பாட நூல்: சிறுவர் சிறுமியர்க்கு இஸ்லாம் (6 - வது வகுப்பு)

பாட நூல்: 6 - வது வகுப்பு

(பாடம் நடத்தும் வழிமுறைகளுடன்)

இஸ்லாமியப் பாடங்கள் நடத்துவது எப்படி- என்பதை ஆசிரியர்களுக்கு விளக்குவதற்காக சில பாடங்களையும், அப்பாடங்களை நடத்தும் வழிமுறைகளையும் இங்கே ஒவ்வொன்றாகத் தருகிறோம்.


Subject: இஸ்லாமியக்கல்வி (Islamic studies)

பாடத்தின் தலைப்பு: இஸ்லாம் என்பதன் பொருள் என்ன?

மாணவர் தகுதி: 10 வயது நிரம்பியவர்கள் (6 - வது வகுப்பு)

பாடத்தின் உள்ளடக்கம் (content):

1 இஸ்லாம் என்பதன் பொருள் என்ன?

இறைவன் தான் படைத்த அனைத்துப் படைப்பினங்களுக்கும் ஒவ்வொரு வழியைக் காட்டியுள்ளான்.

இறைவன் விதித்திட்ட பாதையில் இம்மியளவும் பிசகாமல் சுழல்கின்ற காரணத்தினால் கதிரவனும், பூமியும் நிலாவும் மற்ற அனைத்துக் கோளங்களும் - எந்த ஒரு மோதலும் இன்றி ஆண்டாண்டு காலமாக அமைதியாகவே சுழன்றோடிக் கொண்டிருக்கின்றன.

அது போல, இறைவனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மனித சமூகம் நடை போடத் தலைப்பட்டால் தான், மனித சமூகம் அமைதியைத் தழுவ இயலும்.

இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்!

நம்மைப் படைத்தவன் இறைவன். நாம் எல்லோரும் இறைவனின் அடிமைகள். நம்முடைய எஜமானன் நம்மைப் படைத்த அல்லாஹ் தான்.

எஜமானனுக்குக் கட்டுப்பட வேண்டியது அடிமைகளின் கடமை.

எனவே நாம் அனைவரும் இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கடமைப் பட்டவர்களே.

இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல் என்றும் பொருள்.

இஸ்லாம் என்றால் அமைதி என்றும், கட்டுப்படுதல் என்றும், இஸ்லாம் என்பது "இறை மார்க்கம் - தீன்" என்றும் அறிக!
                                                                   ****

பாடம் நடத்தும் வழிமுறை (methodology):

ஆசிரியர் தகுதிகள்:

இஸ்லாத்தைக் கற்றுக் கொள்வதிலும், மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வம் உள்ளவராக இருந்திட வேண்டும்.
இஸ்லாத்தைப் பின் பற்றுபவராக அவர் இருத்தல் வேண்டும். இறைக்கட்டளைகளுக்கு செயல் வடிவம் தருபவராக இருத்தல் அவசியம்.

பாடம் நடத்துவதற்கு முன்பு ஆசிரியர் செய்திட வேண்டியவை:

குறிப்பிட்ட பாடம் சம்பந்தமான நூல்களிலிருந்து (reference books)குறிப்புகளை எடுத்துக் கொள்தல் வேண்டும். மேற்கண்ட பாடத்தைப் பொறுத்தவரை - இது தான் இஸ்லாம், இஸ்லாம் உங்கள் பார்வைக்கு போன்ற நூல்கள் பெரிதும் உதவும், ஆங்கில நூல்களிலிருந்தும் குறிப்புகள் எடுத்துக் கொள்தல் நலம் பயக்கும். இணைய தளத்திலிருந்தும் குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம்.
இந்தப் பாடத்தைப் பொறுத்தவரை வானவியல் (astronomy) பற்றிய தகவல்களை சேகரித்துக் கொள்தல் நல்லது.

அடுத்து அரபி மொழி அகராதி ஒன்றை எடுத்து - இஸ்லாம் என்ற சொல்லுக்கு மூலச் சொல் என்ன, அதன் பொருள் என்ன என்பதையும் குறித்துக் கொள்தல் அவசியம்.

