ஹலீமா அம்மையாரிடம் அண்ணலார்!

அண்ணல் நபிக்கு முதலில் அன்புத் தாய் ஆமினாவும், தொடர்ந்து துபைபா அன்னையாரும் அமுதூட்டினார்கள். அரபு நாட்டின் வழக்கப்படி பெரிய குடும்பத்தினர் செவிலித் தாய்மாரை வரவழைத்து குழந்தைகளை பால் கொடுக்க ஒப்படைப்பார்கள். ஆண்டு இரண்டு ஓடும்வரை அற்புதமாகப் பால்புகட்டி ஒப்படைப்பார்கள்.

அண்ணல் நபிக்கு பால்புகட்ட பனீ ஸஅத் வம்சத்தைச் சேர்ந்த ஹலீமா அம்மையாரிடம் ஒப்படைத்தார்கள். ஹலீமா அம்மையாரின் கதையை அவர்கள் வாயிலாகவே கேட்டறிவோம்:

‘மக்கத்து நகரிலுள்ள செல்வச் சீமான்களின் பிள்ளைகளைக் கொண்டு வந்து பால் கொடுக்கலாம் என ஊரில் இருந்து புறப்பட்டேன். நடு வழியில் என் கோவேறு கழுதை களைத்துவிட்டது. அங்கு நீண்ட நேரத்தைக் கழித்தேன். அப்போது சற்று களைப்பால் அயர்ந்துவிட்டேன், ஒரு கனவு கண்டேன்.

‘பழங்கள் நிறைந்த ஒரு மரம் அதன் கீழ் பகுதியில் நான் அமர்ந்துள்ளேன். என்னைச் சுற்றி பனீ ஸஅத் பெண்கள் அமர்ந்திருக்கின்றனர். அந்த மரத்திலிருந்து ஒரு ஈச்சம் பழம் என் வாயில் விழுகின்றது. அதன் இனிப்பும் தித்திப்பும் சுவையின் சொந்தமானது. அதிக நேரம் அந்தச் சுவை நாவில் ரசனை தந்தது. கனவு கலைந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. என்னையே நம்ப முடியவில்லை. திங்கட்கிழமை மக்காவுக்குப் போய் சேர்ந்தேன். எனக்கு முன்னரே பல செவிலித் தாய்மார்கள் மக்கா சென்று அங்குள்ள செல்வந்தர்களின் குழந்தைச் செல்வங்களைப் பெற்றுக் கொண்டு  பணமும் பெற்றுக் கொண்டு பரபரப்பாகப் பயணமாகிக் கொண்டிருக்கின்றனர்.

எனக்கு இன்னும் ஒரு குழந்தை கிடைக்கவில்லை. நான் பல நாட்கள் தங்கிருந்தும் குழந்தை கிடைக்காத மனம் நொந்த நிலையில் இருந்தேன். இந்தவேளையில் தான் அந்த அழகுறு மனிதர் என்முன் வந்தார். ‘பால் கொடுக்க குழந்தையொன்று இருக்கின்றது. பொறுப்பேற்றுக் கொள்ள யாராவது இருக்கின்றனரா? என்றார்.

நான் அந்தப் பெரியவரிடம் அடக்கமாக உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன். அப்துல் முத்தலிப் எனச் சொன்னார் ‘நான் உன்னிடம் ஒரு அனாதைக் குழந்தையைக் கையளிக்கப் போகின்றேன். இதே குழந்தையை பனூ ஸஅத் கோத்திரப் பெண்களுடன் கையளிக்கக் கேட்டேன். அனாதைப் பிள்ளைக்குப் பாலூட்டும் பொறுப்பேற்றுக் கொண்டால் – தமக்கு ஒன்றும் கிடைக்காது என்று ஓட்டமும் நடையுமாகப் போய் விட்டார்கள் என்றார்.

நான் இப்பிள்ளைக்குப் பாலூட்டுவதாக இருந்தால் எனது கணவரிடம் கேட்க வேண்டும் என்றேன். அப்படியே அவர்கள் வீடு சென்று தனது கணவனின் உத்தரவைப் பெற்று அனாதைப் பிள்ளையைக் கையேற்க இசைந்தனர். ஆனாலும் ஹலீமாவின் அக்கா மகன் ஏழையை எடுக்க வேண்டாமென ஏட்டிக்குப் போட்டியாக நின்றான்.

