உங்கள் இறைவனால் – சுவர்க்கத்தைப் படைக்க முடியுமா? முடியாதா?

நாம் முன்பே குறிப்பிட்டது போல நம்மில் பலருக்கும் – குறிப்பாக நமது இளந்தலைமுறையினருக்கு நமது அடிப்படை நம்பிக்கைகள் குறித்தும், நமது வழிபாடுகள் குறித்தும், நமது மார்க்கச் சட்டங்கள் குறித்தும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. இதற்குக் காரணங்கள்:


ஒன்று நம்பிக்கை குறித்த விஷயங்களுக்கெல்லாம் நாம் “விவாதங்களை” அனுமதிப்பதேயில்லை. கேள்வி கேட்கவோ, சந்தேகங்களை எழுப்பவோ கூட அனுமதியில்லை. “நம்பித்தான் ஆக வேண்டும்; நம்பாவிட்டால் நீ முஸ்லிம் இல்லை; நீ ஒரு இறைமறுப்பாளன்” என்று பயம் காட்டும் சூழல் தான் நிலவுகிறது!

இரண்டு: நம் இளைஞர்கள் ஏன் கேள்வி எழுப்புகிறார்கள் தெரியுமா? அடிப்படை நம்பிக்கை குறித்த கேள்விகளெல்லாம் எங்கிருந்து புறப்படுகின்றன தெரியுமா? இறை நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்களிடமிருந்து தான்! அவர்கள் தான் – நம் இளைஞர்களிடம் நமது நம்பிக்கை குறித்து கேலி பேசுபவர்கள். கிண்டல் அடிப்பவர்கள்.

உங்கள் இறைவனால் – சுவர்க்கத்தைப் படைக்க முடியுமா? முடியாதா? என்று ஒரு கேள்வியை முன் வைப்பார்கள். முடியும் என்பான் நம் இளைஞன். பின் ஏன் இப்படி ஒரு நரகத்தைப் படைத்தான் என்று கேட்பார்கள் அவர்கள். விழிப்பான் நம்மவன்.

சற்றே யோசித்து விட்டு - மனிதனைச் சோதிப்பதற்குத் தான் இந்த பூமியைப் படைத்தான் என்றொரு பதிலைச் சொல்வான். ஓஹோ! அப்படியா? எதற்காக இந்த சோதனை? என்று மடக்குவார்கள் அவர்கள். நாம் நல்லவர்களாக நடக்கிறோமா என்று சோதிப்பதற்குத் தான் என்பான் இவன். 

இப்படி ஒரு நரகத்தைப் படைத்து, நம்மை சோதித்துப் பார்த்துத் தான் நல்லவர்களையும் கெட்டவர்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமா உங்கள் இறைவனுக்கு; நம்மை சோதிக்காமலேயே கூட அவனால் தெரிந்து கொள்ள முடியும் தானே? பின் ஏன் அவனை “எல்லாம் அறிந்த இறைவன்” என்று சொல்கிறீர்கள்? என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டு - நம் இளைஞனைக் குழப்பி வைப்பார்கள் அவர்கள். 

இது ஒரே ஒரு சான்று மட்டும் தான். இன்னும் நிறைய கேள்விகள் அவர்களிடம் ஸ்டாக் இருக்கின்றன.

நம் இளைஞன் நேரே தன் பெற்றோர்களிடம் வருவான். அல்லது அறிஞர்களிடத்தில் செல்வான். கேள்வி கேட்கவே பயமாக இருக்கும். தயங்கித் தயங்கிக் கேட்டு விடுவான். என்ன நடக்கும் தெரியுமா?

கோபம் வந்து விடும் பெற்றோர்களுக்கு! ஒரு தந்தை பெல்ட்டால் அடித்தே விட்டாராம்! இப்படி யெல்லாம் கேட்காதே என்று! இன்னொரு தந்தை தன் மகனை வீட்டை விட்டே விரட்டி விட்டாராம்! 

ஒரு அறிஞர் - தமது சொற்பொழிவு ஒன்றில் வைத்து மானத்தை வாங்காத குறையாக திட்டித் தீர்த்து விட்டாராம் கேள்வி கேட்டவர்களை!

இது ஏதோ அங்கொன்று இங்கொன்று என்று எண்ணிட வேண்டாம்! நமது பெரும்பாலான இளைஞர்களின் இன்றைய நிலை இது தான்! இப்படிப்பட்ட இளைஞர்களிடம் போய் “தொழ வாருங்கள்!” என்று நாம் அழைப்போம். எப்படி வருவார்கள்?

தீர்வு: 

நம் இளைஞர்கள் எந்த தயக்கமும் இன்றி அவர்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றிட ஒரு அறிவுத் தளம் (INTELLECTUAL SPACE) வேண்டும் என்கிறார் அமெரிக்காவில் இஸ்லாத்தைத் தழுவிய கணிதப் பேராசிரியர் ஒருவர். இது ஒன்றே சரியான தீர்வாக நமக்கும் படுகிறது. 

அறிவுக்களம் அமைப்போமா?

Comments