ஷரீஅத் பாடங்கள் - பகுதி - 2

ஷரீஅத் பாடம்: 006

6 எங்கிருந்து வந்தோம்? எங்கே செல்லப்போகிறோம்?
ஷரீஅத் என்றால் பாதை! (the Path)

மின்ஹாஜ் என்றால் வழிமுறை (the Methodology - Sunnah)

ஹுதன் என்றால் வழிகாட்டுதல் (Guidance)

ஸிராத்துல் முஸ்தகீம் என்றால் நேரான பாதை (Straight Path)

இமாம் என்றால் வழிகாட்டி (The Guide)

ஃபீ ஸபீலில்லாஹ் என்றால் இறைவனின் பாதையில் (in the Path of God)

இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் அவனிடத்தில் திரும்பச் செல்பவர்களாக இருக்கிறோம் (to Him is our return)

இவை அனைத்தும் சொல்கின்ற செய்தி இது தான்:
நாம் இறைவனிடமிருந்தே வந்தோம்! அவன் பக்கமே திரும்பச் செல்ல இருக்கின்றோம்.

பாதை மிக அகலமானது! மிகத் தெளிவானது! வெளிச்சம் நிறைந்தது! ஆனாலும் நமது பயணத்தில் நமது அறிவுக்கு நிறைய வேலை இருக்கிறது! நமக்கு சவால்கள் இருக்கின்றன.

நாம் ஒன்றும் ரோபோட்கள் இல்லை!ஷரீஅத் பாடங்கள் – 007


7 மனிதன் என்பவன்……?
நான் இங்கே பொதுவாக “மனிதனைப்” பற்றி திருக்குர்ஆன் எடுத்து இயம்புகின்ற ஒரு பதினெட்டு விஷயங்களைச் சொல்கிறேன். உங்களோடு அவைகளை ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்:

ஒரு மனிதன் எவற்றால் ஆனவன்? அவனிடத்தில் என்னென்ன இருக்கின்றன? அவன் பலமும் பலவீனங்களும் என்னென்ன?

1 கட்டானதொரு உடல் அமைப்பு (BODY SYSTEM - JISM)

2 இறைவன் புறத்திலிருந்து ஊதப்பட்ட ஒரு உயிர் (SPIRIT - RUH)

3 பார்வையுடைய கண்கள் (EYES – A’YUN)

4 கேட்கக்கூடிய காதுகள் (EARS - AADHAANUN)

5 சிந்திக்கக் கூடிய அறிவாற்றல் (INTELLECT - AQL)

6 உணரக்கூடிய இதயம் (HEART – QALB; SADR; FUAAD)

7 மனிதத் தன்மை (HUMANISM – FITRAH)

8 மனசாட்சி (CONSCIENCE – NAFS-AL-LAWWAAMAH)

9 வெட்க உணர்ச்சி (MODESTY - HAYAA)

10 தேர்வு செய்யும் சுதந்திரம் (FREE WILL - IRAADHA)

11 கண்ணியம் (DIGNITY – ‘IZZAT; KARAAMAH)

12 பழகக்கூடிய தன்மை (SOCIABILITY - UNS)

***

A மனிதன் அவசரக்காரன் (HASTE – ‘AJOOL)

B மனிதன் பதற்றப்படுபவன் (ANXIOUS – HALOO’AA)

C மனிதன் அனுபவிக்கத் துடிப்பவன் (PRONE TO EVIL – NAFSUL AMMARAH)

D மனிதன் நன்றி மறந்துவிடக்கூடியவன் (UNGRATEFUL; KANOOD)

E மனிதன் மறதியாளன் (FORGETFUL – NISYAAN)

F மனிதனுக்குள்ளேயே அவன் எதிரி ஷைத்தான் (SHYTAAN WITHIN)


இறைவனின் பாதையில் நெறி பிறழாமல் நடை போட்டிட முதல் பனிரெண்டையும் இறைவன் மனிதனுக்குக் கொடுத்துள்ளான்.

ஆனால் அடுத்த ஆறு “பலவீனங்களும்” அவன் பயணத்தின் திசையைத் திருப்பி “வழிகேட்டில்” அவனைத் தள்ளி விட முனையும்போது – நமது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு உதவிக்கு வருவது தான் ஷரீஅத்!

** *


ஷரீஅத் பாடங்கள்: 008


8 தீன் என்றால் என்ன? ஷரீஅத் என்றால் என்ன?

