நம்பிக்கையில் உறுதி!

நம்பிக்கையில் உறுதி! - பாகம் 1

(திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு)

எஸ் ஏ மன்சூர் அலி

முன்னுரை:

நம்பிக்கை என்பது என்ன? மூடநம்பிக்கை என்பது என்ன? இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

தக்க சான்றுகளுடன் ஒன்றை ஏற்றுக் கொள்வது நம்பிக்கை. எந்த ஓர் ஆதாரமும் இன்றி ஒன்றை ஏற்பது மூடநம்பிக்கை.

எனவே இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் நம்பிக்கை என்பதை அறிவு பூர்வமாக நிரூபிக்க இயலும். ஆனால் மூடநம்பிக்கைகளை அறிவுபூர்வமாக நிரூபிக்க இயலாது.

இப்போது கேள்வி என்னவெனில் - நம்மில் எத்தனை விழுக்காட்டினர் தக்க சான்றுகளுடன் இறைவனை நம்புகிறார்கள் என்பது தான். அது மிகவும் குறைவு என்பதே நமது கணிப்பு.

“கண்ணை மூடிக் கொண்டு நம்பச் சொல்கிறீர்களா?” - என்பதே இன்றைய இளைஞர்கள் கேட்கும் கேள்வி. அவர்கள் கேட்கும் கேள்வி மிகவும் நியாயமானதே. ஏனெனில் - நம்பிக்கை என்பது ஒன்றும் ஒரு சுமை கிடையாது! அதனை யார் முதுகிலும் நாம் சுமத்தி விட முடியாது! சான்றுகளை எடுத்துச் சொல்ல வேண்டியது நம் கடமை. அக்கடமையை நிறைவேற்றுவதற்காகவே இந்தச் சிறிய முயற்சி!
1. மனித வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?
சிறு துளியாகக் கருவறையில்

தனது பயணத்தைக் துவக்கிடும் ஒரு சிசு!

சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதாகி இறப்பின் விளிம்பிற்குத் தாய் சென்றிட்ட பின்பே அந்த சிசுவின் பிறப்பு!

அழுகையைத் தவிர அதற்கு வேறென்ன தெரியும்?

பெற்றவர் பாசத்தை அள்ளிப் பொழிந்திட தத்தித் தவழ்ந்து தடுமாறி எழுந்து நடை பயின்று மழலை மொழி பேசி மகிழ்வித்து சிறுவனாகி துள்ளிக் குதித்து ஓடி விளையாடி.....

இது ஏன்? அது எப்படி? – என்று கேள்விகள் கேட்டு

படிக்கத் தொடங்கி நண்பர் குழாம் அமைத்து வளர்ந்து வாலிபனாகி வாழ்க்கையைப் புரிந்து கொண்டு அல்லது புரியாமலேயே எப்படியோ பொருள் தேடி மணம் முடித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து

குடும்பம் அமைத்து குழந்தைகள் பெற்று

அவற்றையும் வளர்த்து ஆளாக்கி

கொஞ்சம் சொத்து சேர்த்து வைத்து விட்டு

வயதாகி நோயில் வீழ்ந்து அல்லது இடையிலேயே

திடுமென மரணத்தைச் சந்திக்கின்ற

மனித வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?

விண்ணிலே வலம் வருகின்ற எண்ணிலா விண் மீன்களுக்கிடையில் எந்தப் பிடிப்பும் இன்றி இந்த பூமித் துண்டு சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது

இங்கே நாம் கொஞ்ச காலம் தங்கி இருந்து

விளையாடி விட்டுப் போவதற்குத் தானா?

இயற்கைப் பெருவெளியின் அத்தனை இயக்கங்களுக்கும் அர்த்தம் இவ்வளவு தானா? சொல்லுங்கள்?


2. தற்செயலா?
‘விண்வெளியில் ஒரு கற்பனைப் பயணம்! தயாரா? ஒரு கற்பனை வாகனத்தில்! இதோ புறப்படு! திரும்பாமல் வளையாமல் ஒரே நேர்கோட்டில் செல்! வேகமாக! அதி வேகமாக! வேகம் என்ன தெரியுமா? வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில்! வேகத்தைக் குறைக்காதே! அதே வேகத்தில் செல்! ஒரே சீராக!

எவ்வளவு நேரம் இந்தப் பயணம்? ஒரு ஆயிரம் ஆண்டுகள்? இல்லை! பத்தாயிரம் ஆண்டுகள்? இல்லை இல்லை!! ஒரு பத்து லட்சம் ஆண்டுகள்! பயணித்து விட்டாயா? நீ எங்கே போய் சேர்ந்திருப்பாய்?

விண் வெளியின் எல்லைக்கா? எல்லையைத் தொட்டு விட்டாயா என்ன?

இல்லை! அங்கே சற்றே நின்று வானத்தைப் பார்! இன்னும் அதிகமான விண்வெளி! இன்னும் புதிய விண்மீன்கள்! மீண்டும் பயணத்தைத் தொடர்வோமா? சரி, புறப்படு! மீண்டும் இன்னொரு பத்து லட்சம் ஆண்டுகள்!

இன்னொரு புதிய இடம்! இப்பொது எங்கிருக்கிறோம் நாம்? எல்லை தென்படுகிறதா? எப்போது தான் அடைவோம் எல்லையை?

சரி! நாம் கடந்து வந்த பாதையை சற்றே கணக்கிட்டுப் பார்! தூரத்தைக் கணக்கிட்டுப் பார்! இவ்வளவு தூரம் நாம் கடந்து வந்து விட்டாலும் இன்னும் நாம் நமது பேரண்டத்தின் நடுவில் தான் எங்கேயோ இருந்து கொண்டிருக்கிறோம்!’

இவ்வளவு தூரம், இவ்வளவு விண்வெளி, இவ்வளவு பிரம்மாண்டமான அமைப்பு எப்படி ஏற்பட்டது என்ற ஒரு கேள்வி எழுவது இயல்பு.

ஒரு புறம் இறைவனை நம்புபவர்கள், இறைவன் தான் இப்பேரண்டத்தைப் படைத்துப் பரிபாலிக்கின்றான் என்று நம்புகிறார்கள்.

ஆனால் இறைவனை நம்பாதவர்கள் – நமது பிரபஞ்சத்தின் அமைப்பு மற்றும் கட்டுக்கோப்பு, அதன் அனைத்து இயக்கங்கள் ஆகியவற்றை ஆய்ந்த பின்பும் – இது தற்செயலாக நடந்து விட்ட ஒரு விண்வெளி விபத்து (cosmic accident) என்று துணிந்து கூறுகிறார்கள். எனவே இந்த தற்செயல் கோட்பாட்டை நாம் சற்றே ஆழமாக விவாதிப்போம்.

பத்து ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ‘பூவா தலையா’ போட்டுப் பாருங்கள். ஒரு தடவை ஏழு தலை – மூன்று பூ என்று விழலாம். மறு தடவை எட்டு பூ இரண்டு தலை என்று விழலாம். இவற்றை தற்செயல் என்று சொல்லலாம். ஆனால் ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு பூவா தலையா போட்டுப் பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். ஆயிரமும் தலையாகவே விழுவதாக வைத்துக் கொள்வோம். தற்செயலாக!

ஆனால் மறு தடவை போட்டுப் பார்த்தால் அப்போதும் ஆயிரம் தலைகள். மூன்றாவது தடவையும் ஆயிரம் தலைகள் என்று விழுந்தால் – இதனை ‘தற்செயல்’ என்று ஏற்பீர்களா? எல்லா நாணயங்களையும் சோதித்துப் பாரப்பீர்கள் – இரண்டு பக்கங்களும் தலைகளாக உள்ளனவா என்று!

இதிலிருந்து என்ன தெரிகிறது? தற்செயலான ஒரு காரியம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பது தானே! இப்போது நமது பேரண்டத்தின் முழு வடிவத்தையும் நம் மனக்கண் முன்னே கொண்டு வருவோம். நமது பிரபஞசம் முழுவதிலும் ஒன்றல்ல, இரண்டல்ல – கோடிக்கணக்கான அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை தொடர்ந்து கொண்டும் இருக்கின்றன.

கணக்கிடப் பட்;டது போன்றதொரு தூரத்தில் கதிரவன். தற்செயலா? அதனால் நமக்குப் போதுமான ஒளியும் வெப்பமும். தற்செயலா? தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது பூமி. அதனால் நமக்கு இரவும் பகலும். தற்செயல்தானா?

சூரிய மண்டலத்தின் ஒன்பது கோள்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் ஆண்டாண்டு காலமாகச் சுழன்றோடிக் கொண்டிருப்பதும் தற்செயலாகத் தானா?

காற்றில் போதுமான அளவுக்கு மட்டும் ஆக்ஸிஜன். தற்செயல்தானா? நாம் வெளியிடுகின்ற கரியமில வாயுவைத் தாவரங்கள் எடுத்துக் கொள்கிறதாம். தற்செயலா?

அதெல்லாம் இருக்கட்டும் – நம்மையே நமது உடலையே கவனிப்போம். நமது மகத்தான மூளை தற்செயலாக உருவானது தானா?

நமது கண்கள், நமது இதயம், நமது இன்ன பிற உறுப்புகள் அனைத்தும் சீராக அமைந்து சிறப்பாக செயல்படுவதெல்லாம் தற்செயலாகத் தானா?