அடுத்து பாடம் நடத்தும் வழிமுறை குறித்து சிந்தித்து அந்த வழிமுறைக்கு செயல் வடிவம் தருவது குறித்து குறிப்புகள் எழுதிக் கொள்ள வேண்டும். (notes of lesson)

வகுப்பறைக்குள்:

மூன்று விதமாக பாடங்களை நடத்துதல் நலம். பேசி நடத்துதல் (verbal), படம் வரைந்து அல்லது படம் தயாரித்து அவைகளைக் காட்டி நடத்துதல் (visual), செய்து காட்டி நடத்துதல் (activity) ஆகிய மூன்று வழிகளையும் பின் பற்றினால் எல்லா மாணவர்களும் புரிந்து கொள்வார்கள்.

மாணவர்களைக் கேள்விகள் கேட்பது அவசியம். அவர்கள் சொல்லும் பதில் சரியில்லை என்றால் அவர்களை அவமானப் படுத்திடக் கூடாது. மாணவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டிட (motivate) வேண்டும்.
இந்தப் பாடத்துக்கு என்னென்ன கேள்விகள் கேட்கலாம்?

இஸ்லாம் என்றால் என்ன?

முஸ்லிம் என்றால் யார்?

முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் முஸ்லிம்கள் என்பது சரியா?
ஒரு பந்தை மேலே தூக்கிப் போட்டுக்காட்டி அது கீழே விழுந்ததும் - ஏன் பந்து கீழே விழுந்தது என்று கேட்கலாம்.

ஆனால் பந்து போன்ற பூமி கீழே விழாமல் சூரியனை எப்படி சுற்றி வருகிறது என்றும் கேள்விகளைத் தொடரலாம். இவை எல்லாம் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது.

என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்பதையும் முன் கூட்டியே தயாரித்துக் கொள்தல் நலம்.

பாடம் நடத்தி முடிந்ததும் - அவர்கள் பாடத்தின் கருத்தினைப் புரிந்து கொண்டார்களா என்பதை சோதித்து அறிந்து கொள்தல் (evaluation) அவசியம். இதற்கும் சில கேள்விகளைத் தயாரித்துக் கொள்ளலாம்.

ஒரு குடும்பம் அமைதியாக விளங்கிட என்ன செய்திட வேண்டும்?
ஒரு குடும்பத்தில் அமைதி இல்லை என்றால் அதற்கு என்ன பொருள்?
இன்னும் இது போன்ற கேள்விகளை மாணவர்களின் அறிவுக்கு சவாலாக முன் வைக்கலாம். சரியாக பதில் சொல்பவர்களைப் பாராட்டிடத் தவறிடக் கூடாது.

வாழ்த்துக்கள்!


***

இஸ்லாத்தின் அடிப்படை நூல்கள்

பாடம் எண் 2:

பாடத்தின் தலைப்பு: இஸ்லாத்தின் அடிப்படை நூல்கள்

மாணவர் தகுதி: 10 வயது நிரம்பியவர்கள் (6 - வது வகுப்பு)


பாடத்தின் உள்ளடக்கம் (content):

2 இஸ்லாத்தின் அடிப்படை நூல்கள்

தீன் என்ற அரபிச் சொல்லுக்கு "மார்க்கம்" என்றும் "வாழ்க்கை நெறி" என்றும் பொருள் கொள்ளலாம்.. ஆங்கிலத்தில் இதனை - way of life - என்று சொல்லலாம்.

இஸ்லாம் என்பது எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவினால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு முழுமையான வாழ்க்கை நெறி ஆகும்.

அதாவது - இஸ்லாம் என்பது தனி மனிதர் ஒருவரின் சிந்தனையால் விளைந்த ஒரு தத்துவம் அன்று. அல்லது சில மனிதர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக சிந்தித்து உருவாக்கிய ஒரு கொள்கையும் அன்று.

மாறாக -

இஸ்லாம் என்பது இறை நெறி. இறை மார்க்கம்.

இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக அருளப்பட்ட இந்த வாழ்க்கை நெறி உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது.

உலகம் அழியும் காலம் வரை இந்த வாழ்க்கை நெறியின் வழிகாட்டுதல்கள் இறைவனால் முழுமையாக பாதுகாக்கப்படும்.

இந்த வாழ்க்கை நெறியின் வழிகாட்டுதல்களை நாம் இரண்டு ஆதாரங்களின் மூலமாகப் பெற்றுக் கொள்கிறோம்.

ஒன்று - திருக் குர்ஆன் எனும் இறை வேதம்.

மற்றொன்று - சுன்னத் எனும் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை.

வல்ல இறைவன் தனது திருமறையாம் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

"நிச்சயமாக நாம் தான் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். ஆகவே (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனைப் பாது காப்போம்." (அத்தியாயம்: 15 வசனம்: 09)

அண்ணல் முஹம்மத் (ஸல்) அவர்கள் "சஹாபாக்கள்" என்று அழைக்கப்படும் தங்கள் தோழர்களிடம் கூறுகிறார்கள்:

"உங்களிடம் நான் இரு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பின்பற்றி நடந்தால் ஒரு போதும் வழிகேட்டிலே விழ மாட்டீர்கள். ஒன்று - அல்லாஹ்வின் இறை வேதம். மற்றொன்று அவன் தூதரின் வழிமுறை - சுன்னத். (ஆதார நூல்: முஅத்தா - மாலிக்)

திருக்குர்ஆன் என்பது இறை வாக்கு ஆகும். சுன்னத் என்பது - அதற்கு விளக்கமாக அமைந்த அண்ணல் நபிகளாரின் வாழ்க்கை வழிமுறை ஆகும்.
எனவே இஸ்லாத்தின் அனைத்துக் கொள்கைகளையும், சட்டங்களையும், வழிகாட்டுதல்களையும் - அவற்றின் விளக்கங்களையும் நாம் - பாதுகாக்கப்பட்ட திருமறை வசனங்கள் மூலமாகவும், ஆதாரப்பூர்வமான அண்ணல் நபியின் வாழ்க்கை நடைமுறைகளின் மூலமாகவும் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

உலகின் வேறு எந்த ஒரு மார்க்கத்துக்கும் இப்படி - பாதுகாக்கப்பட்ட வேதமோ, வழிகாட்டுதல்களோ கிடையாது!


பாடம் நடத்தும் வழிமுறை (methodology):

ஆசிரியர் தகுதிகள்:

ஆசிரியர் குர் ஆனை பிழையின்றி ஓதுபவராகவும், அழகாக ஓதிக்காட்டுபவராகவும், குர் ஆனின் சில பகுதிகளையேனும் மனனம் செய்திருப்பவராகவும், திருக்குர் ஆனை மொழிபெயர்த்து விளக்கம் அளித்திட வல்லவராகவும் விளங்கிட வேண்டும்.

பாடம் நடத்துவதற்கு முன்பு ஆசிரியர் செய்திட வேண்டியவை:
ஆசிரியர் "வரலாற்று ஒளியில் இஸ்லாம்" எனும் சிறியதொரு நூலை முழுவதும் படித்துக் கொள்தல் நலம்.

பாடம் நடத்தும் வழிமுறை (methodology):

இங்கே ஒரு கருத்தை வலியுருத்திச் சொல்ல வேண்டியுள்ளது. ஆசிரியர் - இது போன்ற பாடங்களை நடத்தும் போது தான் குறித்துக் கொண்டு வந்துள்ள அனைத்துக் கருத்துக்களையும் ஒரே மூச்சில் மாணவர்களுக்கு முன் ஒப்புவித்து விட மாணவர்கள் அனைவரும் அப்படியே "கைகட்டி வாய் பொத்தி" அமைதியாக கேட்டுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. இம்முறைக்கு - ஒரு வழி கருத்துப் பரிமாற்றம் - என்று பெயர். அதாவது - one way communication.

நாம் இங்கே சொல்ல வருவது - இரு வழி கருத்துப் பரிமாற்றம் பற்றி. அதாவது - two way communication.