தீன் என்பதை - சமயம் அல்லது மதம் என்று மொழிபெயர்க்கலாம். ஆங்கிலத்தில் அது - religion or creed - என்று மொழிபெயர்க்கப்படுகிறது. (தீன் என்ற சொல்லை மார்க்கம் என்று மொழிபெயர்க்கலாமா என்று தேடிப்பார்த்தேன். அப்படி எனக்கு எதுவும் தென்படவில்லை!)

தீனுல் இஸ்லாம் என்பது இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட "சமயம்" ஆகும். இந்த தீன் என்பது என்றுமே மாறாத - அடிப்படைக் கோட்பாடுகளையும், அடிப்படை நற்பண்புகளையும், உள்ளடக்கியவை.

இந்த தீன் என்பது முதல் மனிதர் ஆதமிலிருந்து துவங்கி, இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வரை ஒன்றே ஒன்று தான்! தீன் என்பது எல்லா இறைத்தூதர்களுக்கும் பொதுவானது. அடிப்படை உண்மைகள் என்றுமே ஒன்று தான். அவை காலத்துக்குக் காலம் மாறுவதில்லை!

ஆனால் ஷரீஅத் என்பது அப்படி அல்ல! இந்த ஷரீஅத்தில் இரண்டு விஷயங்கள் அடக்கம்.

ஒன்று: நடைமுறையில் - இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை செம்மைப்படுத்திடத் தேவையான வணக்க வழிபாடுகள் (ways of worship).

இரண்டு: ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே உள்ள உறவை செம்மைப்படுத்திடத் தேவையான சமூக சட்ட திட்டங்கள் (social laws).

ஷரீஅத்தின் இந்த இரண்டு அம்சங்களும் காலத்துக்குக் காலம் மாற்றம் பெறக்கூடியவை. சமூகத்துக்கு சமூகம் மாறக்கூடியவை. எனவே தான் இந்த ஷரீஅத் இறைத்தூதருக்கு இறைத்தூதர் மாற்றம் பெறுகிறது.

ஷரீஅத் ஏன் மாறுகிறது?

சமூகங்களின் பலமும், பலவீனங்களும் வெவ்வேறானவை. மக்கள் வாழும் சூழல்கள் வேறுபடும்! மக்களின் கலாச்சாரங்கள் வேறுபடும்! மக்களின் உளவியலில் கூட வேறுபாடுகள் உண்டு!

இவற்றையெலாம் கணக்கிட்டுப் பார்க்கும்போது, ஒரு சமூகத்தால் ஒன்று முடியக்கூடும். இன்னொரு சமூகத்தால் அது முடியாது!

அது போலவே எல்லா காலங்களும் ஒன்று போல் இருப்பதில்லை. மனித வாழ்க்கைப் பயணத்தின் கட்டங்களும் வெவ்வேறானவை. ஒரு காலத்துக்கு ஒன்று பொருந்தும். இன்னொரு காலத்துக்கு அது பொருந்தாது!

எல்லா மக்களுக்கும், எல்லாச் சூழலுக்கும், எல்லாக் காலங்களுக்கும் ஒரே ஷரீஅத் என்பது இறைவன் வகுத்த நியதியே அல்ல! அது நடைமுறை சம்பந்தப்பட்டது என்பதால் அது சாத்தியமே அல்ல!

(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; (22:67)

ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு ஷரீஅத்தையும் (பாதையையும்), (அதில் பயணிக்க வேண்டிய) வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்;(5:48)

இப்போது சில சந்தேகங்கள் தோன்றலாம். சில கேள்விகள் எழலாம். சற்றே பொறுமை காக்க!

ஷரீஅத் பாடங்கள்: 009


9 ஷரீஅத்தின் அடிப்படை ஆதாரங்கள்
திருக்குர்ஆனும் சுன்னத் அல்லது சுன்னா என்று அழைக்கப்படுகின்ற நபிவழியும் தான் ஷரீஅத்தின் இரண்டு அடிப்படை ஆதாரங்களாகும். இந்த இரண்டு ஊற்றுக்கண்களிலிருந்தே ஷரீஅத்தின் அனைத்து சட்டங்களும், வழிகாட்டும் நெறிமுறைகளும் பெறப்படுகின்றன.

