தலைமையிடத்தில் உறுதி வேண்டும்!

ஒரு கருத்தை ஏற்கச் செய்வதற்காகவோ அல்லது ஒரு கீழ்ப் படிதலை எதிர்நோக்கி ஒரு கட்டளையைப் பிறப்பிக்கும் போதோ - நாம் யார் இதனைச் சொல்ல என்பதனைத் தெளிவாக்கி விட வேண்டும். இதற்கு தன்னிலை உறுதிப்பாடு தேவை. ஆங்கிலத்தில் இத்தகைய உறுதிப்பாட்டை Assertiveness என்று சொல்வார்கள். 


இந்தத் திருமறை வசனத்தை கவனியுங்கள்:

'நிச்சயமாக நான் தான் அல்லாஹ்!
என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை!
ஆகவே - என்னையே நீர் வணங்கும்! (20: 24)

இவ்வசனம் மூசா (அலை) அவர்களை நோக்கி அல்லாஹ் பேசிய வசனமாக - சூரா தாஹாவில் இடம் பெற்றுள்ளது.

சகோதரர்களே! நபியவர்களைக் கொலை செய்து விடப் புறப்பட்ட உமர் (ரலி) அவர்கள் -
இந்த வசனத்தைக் காதில் வாங்கித் தான் இஸ்லாத்துக்கு வந்தார்கள் என்பதும் வரலாற்று உண்மை.

நிறுவனத்தின் தலைவர்களுக்கு, மேலாளர்களுக்கு, ஜமா அத் தலைவர்களுக்கு, ஏன் ஒரு தந்தைக்குக் கூட இந்த தன்னிலை உறுதிப்பாடு அவசியம்!

கருத்துக் கேட்பது, ஆலோசனை கேட்பது என்பது வேறு விஷயம்.
கீழ்ப் படிதல் இல்லாமல், தலைமைத்துவம் இல்லை!(லா இமாரத இல்லா பி- இதா-அதின்) என்பது உமர் (ரலி) அவர்களின் கூற்று.

பின் வரும் வரலாற்றுச் சம்பவம், தலைவர்களின் மிக ஆழமான சிந்தனைக்குரியது:

நபி(ஸல்) அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார்.

உமர் (ரலி), ‘லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?’ என்று கேட்டார்.

அபூ பக்ர் (ரலி), உமரை நோக்கி, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்” என்றார்.

இது பற்றி உமர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார்.

அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்” என்றார்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: சஹீஹுல் புஹாரி

இதில் நாம் கற்க வேண்டியது என்னென்னவென்றால் -

1. சந்தேகமற்ற அறிவாற்றலின் அடிப்படையில் முடிவெடுத்தல் (Decision making based upon intellectual reasoning)

2. அதன் அடிப்படையில் சந்தேகங்களுக்கு தெளிவாக விளக்கமளித்தல் (Convince others with logical proof)

3. தன் உறுதியை வெளிப்படுத்துதல் (assertiveness)

4. தயக்கம் கிஞ்சிற்றும் இன்றி செயற்களத்தில் இறங்குதல் (taking actions without unwavering mind)

இவை அனைத்தும் தலைமைத்துவத்தின் அடையாளங்களாகும்.

நபியவர்களின் கடிதங்களை சற்று உற்று நோக்குங்கள் - இவ்விஷயம் இன்னும் நன்றாக விளங்கும்.

Comments