றோர்கள் குறுக்கிடும்போது குறிப்பாக கணவன்மார்கள் பெற்றோருக்குக் கட்டுப் பட்டு விடுவது எதனால்?

வாருங்கள் கண்டுபிடிப்போம் - இன்ஷா அல்லாஹ்!

Comments