கண்ணியம் காதலாய் மலரட்டும்!

இன்று வழக்கத்தில் நாம் பார்க்கின்ற திருமண முறைகள் இரண்டு:

1. பெற்றோர் செய்து வைக்கின்ற பாரம்பரியத் திருமணம் (arranged marriage)

2. காதல் திருமணம் (love marriage)

இந்த இரண்டு முறைகளுமே மிகத் தவறானவை!

பெற்றவர்கள் ஒரு மாப்பிள்ளையைப் (அல்லது பெண்ணை) பார்த்திட - ஒருவரைப் பற்றி மற்றவர் அறிந்து கொள்ளாமலே - "என் பெற்றோர் யாரைத்திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்களோ அவரே என் துணைவர்!" என்று கண்ணை மூடிக்கொண்டு செய்யப் படுகின்ற பாரம்பரியத் திருமண முறையில் - அடிப்படையில் ஒரு மிகப்பெரிய கோளாறு இருந்து வந்துள்ளதை - நமது புதிய தலைமுறையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமும், அவசரமும் இப்போது ஏற்பட்டுள்ளது என்றால் அதில் மிகை இல்லை!

ஏனெனில் இன்றைய நமது முஸ்லிம்களின் இல்லற வாழ்க்கை முறையில்.....

பல குளறுபடிகள் காணப்படுகின்றன.  ஒரு நெருக்கடியின் நிமித்தமாகவே கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்கிறார்கள்! அவர்களுக்குள் அன்பு, காதல், நேசம், பரிவு, இரக்கம், கருணை, அனுசரித்துப் போகும் பண்பு (adjustment), மன்னிக்கும் பண்பு - இவைகளெல்லாம் அரிதாகி விட்டன!

அது போலவே பெற்றோர் ஆலோசனைகள் ஏதுமின்றி நடக்கின்ற காதல் திருமணமும் வெற்றி பெறுவதில்லை!  உடற் கவர்ச்சியினால் காதலில் விழுந்து தனது வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டதாய் இருந்திட வேண்டும் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாமல் திருமணம் செய்து கொண்டு பின்னர் வருந்துகின்ற இல்லற ஜோடிகளையும் நாம் பார்த்தே வருகின்றோம்.

எனவே தான் சொல்கிறோம்:

உடற்கவர்ச்சியினால் உருவாகின்ற காதல் திருமணமும் வேண்டாம்! குடும்பத்தில் பெண் / மாப்பிள்ளை பார்த்து பெற்றோர் செய்து வைக்கின்ற பாரம்பரியத் திருமணமும் (arranged marriage) வேண்டாம்!

பின் எப்படித் தான் வாழ்க்கைத் துணையைத் தேடுவது?

மூன்று உதாரணங்கள் தருகிறோம்:

1. நபியவர்கள் அன்னை கதீஜாவை எவ்வாறு மணம் முடித்தார்கள்?

அன்னை கதீஜா அவர்கள் நபியவர்களை ஒரு மேலாளராகத் தான் சிரியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இன்னொரு பணியாளரும் நபியவர்கள் கூடவே சிரியாவுக்குச் செல்கிறார். மக்காவுக்குத் திரும்பியதும் - அந்தப் பணியாளர் நபியவர்களின் குண நலன்களை அன்னை கதீஜாவுக்கு எடுத்து விளக்குகின்றார்.

அத்துடன் மக்காவிலே நபியவர்களுக்கு அல் அமீன், அஸ் ஸாதிக் என்ற நற்பெயர்களெல்லாம் ஏற்கனவே உண்டு. அண்ணலார் வணிகப் பயணம் முடிந்து திரும்பியதும், நபியவர்களின் குணநலன் பற்றி (அந்தப் பணியாளர் மூலம்) அறிந்ததும் மேலும் ஒரு மதிப்பு வருகிறது.

தாமும் நபியவர்களின் நடைமுறைகளை உற்று நோக்குகிறார்கள். கண்ணியம் அதிகரிக்கிறது. அந்தக் கண்ணியமே காதலாய் மாறிட நாம் ஏன் இவர்களைத் திருமணம் முடித்திடக் கூடாது என்று எண்ணுகிறார்கள்!  தூது அனுப்புகிறார்கள். எல்லாம் நல்லபடியாய் முடிகிறது!

2. நபியவர்கள தன் அன்பு மகள் பாத்திமாவுக்கு அலீ அவர்களை மணம் முடித்துக் கொடுத்தது எப்படி?

அண்ணல் நபியவர்கள் தன் அன்பு மகளுக்கு ஹள்ரத் அலீ அவர்களைத் திருமணம் முடித்திட விரும்புகிறார்கள். தன் விருப்பத்தை தன் மகளிடம் தெரிவிக்கிறார்கள். அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் கண்களில் கண்ணீர். அது அவர்களின் தயக்கமா? அல்லது அலீ அவர்கள் குறித்து அச்சமா? என்றெல்லாம் தெரியவில்லை. அப்போது நபியவர்கள் மகள் பாத்திமாவிடம் அலீ அவர்களின் குண நலன் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள்:

அலீ அவர்கள் அறிவில் சிறந்தவர் என்றும், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை நிறைந்தவர் என்றும், வீரம் மிக்கவர் என்றும் எடுத்துரைக்கிறார்கள்; பாத்திமா (ரலி) அவர்கள் சம்மதித்திட திருமணம் நடந்தேறுகிறது!

3. உ,மர் (ரலி) அவர்கள் தன் மகன்களில் ஒருவருக்குத்  திருமணம் செய்து வைத்தது எப்படி?

ஒரு தாய் மற்றும் அவருடைய மகள். பாலில் தண்ணீர் கலப்பதைக் கூட அனுமதித்திடாத இறையச்சம் அந்த மகளுக்கு. உமர் (ரலி) அவர்கள் இதனை நேரிடையாகவே அறிந்து கொண்ட பின் தன் மகன்களை அழைத்து அந்தப் பெண்மணியின் இறையச்ச உணர்வை எடுத்துச் சொல்லி "அறிமுகம்" செய்து வைக்கிறார்கள். ஒரு மகன் முன் வர திருமணம் நடந்தேறுகிறது!

இம்மூன்று திருமணங்களிலும் - தான் யாரைத் திருமணம் முடிக்க விரும்புகிறாரோ அவருடைய குணநலன்கள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன என்பதை உன்னிப்பாக கவனியுங்கள்:
படித்துக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்:

திருமணத்துக்கு முன்னரேயே - பெண் அல்லது மாப்பிள்ளை - இவர்களின் குண நலன்கள்  (character) எப்படிப் பட்டது என்பது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். தான் மணக்க இருக்கும் துணைவர் எப்படிப்பட்ட குணமுடையவர் என்பது இருவருக்குமே தெரிதல் நலம். அதுவே கண்ணியமாய் மாறும்.

காதலாய் மாறும். இதுவே திருமணத்துக்கு இட்டுச் செல்லும். இதுவே வெற்றித் திருமணத்தின் இலக்கணமும் ஆகும்!

Comments