அல்லாஹ்வின் தீர்ப்பில் தலையிட நாம் யார்?

பின் வரும் நபிமொழி குறித்து எனது கருத்தொன்றை பதிவு செய்கின்றேன்:

"அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்னிருந்த யூத, கிறிஸ்தவர்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தார்கள். எனது உம்மத்து 73 கூட்டங்களாகப் பிரிவார்கள். 72 கூட்டங்கள் நரகில் (பிரவேசிப்பார்கள்) ஒரு கூட்டத்தினர் மட்டுமே சுவர்க்கத்தில் (பிரவேசிப்பார்கள்). அந்தக் கூட்டம்தான் (ஸுன்னத் வல்) ஜமாஅத்தாகும்’ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத்

**

யார் யார் எல்லாம் - "எங்களைத் தவிர" மற்றெல்லாரும் வழிகெட்டவர்கள் என்று தங்களுக்குத் தாங்களே நற்சான்றிதழ் வழங்கிக் கொள்கிறார்களோ அவர்களை நாம்  EXCLUSIONISTS  என்று அழைக்கலாம். அதாவது தங்களைத் தவிர மற்றவர்களை "வெளியே தள்ளி விடுபவர்கள்" இவர்கள். இத்தகையவர்கள் தாம் அந்த 72 கூட்டத்தினருக்குள் அடங்குவார்களோ என்று நான் மிகவும் அஞ்சுகிறேன்.


இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட (within limits) எல்லாவிதமான கருத்து வேறுபாடுகளையும் அனுமதித்துக் கொண்டு,   அல்லாஹ்வே மிக அறிந்தவன் என்ற பணிவை மேற்கொண்டவர்களாக, மற்றெல்லாரையும், தங்களைப் போன்ற முஸ்லிம்களே என்றும்; அவர்கள் அனைவரும் நமது சகோதரர்களே என்றும் நல்லெண்ணம் கொள்கிறார்களோ - அவர்களை நாம் INCLUSIONISTS என்று அழைக்கலாம். இவர்களை நாம் "அனைவரையும் அரவணைத்துச் செல்பவர்கள்" என்று அழைக்கலாம். இப்படிப்பட்டவர்களைத் தான் அந்த 73 வது கூட்டம் என்று நபிமொழி சொல்ல வருகிறதோ என்றே நான் எண்ணுகிறேன்.

ஏனெனில் - மற்றவர்களை சர்வ சாதாரணமாக - வழி கெட்டவர்கள் என்றும், காஃபிர் - முர்தத் என்றும், முத்திரை குத்துவதற்கு (to be judgmental upon others) யாருக்கும் அனுமதி தரவில்லை இறைவன்.

தங்களின் இறைத்தூதரின் இரத்தத்தைச் சிந்த வைக்கும் சமூகம் எங்கணம் ஈடேற்றம் பெறும் என்ற நபியைக் கண்டித்து வசனம் இறக்கியருளியதை நாம் அறிந்தே இருக்கின்றோம்.

இதோ சுவர்க்கத்தின் சிட்டுக் குருவி ஒன்று செல்கிறது! என்ற அன்னை ஆயிஷா (ரளி) அவர்களை - அவ்வாறு சொல்ல வேண்டாம் என்று அண்ணலார்  தடுத்த செய்தியும் நாம் அறிந்ததே.

நாய்க்கு நீர் புகட்டிய ஒரு பாவிப்பெண்ணை மன்னித்து சுவனம் புக வைப்பவன் அல்லாஹ்! பூனையைக் கட்டி வைத்து உணவளிக்க மறுத்த பெண்ணொருத்தியை நரகம் அனுப்புபவனும் அதே அல்லாஹ் தான்.

அப்படியிருக்க - அல்லாஹ்வின் தீர்ப்பில் தலையிட நாம் யார் என்றே நம்மில் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது!  

அல்லாஹ் மிக அறிந்தவன்!

எனது கருத்தில் பிழை எனில் என்னைத் திருத்தலாம்!

Comments