நிர்வாகப் பொறுப்பிற்கு யார் வர வேண்டும்?

நபியவர்களின் மறைவிற்குப் பிறகு கலீஃபாக்களின் ஆட்சியில் பாரசீகமும் பைஸாந்தியமும் முஸ்லிம்கள் வசமாகியிருந்த கால கட்டம் அது. முஸ்லிம்கள் கைப்பற்றிய நாடுகளுள் ஸிரியா ஒரு முக்கியமான நாடு. அங்கே நடைபெற்ற போர்க்களங்களில் தலைமை தாங்கி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார் உமைர் இப்னு ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு என்ற உன்னதமான நபித்தோழர்.


ஸிரியாவின் கிழக்குப் பகுதியில் முஸ்லிம் படைகளுக்குத் தலைமை தாங்கிப் போராட்ட முனையில் இருந்த உமைருக்கு  கலீஃபா உமரிடமிருந்து தகவல் வந்தது:

‘ஹிம்ஸிற்குச் சென்று ஆளுநராகப் பொறுப்பேற்று மக்களை வழிநடத்தவும்.’
கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு, தம் ஆளுநர்களை குருட்டாம் போக்கில் தேர்ந்தெடுப்பவர் அல்லர். ஆளுநர் தேர்வுக்கென அவர் உருவாக்கி வைத்திருந்த விதிமுறைகள் மிகக் கடுமையானவை. தவிரவும் ஆளுநர் பொறுப்பில் அவர் நியமித்தவர்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த
நபித்தோழர்களையே!

ஆளுநர் பதவி என்றதும் உமைருக்கு அதில் சற்றும் விருப்பமேயில்லை. இறைவனின் பாதையில் களம் காண வேண்டும். போரிட வேண்டும். அடைந்தால் வெற்றி. இல்லையேல் உயிர் அவனுக்குத் தியாகம். இவையே அவரது புத்தி முழுவதையும் ஆக்கிரமித்திருந்த எண்ணங்கள். எனினும் கலீஃபாவின் ஆணையை மீற முடியாது என்ற காரணத்தால் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஹிம்ஸ் வந்தடைந்தார் உமைர் இப்னு ஸஅத்.
வந்து சேர்ந்ததும் மக்களைத் தொழுகைக்கு வரும்படி பள்ளிவாசலுக்கு அழைத்தார். வந்தார்கள் மக்கள். தொழுதனர் அனைவரும். முடிந்ததும் எழுந்து நின்று மக்களிடம் உரையாற்றினர் உமைர். இறைவனுக்கு நன்றியும் புகழும் உரைத்தபின்,

“மக்களே! இஸ்லாம் வலிமையான வாயில்கொண்ட ஓர் உறுதியான கோட்டை. இந்தக் கோட்டை நீதியால் கட்டப்பட்டிருக்கிறது; சத்தியம் அதன் வாயில். கோட்டை இடிக்கப்பட்டு அதன் வாயில் நொறுக்கப்பட்டால், இம்மார்க்கத்தின் புனிதத்தைக் காப்பாற்ற எந்த வழியுமில்லை. ஆட்சியாளர் சக்தியுள்ளவராய்த் திகழும்வரை இஸ்லாம் தாக்குதலுக்கு உட்படாது. ஆட்சியாளரின் வலிமை மக்களைச் சாட்டையால் கட்டுப்படுத்துவதும் அவர்களை வாளால் மிரட்டிப் பணியவைப்பதும் அன்று. மாறாய், மக்கள் மத்தியில் நீதியை நிலைநாட்டி, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதே வலிமை.”

அவ்வளவுதான் உரை. சுற்றி வளைத்துப் பேசும் நெடிய பிரசங்கம் இல்லை. ஆட்சியாளனுக்கு மக்களிடமிருந்து என்ன தேவை; மக்களுக்கு ஆட்சியாளன் என்ன செய்ய வேண்டும் என்று சுருக்கமான பேச்சு. தம் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார் ஆளுநர் உமைர் இப்னு ஸஅத்.

அடுத்த ஓர் ஆண்டிற்கு அவரிடமிருந்து கலீஃபாவிற்குக் கடிதமும் இல்லை; சேகரித்த ஸகாத் வரியிலிருந்து அரசின் கருவூலமான பைத்துல்மாலுக்குப் பங்கும் செல்லவில்லை. உமருக்குக் கவலை ஏற்பட்டுவிட்டது. என்னதான் நடக்கிறது ஹிம்ஸில்? உமர் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு ஐயம் துளிர்விட ஆரம்பித்தது.