ஹலீமா அன்னை கருணை காட்டுவோம் என காதுடன் காதுவைத்து கதைத்ததும் அக்கா மகனும் அடங்கிப் போய்விட்டான். அப்படியே அப்துல் முத்தலிப் அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறி, அவர்களுடனேயே ஆமினாவின் வீட்டுக்கு வந்தோம். முஹம்மத் என்ற அந்த அனாதைக் குழந்தையைப் பெற்றுக் கொண்டோம் என ஹலீமா கூறினார்.

இப்பொழுது ‘முஹம்மத்’ ஹலீமாவின் வீட்டில் வளர்கின்றார். எல்லாக் குழந்தைகளை விடவும் எடுப்பான வளர்ச்சி குழந்தையை அழைத்து வந்த நாள் முதல் ஹலீமா அம்மையாரின் வீட்டின் வறுமைகளும், கஷ்டங்களும் விடைபெற்றது. செல்வம் பெருகியது. வளர்ப்பு ஆடுகளின் பால் மடிகள், பால் சுரந்து காணப்பட்டது. ஹலீமா அம்மையாரின் இதயம் குளிர்ந்தது.

வீட்டில் வளரும் முஹம்மதை ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஆமினா அம்மையாரிடமும், அப்துல் முத்தலிபிடமும் எடுத்துச் சென்று காண்பிப்பார்கள், பிள்ளையைப் பார்த்து அகம் மகிழ்ந்து கொள்வார்கள்

முஹம்மத் அவர்களுக்கு இரண்டு வயது ஆன போது,  பால் கொடுப்பதை நிறுத்தி ஆமினா அம்மையாரிடம் பிள்ளையை ஒப்படைக்க ஹலீமா அவர்கள் அழைத்து வந்தார்கள் பிள்ளையின் ஆரோக்கிய நிலையைக் கண்ட ஆமினா அகம் மகிழ்ந்தார்கள். பிள்ளையைக் கையேற்க ஆமினாவுக்கு கொஞ்சம் மனக் கஷ்டமாக இருந்தது. காரணம் மக்காவின் காலநிலை சீராக இல்லாததால் பிள்ளையை மக்காவில் நிறுத்திக் கொண்டால் உடல்நிலை பாதிப்புறும் எனப் பயந்து ஹலீமாவிடமே முஹம்மதை மீண்டும் கொடுத்தனுப்பினார்.

முஹம்மத் அவர்களுக்கு வயது மூன்றாகின்றது. ஹலீமா நாயகியின் பிள்ளைகள் ஆடு மேய்க்கப் போவதைக் கண்டு முஹம்மதும் ஆடு மேய்க்கப் போக ஆசைப்பட்டார். ஹலீமா அம்மையாரின்  அனுமதியுடன் சகோதரர்கள் ஆடு மேய்க்க முஹம்மதை அழைத்துச் சென்றனர்.

ஆடு மேயும் தளத்தில் ஒரு அதிசய சம்பவம் இடம்பெற்றது. இரு வானவர்கள் வந்து முஹம்மதை மல்லாந்து படுக்கவைத்து அவர்களின் நெஞ்சைப் பிளந்து எதையோ வெளியேற்றி மார்பகப் பகுதியை ஒன்றுசேர்த்து விட்டனர் இந்நிகழ்வை ஹலீமா அம்மையாரின் பிள்ளைகள் தாயிடம் வந்து
முறையிடவே ஹலீமா குழந்தையை ஆறத்தழுவி அணைத்துக் கொண்டனர்.

இப்பொழுது ‘முஹம்மத்’ அவர்களுக்கு நான்கு வயது ஹலீமா நாயகி பிள்ளையைத் தாயிடத்திலே ஒப்படைத்தார்கள். அதன் பின்னர் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே  அன்னை ஆமினா அவர்களிடம் வளர்ந்தார்கள் அண்ணலார் அவர்கள்!

Comments