ஏற்க முடியவில்லையே? என்ன சொல்கிறீர்கள்? ”


3. விரிவடையும் பேரண்டம்
நாம் வாழ்கின்ற இப்பேரண்டம் எவ்வாறு தோன்றியது, இது எங்கே எப்படிப் போய் முடியும், இது எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது - என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வது விஞ்ஞானிகள் பலருக்கு மிக விருப்பமானதொரு துறையாகும்.

கடந்த 20 - ம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை கூட விஞ்ஞானிகள் இப்பேரண்டத்தைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்றால் - இப்பிரபஞ்சத்துக்குத் துவக்கம் என்று ஒன்று கிடையாது. இது தொடர்ந்து இப்படியே நிலை பெற்றிருக்கும். இதற்கு முடிவு என்று ஒன்றும் கிடையாது - என்பது தான். இதனையே static universe model - என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது அசையா பிரபஞ்சக் கோட்பாடு என்று இதனைக் கூறலாம்.

ஆனால் 1929 - ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் எட்வின் ஹப்ல் என்பவர் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மிகப் பெரிய உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னார்.

மிக மிகப் பெரிய தொலை நோக்கி வழியாக, விண்மீன்களில் இருந்து புறப்பட்டு வருகின்ற ஒளிக்கற்றைகளை ஆய்வு செய்தார் அவர். அந்த ஒளிக்கற்றைகள் நிறமாலையில் (spectrum) ஏற்படுத்தும் மாற்றங்களை வைத்து விண்மீன்கள் நம்மை விட்டு விலகித் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதாக அவர் கண்டு பிடித்தார்.

அது மட்டுமல்ல விண்மீன்களும், விண்மீன் மண்டலங்களும் கூட ஒன்றை விட்டு ஒன்று விலகிச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கண்டுணர்ந்தார். ஆக, இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்வது எதனை உணர்த்துகிறது எனில் நாம் வாழ்கின்ற இப்பேரண்டம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விரிவடைந்து கொண்டே செல்கிறது என்பதைத்தான்!

ஆனாலும் இக்கண்டுபிடிப்பிற்கு முன்னரே, சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் மேதை என்று போற்றப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் - தமது இயற்பியல் கணக்;கீடுகளின் அடிப்படையில் - இப்பேரண்டம் அசையாமல் நிலையாக இருந்து கொண்டிருத்தல் சாத்தியம் அல்ல என்று முடிவு செய்து வைத்திருந்தார்.

எனினும் அவர் தமது கருத்தை உடன் வெளியிட்டு விடவில்லை. காரணம் இப்பிரபஞ்சம் நிலைத்து நிற்கிறது என்ற முந்தைய கோட்பாட்டுடன் முரண்படுகின்ற ஒரு கருத்தை வெளியிட வேண்டாம் என்று தமது கண்டுபிடிப்பை ஓரம் கட்டி வைத்திருந்தார்! பின்னரே அவர் அக்கருத்தை வெளியிட்டார்.

தாம் கண்டுபிடித்து வைத்திருந்த உண்மையை உடனே வெளியிடாமல் இருந்து விட்டதை - (The greatest mistake of his career) - தமது துறையில் தாம் செய்து விட்ட மிகப்பெரிய தவறு - என்று வருத்தமும் தெரிவித்தார்.

எனவே நமது பிரபஞ்சம் விரிந்து செல்கிறது என்பது உறுதிப்படுத்தப் பட்டு விட்டது. ஆனால் விஷயம் இத்தோடு முடிந்து விட்டதா என்றால் அது தான் இல்லை. ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்டிருந்த பல ஆய்வுக் கருத்துக்களை மறு பரிசீலனை செய்திட வேண்டிய கட்டாயமான சூழ்நிலை ஒன்று உருவாகி விட்டது.

பேரண்டம் விரிகிறது என்றால் என்ன பொருள்? காலம் செல்லச் செல்ல இப்பேரண்டத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்றால் காலத்தால் பின்னுக்குச் செல்லச் செல்ல இப்பேரண்டத்தின் அளவு குறைந்து கொண்டே அல்லவா இருந்திருக்க வேண்டும்! ஆம்! அது உண்மை தான்.

ஒரு காலத்தில் நாம் வாழ்கின்ற இந்த இயற்கைப் பெருவெளியின் அளவு மிக மிகச் சிறியதாகத் தான் இருந்திருக்க வேண்டும். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் - ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இப்பிரபஞ்சம் என்பது ஒரு சிறு புள்ளியாக தனக்குள்ளே இப்பேரண்டத்தினை உருவாக்கக் கூடிய அத்தனைப் பொருட்களுடனும் ஆற்றலுடனும் (matter and energy) திகழ்ந்திருக்க வேண்டும்.

அதாவது அந்த சமயத்தில் நமது பிரபஞ்சத்தின் கன அளவு பூஜ்யம் என்றும் அதன் அடர்த்தி எல்லையற்றது என்றும் கொள்ளலாம். ஆனால் உண்மையிலேயே கன அளவு பூஜ்யம் என்பதன் பொருள் என்ன? எதுவுமே இல்லாத நிலை தானே அது! அதாவது - Nothingness!

எனவே - இல்லாத நிலை ஒன்றிலிருந்தே இப்பிரபஞ்சம் தோன்றியுள்ளது. அதாவது இப்பிரபஞ்சம் படைக்கப்பட்டுள்ளது! This universe was created!

இல்லாத நிலையிலிருந்து தான் இப்பிரபஞ்சம் படைக்கப்பட்பது என்பது உண்மையானால், இதனைப் படைத்த ஒருவனை ஏற்றுக் கொள்வதில் என்ன கடினம்?

(குறிப்பு: இங்கேயும் இனி வருகின்ற சில பக்கங்களிலும் இறைநம்பிக்கைக்கான சான்றுகளுக்கு சில அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் துணைக்கு அழைத்துக் கொள்கிறோம். ஆனால் அறிவியல் “உண்மைகள்” என்று சொல்லப்படுபவை மாறக்கூடியவை என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.)


4 . பெருவெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory)

நமது பிரபஞ்சம் மிகப்பெரிய வெடிப்பு ஒன்றின் மூலமே தோன்றியது என்ற கண்டுபிடிப்பு - 20 - ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும். இந்தப் பெரு வெடிப்பை Big Bang என்றும் இந்த அறிவியல் கோட்பாட்டை Big Bang Theory என்றும் அழைக்கிறார்கள்.

சுமார் 15 பில்லியன் (ஆயிரத்து ஐந்நூறு கோடி) ஆண்டுகளுக்கு முன்னால் - மிக மிகச் சிறிய ஒரு புள்ளி அளவில் இருந்த பிரபஞ்சம் - ஒரு வினாடியின் ஒரு சிறு பகுதியிலேயே ஒரு கைப்பந்து அளவுக்குப் பெரிதாகி - முழுவதுமாக ஒரு வினாடி முடிவதற்குள்ளேயே - நமது பிரபஞ்சத்தின் அளவு கோடிக்கணக்கான மைல்கள் அளவுக்கு விரிந்து விட்டது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுச் சொல்கிறார்கள்.

இந்தப் பெரு வெடிப்பிற்குப் பின்னரே மிகச்சிறிய அணு முதல் மிகப்பெரிய விண்மீன்கள், விண்மீன் மண்டலங்கள், இன்ன பிற கோள்கள் எல்லாம் உருவானதாம்.

இப்பேரண்டம் தோன்றிய அந்த நேரத்திலேயே இயற்கைச் சட்டங்களும் (Laws of physics)உருவாகி விட்டனவாம். அந்த இயற்கைச் சட்டங்கள், இப்பிரபஞ்சம் முழுமைக்கும் ஒரே மாதிரியானவையாம். அவற்றில் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. அவை மாறுவதும் இல்லை!

இந்த இயற்கைச் சட்டங்களில் மிக மிகச் சிறியதொரு மாற்றம் இருந்திருந்தாலும் கூட இப்பேரண்டம் முழுவதும் அழிந்தே போயிருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அது போலவே, இப்பேரண்டம் விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று சொன்னோம் அல்லவா? அதன் விரிவடையும் வேகம் என்பது கூட ஒரு குறிப்பிட்ட வேகம் தான். அதனை 'ஆபத்தான விரிவடையும் வேகம்' (critical rate of expansion) என்று குறிப்பிடுகின்றார்கள்.

அதாவது இப்பேரண்டத்தின் 'வெடித்துச் சிதறும்' இயல்புக்கும் இப்பேரண்டத்தைக் கட்டிப் பிடித்து இழுக்கும் ஈர்ப்பு விசைக்கும் நடுவில் மிகச்சரியான, ஒரு நுணுக்கமான நடுநிலை வேகத்துடன் இப்பிரபஞ்சம் விரிந்து கொண்டிருக்கிறதாம்.

இப்பேரண்டத்தின் விரிவடையும் வேகம் சற்றே சற்று (அதாவது ஆயிரம் கோடி கோடியில் ஒரே ஒரு பங்கு) அதிகரித்தாலும் சரி, குறைந்தாலும் சரி - நாம் இன்று பார்க்கின்ற இப்பிரபஞ்சம் இன்றைய அளவை எட்டும் முன்னரே சிதறுண்டு அழிந்தே போயிருக்கும் என்கிறார் - இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

என்றுமே மாறாத இயற்கைச் சட்டங்களைத் தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்டதா இப்பேரண்டம்? தமக்குத் தாமே ஒரு வேகத்தைக் கணக்கிட்டுக்கொண்டு இப்பேரண்டம் விரிகிறதா? இதனைத் 'தற்செயல்' என்று சொல்ல அறிவு இடம் கொடுக்கிறதா?

