மார்க்கத்தைப் பின்பற்றும் கணவன், மனைவி, பெற்றோர்!

பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா? – பாகம் 8

இக்கட்டுரைத்தொடரில் இது இறுதியானது.

இதில் நாம் பார்க்க இருப்பது மார்க்கத்தை முழு மனதுடன் பின்பற்றும் கணவன் மனைவியர் எப்படி குடும்பம் நடத்துகிறார்கள் என்பதைப் பற்றித் தான்!

மூன்று விதமாக இவர்களின் குடும்பங்களை நாம் காணலாம்:


ஒன்று:

இவர்கள் சில இளைஞர்கள். திருமண விஷயத்தில் பெற்றோர் விருப்பத்துக்கெல்லாம் இவர்கள் ஆடுவதில்லை! வரதட்சனை கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். மார்க்கமான பெண் வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். அப்படிப்பட்ட பெண்ணைத் தாங்களே தேடிப் பிடிப்பார்கள்.


ஆனால் பெற்றோர்கள் முரண்டு பிடிப்பார்கள்!
கடைசி வரை மசிய மாட்டார்கள்!!  பெற்ற மகனின் நலன் கண்ணுக்குத் தெரியாது! மார்க்க நலனும் கண்ணுக்குத் தெரிவதில்லை!

இறுதியில் இறைவனை அஞ்சும் அந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள்?
தான் விரும்பிய இறையச்சமிக்க பெண்ணை மணம் முடிக்கிறார்கள்! மஹர் கொடுத்துக் கரம் பிடிக்கிறார்கள்! இறை விருப்பத்துக்கேற்ற முறையில் திருமணத்தை நடத்துகிறார்கள்!

இவர்கள் எளிமையாக வாழ்கிறார்கள்; ஆனால் அடிமைகளாக வாழவில்லை! பெரிய சொத்துக்கள் இல்லை தான்! ஆனால் சுதந்திரம் இருக்கின்றது! பெரிய வீடு என்று ஒன்று இல்லை தான்! ஆனாலும் வாடகை வீட்டில் மன நிம்மதியுடன் வாழ்கிறார்கள்!

இரண்டாவது -

மார்க்கத்தைப் பின்பற்றும் கணவன் மனைவியர்! மார்க்கத்தைப் பின்பற்றும் பெற்றோர்! இந்தப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் திருமண விஷயங்களில் தலையிடுவதை விரும்பாமல் - அவர்களை சற்று தூரவே வைத்து அழகு பார்ப்பவர்கள். பிள்ளைகளும் அடிக்கடி வந்து பெற்றோர்களை கவனித்துக் கொள்கின்றார்கள். பெற்றோருக்குச் செய்திட வேண்டிய உரிமைகளை நிறைவேற்றித் தருவதில் எந்தக் குறையும் இவர்கள் வைப்பதில்லை! மாமியார் நாத்தனார் பிரச்னைகள் இங்கு அறவே கிடையாது!

மூன்றாவது -

மார்க்கத்தைப் பின்பற்றும் கணவன் மனைவியர்! மார்க்கத்தைப் பின்பற்றும் பெற்றோர்! ஆனால் கணவன் மனைவி கணவனின் பெற்றோர் அனைவரும் ஒரே இல்லத்தில் வசிப்பவர்கள்.

இங்கே கணவனின் பெற்றோர்கள் மிக நல்லவர்கள்! மருமகளை நன்றாக கவனித்துக் கொள்கிறார் மாமியார்! மகனின் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கிறார்கள்! கணவன் மனைவியர் இல்லற விஷயங்களில்  தலையிடுவதே இல்லை!

இப்படிப்பட்ட கணவன் மனைவியருக்கு நாம் சொல்லும் அறிவுரைகள்:

1. பெற்றவர்களுக்கு கண்ணியம் அளித்திடுங்கள். மரியாதையான சொற்களால் உரையாடுங்கள். அவர்களிடம் பணிவைக் காட்டுங்கள். அவர்களுக்குப் பணிவிடை செய்திடுங்கள்.

2. பெற்றோர்கள் அனுபவம் மிக்கவர்கள். அவர்களின் அனுபவங்களில் இருந்து நீங்கள் பாடம் படித்துக் கொள்தல் நலமே! அவர்கள் அறிவுரை பகர்ந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் இயன்றவரை!

3.  சின்னச் சின்ன விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் உங்கள் பெற்றோரிடம் போய் நின்று கொண்டிருக்காதீர்கள்; உங்கள் இல்லற வாழ்வின் சவால்களை முடிந்த மட்டும் நீங்களே சந்தித்து சாதித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

4.  எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை! சில சமய்ங்களில் உங்கள் கணவருக்கும் அவரது பெற்றோருக்கும் கூட ஏதாவது கருத்து வேறுபாடு தோன்றலாம். அது போன்ற சமயங்களில் உங்கள் கணவரே, தன் பெற்றோரை "விமர்சித்துப் பேசினால்" - அதனை அனுமதிக்காதீர்கள். செல்லமாக அதனைத் தடுத்து விடுங்கள்.

5. மனைவியால் கணவனின் பெற்றோருக்கு சில சமயங்களில் பணிவிடை செய்ய இயலாமல் போகலாம். அப்போது அதனை மனைவி போய் தனது மாமியிடம் - "இப்போது என்னால் முடியாது மாமி!" என்று சொல்வதை விட கணவன் தன் தாயிடம் போய் -  "இன்றைக்கு அவளுக்கு உடல் நலம் இல்லையம்மா! வேறு ஏற்பாடு செய்து தருகிறேன்!" என்று சொல்வதே விவேகம்!
மற்ற படி அன்பு, கண்ணியம், பணிவிடை, இரக்கம் - போன்ற அருமையான


இஸ்லாமிய நற்குணங்களால் இல்லத்தை மகிழ்ச்சிகரமாகக் கொண்டு செல்வதற்கு கணவனுக்கும் மனைவிக்கும் பொறுமை (Sabr) மிக அவசியம்!

வாழ்த்துக்கள் இவர்கள் அனைவருக்கும்!

Comments