அதாவது - இந்த முறை - ஆசிரியரும் மாணவர்களும் கூட்டாகப் பங்கு வகிக்கும் கற்றல்-கற்பித்தல் முறையாகும். இம்முறையில், கேள்வி கேட்டல், கேள்விகளை ஊக்குவித்தல், மாணவர்கள் குழுவாக சேர்ந்து விவாதித்தல் எல்லாம் அடங்கும்.

இம்முறையைக் கடை பிடித்திட ஆசிரியருக்குத் தேவை - மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்திடும் விஷயத்தில் அளவு கடந்த ஆர்வம் ஒன்று மட்டுமே!


***


தூய கலிமா


பாடம் எண் 3:

பாடத்தின் தலைப்பு: தூய கலிமா

மாணவர் தகுதி: 10 வயது நிரம்பியவர்கள் (6 - வது வகுப்பு)


பாடத்தின் உள்ளடக்கம் (content):

3. தூய கலிமா

தூய கலிமா என்றால் தூய்மையான சொல் என்று பொருள்.

"லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி"


- என்ற இந்த சொற்றொடரே தூய்மையான கலிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த கலிமாவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக அமைந்துள்ளது. .

அப்படியானால் இதன் விளக்கம் என்ன?

"லா இலாஹ இல்லல்லாஹ்" - என்பதன் பொருள்

"அல்லாஹ்வைத் தவிர வேறு 'இலாஹ்' எதுவும் இல்லை என்பது பொருள்.
'இலாஹ்' என்றால் 'இறைவன்' என்றும் 'வணக்கத்துக்குரியவன்' - என்றும் சுருக்கமாகப் பொருள் கொள்ளலாம். எனினும் இதன் பொருள் மிக விரிவானது.

- வணக்க வழிபாடுகள்

- ஒழுக்க விதிமுறைகள்

- நன்மை எது தீமை எது என்பது பற்றிய அளவுகோள்கள்

- சமூக அமைப்புக்குத் தேவையான சட்டங்கள்

இவ்வாறு மனித வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் தீர்மானிக்கின்ற அதிகாரம் - நம் எல்லோரையும் படைத்துப் பாதுகாக்கின்ற, அல்லாஹு தஆலா ஒருவனுக்கே சொந்தம்; வேறு யாருக்கும் இத்தகைய எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பது தான் - லா இலாஹ இல்லல்லாஹ்" - என்பதன் பொருள் ஆகும்.

"முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" - என்பதன் பொருள் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வல்ல அல்லாஹ்வின் திருத்தூதராக விளங்குகிறார்கள் என்பது தான்.

அதாவது - இறைவனிடம் இருந்து பெறப்படுகின்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் உலக மக்கள் அனைவருக்கும்

- வழி காட்டி

- விளக்கமளித்து

- வழி நடத்திச் செல்கின்ற - இறைவனின் தூதராக - முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் விளங்குகிறார்கள் என்பது தான்.

எந்த ஒரு மனிதர் தன்னைப் படைத்த அல்லாஹுதஆலாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இறைத்தூதருக்குக் கட்டுப்பட்டு தன் வாழ்க்கை முழுவதையும் அமைத்துக் கொள்கிறாரோ அவரே ஒரு முஸ்லிம் என்று அழைக்கப்படுவார்.

அது போலவே எந்த ஒரு சமூக அமைப்பு அகில உலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கின்ற அல்லாஹுதஆலாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இறைத்தூதருக்குக் கட்டுப்பட்டு தன் வாழ்க்கை முழுவதையும் அமைத்துக் கொள்கிறதோ அதுவே இஸ்லாமிய சமூக அமைப்பு ஆகும்.

சுருக்கமாகச் சொன்னால் -

"லா இலாஹ இல்லல்லாஹ்" - என்பது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதையும்

"முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" - என்பது இறைவனுக்கு எவ்வாறு அடிபணிவது என்பதை இறைவனின் திருத்தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமே பெற வேண்டும் என்பதையும் குறிக்கிறது எனலாம்.