QURAN AND SUNNAH ARE THE TWO PRIMARY SOURCES OF ISLAMIC LAW.

திருக்குர்ஆன் என்பது இறைவாக்கு. இது நபியவர்களுக்கு அவர்களின் 23 ஆண்டு நபித்துவ காலம் நெடுகிலும் கொஞ்சம் கொஞ்சமாக அருளப்பட்டு முழுமைப் படுத்தப்பட்டது. இது முற்றிலும் பாதுகாக்கப்பட்ட இறை வேதம்.

இந்த இறைவேதத்துக்கு செயல் வடிவம் தந்தவர்கள் தாம் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். இந்த செயல் வடிவத்தையே நாம் நபியவர்களின் நடைமுறை என்று பொருள் பொதிந்த சுன்னா என்று அழைக்கிறோம். இந்த நபிகளாரின் செயல்வடிவமும் இறைவனால் அங்கீகரிக்கப் பட்டதே.

உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு பாதையையும் (ஷிர்அத்) ஒரு வழிமுறையையும் (மின்ஹாஜ்) நாம் ஏற்படுத்தியுள்ளோம்; (5:48)

இங்கே மின்ஹாஜ் என்ற வழிமுறை என்பது நபிகளாரின் சுன்னத்தையே குறிக்கிறது என்கிறது இப்னு கஃதீர் அவர்களின் திருக்குர்ஆன் விரிவுரை.

இப்போது நபியவர்களின் வரலாற்றை சற்றே ஆய்வு செய்வோம்.

கி பி 570 ல் அண்ணலார் மக்காவிலே பிறக்கிறார்கள். கிபி 610 ல் அவர்கள் இறைத்தூதராக தேர்வு செய்யப்படுகிறார்கள். கிபி 622 வரை ஒரு 13 ஆண்டுகள் மக்காவிலே இஸ்லாத்தின் தூதை மக்களுக்கு முன் சமர்ப்பிக்கிறார்கள். பின்னர் புலம்பெயர்ந்து மதீனாவுக்குச் சென்று விடுகிறார்கள். மக்காவிலிருந்து புலம்பெயர்ந்த முஸ்லிம்களையும் மற்றும் மதீனாவில் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட முஸ்லிம்களையும் கொண்ட இஸ்லாமிய சமூகம் உருவாகிறது அங்கே. கிபி 632 வரை ஒரு பத்து ஆண்டு காலம் அங்கே இறைத்தூதராகவும், அரசுத் தலைவராகவும் பணியாற்றி மிகப்பெரிய சமூக மாற்றம் கண்டு இறைவனிடம் சென்று சேர்கிறார்கள்.

ஆக, அவர்கள் நபியாகத் தேர்வு செய்யப்பட்ட போது இருந்த அரபுலகம் வேறு. அவர்களின் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்வுக்குப் பிறகு முற்றிலும் மாறிவிட்ட அரபுலகம் வேறு! அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை இங்கே விவரித்துக் கூற இயலாது.

அது ஒரு புதிய அரபுலகம். ஒரு புதிய தலைமுறை. மிகச்சிறந்த தலைமுறை என்று நபியவர்களே நற்சான்று வழங்கிய தலைமுறை. நபியவர்களுக்கு முன்னரும் சரி அதற்குப் பின்னரும் சரி, இது போன்ற ஒரு தலைமுறையை யாரும் பார்த்திருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு தலைமுறை அது.

இந்தத் தலைகீழ் மாற்றத்தை திருக்குர்ஆனும் நபிவழியும் எவ்வாறு செய்து காட்டியது?

குர் ஆனிலும், நபிவழியிலும் அப்படி “என்ன” (CONTENT) தான் சொல்லப்பட்டிருக்கின்றன? அவை அனைத்தும் “எப்படி” செயல்பாட்டுக்கு (METHODOLOGY) கொண்டு வரப்பட்டன? என்பது மிகப்பெரிய ஆய்வுக்குரிய விஷயம் ஆகும்!

இப்படிப்பட்ட ஆழமான ஆய்வில் இறங்குபவர்கள் தான் முஜ்தஹித்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

திருக்குர் ஆனிலிருந்தும், நபிமொழிகளில் இருந்தும் - இந்த ஆய்வாளர்கள் தொகுத்துத் தரும் சட்டங்கள் தான் ஷரீஅத் சட்டங்கள்!