ஒருமுடிவுடன் தம் உதவியாளரை அழைத்தார். “ஹிம்ஸிலுள்ள நம் ஆளுநருக்குக் கடிதம் எழுதுங்கள். ‘அமீருல் மூஃமினீனின் இக்கடிதம் கிடைத்ததும் உடனே புறப்பட்டு வரவும். வரும்பொழுது முஸ்லிம்களிடமிருந்து திரட்டிய வரிப்பணத்தையும் கொண்டு வரவும்’” என்று வாசகத்தையும் விவரித்தார்.

கடிதம் உமைரை அடைந்தது. ஹிம்ஸின் ஆளுநர் பதவியை இறக்கி அங்கேயே வைத்துவிட்டு, மூட்டை-முடிச்சைக்கட்டிக் கொண்டு அவர் புறப்பட்டார். கையில் ஈட்டியை ஏந்திக்கொண்டு, கால்நடையாக மதீனாவை நோக்கி நடைப் பயணம் துவங்கியது. ஹிம்ஸிற்கும் மதீனாவிற்குமான தொலைவு தோராயமாக 1200 கி.மீ. நடந்தார் உமைர் இப்னு ஸஅத்!

ஒருவழியாக மதீனா வந்து சேர்ந்தபோது உமைரின் தோற்றம் முகம் வெளுத்து, தேகம் மெலிந்து, முடி நீளமாய் வளர்ந்து பயண வேதனை அவர்மேல் படர்ந்து கிடந்தது. அவரைப் பார்த்து அதிர்ந்துபோன உமர், “உமக்கு என்னாயிற்று உமைர்?” என்று விசாரித்தார்.

“ஒன்றும் பிரச்சினையில்லையே! அல்லாஹ்வின் கருணையால் நன்றாகத்தானே இருக்கிறேன். இவ்வுலகிற்குத் தேவையான அனைத்தும் என்னிடம் உள்ளன. அவை எனது கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.”

அவருக்குத் தேவையான அனைத்தும் எவை? மூட்டையில் இருந்த சிறிதளவு உணவும் இரண்டு பாத்திரங்களும்!

“உம்முடன் என்ன எடுத்து வந்திருக்கிறீர்?” இதர உடைமைகளையெல்லாம் தனி மூட்டையாகக் கொண்டு வந்திருப்பாரோ என்ற எண்ணம் உமருக்கு.

“அமீருல் மூஃமினீன் அவர்களே! உடைமைகள் அடங்கிய சிறு மூட்டை. உணவு உண்ண, தண்ணீர் அள்ளிக் குளிக்க, துணி அலச ஒரு பாத்திரம். ஒளுச் செய்ய, நீர் அருந்த ஒரு பாத்திரம் ஆகிய இவையே எனது உடைமைகள். இவை போதும் எனக்கு. மற்றவை இவ்வுலக வாழ்க்கைக்கு அனாவசியம். அவை எனக்குத் தேவையுமில்லை. மக்களுக்கும் அத்தகைய அனாவசியத் தேவைகள் இருக்கக்கூடாது.”

“நடந்தா வந்தீர்?” என்றார் உமர்.

“ஆம் அமீருல் மூஃமினீன்”

“ஆளுநர் நீர் பயணித்து வர அவர்கள் பிராணி ஏதும் வழங்கவில்லையா?”

“அவர்களும் தரவில்லை. நானும் கேட்கவில்லை.”

அடுத்து முக்கிய விஷயத்திற்கு வந்தார் உமர். “அரசாங்கக் கருவூலத்திற்குச் சேரவேண்டிய பணம் எங்கே?”

“நான் எதுவும் கொண்டு வரவில்லை.”

”ஏன்?”

நிதானமாக பதிலளித்தார் உமைர். “நான் ஹிம்ஸை அடைந்ததுமே, அந்நகரின் மக்களுள் மிக நேர்மையானவர்களை அழைத்தேன். வரியைச் சேகரம் செய்யும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தேன். அவர்களிடம் பணமும் பொருளும் சேகரமானதும் அந்நகரில் மிகவும் தேவையுடையவர்கள், வறியவர்கள் யார், யார், உதவிகள் எங்கெல்லாம் தேவைப்படுகின்றன என்று ஆலோசனை கேட்பேன். தேவையானவர்களுக்கும் வறியவர்களுக்கும் அவை உடனே பகிர்ந்தளிக்கப்படும்.”