பொதுவாக - ஏதாவது ஒன்று வெடித்துச் சிதறினால் அது அழிவைத் தானே ஏற்படுத்திடும்? சான்றாக அணுகுண்டு ஒன்று வெடித்தால் என்ன நிகழும்? அல்லது எரிமலை ஒன்று வெடித்துச் சிதறினால் என்ன விளைவுகளை அது ஏற்படுத்தும்? அவை பல அபாயகரமான விளைவுகளைத் தானே ஏற்படுத்திடும்!

ஆனால் Big bang வெடிப்பு மட்டும் விண்மீன்களையும் கோள்களையும் உருவாக்கி, அவற்றை ஓர் வரையரைக்குட்பட்டு காலம் காலமாக இயங்க வைத்துள்ளதே, அது எப்படி?

ஒரு காலத்தில் நமது பிரபஞ்சம் என்பது இல்லாத ஒன்று. பிறகு ஒரு கட்டத்தில் அது உருவாகிறது! ஓரு ஒழுங்குடனும், குறிப்பிட்ட சட்ட திட்டங்களின்படியும் அது செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இப்பிரபஞ்சத்தின் அளவு என்பது ஒன்றும் சர்வ சாதாரணமான ஒன்றல்ல!

2000 கோடி ஒளி ஆண்டு தூரத்தைக் கடந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது நமது பிரபஞ்சம்.

அது என்ன 'ஒளி ஆண்டு'?

5 அது என்ன 'ஒளி ஆண்டு'?
சற்றே நமது பிரபஞ்சத்தின் அளவைக் கணக்கிட்டுப் பார்ப்போமா? ஒரு மில்லி மீட்டரிலிருந்து ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர் வரை உள்ள அளவுகளையும்தூரங்களையும் புரிந்து கொள்வதில் நமக்கு எந்த கடினமும் இல்லை.

நாம் வாழ்கின்ற பூமியின் விட்டம் 12,756 கி.மீ! இந்த தூரத்தைக்கூட நம்மால் ஊகித்துப் பார்த்திட இயலும்.

ஆனால் நமக்கும் நமது பூமியின் துணைக் கோளான சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 383,000 கி.மீ! இந்த தூரத்தை எப்படி ஊகிப்பீர்கள்?

நமக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் 14 கோடியே 95 லட்சம் கி.மீ! எப்படிக் கற்பனை செய்வீர்கள் இந்த தூரத்தை?

இதை விட அதிக தூரங்களை எவ்வாறு அளப்பது? அதற்காகக் கணக்கிடப்பட்ட அளவீடு தான் 'ஒளி ஆண்டு' எனப்படுவது! அதன் தூரம் என்ன?

ஒளியின் வேகம் என்பது வினாடிக்கு 3 லட்சம் கி.மீ! அதாவது ஒரு வினாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் ஒளி ஒரு ஆண்டில் சென்றடையும் தூரமே ஒரு ஒளி ஆண்டு ஆகும். அப்படியானல் அது எத்தனை கிலோ மீட்டர்?

300,000 X 60 X 60 X 24 X 365 - அதாவது 9 லட்சம் கோடி கி.மீ.

இந்த தூரத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா உங்களால்?

சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் என்பதை நாம் அறிவோம். அது போலவே சூரியன் என்பது milky way galaxy - என்றழைக்கப் படக்கூடிய பால்வளி மண்டலத்தின் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்று தான் என்பதும் நமக்குத் தெரியும்.

ஆனால் நமது சூரியனை உள்ளடக்கிய பால்வளி மண்டலத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது தெரியுமா? அவை 20,000 கோடிக்கு மேல்!

நமது பால் வளி மண்டலத்தின் அளவு என்ன தெரியுமா உங்களுக்கு? ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கும் மேல்! கற்பனை செய்து பாருங்களேன் !

நான் நமது பால் வளி மண்டலத்தின் வரைபடம் ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒரு இடத்தில் ஒரு சிறு அம்புக்குறியிட்டு இங்கே எங்கேயோ தான் (solar system is somewhere here!) சூரிய மண்டலம் அமைந்துள்ளது என்று குறிப்பிடப் பட்டிருந்தது!

சரி, பால் வளி மண்டலத்தைப் போல நமது பேரண்டத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய நட்சத்திர மண்டலங்கள் மொத்தம் எத்தனை தெரியுமா? அதன் எண்ணிக்கையை எப்படிக் குறிக்கிறார்கள் தெரியமா? அவை 'பல ஆயிரம் கோடி விண்மீன் மண்டலங்கள்' என்கிறார்கள்! (There are many hundred billion galaxies in our universe!)

இரண்டு நட்சத்திர மண்டலங்களுக்கிடையேயான சராசரி இடைவெளி என்ன தெரியுமா? ஒரு கோடி ஒளி ஆண்டு தூரம் ஆகும். அப்படியானால் நமது பேரண்டத்தின் மொத்த அளவு எவ்வளவு இருக்கும்? அது இரண்டாயிரம் கோடி ஒளி ஆண்டு தூரத்தைக் கடந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது!!

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ஒரு அமைப்பு தானாகத் தோன்றி - தானாக விரிவடைந்து - தானாகவே எந்த ஒரு கோளாறும் இன்றி கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று இன்றும் சில விஞ்ஞானிகள் அறிவியல் உலகின் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்!

இறை நம்பிக்கைக் கோட்பாட்டை வன்மையாக மறுத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே அவ்வாறு பிடிவாதமாக தற்செயல் கோட்பாட்டை முன் வைக்கிறார்கள். இவர்களையும் உலகம் - அறிவியல் 'அறிஞர்கள்' என்று அழைப்பது தான் வேதனை!

ஒரு பேனாவின் அளவுடன் அந்தப் பேனாவின் முள்ளின் முனையின் அளவை ஒப்பிட்டால் முள்ளின் முனை மிகச்சிறியதே!

அந்தப் பேனாவை வைத்திருக்கின்ற மனிதனோடு ஒப்பிட்டால் பேனாவின் அளவு மிகச் சிறியதாகி விடும்.

அந்த மனிதன் இருக்கின்ற வீட்டுடன் ஒப்பிட்டால் மனித உருவம் சிறியதாகி விடும்.

அந்த வீடு இருக்கின்ற ஊருடன் ஒப்பிட்டால், வீடு சிறியதாகி விடும்.

ஒரு உலக வரைப் படத்தை வைத்துப் பார்த்தால் அந்த ஊரை மிகச்சரியாக சுட்டிக் காட்டிட இயலாது!

அது போலவே - நமது பேரண்டத்தின் அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பால் வளி மண்டலம் மிகச்சிறியது.

நமது பால் வளி மண்டலத்தின் அளவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்பது கோள்களை உள்ளடக்கிய சூரிய மண்டலம் மிக மிகச் சிறியதாகி விடும்.

ஆனால் சூரிய மண்டலத்தின் அளவு என்ன தெரியமா? 1180 கோடி கிலோ மீட்டர்கள்!

இப்போது ஒரு கேள்வி உங்களுக்கு. நமது பிரபஞ்சத்தின் அளவோடு ஒரு மனித உருவத்தின் அளவை ஒப்பிட்டுப் பாருங்கள். என்ன தோன்றுகிறது?

6 செல் எனும் அற்புதம்!
சகோதரர்களே! இதற்கு முன் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முன் வைத்து - இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு அமைப்பு தற்செயலாகத் தோன்றி பல கோடி ஆண்டுகளாக - எந்த ஒரு தடங்களும் இன்றி இயங்கிக்கொண்டிருத்தல் சாத்தியமில்லை - இல்லாமையிலிருந்து இப்பேரண்டத்தைப் படைத்தவன் ஒருவன் இருந்தாக வேண்டும் என்பதை நாம் விளக்கியிருந்தோம்.

இறைவனின் உள்ளமைக்கு இன்னுமொரு சான்றாக - அடுத்து நாம் பார்க்க இருப்பது மிக மிக நுண்ணிய ஒரு அமைப்பைப் பற்றி!

உயிரினங்கள் எதுவாக இருப்பினும் - அவை அனைத்துக்கும் ஆதாரமான அதனுடைய மிக மிகச் சிறிய அறை போன்றதொரு அமைப்புக்குப் பெயர் தான் செல் (cell) எனப்படுவது. செல் என்றால் கிரேக்க மொழியில் ஒரு மிகச் சிறிய அறை (compartment) என்று தான் பொருள்.

உயிரினத்துக்கு உயிரினம் செல்களின் அமைப்பும் அளவும் வேறு பட்டாலும், பெரும்பாலான செல்கள் சாதாரணக் கண்களால் பார்க்க இயலாத அளவுக்கு மிகவும் சிறியவை. செல்களை அளப்பதற்கு ' மைக்ரான் ' எனும் அளவீடு பயன்படுத்தப் படுகிறது. ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்காகும்.

அறிவியல் உலகம் நுண்ணோக்காடிகளைக் (microscope) கண்டுபிடித்த பின்னரே உயிர் செல்களைக் குறித்த விரிவான ஆய்வுகளை விஞ்ஞானிகளால் மேற்கொள்ள முடிந்தது.

உருவத்தில் மிக மிகச் சிறியதாக இருப்பினும் - ஒரு செல்லின் கட்டமைப்பும் (structure) அதன் பலவிதமான செயல்பாடுகளும் மிக மிக நுணுக்கமானவை. ஒரு உயிர் செல்லை ஒரு பெரும் நகரத்துடன் (city) ஒப்பிடலாம் என்கிறார் ஒரு அறிஞர். ஏனெனில் ஒரு பெரும் நகரத்தின் அமைப்புக்கும் செயல்பாடுகளுக்கும் எந்த விதத்திலும் குறைந்ததல்ல - செல் ஒன்றின் அமைப்பும் அதன் பல்வேறு இயக்கங்களும். அவை அவ்வளவு நுட்பமானவை!

ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு வெளிப்புறச் சுவர். இந்தச் செல் சுவர் அல்லது சவ்வு எப்படிப்பட்டது தெரியுமா? செல்லுக்குத் தேவையான பொருட்களை மட்டும் உள்ளே ஊடுருவிச் செல்ல அனுமதிக்கும். அது எவ்வளவு சிக்கலான கடினமான பொருளாக இருந்தாலும் சரி! செல்லுக்குத் தேவையற்ற பொருட்களை செல் சுவர் ஒரு போதும் அனுமதிப்பதில்லை. அது எவ்வளவு எளிமையான மென்மையான பொருளாக இருந்தாலும் சரியே!

இந்த செல் சுவருக்குள் தான் 'சைட்டோ-பிளாசம்' என்று அழைக்கப்படும் செல் சாறு நிரம்பியுள்ளது. இப்பகுதியில் தான் பல உப அமைப்புகள் பதித்து வைக்கப்பட்டுள்ளன. செல்லுக்குத் தேவையான ஆற்றலை வழங்கிடும் ஆற்றல் நிலையங்கள் (power houses) இங்கே உள்ளன. அதாவது கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரொட்டீன்களை எரித்து செல்லுக்குத் தேவையான சக்தியை - ஆற்றலை வழங்குகின்றன.

செல் உயிர் வாழ்வதற்குத் தேவையான என்சைம் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்து தந்திடும் தொழிற்சாலைகளும் இங்கே உண்டு.

மூலப் பொருட்களையும் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடம் கொண்டு சேர்த்திட போக்குவரத்து வசதிகளும் குழாய்களும் இதனுள் உண்டு. இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களை தனக்குத் தோதுவான பல பொருட்களாக மாற்றித் தந்திடும் அதி நவீன ஆய்வுக் கூடங்களும் (laboratories) இங்கே அடக்கம்.

சரி, இந்த செல்லின் செயல்பாடுகளையெல்லாம் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது எது தெரியுமா? அது தான் செல்லின் கரு (nucleus) ஆகும். இது செல்லின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. செல்லின் கருவுக்கும் ஒரு சுவர் உண்டு. கருவுக்குள்ளும் ஒரு சாறு உண்டு. கருவின் மத்தியிலே பல உட்கருக்களும் உண்டு.

நியுக்ளியோ-ப்ளாசம் என்றழைக்கப்படும் கருவின் சாற்றில் க்ரோமாட்டின் எனப்படும் இழை போன்றதொரு பொருள் காணப்படுகிறது. இதுவே பின்னர் சற்றே கடினமான க்ரோமோசோம் எனும் பொருளாக மாறி விடுகிறது. ஒரு செல் கருவில் உள்ள க்ரோமோசோம்களின் எண்ணிக்கை உயிரினத்துக்கு உயிரினம் மாறுபடும்.

சான்றாக, மனித உடலில் உள்ள ஒவ்வொரு உயிர் செல்லின் கருவிலும் 46 க்ரோமோசோம்கள் காணப்படுகின்றன. இந்த க்ரோமோசோம் என்பது DNA மற்றும் RNA என்றழைக்கப்படும் இரண்டு அமிலங்களாலும் சில புரொட்டீன்களாலும் ஆன ஒரு பொருள். க்ரோமோசோம்களுக்ளுள் காணப்படும் DNA அமிலம் ஒன்றின் ஒரே ஒரு குறிப்பிட்ட பகுதியே gene எனப்படும் மரபணுவாகத் திகழ்கிறது.

இந்த மரபணுக்களில் தான் மனித உடலின் கட்டமைப்புத் திட்டம் (construction plan) அமைந்துள்ளது. அதாவது நமது பரம்பரை குணங்களுக்கான தகவல்கள் அனைத்தும் இங்கே தான் பொதிந்துள்ளன. நமது தோற்றம், உயரம், நிறம், கண்களின் அமைப்பு, மூக்கின் வடிவம் மற்றும் நமது உள்ளுறுப்புகளின் அமைப்பு எல்லாமே - இந்த மரபணுக்களில் உள்ள செய்திகளைக் கொண்டே வடிவமைக்கப் படுகின்றன. ஒரே ஒரு மரபணுவில் மட்டும் எத்தனை ' எழுத்துகள்' பொதிந்திருக்கின்றன தெரியுமா? சுமார் 350 கோடி எழுத்துகளாம்!

இவை அனைத்தும் - செல்லைப் பற்றிய ஒரு சில தகவல்கள் தாம். இன்னும் விரிவாகப் பார்த்திட வேண்டுமென்றால் பள்ளிக்கூட மாணவர்களின் உயிரியல் பாட நூல்களிலிருந்து பல அரிய செய்திகளைப் பெற்றுக்கொள்ளலாம். நாம் இங்கே எடுத்துக் கொண்டிருக்கும் விஷயம் - மாணவர்களுக்கு சொல்லித் தராத, ஆனால் அவர்களுக்கு சொல்லித் தரப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

அது என்ன?

7 முதல் உயிர் செல் எவ்வாறு தோன்றியது?


ஒரு சின்னஞ்சிறிய செல். அதற்கு ஒரு சுவர். சுவருக்கள் ஒரு திரவம். அதற்கு நடுவில் ஒரு கரு. கருவுக்குள்ளே புரொட்டோபிளாசம். அதற்குள்ளே ஜீன். அந்த ஜீனுக்குள் பரம்பரை குணங்கள். இவ்வளவு அற்புதமானதொரு அமைப்பையும் செயல்திட்டத்தையும் தன்னகத்தே கொண்ட அந்த சின்னஞ்சிறிய முதல் உயிர் செல் உலகில் எவ்வாறு தோன்றியது?

விஞ்ஞானிகளில் சிலர் என்ன சொல்கிறார்கள்?

சுமார் இருநூறு அல்லது முன்னூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் - நீராவி, மீத்தேன், அம்மோனியா மற்றும் ஹைட்ரஜன் ஆகிய நான்கு வாயுக்களும் காற்றில் கலந்திருந்தனவாம்.

சாதகமானதொரு இயற்கைச் சூழலினால் தற்செயலாக அவை ஒன்று சேர்ந்து அமினோ அமிலங்கள் உருவானதாம். நூற்றுக்கணக்கான அமினோ அமிலங்களின் மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்து தற்செயலாக புரொட்டீன் உருவானதாம்.

பிறகு பல்லாயிரக்கணக்கான புரொட்டீன் மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்ததால் தற்செயலாக நுட்பமான பல அமைப்புகளைக் கொண்ட முதல் உயிர் செல் தோன்றியதாம்.

சாதகமானதொரு இயற்கைச் சூழல் என்று அவர்கள் சொல்வது இடியுடன் கூடிய மின்னலைத் தான்.

நம்புகிறீர்களா?

இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் - உண்மையிலேயே அந்த நான்கு வாயுக்களும் காற்றில் கலந்திருந்தன என்பது வெறும் யூகமாக இருக்கலாமே ஒழிய - அவை உண்மையிலேயே அப்படித்தான் இருந்தன என்று அறுதியிட்டுச் சொல்ல இயலாது என்று அடித்துச் சொல்கிற விஞ்ஞானிகள் ஒரு புறம்.

உயிரற்ற பொருட்களிலிருந்;து வேறு உயிரற்ற பொருட்களைத் தான் உருவாக்கிட முடியுமே தவிர உயிரற்ற பொருட்களிலிருந்து உயிருள்ள பொருட்களை உருவாக்கிடல் முடியாது என்று உரத்துக் குரல் கொடுக்கும் விஞ்ஞானிகள் ஒரு புறம்.

இன்றைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அதி நவீன ஆய்வுக்கூடங்களில் வைத்துக் கூட உயிருள்ள ஒரு செல்லை உருவாக்கிட இயலவில்லையே என்று வியந்து நிற்கின்ற விஞ்ஞானிகள் ஒரு புறம்.

தற்செயலாக ஒரு செல் உருவாவது என்பது இருக்கட்டும். ஒரே ஒரு செல்லின் ஒரே ஒரு சிறு பகுதியாக விளங்குகின்ற ஒரு புரொட்டீன் மூலக்கூறு மட்டும் கூட தற்செயலாக உருவாதல் சாத்தியமே இல்லை என்று கணக்குப் போட்டுச் சொல்கின்ற விஞ்ஞானிகள் இன்னொரு புறம்.

அதெல்லாம் இருக்கட்டும்! தற்செயலாக ஒரு புரோட்டீன் மூலக்கூறு கூட உருவாக முடியுமா என்பதே நம் கேள்வி!

8 தற்செயலாக புரோட்டீன் உருவாகுமா?

எல்லா உயிரினங்களிலும் காணப்படுகின்ற, மிகவும் சிக்கலானதொரு அமைப்பைக் கொண்டதொரு மூலக்கூறு தான் புரொட்டீன். பல்வேறு வகையான அமினோஅமிலங்களை ஒரு நூலில் மணி கோர்ப்பது போல் கோர்க்கப்பட்ட ஒரு சங்கிலி போன்ற அமைப்பைக் கொண்டது தான் புரொட்டீன் மூலக்கூறுகள். புரொட்டீன் மூலக்கூறுகளில் சிறியவையும் உண்டு. பெரியவையும் உண்டு.