குர் ஆனிலிருந்தும் நபிவழிகளை உள்ளடக்கிய நபிமொழிகளில் இருந்தும் ஷரீஅத் சட்டங்கள் எவ்வாறு பெறப்படுகின்றன என்ற பின்னணியை நாம் அறிந்து கொள்ள திருக்குர்ஆன் மற்றும் நபிவழி பற்றிய சில அடிப்படை அம்சங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து வர இருப்பது….

குர்ஆன் மற்ற நூல்களைப்போல ஒரு நூல் அல்ல!


ஷரீஅத் பாடங்கள்: 010

10 குர்ஆன் மற்ற நூல்களைப்போல ஒரு நூல் அல்ல!
திருக்குர்ஆன் என்பது ஒட்டு மொத்த மனித சமூகத்துடன் உரையாடக்கூடிய ஒரு நூல். ஆமாம். இறைவன் மனிதனுடன் பேசுகின்றான். (IT IS GOD’S COMMUNICATION WITH MANKIND) எனவே இது மற்ற நூல்களைப் போல் இருக்காது.

குர்ஆன் என்பது ஆன்மிகமும் அறிவும் பின்னிப் பிணைந்த ஒரு நூல். எனவே தான் குர்ஆனில் எந்த ஒரு அறிவுரீதியான தேடலைத் தொடங்கு முன்பும், ஆய்வாளர்கள், உளூ செய்து விட்டு, இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுத் தான் தம் ஆய்வையே தொடங்குவார்களாம்.

குர்ஆன் – “எனக்கு ஒன்றுமே தெரியாது! எல்லாம் அறிந்தவன் இறைவன் ஒருவனே!” என்ற பணிவை எதிர்பார்க்கின்ற ஒரு நூல்! ஆம் இது அறிவார்ந்த பணிவு ஆகும். INTELLECTUAL HUMILITY.

“ஒரு குருவி தன் அலகில் தண்ணீரை அள்ளியதைக் கண்ட ஃஹிள்று (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம், என் அறிவும், உங்கள் அறிவும், இன்னும் படைக்கப்பட்டவைகளின் மொத்த அறிவும் சேர்ந்தாலும், இக்குருவியின் வாயிலுள்ள தண்ணீரைவிட அதிகமானதல்ல” என்று கூறினார்கள். . (நபிமொழி நூல் : புகாரி)

இஸ்லாமிய சட்டங்கள் அனைத்துக்கும் ஊற்றுக்கண் – குர்ஆன் தான். ஆனால் குர்ஆன் ஒரு சட்டப்புத்தகம் அல்ல! சட்டரீதியான திருமறை வசனங்கள் மிகக் குறைவே!

குர்ஆனைப் புரிந்து கொள்வது சுலபமா? கடினமா?

பதில்: இரண்டும் தான்!

எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய இறை வசனங்களும் குர்ஆனில் உண்டு. ஆழ்ந்த சிந்தனையையும், ஆய்வையும் வேண்டி நிற்கும் இறை வசனங்களும் குர்ஆனில் உண்டு.

மனித அறிவை மனித உணர்வுகளிலிருந்து பிரித்துப்போட்டு விடும் நூல் அல்ல குர்ஆன். மனிதனின் அறிவையும், அவனது மெல்லிய உணர்வுகளையும் பின்னிப் பிணைத்து வைத்திருக்கும் நூல் தான் குர்ஆன்! ஆம்! குர்ஆன் மனிதனின் அறிவோடும் பேசும். அவனது இதயத்தோடும் பேசும்! அவனை சிந்திக்கவும் வைக்கும்! அழவும் வைக்கும்! கருத்தை ஏற்கவும் வைக்கும். உடனடியாக செயல்படவும் வைக்கும்!

குர்ஆனில் ஆழமான அறிவியல் உண்மைகள் பொதிந்துள்ளன. ஆனால் இது ஒன்றும் அறிவியல் புத்தகம் அல்ல! பிறகு ஏன் அறிவியல் உண்மைகள்? மனிதனை ஆன்மிகத்தை நோக்கிச் சுண்டி இழுத்திட! ஆனால் இன்றைய “அறிவியல்”?

குர்ஆனில் சரித்திரச் சம்பவங்கள் நிறைய இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும் இது சரித்திர நூல் அல்ல! பிறகு ஏன் சரித்திரங்கள்? மனிதன் பாடம் படித்துக்கொள்ளத்தான். படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளத்தான்!

