பெண்கள் தலையை மூடுவது அவசியமா?

நிறைய முஸ்லிம் பெண்மணிகளுக்கு ஒரு சந்தேகம்! பெண்கள் தங்கள் தலைகளை அவசியம் மூடிக் கொள்ளத் தான்  வேண்டுமா என்பதே அவர்களின் சந்தேகம்!  

சூரத்துன் நூர் எனும் அத்தியாயத்தில் ஒரு வசனத்தின் ஒரு பகுதி: "இன்னும் தங்கள் முன்றானைகளால் மார்பையும் மறைத்துக்கொள்ளவும்!" (24:31)


இதில் "ஃகிமார்" - khimaar - எனும் சொல் இடம் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் இதனை veil, shawl, cover என்று மொழிபெயர்க்கிறார்கள். தமிழில் முன்றானை என்று மொழிபெயர்த்துள்ளனர்.

தலையை மறைத்திடும் துணி வகைகளைக் குறிப்பதற்கு அரபிச் சொற்கள் ஒன்பது  இருக்கின்றனவாம்! அதன் அளவு வேறுபடுவதை வைத்து வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன! அதில் ஒன்று தான் - ஃகிமார்.

ஹிஜாப் எனுல் சொல் தலையை மூடுவதைக் (head cover) குறிப்பதில்லை! ஆங்கிலத்தில் இதனை barrier என்று சொல்லலாம்! ஒரு சுவர் - ஹிஜாப் ஆகலாம்; ஒரு திரைச்சீலை ஹிஜாப் என்று அழைக்கப்படலாம்!

ஆனால் ஃகிமார் என்ற சொல்லை இறைவன் தேர்ந்தெடுத்திருப்பதில் ஒரு நுட்பம் ஒளிந்திருக்கின்றது. ஃகிமார் எனும் சொல் தலையை மூடுவதையே குறிக்கிறது. இஸ்லாத்தின் வருகைக்கு முன்னரேயே இந்த சொல்லை அரபுக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்! அதுவும் ஆண்களுக்கு!

ஆண்கள் அணிகின்ற ஒரு விதமான தலைப்பாகையைக் குறித்திட இந்த சொல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது! அதாவது -  நீள வாக்கில் உள்ள ஒரு துணியின் ஒரு பகுதியைக் கொண்டு தலையைச் சுற்றிக் கட்டி விட்டு, இன்னொரு பகுதியை முதுகின் நடுப்பகுதி வரை தொங்க விட்டிருப்பார்களாம்!

இறைவன் இங்கே பெண்களுக்கு சொல்ல வருவது என்னவெனில் - ஃகிமார் ஒன்றைக் கொண்டு தலையை மூடிக்கொண்டு, அதன் ஒரு பகுதியைக் கொண்டு அவர்கள் தங்கள் நெஞ்சுப்பகுதியை மறைத்துக் கொள்ளட்டும் என்பது தான்!

இன்னொரு கோணத்திலும் இந்தச் சொல்லை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

அரபியில் ஃகம்ர் (khamr) என்ற சொல் மதுவைக் குறிக்கும்! ஃகிமார் மற்றும் ஃகம்ர் இரண்டும்  ஒரே மூலச் சொல்லில் இருந்து தான் வருகின்றன! ஃகம்ர் என்பது (தலையில் உள்ள) அறிவை மூடி விடுகின்றது என்பதனால் தான் மதுவுக்கு ஃகம்ர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் அரபுக்கள்!

குதிரைகளில் சில இப்படியும் இருக்கும். உடல் முழுவதும் ஒரு நிறத்திலும், தலை இன்னொரு நிறத்திலும் இருக்கும். இப்படிப்பட்ட குதிரைகளை   முதஃகம்மிர் (mutakhammir) என்று அழைப்பார்களாம். அதாவது தலைப்பாகை கட்டிய குதிரை - என்று சொல்வதற்காக!

இவற்றிலிருந்து தெரிய வருவது என்னவெனில் ஃகிமார் என்ற சொல் இங்கே பயன்படுத்தப்பட்டிருப்பதை வைத்தே பெண்கள் தங்கள் தலையை மூடிக் கொள்ள வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு என்பது தான்!

(நுஃமான் அலி கான் அவர்களின் - To cover or not? - வீடியோ சொற்பொழிவிலிருந்து)

Comments