நடுத்தரமான புரொட்டீன் மூலக்கூறு ஒன்றில் 288 அமினோ அமிலங்கள் இடம் பெற்றுள்ளன. அமினோ அமிலங்களில் சுமார் இருபது வகைகள் உண்டு. இந்த இருபது வகைகளில் இருந்தும் - அந்த சங்கிலித் தொடரின் ஒவ்வொரு 'மணிக்கும்' ஏதாவது ஒரு அமினோ அமிலம் வீதம் மொத்தம் 288 மூலக்கூறுகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு 288 அமினோ அமிலங்கள் கொண்ட வெவ்வேறு புரொட்டீன் சங்கிலித் தொடர்களை கோடிக்கணக்கான விதங்களில் அமைத்திட இயலும் என்றாலும் (கணக்குப் போட்டுச் சொல்வதென்றால் எண் 1-க்குப் பக்கத்தில் 300 சைபர்களைப் போட்டுக் கொள்ளுங்கள்) - அவற்றுள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமைகின்ற ஒரே ஒரு இணைப்பு மட்டுமெ - ஒரு செல்லுக்குத் தேவையான புரொட்டீனாக உருவாகிட உதவும்.

மற்ற அனைத்துச் சங்கிலித் தொடர்களும் எதற்கும் பயனற்றவை. உயிரினத்திற்கே ஆபத்தானவை! தற்செயலாக அப்படிப்பட்ட ஒரே ஒரு இணைப்பு உருவாதல் சாத்தியம் தானா?

இதில் இன்னொரு வேடிக்கை இருக்கிறது. நாம் மேலே சொன்ன அமினோ அமிலம் ஒவ்வொன்றும் இரண்டிரண்டு வடிவங்களில் கிடைக்கின்றன. நமக்கு வலக்கரமும் இடக்கரமும் அமைந்திருப்பது போலவே அமினோ அமிலங்களிலும் வலக்கரம் உடையதும் உண்டு. இடக்கரம் உடையதும் உண்டு. இரண்டு வடிவங்களும் இயற்கையில் சம அளவில் கிடைக்கவும் செய்கின்றன. இரண்டு வடிவங்களும் ஒன்றுடன் ஒன்று இணைவதிலும் எந்தச் சிக்கலும் இல்லை.

ஆனாலும் நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்றிடும் செய்தி என்ன தெரியுமா?

உயிரினங்களில் காணப்படுகின்ற எல்லா புரொட்டீன்களுமே இடக்கரம் கொண்ட அமினோ அமிலங்களை வைத்து மட்டுமே உருவாக்கப் படுகின்றன. மருந்துக்கென்று ஒரே ஒரு வலக்கரம் கொண்ட அமினோ அமிலம் கூட அங்கே காணப்படுவதில்லை! அப்படி இருந்து விட்டால் அந்தப் புரொட்டீனால் எந்தப் பயனும்இல்லை! ஐயா, இது தற்செயலாக நடைபெற இயலுமா?

மற்றொரு வேடிக்கை என்ன தெரியுமா? இரண்டு அமினோ அமிலங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் படும்போது அவை இரண்டு விதங்களில் இணைய முடியும் என்றாலும் சிறப்பானதொரு இணைப்பு முறை ஒன்று இருக்கிறது. அதற்கு பெப்டைடு இணைப்பு (peptide bond) என்று பெயர். புரொட்டீன் மூலக்கூறுகள் முழுவதிலும் இந்த சிறப்பான பெப்டைடு இணைப்பு மட்டுமே நடைபெறுகிறது. இதுவும் தற்செயல் தானா?

ஓரே ஒரு புரொட்டீனின் கதை தான் இவ்வளவும். மனித உடலில் உள்ள ஒரே ஒரு செல்லில் மட்டும் சுமார் பத்து லட்சம் புரொட்டீன் மூலக்கூறுகள் உள்ளன. இப்போது சொல்லுங்கள் - தற்செயலாக ஒரு செல் உருவாதல் சாத்தியம் தானா?


9 தற்செயல் கோட்பாட்டுக்கு ஒரு முற்றுப் புள்ளி!

மாணவன் ஒருவன் பள்ளியிலிருந்து திரும்புகிறான். வீட்டில் நுழைந்ததும் நுழையாததுமாக நூல்களை பையிலிருந்து அப்படியே எடுத்து அலமாரியில் அடுக்குகிறான். தினமும் இது தான் கதை. ஆனால் என்ன வியப்பு? அவனுடைய நூல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரிசையில்தான் எப்போதுமே அமைகின்றன - என்றால் ஏற்பீர்களா?

இது நாம் சொல்லும் உதாரணம். சில அறிவியல் அறிஞர்கள் தருகின்ற எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போமா?

இரும்புத் தாதுப்பொருளும், கரியும் தற்செயலாக ஒன்று சேர்ந்து, வெப்பம் சேர்த்துக் கொண்டு எஃகு இரும்பாக மாறி விட்டதாம். மாறி விட்ட அந்த எஃகு இரும்பு தாமாகவே ஒன்று சேர்ந்து இறுதியில் - பாரிஸ் நகரத்தில் உள்ள ஈஃபில் டவரை உருவாக்கிக் கொண்டதாம். ஏற்பீர்களா இதனை? - கேட்பவர் புகழ் பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானி மாரிஸ் புகைல்.

'அச்சகம் ஒன்றிலிருந்த எல்லா எழுத்துகளும் கன்னா பின்னாவென்று ஒன்று கோர்த்து வைக்கப்பட்டன. அதனை அச்சு இயந்திரம் ஒன்று அச்சடித்துத் தந்த போது நாமறிந்த இனிய பாடலொன்று அழகாக அச்சாகி இருந்ததாம். நம்புவீர்களா இதனை?' - கேட்பவர் ஒப்பாரின் (Oparine) என்ற விஞ்ஞானி.

'குரங்கு ஒன்று தட்டச்சு இயந்திரம் ஒன்றின் முன்பு அமர்ந்து கொண்டது. அது தனது விருப்பம் போல ஒவ்வொரு எழுத்தாக அடித்துக் கொண்டே வந்ததாம். இறுதியில் பார்த்தால் 'மனித இனத்தின் வரலாறு' ஒன்றை அழகாக வடித்துத் தந்திருந்ததாம் அந்தக் குரங்கு. ஏற்றுக் கொள்வோமா இதனை?' கேட்பவர் டாக்டர் அலி டெமிர்ஸாய் என்ற விஞ்ஞானி!

சிந்தியுங்கள்!

"இங்கே எல்லாமே தற்செயல் தான்!" - என்ற அறிவுக்கு பொருத்தமற்ற கோட்பாட்டுக்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள்!

மனித வாழ்வின் பொருளை அறிந்து கொள்ள அதுவே ஒரு துவக்கமாக அமைந்திடும்! ஏனெனில் மனிதனின் வாழ்வும் தற்செயல் அல்ல! மனிதனின் மரணமும் தற்செயல் அல்ல!


10 இறைவனை மறுப்பது தான் அறிவியலின் நோக்கமா?
இரண்டாயிரம் கோடி ஒளி ஆண்டு தூரங்களைக் கடந்து விரிவடைந்து கொண்டிருக்கும் பென்னம் பெரிய நமது பேரண்டமாக இருந்தாலும் சரி ஒரு சில மைக்ரான் அளவுக்குள்ளேயே பொதித்து வைக்கப் பட்டுள்ள சின்னஞ்சிறிய உயிர் செல்லாக இருந்தாலும் சரி....

- இவை அனைத்தும் - தற்செயலாக உருவாகி நிலைபெற்று இயங்கிக் கொண்டிருத்தல் சாத்தியமே இல்லை எனும்போது - இறைவன் ஒருவன் தான் திட்டமிட்டு இவற்றை உருவாகியிருக்க வேண்டும் என்று நாம் சொல்லலாம்.

அப்படியானால் அறிவியல் அறிஞர்கள் அனைவருமே இக்கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே? ஏன் சில விஞ்ஞானிகள் மட்டும் இறைவனை ஏற்க மறுக்கிறார்கள்?

நாம் முன்னர் குறிப்பிட்ட டாக்டர் அலி டெமிர்சாய் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். அது என்ன என்று பார்ப்போம்.

இவர் தனது நூல் ஒன்றில் எழுதுகிறார்: ''சைட்டோகுரோம்-சி'' என்றொரு என்ஸைம். இது தற்செயலாக உருவாவதற்கான சாத்தியக் கூறு கிட்டத்தட்ட பூஜ்யமே. எனவே நமது கற்பனைக்கெட்டாத ஒரு ஆற்றல் அல்லது சக்தி (Meta Physical Power) ஒன்றே இதனை உருவாக்குவதில் தமது பங்கை ஆற்றி இருக்க வேண்டும்.

எனினும் அப்படிப்பட்ட நமது கற்பனைக்கெட்டாத ஒரு சக்தியை ஏற்றுக் கொள்வது என்பது விஞ்ஞானத்தின் நோக்கங்களுக்குப் பொருந்தக் கூடியதல்ல என்பதாலேயே நாம் 'தற்செயல்' கோட்பாட்டின் பக்கம் திரும்பிட வேண்டியுள்ளது.

எனினும் அந்தக் குறிப்பிட்ட என்ஸைம் தற்செயலாக உருவாவதற்கு எந்த அளவுக்கு சாத்தியக்கூறு உள்ளதெனில் குரங்கு மனித வரலாற்றை வடித்துத் தருகின்ற அதே அளவுக்குத் தான்.''

