அறிவுக்கு வேலை கொடு!

திருக்குர்ஆனிலோ, அல்லது நபிமொழி ஒன்றிலோ நமக்கு ஒரு கருத்து நமது சிந்தனைக்கு வைக்கப்படுகிறது. அதனை ஒருவர் படிக்கின்றார். அந்தக் கருத்து எழுதப் பட்டிருக்கும் மொழி வடிவத்தைப் படித்து அப்படியே வரிக்கு வரி பொருள் கொள்கிறார். கருத்தைப் படித்த அவர் அதன் படியே செயல்படுகின்றார்.

இப்படி வரிக்கு வரி பொருள் கொள்வற்கு literal meaning என்று பொருள்! இவ்வாறு வரிக்கு வரி அப்படியே பொருள் கொண்டு அப்படியே செயல் படுபவர்களுக்கு ஆங்கிலத்தில் Literalists என்று பெயர்!

ஆனால் - இன்னொருவர் வந்து அதே கருத்தைப் படிக்கின்றார். அந்தக் கருத்தின் உட்பொருள் குறித்து ஆழமாக சிந்திக்கின்றார். அவருக்குப் பளிச்சென்று ஒன்று விளங்குகிறது. அந்தக் கருத்துக்கு வரிக்கு வரி பொருள் கொள்ளப்படுவதை ஏற்க அவரது அறிவு இடம் கொடுக்கவில்லை! அவரது அறிவுக்கு எது விளங்குகிறதோ அதன்படியே செயல்படுகின்றார்! இவரை நாம் சிந்தித்து செயல்படுபவர் என்று அழைக்கலாம்.

இப்போது பிரச்னை என்னவென்றால் வரிக்கு வரி பொருள் கொண்டு செயல்படுவது மட்டுமே சரியானது. சிந்தித்து செயல்படுகிறேன் என்று சொல்லிக்கொண்டு, வரிக்கு வரி என்ன சொல்லப்பட்டிருக்கின்றதோ அதற்கு மாற்றமாக செயல்படுவது என்பது – அந்தக் கருத்துக்கு நாம் செய்கின்ற துரோகம் என்று சொல்கிறார்கள் – Literalists.

ஆனால் – ஒரு கருத்து முன் வைக்கப்பட்டால் அதனை மேலோட்டமாகப் பொருள் கொண்டு விட்டு, அது குறிந்து சற்றும் சிந்திக்காமல் செயல்பட்டு விடுவது என்பது அந்தக் கருத்து முன் வைக்கப்பட்ட நோக்கத்தையே சிதைத்து விடும் என்று சொல்கிறார்கள் – சிந்தித்துச் செயல்படுவதையே விரும்பும் – Thinkers!

என்னைப் பொருத்தவரையில் சிந்தித்துச் செயல்படுவதே சரி என்று எண்ணுகின்றேன்!

Comments