பெற்றவங்க சொல்லும் போது அத மீறி செயல்பட முடியுமா?;

பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா? – பாகம் 7

ஒரு வழியாக தங்கைகளுக்கெல்லாம் திருமணம் முடித்து, அடுத்து உங்கள் வீட்டில் இப்போது தான் உங்கள் திருமணத்தைப் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்போது தான் மிக முக்கியமான திருப்பு முனை உங்கள் வாழ்வில்!
அல்லாஹு தஆலா உங்களுக்கு வைக்க இருக்கின்ற மகத்தான சோதனை இதோ!


மார்க்கம் காட்டியிருக்கின்ற வழியில் நீங்கள் மணம் முடிக்கப் போகின்றீர்களா?

பெற்றோர் காட்டித் தருகின்ற வழியில் திருமணம் செய்யப் போகின்றீர்களா?
இந்த இரண்டில் நீங்கள் எதனைத் தேர்வு செய்திடப் போகின்றீர்கள்?

இறை வழிகாட்டுதல் என்ன?

இறையச்சத்தின் அடைப்படையில் மணப்பெண்ணைத் தேர்வு செய்யுங்கள்!

மஹர் கொடுத்துத் திருமணம் முடியுங்கள்!

எளிமையாகத் திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள்!

இவையே மிக முக்கியமான இறை வழிகாட்டுதல்கள்!

ஆனால் பெற்றோர் சொல்வதென்ன?


பொருளாதார வசதியின் அடிப்படையில் பெண்ணெடுப்போம்!

முடியுமட்டும் வரதட்சணை வாங்கிக் கொள்வோம்!

நன்றாக செலவு செய்து திருமணத்தை நடத்துவோம்!

"அவ்வளவு பணம் என்னிடம் இல்லையே!" என்று சொல்லிப் பாருங்கள். "சம்பாதித்துக் கொண்டு வா! அப்புறம் திருமணம் செய்து கொள்ளலாம்", என்பார்கள்.

"வரதட்சணையெல்லாம் கேட்க வேண்டாம் அம்மா!" என்று சொல்லிப் பாருங்கள். அதனை நியாயப் படுத்தி உங்களை சம்மதிக்க வைப்பார்கள்! நீங்களும் சம்மதித்து விடுவீர்கள்!

நாம் கேட்போம் இப்படிப்பட்ட மணமகன்களைப் பார்த்து: "ஏனப்பா வரதட்சணைக்கு ஒத்துக் கொண்டாய்?"

அவர்கள் சொல்வார்கள்: "என்னண்ணே செய்றது? பெற்றவங்க சொல்லும் போது அவங்களை மீறி நாம செயல்பட  முடியுமா?"

இறுதியில் உங்கள் பெற்றோருக்கே வெற்றி! மார்க்கம் தோற்றுப் போய் விடுகிறது! (நஊது பில்லாஹி மின்ஹா!)

திருமணத்துக்கு முன்னரேயே உங்கள் திருமணத்தின் கடிவாளத்தை உங்கள் பெற்றோர்கள் உங்களிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு விடுகிறார்கள் என்பது ஏன் உங்களுக்குப் புரிவதில்லை?

ஏன் பெற்றோர் தோண்டிய படுகுழியில் போய் நீங்களாகவே வழுக்கி விழுந்து விடுகின்றீர்கள்?

நீங்கள் விழுந்து விட்டதை நீங்கள் உணராமல் இருக்கலாம்; ஆனால் உங்கள் பெற்றோர்கள் அதனை நன்றாக உணர்ந்திருக்கின்றார்கள்!

"பையன் நம்ம கையில் தான்!"

பிறகு என்ன நடக்கும்?

"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா"

உங்கள் இல்லற வாழ்வின் சிறிய பெரிய விஷயங்கள் அனைத்திலும் உங்கள் பெற்றோர் சொல்வதே வேத வாக்கு! உங்கள் மனைவியின் உரிமைகள்? அது பற்றி யாருக்குக் கவலை?

இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள்? - ஆம் - அது ஒரு அழகிய தலைப்பு! எங்களைப் போன்றவர்கள் அழகாக மேடையில் பேசிடுவதற்கு!!

பெற்றோர் விருப்பங்களின் அடிப்படையில் வரதட்சணை வாங்கி திருமணம் முடிக்கும் இளைஞர்கள் எப்படிப்பட்டவர்களாக விளங்குவார்கள்?

சாட்சாத் அவர்கள் பெற்றோர்களைப் போலவே உருவெடுப்பார்கள்! அது எப்படி என்கிறீர்களா?

இத்தகைய இளைஞர்கள் தங்களின் சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது பட்ட கஷ்டங்கள் அப்படியே பசு மரத்தாணி போல் நினைவில் இருக்கும் தானே?

அப்படியானால் - தனக்குத் திருமணம் முடிக்கும்போது தனது மைத்துனர்களும் நம்மைப்போல் தானே கஷ்டப்படுவார்கள் என்ற சிந்திக்க வேண்டுமா இல்லையா?

அப்படி சிந்தித்தால் தானே - அவர்கள் அடுத்தவர் உணர்வை மதிக்கும் empathy  எனும் நற்குணம் மிக்கவர்கள் என்று நாம் சொல்வோம்!

அப்படிப்பட்ட சிந்தனை வராவிட்டால் - இவர்களும் அடுத்தவர் உணர்வைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் தானே? இந்த lack of empathy  இவர்களை எதில் கொண்டு போய் விடும்?

இவர்களிடத்திலும் நியாய உணர்வு இருக்காது! சுய நலம் மிகுந்திருக்கும்! நன்றி உணர்ச்சி அற்றுப் போய் விடும்! நயவஞ்சகம் குடிகொண்டு விடும்!! தவறுகளை நியாயப் படுத்திக் கொள்வார்கள்!

Exactly - இவர்களும் இவர்களுடைய பெற்றோர்களும் இப்போது ஒன்று போலத்தான்!

நியாய உணர்வற்ற, அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுக்கின்ற, lack of empathy எனும் மன நலக் குறையுடன் அடுத்த தலைமுறை இதோ தயார்!

இந்த இழி நிலையிலிருந்து இந்த சமூகத்தை மீட்டெடுப்பது எப்படி? சிந்தியுங்கள்!

Comments