பாடம் நடத்தும் வழிமுறை (methodology):

பாடம் நடத்துவதற்கு முன்பு ஆசிரியர் செய்திட வேண்டியவை:

இது தான் இஸ்லாம், இஸ்லாம் உங்கள் பார்வைக்கு போன்ற நூல்களிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொள்தல் சிறப்பு.

இலாஹ், ரஸூல் ஆகிய இரண்டு அரபி மொழிச் சொற்களுக்கும் அகராதியிலிருந்தும், திருக்குர்ஆன் விரிவுரை நூல்களில் இருந்தும் குறிப்புகளை எடுத்துக் கொள்வதும் அவசியம்.

வகுப்பறைக்குள்:

இந்தப் பாடத்துக்கு என்னென்ன கேள்விகள் கேட்கலாம்?

ஒரு முஸ்லிம் மது அருந்துபவனாக இருக்க முடியுமா?

ஒரு முஸ்லிம் நாட்டில் மதுக் கடைகள் இருக்க முடியுமா? வட்டியின் அடிப்படையிலான வங்கிகள் அங்கே இயங்க முடியுமா?

- இன்னும் இது போன்ற கேள்விகளைத் தக்க தருணத்தில் மாணவர்களிடத்தில் கேட்டு அவர்களுடன் அழகிய முறையில் விவாதித்திட வேண்டும். இது போன்ற விவாதங்களில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என்பது என் அனுபவம்.

பாடம் நடத்தி முடிந்ததும் கேட்க வேண்டிய கேள்விகள்:

இன்றைய முஸ்லிம்களில் எத்தனை பேர் - "லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" எனும் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்? ஏன் எல்லா முஸ்லிம்களும் அவ்வாறு வாழ்ந்திடவில்லை? அவர்களை அவ்வாறு வாழச் செய்வதற்கு நாம் என்ன செய்யலாம்?

குறிப்பு: தனிப்பட்ட முஸ்லிம் ஒருவரைக் குறிப்பிட்டு அவர் அப்படியில்லை, இப்படியில்லை என்று குறை கூற அனுமதித்து விடக் கூடாது.

***

ஈமான் என்றால் என்ன?
பாடம் எண் 4:

பாடத்தின் தலைப்பு: ஈமான் என்றால் என்ன?


மாணவர் தகுதி: 10 வயது நிரம்பியவர்கள் (6 - வது வகுப்பு)


பாடத்தின் உள்ளடக்கம் (content):

4. ஈமான் என்றால் என்ன?


உள்ளத்தால் ஒன்றை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொண்ட ஒன்றை எடுத்து நடப்பதற்கும் பெயர்தான் - ஈமான்.


இதனை தமிழில் - நம்பிக்கை - என்று குறிப்பிடலாம்.

அதாவது - இறைவன் வகுத்துத் தந்துள்ள மறைவான விஷயங்களைப் பற்றிய நம்பிக்கைக்குத் தான் ஈமான் என்று பெயர்.

ஈமான் என்பதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்ன விளக்கம் தந்தார்கள் என்று பார்ப்போமா?

ஒரு தடவை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வந்து ஈமானைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்:

அல்லாஹ்வையும்

வானவர்கள் என்று அழைக்கப்படும் இறைவனின் மலக்குகளையும்

இறைவனின் வேதங்களையும்

அவன் அனுப்பிய தூதர்களையும்

மறுமை நாளையும்

நடப்பவைகளில் நல்லவை கெட்டவை அனைத்தும் இறைவனிடம் இருந்தே ஏற்படுகின்றன என்பதையும்

நம்புவதற்குப் பெயர் தான் - ஈமான்

இந்த நபிமொழி ஸஹீஹுல் புகாரி எனும் நபிமொழி நூலில் காணக் கிடைக்கிறது.

ஈமான் என்பது ஒருவனது உள்ளத்திலே ஏற்பட்டதும் - அவனது சிந்தனை, செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் - இவை அனைத்திலும் - அந்த இறை நம்பிக்கை - ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தி விடும்.

