அமைதி ஒன்றே எமது நோக்கம்!

அண்ணல் நபியவர்கள் - மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து - மதீனாவுக்கு வந்து சேர்ந்ததும்– தம்மை ஆர்வத்துடன் காண அங்கே கூடியிருந்த மக்களிடம் - முதன் முதலாக அவர்கள் ஆற்றிய உரை என்ன தெரியுமா?

அங்கே கூடியிருந்த மக்களில் ஒருவராக, அந்த உரையைச் செவி மடுத்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரளி) அவர்கள் அறிவிப்பதாக அது நமக்கு அறியத் தரப்படுகிறது.,


எனதருமை மக்களே!

ஸலாம் எனும் அமைதியைப் பரப்புங்கள்!

மற்றவர்களுக்கு உணவளியுங்கள்!

உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள்!

மக்கள் உறங்கும் நேரத்தில் எழுந்து

இறைவனை வணங்குங்கள்!

சுவனத்தில் அமைதியாக நுழைவீர்கள்!

(சுனன் இப்னு மாஜா - ஸஹீஹ்)

** *

இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை என்னென்ன?

அந்த உரையை கவனியுங்கள். உரையின் துவக்கமும் அமைதி பற்றித்தான்! உரையின் இறுதியும் அமைதி பற்றித்தான்!

இதில் மதீனத்து மக்களுக்கு நபியவர்கள் விடுத்த செய்தியே நான் இங்கு வந்திருப்பது அமைதியைப் பரப்பிடத் தான் என்பதை உணர்த்துகிறார்கள்! முதல் உரையிலேயே!

முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் அவர்கள் முழு முதல் நோக்கமும் இதுவாகத்தான் இருந்திட வேண்டும்! இதற்கு நேர் மாற்றமாக "குழப்பம்" விளைவிப்பது என்பது ஒரு முஸ்லிமால் எண்ணிப்பார்க்க முடியாதது!


அடுத்த பாடம் மற்றவர்களுக்கு உணவளியுங்கள்!

அதாவது அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளையும் basic needs நிறைவேற்றித்தருவது எமது அடுத்த நோக்கம் என்கிறார்கள் நபியவர்கள். மதீனத்து ஏழைகளின் வயிற்றில் “பால்” வார்ப்பது போன்றது இது! முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் அங்கிருக்கும் ஏழைகளின் பசியைப் போக்குவது – அவர்களின் நீங்காக் கடமை!

மூன்றாவது பாடம் தான் முக்கியமான பாடம்:

உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள் என்பது.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அண்ணலார் யாருக்கு முன்னால் இப்படி ஒரு உரையை ஆற்றுகிறார்கள் என்பதைத்தான்!

அங்கே கூடியிருந்த மக்களை நாம் மூன்று வகையினராக பிரித்துப் பார்க்கலாம்.

ஒன்று: மதீனாவின் - அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலங்களிலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள்.

இரண்டு: மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்து விட்ட முஸ்லிம்கள்

மூன்று: முன்னால் வேதம் கொடுக்கப்பட்ட யூத குலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் யூத குலத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர் தான்!

இந்த மூவருக்கும் தான் இந்த மூன்றாவது பாடம்!

அவ்ஸ் கஸ்ரஜ் குலத்தவருக்கு என்ன செய்தி இதிலே?

அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் – இவர்கள் யார் தெரியுமா? கூடப்பிறந்த அண்ணன் தம்பிகள்! நபியவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்வதற்கு 120 ஆண்டுகளுக்கு முன்பு! இந்த உடன் பிறந்த இரு சகோதரர்களின் இரண்டு குடும்பங்கள் தான் வளர்ந்து பெரிதாகி அவ்ஸ் குலமாகவும் கஸ்ரஜ் குலமாகவும் ஆனபின், அவர்களுக்குள் - சிறிய சண்டை தோன்றி , அதுவே பின்னர் பெரும் போராக மாறி ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அண்ணலார் மதீனா வந்து சேர்கிறார்கள். அவர்களுக்கிடையே நடந்த “இன அழிப்புப் போருக்கு” - புஆத் - என்று பெயர்.

இஸ்லாம் அவர்களை ஒன்றிணைத்து வைத்திருந்த தருணம் அது! நபியவர்கள் உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள் என்ற நபித்துவச் செய்தி – அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்து முஸ்லிம்களுக்கு என்ன உணர்வலைகளை அப்போது ஏற்படுத்தியிருக்கும் என்பதை விளக்கிச் சொல்லத் தேவையில்லை!

அடுத்து புலம்பெயர்ந்து வந்த முஹாஜிர்களுக்கு என்ன உணர்வு அப்போது ஏற்பட்டிருக்கும்?

மக்காவிலே உறவினர்களுடன் சேர்ந்து தானே வாழ்ந்து கொண்டிருந்தோம். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் எங்களை எதிர்த்தவர்களுடன் எங்கள் உறவினர்களில் சிலரும் தானே சேர்ந்து கொண்டார்கள். நாங்கள் புலம்பெயர்ந்து சென்ற போது சமயத்தில் கூட எங்களின் உறவுகளைப் பிரித்து வைத்து வேடிக்கைப் பார்த்தவர்கள் தானே அவர்கள்? நபித்தோழர் அபூ சலமாவைக் கவனியுங்கள். மனைவி ஒரு இடத்திலும், பெற்ற குழந்தை இன்னொரு இடத்திலும் பிரிக்கப்பட்டு தாம் மட்டும் மதீனாவிலே தன்னந்தனியாக…இப்படிப்பட்ட முஹாஜிர்களின் உணர்வலைகளையும் சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

மூன்றாவது அங்கே கூடியிருந்த அப்துல்லாஹ் பின் ஸலாம் போன்ற யூதர்களுக்கு இதில் என்ன செய்தி?

நாம் இந்த முஹம்மதின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டாலும் கூட – உறவினர்களைப் பிரிந்து விட வேண்டிய அவசியம் இல்லை என்பது எவ்வளவு இனிப்பான செய்தி. இந்த மார்க்கம் உறவினர்களை சேர்த்து வைத்திடத் தானே சொல்கிறது. அதற்குப் பின்னர் அப்துல்லாஹ் பின் ஸலாம் இஸ்லாத்தை ஏற்பதற்கு ஒரு சில நாட்கள் கூட தேவைப்படவில்லை!

நான்காவது பாடம் என்ன?

அமைதிக்காகப் பாடுபடுவதாக இருக்கட்டும்; ஏழைகளுக்கு உணவளிப்பதாக இருக்கட்டும்; உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதாக இருக்கட்டும் – இவை அனைத்துமே யாருக்காக? எதற்காக? என்ன லாபத்துக்காக?

வேறு யாருக்காகவும் இல்லை; வேறு எதற்காகவும் இல்லை: வேறு எந்த லாபத்துக்காகவும் இல்லை; அல்லாஹ் ஒருவனுக்கே தவிர; அவன் திருப்தி ஒன்றுக்காகவே தவிர; அவன் தருகின்ற நற்கூலியை எதிர்பார்த்தே தவிர!

இந்த உணர்வை ஒவ்வொரு நாளும்…. அல்ல…. ஒவ்வொரு இரவும் புதுப்பித்துக் கொள்ளவே – மக்கள் தூங்கும் நேரத்தில் – எழுந்து வணங்கி – உங்கள் எண்ணத்தினை – நிய்யத்தினைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்பதே அந்தப்பாடம்!

இந்தப் பாடங்களை நாமும் கற்றுக் கொள்ளலாம் தானே?

Comments