விடை பெறுவது போன்று தொழுது கொள்வீராக!

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். (2:21)

இந்த இறை வசனத்தில் வருகின்ற இரு சொற்களை வைத்து சற்று ஆய்வு செய்வோம்.

ஒன்று: இபாதத் எனும் வணக்கம்; இரண்டு: தக்வா எனும் இறை உணர்வு
அதாவது இறைவனை வணங்கினால் இறை உணர்வு வந்து சேரும் என்பதே இவ்வசனத்தின் கருத்து.

தக்வா எனும் இறை உணர்வு என்பதன் விளக்கம் என்ன?


இறைவன் நம் மீது வைத்திருக்கும் அன்பு, பாசம், இரக்கம் - இவை எல்லாவற்றையும் நினைவில் இருத்தி அவனது உள்ளமையை இதயத்தால் ஆழமாக உணர்கின்ற நிலையையே - தக்வா - என்ற சொல் குறிக்கின்றது என்பதை முன்னரே விளக்கியுள்ளோம். மேலும் - அளவு கடந்த மதிப்பு, மரியாதை, வியப்பு மற்றும் மகத்துவம் ஆகிய இவ்வனைத்துக்கும் உரித்தான நம் இறைவனின் உள்ளமையை இதயத்தால் உணர்கின்ற நிலைக்குப் பெயர் தான் தக்வா என்பதாகும் என்றும் பார்த்தோம்.

இப்போது இன்னொரு இறை வசனத்தையும் எடுத்துக் கொள்வோம்:

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள். (3:102)

இவ்வசனத்தில் நாம் கவனித்திட வேண்டிய அம்சங்கள் இரண்டு:

அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள் - என்றால் என்ன பொருள்?

முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள் - என்று சொல்வதன் உட்பொருள் என்ன?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒன்று:

"நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்!"

அதாவது இறைவனை இதயத்தால் உணர்ந்து கொள்ள வேண்டிய முறைப்படி உணர்ந்து கொள்ளுங்கள் என்று இதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

இது எதனை உணர்த்துகிறது எனில் - இந்த இறை உணர்வை வளர்த்துக் கொண்டு முன்னேறுவதில் பல படிகள் (steps) இருக்கின்றன என்பதைத் தான்!

ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால் - "there are steps in developing one's taqwa"

இது எதனை உணர்த்துகிறது என்றால் - இறை உணர்வை வளர்த்துக்கொள்ள நமக்கு "முயற்சி" ஒன்று தேவைப்படுகிறது!

We need to work on it!

இதற்கென நாம் எந்த வித முயற்சியும் செய்திடாவிட்டால் நமது தக்வா "நுனிப்புல்" தக்வா எனும் நிலையில், ஒரு ஓரத்தில் நாம் நின்று விடுவோம்.

அதாவது - "we will stop with the periphery of our taqwa!"

சுருக்கமாகச் சொல்வதானால் - தக்வாவுக்குத் "தரம்"என்று ஒன்று உண்டு என்பதைத் தான் இறைவசனத்தின் இப்பகுதி உணர்த்துகிறது! நமது தக்வாவின் தரத்தை நாம் தான் உயர்த்திக் கொள்ள முயற்சி செய்திட வேண்டும்!

இரண்டு:

"மேலும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்!"

இதற்கு என்ன பொருள்?

தக்வாவின் தரத்தை உயர்த்திக் கொள்வது நமது ஒரு முயற்சி எனில் (To make it deep is one effort)

தக்வாவின் தரத்தை "நிரந்தரமாக ஆக்கிக் கொள்வது" இன்னொரு முயற்சியாகும் என்பதையே இவ்வசனத்தின் இறுதிப் பகுதி விளக்குகிறது! (To make it permanent is another effort)

அப்படியானால் என்ன பொருள்?

நமது தக்வா என்பது "பலவீனமான" ஒன்றாகும். Our taqwa is fragile!

நான் தக்வாவின் உயர்ந்த நிலைக்குச் சென்று விட்டேன் என்று யாரும் மார்தட்டிக் கொண்டு விட முடியாது! நம்மை அறியாமலேயே கீழே சறுக்கி விழுந்து விடுவோம்!

எனவே நாம் செய்திட வேண்டியது என்னவெனில் - ஒரு எச்சரிக்கை உணர்வோடு நமது "இதயபூர்வமான இறை உணர்வை" வளர்த்துக் கொள்ள தொடர்படியான முயற்சி ஒன்றில் இருந்து கொண்டே இருந்திட வேண்டும். அதாவது தரமும் வேண்டும்; அதில் நிரந்தரமும் வேண்டும்.

நமது இறை உணர்வின் தரத்தை தொடர்ந்து நமது மரணம் வரை வளர்த்துக் கொள்ள வேண்டியே, அனுதினமும் ஐவேளை தொழுகை - எனும் இறை வணக்கத்தைக் கடமையாக்கித் தந்துள்ளான் இறைவன்!

அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்:
உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (15:99)

நபித்தோழர் ஒருவருக்கு நபியவர்கள் இவ்வாறு உபதேசம் செய்தார்கள்:

(குடும்பத்தினரிடம்) விடை பெறுவது போன்று தொழுது கொள்வீராக!

ஒவ்வொரு தொழுகையிலும் மரணத்தின் சிந்தனை இருந்து விட்டால், இறை உணர்வு எனும் தக்வாவின் தரத்தை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும்!

Comments