ஈமானின் விரிவான பொருள் குறித்து அண்ணல் நபி (ஸல்) கூறுவதைப் பாருங்கள்:

ஈமான் எனும் இறைநம்பிக்கை எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது. அவற்றில் மிகச் சிறந்தது - லா இலாஹ இல்லல்லாஹ் - என்ற சொற்றொடராகும். அவற்றில் மிகத் தாழ்ந்த ஒன்று - துன்பம் தரக்கூடிய (முள் போன்ற) பொருட்களை பாதையில் இருந்து அகற்றுவது; மேலும் வெட்க உணர்வு கூட ஈமானின் எனும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியே!"

இந்த நபிமொழி ஸஹீஹுல் முஸ்லிம் எனும் நபிமொழி நூலில் காணக் கிடைக்கிறது.

ஆசிரியருக்குத் தேவையான குறிப்புகள்:

இது தான் இஸ்லாம், இஸ்லாம் உங்கள் பார்வைக்கு போன்ற நூல்களிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொள்தல் நல்லது. .

கேள்விகள் இப்பாடத்துக்கு மிக அவசியம். நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்றொரு கேள்வியைக் கேட்கலாம்.. நம்பிக்கைக்கான சான்றுகள் என்பது குறித்தும் எளிமையாக விளக்குதல் நலம் பயக்கும்.

ஈமானின் ஓவ்வொரு பகுதியையும் சுருக்கமாக விளக்கிட வேண்டும். அடுத்து வரும் பாடங்களில் இவை விரிவாக அலசப்படும்.

இதே வலைதளத்தில் நம்பிக்கை பகுதியிலுள்ள சில கட்டுரைகளும் ஆசிரியர்களுக்கு உதவலாம்.

***

இறை நம்பிக்கையின் விளைவுகள்

பாடம் எண் 5:

பாடத்தின் தலைப்பு: இறைநம்பிக்கையின் விளைவுகள்


மாணவர் தகுதி: 10 வயது நிரம்பியவர்கள் (6 – வது வகுப்பு)


பாடத்தின் உள்ளடக்கம் (content):

5: இறைநம்பிக்கையின் விளைவுகள்

இறைநம்பிக்கை கொள்வதால் ஒருவனுக்குள் அந்த நம்பிக்கை என்ன விளைவுகளை, மாற்றங்களை ஏற்படுத்துகின்றன?

ஒருவன் நல்லொழுக்கம் உடையவனாக மாறுவதும், ஒருவனிடத்தில் நற்செயல்கள் வெளிப்படுவதும் தான் - ஈமான் கொள்வதால் ஏற்படுகின்ற விளைவுகள் ஆகும்.

எப்படிப்பட்ட நல்லொழுக்கம் அது?

எப்படிப்பட்ட நற்செயல்கள் அவை?

சான்றுக்கு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
"எவனது கரத்தின் மீது என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக - தான் விரும்பும் ஒன்றையே தன் சகோதரனுக்கும் விரும்பாத வரை உங்களில் எவரும் உண்மையிலேயே ஈமான் கொள்ளவில்லை". (புகாரி, முஸ்லிம்)

"யார் ஒருவர் அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளாரோ - அவர், தனது பக்கத்து வீட்டுக்காரர்களை நல்ல முறையில் நடத்திட வேண்டும்.

"யார் ஒருவர் அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளாரோ - அவர், தனது விருந்தினரை நல்ல முறையில் கண்ணியப் படுத்த வேண்டும்.

"யார் ஒருவர் அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளாரோ - அவர் நல்லதையே பேச வேண்டும். இல்லையேல், மவுனமாக இருந்திட வேண்டும்." (புகாரி, முஸ்லிம்)

"அடுத்த வீட்டுக்காரன் பசியோடு இருக்க, தான் மட்டும் வயிறாற உண்பவன், உண்மையான இறைநம்பிக்கையாளன் இல்லை." (பைஹகி)

மேலும், ஈமான், தீய செயல்களில் இருந்து நம்மை விடுவித்து விடுகிறது. ஈமான் கொண்டவனிடத்தில் தீய செயல்களைக் காண முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

"ஒருவன் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அவன் இறைநம்பிக்கையாளன் இல்லை.