தம் நம்பிக்கையும் தேர்வும் வீண்போகவில்லை என்பதை அறிந்ததும் மகிழ்ந்தார் உமர்! உதவியாளரை அழைத்து “ஹிம்ஸின் ஆளுநராக இவர் நீடிக்க புதிய ஒப்பந்தம் எழுதுங்கள்” என்றார்.

“தேவையே இல்லை” என்று நிராகரித்தார் உமைர். “பதவி எனக்கு விருப்பமற்ற ஒன்று. அமீருல் மூஃமினீன்! தங்களுக்கும் தங்களுக்குப் பின்வரக்கூடியவர்களுக்கும் இனி நான் அரசாங்கப் பணி புரியவே மாட்டேன்” என்று அழுத்தமாய்க் கூறிவிட்டார்.

“என்னுடைய உறவினர்கள் வசிக்கும் கிராமம் மதீனாவிற்கு வெளியே அமைந்துள்ளது. நான் அங்குச் சென்று வாழ விரும்புகிறேன். அனுமதி அளியுங்கள்.” அனுமதித்தார் உமர். உமைரின் வாழ்க்கை அக்கிராமத்திற்குக் குடிபெயர்ந்தது.

சிலகாலம் கழிந்திருக்கும். உமைர் இப்னு ஸஅதின் நலம் அறிய விரும்பினார் உமர். நம்பகமான தம் நண்பர்களுள் ஒருவரான ஹாரித் என்பவரை அழைத்து, “உமைர் வசிக்கும் ஊருக்குச் செல்லவும். நீர் ஒரு பயணி என்று கூறி அவருடன் தங்கவும். அவர் சொகுசாய் வாழ்கிறார் என்று தெரிந்தால் ஏதும் பேசாமல் என்னிடம் திரும்புங்கள். ஆனால் அவர் வறுமையில் இருந்தால், இந்தாருங்கள் தீனார், அவருக்கு அளியுங்கள்” என்று ஒரு பையில் நூறு தீனார்களை அளித்தார்.

உமைரின் ஊருக்கு வந்தார் ஹாரித். அவரது வீட்டை விசாரித்து அறிந்து, சென்று சந்தித்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.”

“வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.“ வந்திருப்பவர் பயணி எனத் தெரிந்தது.

“நீர் எங்கிருந்து வருகிறீர்?” என்று விசாரித்தார் உமைர்.
“மதீனாவிலிருந்து.”

“தாங்கள் கிளம்பும்போது அங்கு முஸ்லிம்களின் நிலை என்ன?”

“அனைவரும் நலமுடன் உள்ளனர்.”

“அமீருல் மூஃமினீன் நலமா?”

“அவரும் நலமே. தம் பணியை மிக நேர்மையாய் நிறைவேற்றுகிறார்.”

“அனைத்துச் சட்டங்களையும், குற்றவாளிகளுக்கு அளிக்கும் தண்டனைகளையும் முறையே நிறைவேற்றுகின்றாரா?”


“சந்தேகமே வேண்டாம். தம்முடைய மகன் குற்றம் செய்தாலும் கலீஃபா தண்டிக்கத் தவறுவதில்லை"

அதைக் கேட்டு, “யா அல்லாஹ்! உன்மீது கொண்ட நேசத்தினாலேயே பாசம் பாராமல் உமர் நீதி செலுத்துகிறார். அவருக்கு நீ உதவி புரிவாயாக.” என்று இறைஞ்சினார் உமைர்.

உமைரின் வீட்டில் மூன்று நாள் விருந்தினராகத் தங்கினார் ஹாரித். ஒவ்வொரு நாள் மாலையும் விருந்தினருக்கு உணவளித்தார் உமைர். உணவு என்றால் வாற்கோதுமை ரொட்டி. அவ்வளவுதான். மற்றபடி இறைச்சி, குழம்பு என்று எதுவும் இல்லை.

மூன்றாம் நாள். அவ்வூரைச் சேர்ந்த ஒருவர் ஹாரித்திடம் உரையாடும்போது, “நீர் உமைருக்கும் அவருடைய மனைவிக்கும் பெரும் சிரமம் அளித்துவிட்டீர் தெரியுமா? அவர்கள் தினமும் உண்ணும் உணவு அந்த ரொட்டி மட்டுமே. அதையும் விருந்தினரான உமக்குத் தந்துவிட்டு அவர்கள் தங்களின் பசியைப் பொறுத்துக் கொண்டுள்ளனர். நீர் மேலும் சிலநாள் இவ்வூரில் தங்க வேண்டியிருந்தால் தயவுசெய்து என் வீட்டிற்கு வந்து விடுவீராக” என்று அழைப்பு விடுத்தார்.

