குமர் காரியம்: மாற்றி யோசிப்போம்!

ஏழைக் குமர்களுக்குத் திருமணம் செய்திடவென்று நம்மில் பலர் பலவிதமாக செயல் படுவதை நாம் பார்க்கின்றோம்.

பெண்ணைப் பெற்றவர்களே உதவி தேடி அலைந்து திரிந்து வசூல் செய்வது ஒரு வழி.

சமூக ஆர்வலர்கள் சிலர் சேர்ந்து வசூல் செய்து பெண்ணைப் பெற்றவர்களிடம் ஒப்படைப்பது ஒரு வழி.

இன்னும் ஒரு வழியைப் பாருங்கள்:
பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் மகளை பத்து பனிரெண்டு வயதிலேயே ஒரு வசதி படைத்த குடும்பத்தில் வேலைக்குச் சேர்த்து விடுகின்றனர். என்ன உடன்பாடு எனில் அந்தப் பெண் அந்த வீட்டில் ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் வேலை செய்வாள்.

பின்னர் அப்பெண்ணுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்வார்கள். மாப்பிள்ளை வீட்டார் கேட்கின்ற (பத்து அல்லது பதினைந்து பவுன்) நகை, சீர் சாமான்கள் மற்றும் வரதட்சனைக்கான தொகையை அந்தப் பெண்ணை வேலைக்கு வைத்துக் கொண்ட அந்த வசதி படைத்த குடும்பம் கொடுத்து விட வேண்டும். அந்த வசதி படைத்த குடும்பம் என்ன செய்கிறது தெரியுமா?

வருடம் தோறும் செலுத்திட வேண்டிய தங்கள் ஜகாத் தொகையை சேர்த்து வைத்து, போதாததற்கு தங்கள் உறவினர்கள் வீட்டு ஜகாத் தொகையையும் கேட்டு வாங்கி, பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கின்றார்கள்.

வேலை வாங்கிக்கொண்டு, சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக, வேலைக்கு ஈடாக கடமையான ஸகாத்தை கொடுத்து விடுவது எப்படி நியாயமாகும்?

இப்படி திருமணம் செய்விக்கப் பட்ட தம்பதியர், எப்படி வாழ்கிறார்கள்? இஸ்லாத்தைப் பின் பற்றியா என்றெல்லாம் நாம் கேட்கக் கூடாது.

இது அவல நிலை அல்லவா? இது குறித்து நாம் மாற்றி யோசித்தால் என்ன?  

ஸகாத்தை வசூலித்து, மணமகனிடம் கொடுத்து, அதையே மஹராக மணமகளிடம் கொடுக்கச் சொல்லி திருமணம் நடத்தி வைத்தால் அது எப்படி இருக்கும்?

சிந்திப்போமா?  

Comments