ஒருவன் திருடிக் கொண்டிருக்கும் நிலையில் அவன் இறைநம்பிக்கையாளன் இல்லை.

ஒருவன் போதைப் பொருட்களைக் குடித்துக் கொண்டிருக்கும்போது அவன் இறைநம்பிக்கையாளன் இல்லை.

மக்கள் கவனிக்கும் நிலையிலும் கொள்ளையடிக்கும் ஒருவன் இறைநம்பிக்கையாளன் இல்லை.

ஒருவன் ஏமாற்றிக் கொண்டிருக்கும் போது அவன் இறைநம்பிக்கையாளன் இல்லை.

எனவே எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! (புகாரி, முஸ்லிம்)

நல்லொழுக்கமும், ஈமானும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள் என்பதை பின் வரும் அண்ணலாரின் பொன்மொழி தெளிவாக்குகிறது.
"நல்லொழுக்கமும், நம்பிக்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றை விட்டு விடுபவன் அடுத்ததையும் விட்டு விட வேண்டியது வரும்."

ஆசிரியருக்குத் தேவையான குறிப்புகள்:

இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் எனும் நூல் அவசியம் உங்கள் கைவசம் இருக்கட்டும்.


***

இயற்கை என்பது இறைவன் படைத்ததே!
பாடம் எண் 6:

பாடத்தின் தலைப்பு: இயற்கை என்பது இறைவன் படைத்ததே!

மாணவர் தகுதி: 10 - 12 வயது

பாடத்தின் உள்ளடக்கம் (content):

6. இயற்கை என்பது இறைவன் படைத்ததே!


விண்ணிலே வலம் வருகின்ற எண்ணிலா விண்மீன்கள்

ஒளியையும் வெப்பத்தையும் தரும் கதிரவன்


இரவு நிலா

எந்தப் பிடிப்பும் இன்றி சுற்றிச் சுழல்கின்ற நாம் வாழும் பூமி

இரவும் பகலும் மாறி மாறி வருகின்ற அற்புதம்

நீர் வற்றி நீராவியாகி கருமேகமென உயர்ந்து பொழிகின்ற மழை

அந்த மழையைப் பெற்று தாவரங்களை, கனிகளை வழங்கும் நிலம்

இவையெல்லாம்..... 



இறைவனின் அத்தாட்சிகள் ஆகும்.

இயற்கைப் பெருவெளி அனைத்துமே "படைத்தவன்" ஒருவன் இல்லாமல்

தானாகவே தோன்றி தானே நிலைபெற்றுக் கொள்தல் சாத்தியமே இல்லை!

அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்கள் இருந்து கொண்டு -

ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கடவுள் படைத்து, ஒவ்வொன்றையும்

ஒவ்வொரு கடவுள் கவனித்துக் கொள்கிறது என்பதையும் ஏற்க இயலாது!

மாறாக எல்லாவற்றையும் படைத்து, ஒரே விதமான, சீரான,

கட்டுக்குலையாத திட்டத்தின் அடிப்படையில் இயக்கி - தொடர்ந்து

அவைகளை அதே நிலையில் நிலைத்து நிற்க வைக்கின்ற ஆற்றல் மிக்க

இறைவன் ஒரே ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதை நமது உள்ளமே

நமக்கு உணர்த்துகிறது.

"உங்கள் வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவன் தான். அளவற்ற அருளும் நிகரற்ற அன்பும் உடைய அவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு எவனும் இல்லை."

" அவன் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்;
இரவும், பகலும் மாறி, மாறி வருவதிலும் மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; இறந்த பூமியை உயிர்ப்பிக்க வானத்திலிருந்து அல்லாஹ் பொழிவிக்கச் செய்யும் மழையிலும்
எல்லா விதமான கால்நடைகளையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும்
காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் நிச்சயமாக இருக்கின்றன." (2: 163-164)

மேற்கண்ட இறை வசனங்கள் =

இறைவனே இல்லை என்ற "இறைமறுப்புக் கொள்கையை" மறுக்கின்றன!

