கலாச்சாரம் குறித்து ஆழமான மறுபரிசீலனை ஒன்று தேவை!

கலாச்சாரம் எனும் விஷயத்தில் அடிப்படையிலேயே நாம் இரண்டு தவறுகளைச் செய்கின்றோம்!

ஒன்று:

நாம் ஒரு பன்முக சமூகம் (Pluralistic Society) ஒன்றில் வாழ்ந்து வருகிறோம்.  இங்கே பலவிதமான கலாச்சாரப் பழக்க வழக்கங்களை மக்கள் பின்பற்றுகிறார்கள்.

இதனை இஸ்லாமிய அறிஞர்களில் ஒரு சாரார் எப்படிப் பார்க்கின்றார்கள் எனில், பிற மக்கள் பின்பற்றும் கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் ஷிர்க் மற்றும் பித்அத் எனும் வட்டத்துக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்.


இந்த முடிவுக்கு அவர்கள் வந்திட பின் வரும் நபிமொழியை ஆதாரமாக அவர்கள் காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512)

இந்த ஒரே ஒரு நபிமொழியை மட்டும் கவனத்தில் கொண்டு இவ்விஷயத்தை அணுகுதல் சரியன்று. மக்களின் பழக்க வழக்கங்ககள் சம்பந்தப்பட்ட ஏனைய நபிமொழிகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அலசிட வேண்டிய விஷயம் இது.

இரண்டு:

முஸ்லிம்கள் செய்யும் இன்னொரு தவறு என்னவென்றால் - இஸ்லாமிய வாழ்க்கை நெறியோடு, அரபுக்களின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களையும் சேர்த்து - அவற்றுக்கு இஸ்லாமிய சாயம் பூசி அவற்றை விடாப்பிடியாகப் பற்றிப் பிடித்து வைத்து கொண்டிருப்பது தான் அது!

பன்முக சமூக அமைப்பு ஒன்றில் வாழும் நாம், மேற்கண்ட இரண்டு தவறுகளால் மற்ற மக்களிடமிருந்து மிகவும் ஒதுங்கிப்போயிருக்கின்றோம்!

எனவே தான் சொல்கிறோம்:

கலாச்சாரம் குறித்து இஸ்லாமிய அறிஞர்களின் ஆழமான மறுபரிசீலனை ஒன்று தேவை! அவசரத் தேவை!

Comments