தொழுகையும் இறை சிந்தனையும்

தொழுகை இறை சிந்தனையோடு இணைக்கப்பட்டுள்ளது.

என்னை நினைவு கூறும் பொருட்டு - தொழுகையை நிலை நிறுத்துங்கள்" (20:14)


தொழுகையின் எந்த நிலையானாலும் - நின்றாலும், குனிந்து ருகூஉ செய்தாலும், சஜ்தாவில் இருக்கும்போதும் அல்லது அதற்குப் பின்னரும், குர் ஆனை ஓதும்போதும், மற்ற தஸ்பீஹ்களை ஓதும்போதும் - நாம் செய்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான் - அது - இறை சிந்தனையே!"

ஆக இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் தொழுகையும் இறை சிந்தனையும் பின்னிப் பிணைந்தவை என்பதைத் தான்.

இறை சிந்தனை வெற்றி தரும்!

நமது வாழ்வில் சில நேரங்களில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்; சில நேரங்களில் நாம் கவலை அடைகின்றோம். ஒரு இறை நம்பிக்கையாளனைப் பொறுத்தவரை - மகிழ்ச்சியான தருணங்களில் அவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். கவலையான தருணங்களில் அவன் இறை உதவியை நாடி பொறுமையைக் கடை பிடிக்கின்றான்.  ஆக இரண்டு நிலைகளிலும் அவன் மன நிம்மதியுடன் தான் இருக்கின்றான்.

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (13:28)

எனவே நமக்கு ஒரு சோதனை ஏற்படுகின்றது எனில் உடன் நாம் தொழுகையின் பக்கம் விரைந்து ஓடி வல்லோனிடம் நமது கவலையைப் பற்றி முறையிட்டு விட்டு - செய்வன திருந்தச் செய்து விட்டு - பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்து விடுகிறோம்.

நமது வாழ்வு முழுவதும் இதே நிலை தான்! இதுவே ஒரு வெற்றியாளனின் நிலை ஆகும்.

குடும்ப வாழ்வில் பிரச்னையா? கணவனும் மனைவியும் சேர்ந்து இறைவனைத் தொழுது உதவி வேண்டி நின்றால் - குடும்பத்தில் மன அமைதி தானாக வரும். இது ஒரு குடும்பத்தின் வெற்றி!

அது போலவே - குழந்தை வளர்ப்பிலும் - அவர்களை சிறு வயதிலிருந்தே - தொழுகைக்குப் பழக்குவதன் மூலமும், இறை உதவி குறித்து அவர்களுடன் கலந்துறவாடுவதன் மூலமும் - எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளும் குழந்தைகளை நாம் உருவாக்கிட முடியும். இதுவே குழந்தை வளர்ப்பின் வெற்றியாகும்!

ஆம்! இறை சிந்தனை வெற்றிக்கு வழி வகுக்கும்!

Comments