பல தெய்வக் கோட்பாடுகளையும் நிராகரிக்கின்றன.

இறைவன் ஒருவனே எனும் ஓரிறைக் கொள்கையை உறுதிப் படுத்துகின்றன.

***

பாடம் 7: இறைவன் எப்படிப்பட்டவன்?

Subject: இஸ்லாமியக்கல்வி (Islamic studies)

பாடத்தின் தலைப்பு:

இறைவன் எப்படிப்பட்டவன்?
(இறைவனின் தன்மைகள்)

மாணவர் தகுதி: 10 வயது நிரம்பியவர்கள் (6 - வது வகுப்பு)

பாடத்தின் உள்ளடக்கம் (content):


பாடம் 7: இறைவன் எப்படிப்பட்டவன்?

ஒரு குறிப்பிட்ட காலத்தில் அது இல்லாமல் இருந்தது; பிறகு ஒரு காலத்தில் அது தோன்றியது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை அது இருக்கும். பிறகு அது இல்லாமல் போய் விடும் என்ற நிலை - நிச்சயமாக இறைவக்கு இல்லை. அவன் துவக்கமும் முடிவும் இல்லாதவன்!

இறைவனுக்குப் பெற்றோர் என்று யாரும் கிடையாது. அவன் திருமணமும் செய்து கொள்வதில்லை. அவனுக்கு பிள்ளை குட்டிகளும் கிடையாது. அவன் பெறுவதும் இல்லை. அவன் பெறப்பட்டவனும் இல்லை.

அவனுக்குக் "கூட்டாளிகள்" என்று யாரும் கிடையாது.அவனைப் போல் எதுவும் இன்னொன்று இல்லை.

அவன் எந்த ஒரு குறையும் இல்லாதவன். அவன் நிறைவானவன். அவன் தேவைகள் எதுவும் இல்லாதவன்!

ஆம்! இவை எல்லாம் வல்ல இறைவனின் அப்பழுக்கற்ற தன்மைகளாகும். தனது தன்மைகள் குறித்து இறைவனே தன் திருமறையில் என்ன கூறுகிறான் என்று பார்ப்போமா?


"நபியே! நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

அல்லாஹ் எவரிடத்தும் தேவையற்றவன்.

அவன் எவரையும் பெறவுமில்லை; எவராலும் பெறப்படவுமில்லை.

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் - 112: 1 - 4)

"வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது; அவன் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை; அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி படைத்து, அவைகளுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன்." (குர்ஆன் - 25: 2 )

"அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்." (குர்ஆன் - 59: 23)

வல்லோன் அல்லாஹ்வின் இத்தகைய தன்மைகளை நாம் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை உளமாற ஏற்றுக்கொள்ள வேண்டும். அவனது மகத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.


***

பாடம் நடத்தும் வழிமுறை (methodology):

பாடம் நடத்துவதற்கு முன்பு ஆசிரியர் செய்திட வேண்டியவை:

இது தான் இஸ்லாம், இஸ்லாம் உங்கள் பார்வைக்கு போன்ற நூல்களிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொள்தல் சிறப்பு.

வகுப்பறைக்குள்:

மாணவர்களைக் கேள்விகள் கேட்பது அவசியம். மாணவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டிட (motivate) வேண்டும். இந்தப் பாடத்துக்கு என்னென்ன கேள்விகள் கேட்கலாம்?

இறைவன் எப்படிப்பட்டவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? (குழு விவாதம் - Group Discussion)

இறைவன் எப்படிப்பட்டவன் - என்பதை நமக்கு யார் சொல்லிக் கொடுக்க முடியும்?

குறிப்பு: இறைவனைப் பற்றி இறைவன் மூலமே நாம் கற்றுக் கொள்ள முடியும். எனவே தான் நாம் திருமறையின் மூலம் நாம் இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கிறோம் என்பதை மாணவர்களுக்குப் புரிய வைத்துப் பின்னரே திருமறை வசனங்களுக்குச் செல்ல வேண்டும். .

***

Comments