சீரியஸான பிரச்னையா? நேரிடையாக எதிர்கொள்க!

ஆங்கிலத்தில் ஒரு சொல்: ASSERTIVENESS

இதனை - "தன் முனைப்பு" என்று மொழிபெயர்த்துள்ளனர். தனது நிலையில் உறுதி காட்டுவதை இது குறிக்கும். தனது தேவைகளுக்காகவும் (needs), உரிமைகளுக்காகவும் (rights)  ஒருவர் உறுதியுடன் நிற்கின்ற நிலை இது.
சிறிய உதாரணத்துடன் இதனை விளக்குவோம்:

நீங்கள் ஒரு வரிசையில் (queue) நிற்கிறீர்கள். மெதுவாக நகர்கிறது அந்த வரிசை. இப்போது உங்கள் முறை. திடீரென்று ஒருவர் உங்களுக்கு முன்னால் குறுக்கே புகுந்து விடுகிறார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒன்று - நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மென்மையானவர்(?). குறுக்கே புகுந்தவர் தன் காரியத்தை கன கச்சிதமாக முடித்துக் கொண்டு போய் விடுகிறார். இதற்குப் பெயர் மென்மை அல்ல! இது கையாலாகாத் தனம். Passiveness.

அல்லது - நீங்கள், "ஏய், முட்டாள்! என்னாச்சு உனக்கு? நாங்கள்ளாம் வரிசையிலே நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா?" என்று கேட்கிறீர்கள். இதுவும் தவறு. அது முரட்டுத் தனம். Aggressiveness.

அப்படியானால் எப்படி நடந்து கொள்வது சிறப்பு என்கிறீர்களா?

நீங்கள் குறுக்கே புகுந்தவரிடம் அவருடைய முகத்தை நோக்கி உறுதியான ஒரு பார்வையுடன், "மன்னிக்கவும்! இப்போது எனது முறை!" என்று கூறுகிறீர்கள். அவ்வளவு தான். அவர் நகர்ந்து விடுகிறார். வார்த்தைகளில் கடுகடுப்பு தேவை இல்லை. குரல் உயர்த்திடத் தேவையில்லை. கொஞ்சம் Seriousness. அவ்வளவு தான்.

இந்த அணுகு முறையைத் தான் assertive communication என்கிறார்கள். அதாவது தன் நிலையை உறுதிப் படுத்திக் கொண்டு பேசிடும் முறை.

இத்தகைய தன் முனைப்பு (assertiveness)  கணவன் மனைவி இருவருக்கும்  தேவை! அதுவும் குறிப்பாக இல்லற வாழ்வில் எழுகின்ற பிரச்னை சற்று சீரியஸாக இருந்து விட்டால் கணவனோ அல்லது மனைவியோ இத்தகைய தன் முனைப்புடன் எழுந்து நின்று பிரச்னையை எதிர்கொண்டிட வேண்டும்.

கணவன், மனைவி, மூன்று குழந்தைகளைக் கொண்டதொரு குடும்பம் அது. கணவன் மது அருந்துகிறான். மனைவியைப் போட்டு அடிக்கிறான்.

குழந்தைகளைக் கன்னா பின்னாவென்று திட்டுகிறான். இது ஒரு தொடர்கதை.

மனைவி என்ன செய்வாள்? இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது அவள் எங்கேயும் படித்துக் கொள்ளவில்லையே! ஏதோ அவளுக்குத் தெரிந்தவரையில் கணவனைத் திருத்த முயற்சி செய்கிறாள். கணவன் திருந்திடத் தயாராக இல்லை. மனைவி தன் குழந்தைகளுடன் தற்கொலையை நாடுகிறாள். இதுவே இங்கே அன்றாட நடப்பாகி விட்டது.

சில மனைவிமார்கள், கணவன் எப்படியும் போகட்டும் என்று விதியின் மீது பழியைப் போட்டு விட்டு கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்கிறாள். இது தான் நாம் முன்பு குறிப்பிட்ட கையாலாகாத் தனம். இங்கே கணவனுக்கு வெற்றி(?). மனைவிக்குத் தோல்வி! (I lose - You win).

ஆனால் இதே போன்ற சூழ்நிலையில் வேறொரு மனைவி எப்படி நடக்கிறாள் பாருங்கள். பொறுமையாகப் பல தடவை சொல்லிப் பார்த்தும் கணவன் திருந்துவதாகக் காணோம்.

ஒரு நாள் கணவன் நிதானமாக இருக்கும் சமயமொன்றைத் தேர்வு செய்து அவன் அருகில் வந்து, "இங்கே பாருங்கள், நான் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு எப்படிப்பட்டது என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் அதற்காக நீங்கள் குடித்து விட்டு வந்து, அந்த போதையில் என்னிடமும், குழந்தைகளிடமும் நடந்து கொள்ளும் முறையை இனியும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு நாம் என்ன எதிர்காலத்தைக் கொடுக்கப் போகிறோம்? எப்படிப்பட்ட குழந்தைகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? அவர்கள் பெரியவர்கள் ஆனால் அவர்களும் உங்களைப் போன்று ஆகி விடுவதை நான் அனுமதிக்க முடியாது. நீங்கள் குடிப்பதை நிறுத்தவில்லையென்றால், என்னையும் குழந்தைகளையும் திட்டுவதையும் அடிப்பதையும் நிறுத்தவில்லை என்றால் - அடுத்து நான் காவல் துறையைத் தான் அணுகிட வேண்டியிருக்கும் என்றால் அதற்கும் கூட நான் தயங்கிட மாட்டேன்".

உறுதியாகச் சொல்லி விடுகிறாள் மனைவி. குரலை உயர்த்தி கத்திப் பேசி ஊரைக் கூட்டிடவில்லை! திட்டவில்லை; கணவனை மிரட்டிடவில்லை.

கணவன் மீது தான் வைத்திருக்கும் அன்பையும் வெளிப் படுத்தத் தவறிடவில்லை. இங்கே கணவன் திகைத்துப் போய் விடுகிறான். ஒரு கணம் சிந்திக்கின்றான். மனைவியை உற்றுப் பார்க்கிறான். அவள் முகத்தில் கோபம் தெரியவில்லை. ஆனால் அவள் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாள் என்பது புரிகிறது. கணவனை அதே நிலையில் விட்டு விட்டு நகர்கிறாள் மனைவி.

அன்று திருந்தியவன் தான் அவன்! அல்ஹம்து லில்லாஹ்! இங்கே இருவரும் வெற்றி பெற்று விடுகிறார்கள் (I win - You also win).

தன் நிலையில் உறுதியுடன் பேச வேண்டிய சமயத்தில் பேச வேண்டிய முறையில் பேசுபவர்கள் - தன்னம்பிக்கை உடையவர்களாகத் திகழ்கிறார்கள். தன் உரிமைகளை யாருக்கும் அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. மற்றவர்களால் மதிக்கப் படுகின்றார்கள். வாழ்வில் வெற்றியும் பெறுகின்றார்கள்.

Comments