ஹாரிதுக்கு உமைரின் நிலை நன்கு புரிந்துபோனது. தம்மிடம் அளிக்கப்பட்டிருந்த தீனார்கள் அடங்கிய பையை உமைரிடம் அளித்தார்.

“எதற்கு இது?” என்று கேட்டார் உமைர்.

“அமீருல் மூஃமினீன் இதைத் தங்களிடம் அளிக்கும்படிச் சொல்லித் தந்தார்.”

“இதை அவரிடமே திருப்பித் தந்துவிடுங்கள். என் சார்பாய் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ தெரிவியுங்கள். உமைருக்கு இதன் தேவை இல்லை என்று தெரிவித்துவிடுங்கள்.”

உள்ளிருந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த உமைரின் மனைவி குறுக்கிட்டார்.

“அதைப் பெற்றுக்கொள்ளுங்கள் உமைர். உமக்குத் தேவையெனில் நீங்கள் பயன்படுத்தலாம். இல்லையெனில் தேவையுள்ள வறியவர்கள் இவ்வூரில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அளிக்கலாம்.”

இதைச் செவியுற்ற ஹாரித் பணப் பையை அங்கேயே வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். அந்த தீனார்களை சிறு பைகளில் பங்கிட்டுப் பிரித்தார் உமைர். ஏழைகளுக்கும், ஜிஹாதுக்குச் சென்று உயிர்த் தியாகி ஆகிப்போனவர்களின் பிள்ளைகளுக்கும் அதைப் பகிர்ந்தளித்துவிட்டு, பிறகுதான் இரவுத் தூக்கமே.

மதீனா திரும்பிய ஹாரித்திடம் விசாரித்தார் உமர். “அங்கு என்ன கண்டுவந்தீர் ஹாரித்?”

“அமீருல் மூஃமினீன். உமைர் மிகவும் வறுமையில், கடின வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துவருகிறார்.”

“அவரிடம் பணம் அளித்தீரா?”

“ஆம்.”

“அதை அவர் என்ன செய்தார்?”

“எனக்குத் தெரியாது. ஆனால் அதிலிருந்து தமக்கென ஒரு திர்ஹமைக்கூட அவர் எடுத்திருக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.”

உமைருக்குக் கடிதம் எழுதினார் உமர். “இக் கடிதம் கிடைத்து, படித்து முடித்ததும் உடனே வந்து என்னைச் சந்திக்கவும்.”

மதீனாவுக்கு வந்து கலீஃபா உமரைச் சந்தித்தார் உமைர் இப்னு ஸஅத். முகமன்கூறி வரவேற்று தம் அருகே அவரை அமர்த்திக் கொண்டார் உமர்.

“பணத்தை என்ன செய்தீர் உமைர்?”

“அமீருல் மூஃமினீன்! அதைத் தாங்கள் எனக்கென அளித்துவிட்டபின் அதைப்பற்றி தங்களுக்கென்ன கவலை?”

“அதை நீர் என்ன செய்தீர் என்பதை நான் அறிய விரும்புகிறேன் உமைர்” என்று வற்புறுத்தினார் உமர்.

“செல்வமோ, சந்ததியோ எனக்கு யாதொரு உதவியும் புரிய இயலாத நாள் ஒன்று வருமே, அப்பொழுது அந்தப் பணம் எனக்கு உதவட்டும் என்று ஏற்பாடு செய்துவைத்துவிட்டேன்” என்றார் உமைர்.

கண்கள் கலங்கிப்போனார் உமர். “தமக்கெனத் தேவைகள் இருந்தும் தம்மைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிப்பார்களே அத்தகையவர்களில் நீர் ஒருவர் என்று நான் சாட்சியம் பகர்கிறேன் உமைர்.”

ஒட்டகம் சுமக்கும் பொதியளவு உணவுப் பொருட்களும், இரண்டு மேலங்கியும் உமைருக்கு அளிக்கும்படி கட்டளையிட்டார் உமர்.