முரண்பாட்டைக் கவனித்தீர்களா?

உண்மையை உணர்த்துவது தான் விஞ்ஞானத்தின் நோக்கம் என்று நாம் இது வரை நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இறைவனை மறுப்பது தான் விஞ்ஞானத்தின் நோக்கம் என்று அலி டெமிர்சாய் போன்றவர்கள் நமக்குச் சொல்கிறார்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

விஞ்ஞானிகள் அனைவருமே இறைவனை மறுப்பவர்களா?

விஞ்ஞானிகள் இறைவனை மறுப்பது என்பது ஏதோ காலாகாலமாக இருந்து வந்துள்ளது என்று எண்ணிட வேண்டாம்.

விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினர் மட்டும் தான் - அதுவும் - உயிர் மலர்ச்சிக் கோட்பாட்டை (theory of evolution) விடாப்பிடியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் - ஒரு சிலர் தான் - இறைவனை மறுக்கிறார்கள்.

இந்த நிலை எல்லாம் கடந்த இரு நூறு ஆண்டுகளாக மட்டும் தான். அதற்கு முன்னரோ விஞ்ஞானம் மனிதனை - இறை நம்பிக்கையை நோக்கி இட்டுச் சென்றிடும் சாதனமாகவே திகழ்ந்து வந்துள்ளது.

இப்பிரபஞ்சம் என்பது படைப்பாளன் ஒருவனால் படைக்கப் பட்டதே என்று ஒத்துக் கொள்கின்ற விஞ்ஞானிகள் பலர்:

- நவீன வேதியியலின் தந்தை எனப் போற்றப்படும் ராபர்ட் பாயில்

- உலகின் மிகச் சிறந்த இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடே

- மரபணு விஞ்ஞானத்தின் தந்தை என்று போற்றப்படும் கிரிகோரி மெண்டல். இவர் டார்வினின் உயிர் மலர்ச்சிக் கோட்பாட்டை மதிப்பிழக்கச் செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

- மிகச் சிறந்த நுண்ணுயிர் விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர். டார்வினின் கொள்கைக்கெதிராகப் போர்ப் பிரகடனம் செய்தவர்.

- அணுக் கொள்கை விஞ்ஞானத்தின் தந்தை என்று புகழப்படும் ஜான் டால்ட்டன்.

பட்டியல் நீள்கிறது.

இன்று பல முனைகளிலும் தன்னைத் தற்காத்துக் கொள்ள இயலாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது உயிர் மலர்ச்சிக் கோட்பாடு. அதனை சற்று ஓரம் கட்டி வைத்து விட்டு நேர்மை உள்ளம் கொண்ட விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை அடுத்துப் பார்ப்போம்.


11 இது வரை மறுத்து விட்டோமே! இனி எப்படி ஏற்பது?

நுண்-உயிரியல் (Micro Biology) துறையில் பிரபலமான விஞ்ஞானிகள் பலர் ஒரு மில்லி மீட்டரை விட மிகச் சிறிய அறை ஒன்றிலா இவ்வளவு அமைப்புகளும் இவ்வளவு இயக்கங்களும் என்று வியந்து போய் அற்புதமான இந்த உயிர் செல்கள் உருவாவதன் பின்னணியில் நிச்சயமாக படைப்பாளன் ஒருவனின் அறிவுப் பூர்வமான திட்டம் ஒன்று இருந்தேயாக வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கிறார்கள்.

அவர்களுள் மைக்கேல் ஜே. பீஹே என்ற விஞ்ஞானி சிறப்பிற்குரியவர். அவர் சொல்கிறார்:

'ஒரு செல்லுக்குள் இருப்பது என்ன நடப்பது என்ன என்பது குறித்து எடுக்கப் பட்ட எல்லா ஆய்வுகளின் முடிவுகளுமே உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் பேருண்மை தான் ''அறிவுப் பூர்வமான திட்டம்'' (Intelligent Design) என்பது. குழப்பமோ சந்தேகமோ அற்ற இண்மை இது. விஞ்ஞான உலகின் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த முடிவுகள் மிக மிக முக்கிமானவை. இந்த சாதனையை அறிவியல் உலகம் உரத்துக் கொண்டாடியிருந்திருக்க வேண்டும்.

'ஆனால் எந்தக் கொண்டாட்டத்தையும் காணோம். மாறாக மயான அமைதி ஒன்று நிலவுகிறது. தாங்களே கண்டுபிடித்து விட்ட உண்மைக்கு முன்னால் தாங்களே தலை குனிந்து நிற்கிறார்கள். பொது மேடைகளில் இது குறித்து வெளிப்படையாகப் பேசிடத் தயங்குகிறார்கள். தனித்து உரையாடுகையில் உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள். ஏனிந்த நிலை தெரியுமா? 'அறிவுப் பூர்வமான திட்டம்' என்பதை ஏற்பதன் மறு பக்கம் இறைவனை ஏற்பது தான்.'

சகோதரர்களே! இறைவனை நம்புவது என்பதோ அவனை ஏற்க மறுப்பது என்பதோ - ஏதோ அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று ஒதுக்கி விட்டு விடக் கூடிய அளவுக்கு ஒன்றும் அற்பமான விஷயம் அன்று!

இறைவனைப் பற்றிய நமது நிலை - நமது வாழ்வின் குறிக்கோளையே நிர்ணயிக்கக் கூடியது. வாழ்க்கை என்பது நமக்கு ஒரே ஒரு தடவை மட்டும் தான்! எனவே நாம் ஒவ்வொருவருமே நமது சொந்த விருப்பு வெறுப்புகளையெல்லாம் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு உண்மையைத் தேடிடும் ஒரே நோக்கில் ''இறைவன் ஒருவன் தான் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கின்றானா?'' என்று ஆய்ந்து அறிந்திட வேண்டும்.

காலா காலமாகக் கடவுளை மறுத்து வந்து விட்டோமே இனி எவ்வாறு இறைவனை ஏற்பது என்று எண்ணுகிறீர்களா? மனிதன் - முன்னர் பூமி தட்டையானது என்ரு நம்பி வந்தான். பின்னர் உண்மை வெளிப்பட்டதும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லையா? பூமியைத் தான் சூரியன் உட்பட எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன என்று எண்ணிக் கொண்டிருந்தான். பின்னர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லையா?

இறைவனை ஏற்க மறுக்கும் நமது சகோதரர்களை நாம் கேட்டுக் கொள்வது இது தான்: உங்களுக்கு இது வரை இங்கே ஒரு சில சான்றுகளே சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. இவை உங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றால் பரவாயில்லை. இன்னும் ஆயிரக் கணக்கான சான்றுகளை நீங்கள் உங்கள் வாழ்விலேயே காண வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் - உங்கள் இதயத்தைத் திறந்தே வைத்திருங்கள்! அதனை மூடி விடாதீர்கள்!


12 இறைவன் என்று ஒருவன் இருந்தால் அவன் ஏன் போய் ஒளிந்து கொள்ள வேண்டும்?
பொதுவாகவே இறைவனை மறுப்பவர்கள் முன் வைக்கும் முக்கியமான கேள்விகளுள் ஒன்று இது.

இறைவன் என்று ஒருவன் இருந்தால், அவன் ஏன் போய் ஒளிந்து கொள்ள வேண்டும்? அவன் ஏன் நம் கண் முன்னால் தோன்றி தன்னை நிரூபித்துக் கொள்ளக் கூடாது?

நமது பார்வைக்கு ஒரு எல்லை, ஒரு அளவு, ஒரு நிர்ணயம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு அளவு நிர்ணயிக்க்ப்பட்டு நமக்குக் கண் பார்வை அமைந்திருப்பது கூட நமக்கு நன்மையே!

ஏனெனில் ஒரு கால் நமக்கு சற்றே அதிகம் சக்தி வாய்ந்த, ஒரு 'மைக்ராஸ்கோப்" அளவுக்கு ஆற்றல் பொதிந்த, இரு கண்கள் கொடுக்க்பபட்டிருந்தால் என்ன ஆகும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு சொட்டு நீரை நீங்கள் எவ்வாறு பார்ப்பீர்கள்?

உங்கள் முன் வைக்கபபடும் உணவு உங்களுக்கு எவ்வாறு தோற்றம் தரும்?

நீங்கள் உள்ளே இழுக்கக்கூடிய மூச்சுக்காற்றில் உள்ள நுண்கிருமிகள் எல்லாம் உங்களுக்கு எவ்வாறு அழகாக (?) தோற்றம் தரும்?

வேண்டுமா அப்படிப்பட்ட கண்கள்?

சகோதரர்களே! ஒரு பொருளை சாதாரணமாகப் பார்த்தால் ஒரு விதமாகவும், ஒரு அளவிலும் தெரிகிறது. அதே பொருளை நுண்ணோக்காடி வழியே பார்த்தால் வேறு அளவிலும் வேறு விதமாகவும் தெரிகிறது. எனவே ஒரு பொருளை எந்த அளவில் எந்த விதத்தில் பார்த்திட வேண்டும் என்ற நிர்ணயம் நமது கண்களுக்கு உண்டு என்பது யதார்த்தமான உண்மை.

எனவே ஒரு குறிப்பிட்ட வரையரைக்குட்பட்டு வழங்கப்பட்டிருக்கின்ற இந்தக் கண்களின் மூலமாக அண்ட சராசரங்களையும் படைத்துக் காக்கின்ற அந்த ஆண்டவனைப் பார்த்திட வேண்டும் என்று வாதிப்பது அறிவுடைமை ஆகாது!

