சுரங்கங்கள் ஒன்றிணைந்தால் எப்படி இருக்கும்?

"மக்கள் சுரங்கங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாக இருந்தவர்கள், இஸ்லாத்துக்கு வந்த பின்பும்
சிறந்தவர்களாக இருப்பார்கள்; மார்க்க அறிவை அவர்கள் பெற்றுக் கொண்டால்." (நூல்: ஸஹீஹுல் புகாரி)


இந்த நபி மொழியை நாம் திரும்பவும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் சில தனிப்பட்ட திறமைகள் ஒளிந்து கொண்டிருப்பது எப்படி உண்மையோ, அது போலவே ஒவ்வோர் இனம் அல்லது குலத்தவருக்கும் சில தனிப்பட்ட சிறப்பியல்புகளும், பண்புகளும், ஆற்றல்களும், திறமைகளும் - இறையருளால் அமைந்திருப்பது இயல்பே!

 ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அமைந்திருக்கின்ற தன்மைகள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

"பெருமையும் கர்வமும் கிராம வாசிகளான நாடோடிகளிடையே காணப்படும். ஆடு மேய்ப்பவர்களிடையே அமைதியும் பணிவும் காணப்படும். இறை நம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்; மதி நுட்பமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்." (நூல்: ஸஹீஹுல் புகாரி)

இதே அடிப்படையில் தான் நிர்வாகத் திறமையில் தன்னிகரற்று விளங்கிய குறைஷிகளிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், "இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும். அவர்களுடன் (அது தொடர்பாகப்) பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான், மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டி வரும் வரை இந்நிலை நீடிக்கும்" என்று கூற நான் கேட்டிருக்கிறேன் என்று முஆவியா (ரலி) அவர்கள் சொன்னார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)

ஆனால் - இனத்தின் அடிப்படையிலோ, மொழி, நிறம், தேசம் போன்ற குறுகிய வாதங்களின் அடிப்படையிலோ இஸ்லாம் ஒருபோதும் மனிதர்களை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ மதித்திட்டது கிடையாது.

இஸ்லாம் மனிதர்களை, அவர்களுக்குள் எங்கோ ஒரு மூலையில் அமிழ்ந்து கிடக்கின்ற மிருக இயல்புகளைக் கொண்டு பிணைத்திடாமல், அவர்களை மனித மாண்புகளைக் கொண்டு இறுகப் பிணைத்து, அவர்களின் பிணைப்புகளுக்கு இறைவனை நம்புவதை - ஈமானை - அடிப்படையாய் அமைத்துத் தந்தது.

மனிதர்களுக்குள் பிளவுகளை வளர்த்திடும் கீழான அடிப்படைகளாகிய குலம்,கோத்திரம், நிறம், நிலம், மொழி, தேசியம், வட்டாரம், பிராந்தியம், ஆகிய உணர்வுகளைக் கண்டித்து மறுத்தது.

இஸ்லாம் மனிதனுக்குள் இருக்கும் மிருகத் தன்மைகளை விடுத்து அவனுள் குடியிருக்கும் மனிதத் தன்மைகளைக் கூர்மைப் படுத்தியது. ஆளுமையை அழகு படுத்தியது. அவற்றை மற்ற அனைத்தையும் விட மேலோங்கச் செய்தது. இதனால் ஏற்பட்ட மிகப் பெரிய பலன் என்னவெனில், இஸ்லாமிய சமுதாயம் உலக மகா சமுதாயமாக ஆனது. உலக ஒருமைப்பாட்டு உணர்ச்சிக்கு வழி காட்டியது.

மொழி, இனம், குலம், நிறம், தேசியம் என்ற குறுகிய வாதங்களுக்கு அப்பால் சென்று மனிதர்களை மனிதர்களாக ஆக்கி ஒன்றிணைக்கும் ஒரே கொள்கையாக இஸ்லாமே நின்று நிலவுகிறது.

எல்லா நிறத்தவர்களுடைய, எல்லாக் குலத்தவர்களுடைய, எல்லா மொழிகள் மற்றும் தேசங்களையும் சேர்ந்தவர்களுடைய திறமைகளும் அறிவாற்றல்களும் ஒன்று சேர்ந்து சங்கமித்துச் சாதனை புரியும் மாபெரும் கடலாக இஸ்லாமிய சமுதாயம் உருவாயிற்று.

இஸ்லாமிய சமுதாயம் எனும் இந்த மாபெரும் கடலில் அரேபியா, பாரசீகம், சிரியா, எகிப்து, மொராக்கோ, துருக்கி, சீனா, இந்தியா, ரோமாபுரி, கிரேக்கம், இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அத்தனைபேரும் ஒன்றாகக் கலந்து ஓரினம் "மனித இனம்" என்றாயினர்.

இவர்கள் அத்தனை பேரும், அதாவது அத்தனை நிறத்தவரும், மொழியினரும், தேசத்தவர்களும், தங்கள் திறமைகளையும், உழைப்பையும், அறிவையும் இந்த "உலகலாவிய நம்பிக்கையாளர்களின் சமுதாயம்" பெருகவும், பரவவும், வாழவும் முழுமையாகப் பயன் படுத்தினார்கள்.

"மனிதர்களே! நீங்கள் நிச்சயமாக ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவீர்! மேலும், நானே உங்கள் யாவருக்கும் ஒரே இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்." (21:92)

திருமறையின் இந்த வசனம் உலக மகா சகோதரத்துவத்தை பிரகடனப் படுத்திடும் அற்புதமான வசனமாகும்!

இக்கட்டுரை இன்னும் விரிவு படுத்தப் படும் - இன்ஷா அல்லாஹ்!

Comments