“அமீருல் மூஃமினீன்! எங்களுக்கு இந்த உணவின் தேவை இல்லை” என்று அதையும் மறுத்தார் உமைர். “நான் கிளம்பும்போது என் குடும்பத்தினருக்காக இரண்டு ஸாஉ வாற்கோதுமையை அளித்து வந்திருக்கிறேன். அதை நாங்கள் உண்டு முடிக்கும்போது, அல்லாஹ் எங்களுக்கு மேற்கொண்டு் படி அளப்பான். ஆனால் இந்த இரண்டு அங்கி… அதை மட்டும் என் மனைவிக்காக எடுத்துக் கொள்கிறேன். ஏனெனில் அவளது உடை மிகவும் கிழிந்து அவளது உடலை முழுமையாகப் போர்த்தும் நிலையிலும் அது இல்லை.”

இதை என்னவென்று சொல்வது? செல்வச் செழிப்பில் தேவைக்கு மீறி ரகரகமாய், விதவிதமாய் அடுக்கி வைத்து, நாகரிகம் என்ற பெயரில் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு திரியும் நாம் இதை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்?

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு வெகு சில காலத்திற்குள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் உமைர் இப்னு ஸஅத். அந்த மரணச்செய்தி தெரியவந்ததும் உமரின் முகம் சோகத்தால் மாறிப்போனது. உள வேதனையுடன் கூறினார் உமர். “உமைர் இப்னு ஸஅத் போன்றவர்கள் எனது நிர்வாகத்திற்கு வேண்டும் என்பதே என் விருப்பம். முஸ்லிம்களின் நிர்வாகப் பணிகளுக்கு இத்தகையோரின் உதவியே எனக்கு அதிகம் தேவை.”

எளிதில் விவரித்துவிட முடியாத எளிய வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார் உமைர் இப்னு ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு!

மீண்டும் படியுங்கள் உமைர் பின் ஸஅத் அவர்களின் வைர வரிகளை:

“மக்களே! இஸ்லாம் வலிமையான வாயில்கொண்ட ஓர் உறுதியான கோட்டை. இந்தக் கோட்டை நீதியால் கட்டப்பட்டிருக்கிறது; சத்தியம் அதன் வாயில். கோட்டை இடிக்கப்பட்டு அதன் வாயில் நொறுக்கப்பட்டால், இம்மார்க்கத்தின் புனிதத்தைக் காப்பாற்ற எந்த வழியுமில்லை. ஆட்சியாளர் சக்தியுள்ளவராய்த் திகழும்வரை இஸ்லாம் தாக்குதலுக்கு உட்படாது. ஆட்சியாளரின் வலிமை மக்களைச் சாட்டையால் கட்டுப்படுத்துவதும் அவர்களை வாளால் மிரட்டிப் பணியவைப்பதும் அன்று. மாறாய், மக்கள் மத்தியில் நீதியை நிலைநாட்டி, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதே வலிமை.”

ஆம் சகோதரர்களே! நமது அனைத்து விதமான கூட்டமைப்புகளுக்கும் உமைர் பின் ஸஅத் போன்றவர்கள் தலைமை ஏற்றிடும்போதே இஸ்லாம் எனும் கோட்டை வலிமை பெறும்!

யா அல்லாஹ்! உமைர் பின் ஸஅத் அவர்களின் பண்புகளில் ஒரு சிறிதையாவது எங்களுக்கும் எங்கள் சந்ததிகளுக்கும் வழங்குவாயாக!!
உன்னதமான இந்த நபித்தோழரிடம் நமது தலைவர்கள் கற்க வேண்டிய பாடங்கள்:

1. எளிமை (அவருடைய உடைமைகள்)

2. தவக்குல் (அவர் வீட்டில் இருந்த உணவுப்பொருட்கள் இரண்டு ஸாஉ
வாற்கோதுமை மட்டும் தானாம்!)

3. தன்னை விட பிறர் நலம் நாடுதல்  (கணவன் - மனைவி இருவருமே பட்டினி கிடந்து விருந்தினரை உபசரித்திருக்கிறார்கள்.)

4. சகிப்புத் தன்மை (1200 கி.மீ தூரத்தை நடந்தே வந்தடைந்தார்! )

5. பதவியாசை இன்மை (ஆளுநர் பதவியில் ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை)

6.  பொருளாசை இன்மை (100 தீனார்களையும் சதகா கொடுத்து விட்டார்)

7. பொறுப்புணர்ச்சி ( ஸகாத் விஷயத்தில்)

8. மக்கள் நலனில் அக்கறை (கலீஃபா நீதியை நிலைநாட்டுகிறாரா என்ற விசாரணை)

Comments