ஒரு வாதத்துக்காக நாம் கேட்போம்:

கண்களால் பார்த்தால் தான் இறைவனை நம்புவோம் என்றால் - கண்களால் பார்த்துத் தான் மற்றவைகளையும் நீங்கள் நம்பிட வேண்டும். அப்படித்தான் செய்கிறீர்களா?

மின்சாரத்தைக் கண்களால் பார்த்ததுண்டா நீங்கள்? புவி ஈர்ப்பு விசையைப் பார்த்ததுண்டா நீங்கள்?

இன்னொன்றையும் கேட்போம் நாம்: கண்களால் பார்த்து விட்டால் மட்டும் ஒன்று உண்மையாகி விடுமா?

'கண்ணால் பார்ப்பதுவும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்' என்ற கூற்றுக்கு உங்கள் பதில் என்ன?

கண்களை மூடிக் கொண்டு - ஆழமாக சிந்தியுங்கள் சகோதரர்களே!


13 இறைவன் என்று ஒருவன் இருந்தால் ஏன் இங்கெ இவ்வளவு குழப்பங்கள்?


இறைவனை மறுப்பவர்கள் இப்படி ஒரு கேள்வியையும் கேட்பதுண்டு. இறைவன் என்று ஒருவன் இருந்தால் ஏன் இங்கே இவ்வளவு குழப்பங்கள்? ஏன் இவ்வளவு அநியாயங்கள் நடக்கின்றன? இவற்றையெல்லாம் அந்த இறைவன் சும்மா பார்த்துக் கொண்டிருக்கின்றானா?

இறைவன் கருணை மிக்கவன் என்றால் நோய்களைக் கொண்டும், விபத்துக்களைக் கொண்டும், புயல், சூறாவளி, வெள்ளம், பூகம்பம், சுனாமி - போன்றவற்றால் மனித உயிர்களை ஏன் அவன் அழித்திட வேண்டும்? அவன் இரக்கமற்றவனா? அல்லது இயலாதவனா? இயலாதவன் என்றால் அவனை வணங்குவதால் எமக்கென்ன இலாபம்?

இவை அனைத்தும் இறைவனை மறுப்பவர்கள் தொடுக்கும் கேள்விக்கணைகள். இப்படிக் கேள்விகளை அடுக்கடுக்காகத் தொடுப்பதன் மூலம், ஏதோ இறைவனே இல்லை என்பதை நிரூபித்து விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர் அவர்கள்.

கேள்வி கேட்கின்ற உரிமை அவர்களுக்கு மட்டுமே உரித்தானது அன்று! அந்த உரிமை இறைவனை நம்புபவர்களுக்கும் உண்டு!

மனித வாழ்வில் காணப்படுகின்ற குழப்பங்களைப் பார்க்கின்ற இறை மறுப்பாளர்கள், மனிதனைத் தவிர்த்த இயற்கைப் பெருவெளியில் காணப்படுகின்ற அமைதியை, அழகை, கட்டுக்கோப்பை, சீரான இயக்கத்தை ஏன் பார்க்க மறுக்கின்றனர்?

சூரியக் குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் உண்டா? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எந்த ஒரு மோதலும் இன்றி, ஒன்பது கோள்களும் சுழல்கின்றனவே. அது எப்படி?

உயிரினங்கள் வாழ்வதற்குத் தோதுவான விதத்தில் சூரியனிலிருந்து பூமி பிரிந்திருக்கும் தூரத்தை நிர்ணயித்தது யார்?

கடல் நீர் நிலத்தை மூழ்கடித்து விடாத விதத்தில் சந்திரனும் பூமியும் - "நீ அங்கேயே இரு! நான் இங்கே இருக்கின்றேன்" - என்று பேசி வைத்துக் கொண்டு சுழல்கின்றனவா?

அடுத்து அவர்களின் கேள்விகளை சற்றே நாம் ஆய்வுக்கு நாம் உட்படுத்துவோம்.

14 கொதிக்கின்ற பால் சுட்டு விடத்தான் செய்யும்!

மனிதனுக்குத் தீமைகள் இரண்டு விதங்களில் வந்தடைகின்றன.

ஒன்று - பூகம்பம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள். இவற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகின்றார்கள். இவைகளை Natural Calamities - என்று சொல்லலாம்.

மற்றொன்று: மனித வாழ்வில் மனிதனே பல தீமைகளுக்குக் காரணமாக விளங்குகின்றான். இவைகளை நாம் Moral Evils என்று அழைக்கலாம்.

முதலில் இயற்கைச் சீற்றங்களை எடுத்துக் கொள்வோம்.

இயற்கைச் சீற்றங்களால் ஒன்றுமறியாத அப்பாவி மக்களும், ஒரு பாவமும் அறிந்திடாத குழந்தைகளும் இறந்து படுகின்றனர். இத்தகைய தருணங்களில் இவர்களைக் காப்பாற்றிட கருணை மிக்க இறைவன் ஏன் முன்வந்திடக் கூடாது என்பதே இறைவனை மறுப்பவர்களின் கேள்வி.

நாம் வாழ்கின்ற பேரண்டம் என்பது சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது என்பதையும் இப்பேரண்டம் தோன்றிய அந்த நேரத்திலேயே இயற்கைச் சட்டங்களும் (Physical laws) உருவாகி விட்டன என்றும் அந்த இயற்கைச் சட்டங்கள், இப்பிரபஞ்சம் முழுமைக்கும் ஒரே மாதிரியானவை என்றும் அன்றிலிருந்து இன்று வரை அவற்றில் எந்த ஒரு மாறுபாடும் இல்லை என்பதையும் முன்னரே பார்த்தோம் அல்லவா?

இதன் அடிப்படையில் - நமது வேலையெல்லாம் அந்த இயற்கைச் சட்டங்களை அறிந்து புரிந்து கொண்டு அதற்குத் தக நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டியது தான். நெருப்பு சுடும் என்பது நியதி. அதற்குத் தக நடந்திட வேண்டியது நமது பொறுப்பு.

மின்சாரத்தின் ஆற்றலை அறிந்து கொண்டு அதற்குத் தக அதனைப் பயன்படுத்திட வேண்டியது நமது பொறுப்பு. இப்படித்தான் ஒவ்வொன்றும்.

அறிந்தோ அறியாமலோ - விதிக்கப்பட்டிருக்கும் இயற்கைச் சட்டங்களில் நாம் "கை" வைக்கும்போது அதன் விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது. குழந்தை ஒன்று கொதிக்கின்ற பாலில் கையை விட்டு விட்டால் - பால் சுட்டு விடத் தான் செய்யும். இந்தத் தருணத்தில் நாம் இறைவனிடம் என்ன எதிர்பார்க்கின்றோம்? அமானுஷ்யமான முறையில் இறைவன் அங்கு தோன்றி அக்குழந்தையைக் காப்பாற்றிட வேண்டும் என்பது தான்.

இயற்கைச் சீற்றங்களால் ஏற்படுகின்ற எல்லா விதமான ஆபத்துகளில் இருந்தும் மக்களை இறைவனால் காப்பாற்றிட முடியும் தான்! இப்படி நாம் எதிர்பார்த்தால் - இயற்கைச் சட்டங்களுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

சான்றுக்கு ஒரு சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம். குக்கிராமம் ஒன்று. காலையில் ஒரே ஒரு பேருந்து தான். பேருந்து 8.25 க்கு புறப்பட வேண்டும். அந்த பேருந்தைப் பிடித்தே ஆக வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு. ஆனால் இன்று நீங்கள் சற்றே தாமதமாக வீட்டிலிருந்து புறப்படுகிறீர்கள். நீங்கள் இறைவனிடம் எதிர்பார்ப்பது : இறைவா! பேருந்தை சற்று தாமதமாக வரச்செய்!

ஆனால் அதே குக்கிராமத்தில் ஒரு தாய் தனது கைக்குழந்தையை வைத்துக் கொண்டு பேருந்துக்குக் காத்திருக்கின்றார். குழந்தைக்குக் கடுமையான சுரம். மருத்துவமனைக்கு விரைந்து சென்றிட வேண்டும். அவர் இறைவனிடம் கேட்கின்றார்: இறைவா! சீக்கிரம் பேருந்தை அனுப்பு!

இப்படி ஆளாளுக்கு ஒன்றை இறைவனிடம் எதிர்பார்ப்போம். எல்லாரது வேண்டுகோள்களையும் நிறைவேற்றிட -அவனே விதித்த சட்டங்களை அவ்வப்போது அவன் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் - இயற்கைச் சட்டங்களை நாம் எப்படி சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்?

சிந்தியுங்கள்!


15 இதனை இறைவனின் குற்றம் என்று எப்படி சொல்வது?
இப்போது மனிதனின் தவறுகளால் வருகின்ற ஆபத்துக்களை கவனிப்போம். மனிதர்களில் சிலர் என்ன செய்கின்றார்கள்? சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கின்றார்கள்! உணவில் கலப்படம் செய்கின்றார்கள்! இரு நாடுகளுக்கிடையில் பெரும் போர்களைத் தூண்டி விடுகின்றார்கள்! அணு குண்டு ஒன்றைத் தூக்கி எறிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திடக் காரணமாக இருப்பவனும் மனிதன் தான்!

