"இக்ரஃ” வில் நமக்கென்ன படிப்பினை?

உங்களுக்குள் ஒரு திறமை ஒளிந்திருக்கிறது. நீங்கள் - ஒரு விஷயத்தில் தேடல் உள்ளவராக இருக்கிறீர்கள்.

அல்லும் பகலும் அது குறித்து நீங்கள் சிந்தித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அது குறித்த தேடல் என்பது உங்களைப் பொருத்தவரை - அதுவே உங்கள் லட்சியம். அந்த லட்சியத்தை அடைந்து விட நீங்கள் துடிக்கின்றீர்கள்.

ஆனாலும் ஒரு சந்தேகம் உங்கள் மனதில்! இது நம்மால் முடியுமா? இந்த லட்சியத்தை அடைந்திடத் தேவையான திறமை நம்மிடம் இருக்கின்றதா? "இல்லை!" என்றே மனது சொல்கிறது!

இந்தக் கட்டத்துடன் நின்று விட்டால் ஒருவரது லட்சியம் - கிடப்பில் போடப்பட்டு விடுகிறது! இதுவே நம்மில் பெரும்பாலரது நிலை!

அண்ணல் நபியவர்களின் வாழ்வில் நமக்கெல்லாம் ஒரு பாடம். இறைத்தூதராக தேர்வு செய்யப்படு முன்னேயே - நபியவர்களுக்கு ஒரு தேடல் இருந்தது! விடை தேடியே அவர்கள் அல்லும் பகலும் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். ஹிரா குகையில் மாதக் கணக்கில் தங்கியிருந்ததும் - அதே தேட்டத்துடன் தான்!

அப்போது தான் - ஒரு இரவில் - ஜிப்ரயீல் - வானவர் தோன்றுகின்றார்கள்! ஓதுங்கள்! - என்கிறார்கள்.

எனக்கு ஓதத்தெரியாதே! - இது நபியவர்களின் பதில்.

மீண்டும் - ஓதுங்கள்! - என்கிறார்கள் ஜிப்ரயீல்.

மீண்டும் அதே பதில் தான்: எனக்கு ஓதத்தெரியாதே!

மூன்றாவது தடவையாக - நபியவர்களைக் கட்டி அணைத்து இப்போது ஓதுங்கள்! - என்கிறார்கள்.

இறை வசனங்களை ஓதுகின்றார்கள் நபியவர்கள்!

இங்கே - திருமறையின் முதல் மூன்று சொற்களை மட்டும் ஆய்வோம்.

இக்ரஃ பிஸ்மி ரப்பிக! உமது இறைவனின் திருப்பெயரைக் கொண்டு ஓதுவீராக!

ஓதிடக்கூய "திறமை" தன்னிடத்தில் இல்லையே என்ற நபியவர்களின் பதிலுக்கு - இது தான் கட்டளை!

நபியவர்களே அது அப்படி அல்ல! உங்களால் ஓதிட முடியும்! அந்தத் திறமை உங்களுக்குள் ஒளிந்திருக்கின்றது. உங்கள் இறைவனின் திருப்பெயரைக் கொண்டு ஓதுங்கள்! என்பதே இறைவனின் பதில்!

ஒதிப் பாருங்களேன் (try) என்று கூட சொல்லிடவில்லை! ஓதுங்கள் நபியவர்களே என்பதே "வஹியின்" ஊக்கப்படுத்திடும் வார்த்தைகள்! எந்த விதத் தடங்கலும் இன்றி ஓதிக் காட்டுகின்றார்கள் நபியவர்கள்!

இது எதனைக் குறிக்கின்றது எனில் - ஓதிடக் கூடிய திறன் நபியவர்களுக்குள் ஒளிந்திருந்தது என்பதைத் தான்!

இதில் வரலாற்றுக் குறிப்பு ஒன்றும் இருக்கின்றது. நபியவர்கள் சிறு குழந்தையாக இருந்த போது ஹலீமா அவர்களிடம் பால் குடித்து வளர்ந்த சூழலில் சஅதிய்யா குலத்தவர்களிடம் தூய அரபி மொழியைக் கற்றுக் கொண்டவர்கள் நபியவர்கள் என்பது தான் அது!

நபியவர்கள் இறுதித் தூதராகத் தேர்வு செய்யப்படுவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே - அரபி மொழியை அவர்கள் கற்றுக் கொள்ள, குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் பனூ சஅதிய்யா குலத்தாரிடம் அனுப்பி வைத்தவனே வல்லோன் அல்லாஹு தஆலா தான்!

இதில் நமக்கென்ன படிப்பினை என்றால் - நமக்கும் தேடல் என்று ஒன்று இருந்தால், அது அளவு கடந்த ஆர்வமாகப் பொங்கி வழிந்தால் அது குறித்த "திறமைகள்" நமக்குள்" நிச்சயம் ஒளிந்திருக்கின்றது என்றே பொருள்.

அதாவது தேடலும் திறமையும் இரட்டைக் குழந்தைகள். உங்கள் தேடலில் உங்களுக்கு "சந்தேகம்" இல்லை யெனில் - உங்கள் திறமை குறித்து நீங்கள் சந்தேகப் பட வேண்டிய அவசியம் கிடையாது! களத்தில் இறங்கி விட வேண்டியது தான்!

ஒரே ஒரு நிபந்தனை! உங்கள் இறைவனின் திருப்பெயரைக் கொண்டு இறங்கிட வேண்டும்! அவ்வளவு தான்!

Comments