ஸகாத் - ஒரு சடங்கல்ல!

தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் - போன்ற வணக்கங்கள் வெறும் சடங்குகள் அல்ல! அவை மகத்துவம் பொருந்திய இஸ்லாத்தின் தூண்கள்.

நம்மில் தொழக்கூடிய பெரும்பாலோர் - தொழுகையை ஒரு வெற்றுச் சடங்காகக் கருதி நிறைவேற்றுவதால் தான் - தொழுகை நமக்குள் ஏற்படுத்தித் தருகின்ற மாற்றங்கள் எதுவும் நம்மிடத்தில் வெளிப்படுவதில்லை.


தொழுகை என்பது - எல்லாவிதமான மானக்கேடான அருவருக்கத்தக்க செயல்பாடுகளிலிருந்தும் நம்மைப் பாதுகாத்திடும் கேடயம் தான்.

ஆனால் நாம் தொழுகிறோம். மானக்கேடான செயல் பாடுகளும் நம்மிடத்தில் இருக்கின்றன. இதற்குக் காரணம் - நாம் தொழுகையை ஒரு சடங்காகக் கருதுவதால் தான்.

தொழுகையை சடங்காகக் கருதித் தொழுது விட்டால் போதும்; அந்தத் தொழுகையே நம்மை சுவனத்தில் கொண்டு போய் சேர்த்து விடும் என்ற "மனப்பால்" குடிக்கின்றோம். ஆனால் வல்லவன் அல்லாஹு தஆலா நம்மை எச்சரிக்கத் தவறவில்லை.

அது போலவே தான் ஸகாத் என்ற மகத்தான கடமையையும் நாம் ஒரு சடங்கு போல நிறைவேற்றி விடுகின்றோம். ஆனால் ஸகாத் நம்மிடம் எதிர்பார்க்கின்ற உணர்வுகளை நாம் பிரதிபலிப்பதில்லை.

ஸகாத் நம்மிடம் எப்படிப்பட்ட உணர்வலைகளை ஏற்படுத்திட விழைகின்றது?

அந்த உணர்வுகள் நமக்குள் எந்த அளவு ஆழமாக வேர் ஊன்றி இருக்கின்றது? - என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்வோமா?

1. நாம் பெற்றிருக்கின்ற செல்வம் அனைத்தும் அல்லாஹ்  ஒருவனுக்கே சொந்தம்; நாம் அதன் பிரதிநிதிகளே - என்ற எண்ணம் நம்மிடம் மேலோங்கி இருக்கின்றதா?

2. ஏழைகளுக்கு நாம் நமது செல்வத்தை வழங்குவோம்; ஆனால் அந்த ஏழைகளை நாம் மதிக்கின்றோமா? .

3. அனாதைகளுக்கு நாம் கண்ணியம் அளிப்பதுண்டா?

4. வீண் செலவுகளில் இருந்து நாம் விலகி யிருக்கின்றோமா?

5. நான் பணக்காரன் என்ற கர்வம் கொஞ்சமாவது தலை தூக்குகின்றதா?

6. பொருள் ஈட்டும் போது ஹலால் - ஹராம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கின்றோமா?

7. ஏதாவது ஒன்றை அடைய விரும்பின் - "பணத்தைக் கொடுத்து" எப்படியாவது அதனை அடைந்துவிடத் துடிக்கின்றோமா?

8. நமது கொடைத் தன்மை குறித்து மக்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறதா? பாராட்டைப் பெற்றுத் தராத தர்மங்களைச் செய்திடத் தயங்குகிறோமா?

9. உண்மையான, நேர்மையான, இறையச்சம் மிக்க மார்க்க அறிஞர்களை உளமாற நாம் மதிக்கின்றோமா? அல்லது அவர்களை நம் கைக்குள் போட்டுக் கொள்ள மனம் நாடுகின்றதா?

10. பதவி சுகம் அடைந்திட நாம் துடிக்கின்றோமா? பதவிகளை நமக்குச் சாதகமான கருவியாக ஆக்கிக் கொள்ள விழைகின்றோமா? அல்லது பதவியில் இருக்கும்போது இறையச்சம் நம்மிடம் மேலோங்குகிறதா?

ஆம்! சுய பரிசோதனை செய்து கொள்ள இதுவே சிறந்த நேரம். இன்ஷா அல்லாஹ் - வர இருக்கின்ற ரமளான் நமது உள்ளங்களைத் தூய்மைப் படுத்தட்டும்! ஆமீன்!!

Comments