குர்ஆன் உலகத்தைப் பற்றி மட்டும் பேசும் நூல் அல்ல. மனித வாழ்க்கைப் பயணத்தின் இறுதி இலக்காகிய மறுமை பற்றி அதிகம் அதிகம் பேசிடும் நூல்!

அப்படியானால், குர்ஆன் நம்மிடம் என்ன தான் எதிர்பார்க்கின்றது?

சிந்திக்கச் சொல்கிறது. அறிவுக்கு அவ்வளவு அழுத்தம் திருக்குர் ஆனிலே!

இறைவனை ஏற்றிட அழைப்பு விடுக்கிறது குர்ஆன்! கருணை மிக்க இறைவனோடு ஒரு தொடர்புப் பாலத்தை ஏற்படுத்திக் கொள் என்றழைக்கிறது! அழைப்பு மட்டும் தான்! அது ஒன்றும் திணிக்கப்படுவதில்லை!

WE ARE FREE TO CHOOSE!

திருக்குர்ஆனின் அடிப்படை அழைப்பே – நற்பண்புகளை நோக்கித்தான்!

CHARACTER DEVELOPMENT.

குர்ஆன் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அழைக்கிறது! மது வேண்டாம் என்கிறது. விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதே என்கிறது. பார்வையைத் தாழ்த்திக் கொள் என்கிறது!

குர் ஆன் ஒரு சில கட்டுப்பாடுகளை மனிதனுக்கு விதிக்கிறது. கட்டுப்பாட்டின் மூலம் தான் உண்மையான சுதந்திரம் கிடைக்கிறது என்று பறைசாற்றுகிறது குர்ஆன்.

குர்ஆன் மற்றவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள எல்லா வழிவகைகளையும் செய்து தருகின்றது. ஏழைகளுக்கு வழங்கி வாழுங்கள் என்கிறது! குடும்ப உறவை மதிக்கச் சொல்கிறது.

குர்ஆன் நீதிக்காகவும் அமைதிக்காகவும் அழுத்தமாகக் குரல் கொடுக்கும் நூல்!

மக்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை நிலைநாட்டச் சொல்கிறது குர்ஆன்! அது தீமைகளைக் களையச் சொல்கிறது! அதை எப்படிச் செய்வது என்ற வழிமுறையையும் (METHODOLOGY) சேர்த்தே சொல்லித் தருகிறது குர்ஆன்.

இந்த அனைத்துப் பின்னணிகளையும் கருத்தில் கொண்டு தான், சட்ட ரீதியான இறை வசனங்களை நாம் பார்த்திட வேண்டும்!

மேலே சொன்ன அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பதனால் திருக்குர்ஆன் – மற்ற நூல்களைப் போல் இருப்பதில்லை!

மற்ற நூல்கள் மனிதர்களால் எழுதப்படுபவை! திருக்குர்ஆன் இறைவனின் புத்தகம்.

மனிதனின் நூல்கள் அவன் கட்டும் கட்டிடங்களுக்குச் சமமானவை! நீல அகலங்களுக்கு உட்பட்டவை! THEY ARE LINEAR!

இறைவனின் நூல் – அவன் உருவாக்கும் ஒரு அழகிய மரத்துக்குச் சமம்! இங்கே நீலத்தையும் அகலத்தையும் தேடிக் கொண்டிருக்கக் கூடாது! QUR’AN IS NON-LINEAR!

ஒரு மரத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள – ஒட்டு மொத்த மரத்தையும் பார்த்து விட வேண்டும். ஒரே ஒரு இலையை மட்டும் சுவைத்துப்பார்த்து விட்டு “இது கசக்கின்ற மரம்!” என்று சொல்லிவிடக்கூடாது!

அது போலவே இறைவனின் புத்தகத்தைப் புரிந்து கொள்ள முழு குர் ஆனையும் படித்து சிந்தித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஒரே ஒரு இறை வசனத்தை எடுத்துக் கொண்டு – “குர்ஆனில் ஏன் இப்படியெல்லாம் இருக்கின்றது? என்று கேட்பது அறிவுடைமை ஆகாது!

அடுத்து வருவது - திருக்குர்ஆனின் இன்னொரு தனித்தன்மை பற்றி – அதனை தனியாகவே பார்ப்போம்!

Comments