திருமணம் ஒரு திருப்பு முனை!

உங்களுக்கு நீண்ட கால இலட்சியம் எதுவும் இருக்கின்றதா? குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் (passionate about) உண்டா?

அப்படியெனில் அதே விஷயத்தில் ஆர்வமும், இலட்சியமும் உள்ளவராக உங்கள் வாழ்க்கைத்துணை அமைந்திட்டால் - உங்கள் இலட்சியத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் உங்களால் செயல்பட முடியும்!

அப்படி அமைந்திடாவிட்டால் உங்கள் இலட்சியப் பயணத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்; போதாததற்கு நிறைய நேரம் உங்கள் துணையுடன் சண்டை போட வேண்டியிருக்கும்!

உங்கள் வாழ்வின் இலட்சியம் - அது உலகத்தையே "மாற்றிக் காட்டுவதாக" இருந்தாலும் சரி அல்லது.......
உங்கள் குழந்தைகளை வல்லவர்களாக வளர்த்தெடுப்பதாக இருந்தாலும் சரி (இரண்டுமே ஒன்று தானாமே!) -

எந்நேரத்திலும் ஆதரவுக்கரம் நீட்டுபவரே உங்களுக்குத் தேவை!

உங்கள் இலட்சியத்தில் உங்கள் மகிழ்ச்சியையும், அல்லது வலியையும், பகிர்ந்து கொள்ள ஒரு துணை தேவை! உங்களுக்கு ஆலோசனை வழங்கிடவும், நீங்கள் சொல்ல வருவதை ஆவலுடன் கேட்டிடவும், ஒரு துணை அவசியம்!  "இதுவெல்லாம் ஒரு இலட்சியமா?" என்று அலட்சியம் செய்து அதற்கு முட்டுக்கட்டை போட்டு விடாமல் இருப்பவர்களே உங்களுக்குத் தேவை!

திருமணத்துக்கு முன்  இளம் வயதில் சாதித்துக் காட்டிய ஒரு சிலர் - திருமணத்திற்குப் பின் சிகரம் தொட்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மை!

அதற்கு நேர் மாற்றமாக - இளம் வயதில் சாதித்துக் காட்டிய இன்னும் பலர் - திருமணத்திற்குப் பின் காணாமல் போயிருக்கின்றார்கள் என்பதும் கசப்பானதொரு உண்மை!

எனவே தான் சொன்னார் எகிப்தில் உள்ள ஓர் இஸ்லாமிய அறிஞர்:

"திருமணம் ஒரு திருப்பு முனை!"

அது போலவே - தனக்கென்று ஒரு இலட்சியம் வைத்திருக்கும் துணையே உங்களுக்குத் தேவை! உங்கள் துணையின் லட்சியத்தில் அவர் வெற்றி பெற, நீங்கள் உறுதுணையாக விளங்கிடவும்; உங்களின் நேரத்தையும், அறிவையும், ஆற்றலையும் அதற்கென செலவழித்து அவர் சாதிக்கும் போது தட்டிக் கொடுத்திடவும், சோதனைகள் வரும்போது - அவருக்கு ஆறுதல் அளித்திடவும் - ஒரு துணையாக நீங்கள் விளங்கினால் உங்கள் இல்லறவாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை! அது ஒரு மகிழ்ச்சிக் கடல்!!

இதனை எழுதிடும்போது - அன்னை கதீஜா (ரலி) அவர்களே நம் மனக்கண் முன்னால் தோன்றுகிறார்கள்!!

தேடுங்கள் - அப்படி ஒரு துணையை!

Comments