தொழாத ஒருவருக்குத் தேவை தொழக்கூடிய ஒரு நண்பன்!

அது ஒரு விடுதி அறை. இருவர் அங்கே தங்கியிருக்கிறார்கள். ஒருவர் தொழுபவர். இன்னொருவர் தொழாதவர். தொழுபவர் பெயர்: ஹஸன். தொழாதவர் பெயர்: சலீம்.

ஹஸன் மிகவும் நல்லவர். ஐந்து வேளை தொழுபவர் மட்டுமல்ல. பழகுவதற்கு நல்ல நண்பரும் கூட. ஹஸனுக்கும் சலீமுக்கும் ஒரே இடத்தில் வேலை. அவர்கள் இருவரும் சேர்ந்து தான் அந்த விடுதி அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். ஒரு மாதம் தான் ஆகியிருக்கும்.


சலீம் தொழுவதில்லை. வெள்ளி ஜும்ஆ மட்டும் தான். மற்ற படி அவரும் நல்லவர் தான். ஹஸன், சலீமைத் தொழச் சொல்லி ஒரு தடவை கூட அறிவுரை சொன்னது கிடையாது.

ஆனால் - ஹஸன் சற்றே வித்தியாசமானவர். விடுதி அறையை சுத்தமாக வைத்திருப்பதில் மிக கவனமாக இருப்பவர். சலீம் நன்றாகத் தூங்கி தாமதமாக எழுந்திருப்பார். அதற்குள் கழிவறை உட்பட அறை முழுவதையும் சுத்தப்படுத்தி வைத்திருப்பார் ஹஸன்.

சலீம் அவசரம் அவசரமாகக் குளித்து விட்டு வருவதற்குள் காலைச் சிற்றுண்டியை அவருக்கும் சேர்த்து வாங்கி வைத்திருப்பார் ஹஸன்.
எப்போதுமே சிரித்த முகம் ஹஸனுக்கு. பேச்சு குறைவு தான். இஷாவுக்குப் பின் விரைவிலேயே தூங்கச் சென்று விடுவார். ஆனால் சலீம் தாமதமாகத் தான் தூங்கச் செல்வார்.

அதிகாலையில் ஃபஜ்ருக்கு எழும் ஹஸன் – சலீமை எழுப்புவதில்லை! அமைதியாக – விளக்கைக் கூடப் போடாமல் – சப்தமின்றி – பள்ளிக்குச் சென்று விடுவார்.

சில சமயம் சலீம், ஹஸனிடம் மார்க்க சம்பந்தமாக கேள்விகள் எல்லாம் கேட்பார். அந்தப்பிரிவினர் சரியா? இந்தப் பிரிவினர் சரியா? என்றெல்லாம் கேள்விகளை அடுக்குவார் சலீம். ஆஹா! இது தான் சான்ஸ் என்று மார்க்கச் சொற்பொழிவுகளை எல்லாம் அவர் நிகழ்த்துவதே இல்லை!

சலீமின் “தேவையற்ற” கேள்விகளையெல்லாம் சிரித்துக் கொண்டே அழகாகத் தவிர்த்து விடுவார் ஹஸன்.

ஆனால் சலீமின் தேவைகள் எதுவாயினும் செய்து கொடுத்து விட்டுத் தான் மறுவேலை ஹஸனுக்கு. சலீம் வீண் செலவுகள் செய்து விட்டு, மாதக் கடைசியில் கடன் வாங்கி அதனையும் செலவு செய்து விட்டு அடுத்த மாதம் கடனை அடைக்கின்ற டைப்! வீட்டிலிருந்து பணம் அனுப்பச்சொல்லி தகவல் வந்தால் சலீமின் அவசரத் தேவையை நிறைவேற்றி வைக்க ஹஸன் தவறுவதே இல்லை!

ஆனால் சலீமுக்காக துஆச் செய்திடவும் தவற மாட்டார் ஹஸன்!
நாட்கள் ஆக ஆக, சலீமின் உள்ளத்திலே ஒரு உறுத்தல்! மிக மிக நாகரிகமாகத் தம்மிடம் நடந்து கொள்ளும் ஹஸன் தாம் தொழாமல் இருப்பதை ஒரு தடவை கூட “கண்டித்துப்” பேசியதே இல்லையே! ஏன்? உறுத்தல் அதிகரிக்க அதிகரிக்க – சலீமின் உள்ளத்திலே ஒரு போராட்டம்!

இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே பெயர் தாங்கி முஸ்லிமாக நான் வாழப்போகின்றேன்? கடைசி வரை இப்படியேவா? அல்லது எப்போதாவது நான் மாறப் போகின்றேனா? இப்போது இல்லாவிட்டால் பின் வேறு எப்போது?
ஹஸன் தொழுகின்றார். நான் தொழுவதே இல்லை. ஹஸன் தனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார். ஆனால் நான் விருப்பத்துக்குத் தூங்கி விருப்பத்துக்கு எழுந்து, சுத்தம் பற்றிய அக்கரையின்றி, நேரம் பேணுவதில் தடுமாறி, கொடுக்கல் வாங்கலில் சிக்கிக் கொண்டு அலுவலகத்தில் திட்டு வாங்கிக் கொண்டு… இப்படியே இன்னும் எத்தனை நாட்கள்…..? இதற்கு ஒரு முடிவு வேண்டாமா?

சலீம் தன்னைத் தானே கேட்டுக் கொள்ளத் தொடங்கி விட்டார். உறுத்தல் அதிகரிக்க அதிகரிக்க ஒரு முடிவுக்கு வருகின்றார் சலீம்.

“ஹஸன்! நாளை காலை ஃபஜ்ருக்கு என்னை எழுப்பி விடு!”

ஹஸனின் கண்களில் கண்ணீர்! அப்படியே சலீமைக் கட்டித் தழுவிக்கொள்கிறார் ஹஸன்.

ஹஸனின் துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது!

***

இது உண்மைச் சம்பவமும் அன்று. முழுக்க முழுக்க கற்பனைச் சம்பவமும் அன்று.

ஆனால் இதில் ஒரு படிப்பினை இருக்கிறது நம் எல்லாருக்கும்:

தொழாத ஒருவருக்குத் தேவை தொழக்கூடிய ஒரு நண்பன்!

Comments