ஒன்றை நீங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும். மனிதனுக்கும் மற்ற படைப்பினங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடே மனிதன் தன் விருப்பத்துக்கு சுதந்திரமாக செயல்படுகின்ற உரிமையைப் (FREEDOM OF CHOICE) பெற்றிருப்பது தான். இதனை வழங்கியவனே இறைவன் தான்! அதனால் தான் மனிதன் அவன் விருப்பத்துக்கு ஆட்டம் போடுகின்றான். பல தீமைகள் நம்மை வந்தடைகின்றன.

குடித்து விட்டு வண்டியை ஓட்டுகின்றார்கள். தூக்கமின்றி ஓட்டுகின்றார்கள். சாலை விதியறியாதவர்களெல்லாம் வாகனங்களை இயக்குகின்றார்கள். இவையெல்லாம் அவர்கள் freedom of choice!

பத்திரிகை செய்தி ஒன்று: இரவு பனிரென்டு மணி. நட்ட நடுச்சாலையில் லாரி ஒன்றை நிறுத்தி விட்டு ஓட்டுனர் எங்கோ சென்று விட்டார். பின் பக்கம் விளக்கு கூட எறிந்திடவில்லை. அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றில் மூன்று இளைஞர்கள் படு வேகமாக வந்து லாரியில் மோதி அந்த இடத்திலேயே இறக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட தீமைகளில் இருந்து மக்களை இறைவன் எப்படிக் காத்திட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வது மட்டுமே நமது choice! ஆனால் ஆட்சியாளர்கள் செயல்பாடுகளெல்லாம் அவர்கள் choice! அனுபவிப்பவர்கள் மக்கள்! இதனை இறைவனின் குற்றம் என்று எப்படி சொல்வது?

இந்தத் தீமைகளிலிருந்து நம்மை இறைவன் காத்திட வேண்டுமெனில் இறைவன் என்ன செய்திட வேண்டும்? நமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற இந்த "உரிமை"யைப் பறித்து விட வேண்டும்! அவ்வளவுதான்! அப்படிப் பறித்து விட்டால் என்ன ஆகும்? நாமும் ஆடு மாடுகளைப் போல் வாழ்ந்திட வேண்டியது தான்! என்ன சொல்கிறீர்கள்?

நமக்கு freedom of choice வேண்டுமா? வேண்டாமா? சொல்லுங்களேன்!

பொதுவாகவே ஒவ்வொரு மனிதனும் தான் "நல்லவன்" என்றே பெயர் எடுத்திட வேண்டும் என்று தான் விரும்புகிறான். நாம் குறிப்பிடும் - freedom of choice - மனிதனுக்கு இல்லையெனில் ஒருவன் எப்படி நல்ல பெயர் எடுப்பதாம்? நல்லவைகளும், கெட்டவைகளும் நம் கண்களுக்கு முன்னால் இருந்திடும்போது - அல்லவை தவிர்த்து நல்லவற்றைத் தேர்வு செய்திடும்போது தானே ஒருவனை நாம் நல்லவன் என்று சொல்ல முடியும்.


16 எங்கே நிம்மதி?
நான் பிறந்து விட்டேன்

என் விருப்பப்படி அல்ல!

நான் எப்போது இறப்பேன்?

அதுவும் என் கையில் இல்லை!

ஐம்பது ஆண்டுகளா? அறுபது ஆண்டுகளா?

எனக்குத் தெரியாது!

இந்த வாழ்க்கையை எனக்கு

யார் தந்தது?

இறைவன் தந்தது தான் இந்த வாழ்க்கை

என்கிறார்கள் சிலர் -

கடவுளே இல்லை என்கின்றனரே வேறு சிலர்!

இதில் எது உண்மை? எதுபொய்?

சரி! இறைவன் தான் எனக்கு

வாழ்வைத் தந்தான் என்றால்

யார் அந்த இறைவன்?

அவன் எப்படிப் பட்டவன்?

ஏன் என்னைப் படைத்தான்?

என்னிடம் அவன் எதனை விரும்புகிறான்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம்

எனக்கு யார் பதில் தருவார்கள்?

'நான் சொல்கிறேன் தக்க பதில்களை' -

என்று ஆளுக்கு ஒன்று அல்லவா சொல்கிறார்கள்!

ஏன் அவர்களின் பதில்கள்

ஒரே மாதிரியாக அமைந்திடவில்லை?

கிடைக்கின்ற செய்திகள்

ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றனவே

இவற்றில் எது சரி? எது தவறு?

அடுக்கடுக்கான கேள்விகள் இங்கே!

மிகச் சரியான பதில்கள் எங்கே?


16 இறைவன் இல்லை என்றே வைத்துக் கொள்வோம்!
அப்படியானால் இந்த வானமும் பூமியும்

எப்படி வந்தன?

தற்செயலாக நடந்து விட்ட

விண்வெளி விபத்து தான் (Cosmic Accident)

இந்த வானமும் பூமியும்

என்கிறார்கள் சில நவீன கால விஞ்ஞானிகள்!

கணக்கிடப் பட்டது

போன்றதொரு தூரத்தில் கதிரவன்!

அதனால் நமக்குப் போதுமான

ஒளியும் வெப்பமும்! தற்செயலா?

தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது பூமி.

அதனால் நமக்கு இரவும் பகலும்!

தற்செயல் தானா?

சூரிய மண்டலத்தின்

ஒன்பது கோள்களும் அதனதன் பாதையில்

ஆண்டாண்டு காலமாகச்

சுழன்றோடிக் கொண்டிருப்பதும்

தற்செயலாகத் தானா?

காற்றில் போதுமான அளவுக்கு மட்டும்

பிராண வாயு - தற்செயல் தானா?

நாம் வெளியிடுகின்ற கரியமில வாயுவைத்

தாவரங்கள் எடுத்துக் கொள்கிறதாம்.

தற்செயலா?

அதெல்லாம் இருக்கட்டும்.

நம்மையே - நமது உடலையே கவனிப்போம்

நமது மகத்தான மூளை

தற்செயலாக உருவானது தானா?

நமது கண்கள் நமது இதயம்

நமது இன்ன பிற உறுப்புகள அனைத்தும்

சீராக அமைந்து சிறப்பாக

செயல்படுவதெல்லாம் தற்செயலாகத் தானா?

ஏற்க முடியவில்லையே!

17 உண்மையைத் தேடும் ஆர்வம் இருக்கிறதா?

நமது வாழ்க்கை கூட

தற்செயலாக நமக்குக்

கிடைத்திட்ட ஒரு வாய்ப்பு

என்றே வைத்துக் கொள்வோம்.

அப்படியானால் நான்

எப்படி வாழ்ந்திட வேண்டும்?

எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள் மனிதா!

எதை வேண்டுமானாலும் ஆண்டு

அனுபவித்துக்கொள்! - என்கிறார்கள் சிலர்.

ஆனால் என்னைச் சுற்றியிருப்பவர்களோ

நான் நேர்மையாகத்தான்

வாழ்ந்திட வேண்டும் என்கிறார்களே!

ஏன் நான் நல்லவனாக வாழ்ந்திட வேண்டும்?

நான் கெட்டவனாக வாழ்ந்திட்டால்

எனக்கு என்ன நேர்ந்து விடும்?

எல்லாரது கணக்கையும் முடித்திடுகின்ற

மரணம் என்பது

எல்லார்க்கும் பொதுவானது தானே!

ஆக - எனது வாழ்க்கை

எப்படி வேண்டுமானாலும்

இருந்து விட்டுப் போகட்டுமே!

உனக்கு 'மனசாட்சி' என்ற ஒன்று

இருக்கிறதல்லவா என்கிறார்கள் அவர்கள்!

ஆம்! இருக்கிறது தான்!

நான் ஒரு சில கூடாச் செயல்களைச்

செய்ய முனைந்துடும்போது

'டேய்! இது தவறு! இதனைச் செய்யாதே!'

என்று எனக்குள் ஒரு குரல்

ஒலிக்கத் தான் செய்கிறது!

ஆனால் அதே நேரத்தில்

'எவன் என்னைப் பார்க்கப் போகிறான்?'

'எவன் தான் இதனைச் செய்யவில்லை!'

என்று இன்னொரு குரலும்

எனக்குள் எழுகிறதே!

எதற்கு நான் கட்டுப் படுவது?

இவ்வாறு கேள்விக் கணைகளைத்

தொடர்ச்சியாகத் தொடுப்பது

எங்கோ, ஏதோ ஒரு மூலையில்

அமர்ந்து கொண்டு

வாழ்க்கையில் விரக்தி அடைந்து போய்விட்ட

ஒருவரின் அவலக் குரல் அன்று!

மாறாக - உண்மையை, யதார்த்ததினைக்

கண்டறியத் துடித்திடும்

உயிர்த் துடிப்புள்ள, அறிவுத் தாகம் கொண்ட

ஒவ்வொருவரிடத்திலும்

இந்தக் கேள்விகளும்

இது போன்ற கேள்விகளும்

இருக்கத் தான் செய்கின்றன!

இந்தக் கேள்விகள் எல்லாமே

நியாயமான கேள்விகள் தாம்!

தெளிவான பதில்களை வேண்டி நிற்கும்

அடிப்படையான கேள்விகள் தாம்!

ஆனால் - மிகவும் பரபரப்பானதொரு உலகில்

வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு

நமது வாழ்வின்

யதார்த்த நிலை குறித்தெல்லாம்

சிந்தித்துப் பார்ப்பதற்கு

நேரம் கிடைப்பதில்லை!

அன்றாடம் ஆயிரத்தெட்டு பிரச்னைகளில்

சிக்கித் தவித்திடும் மனிதன்

இறுதியில் - ஓடியாடி ஓய்ந்து போன பின்பு

தன் கடந்த காலத்தைத்

திரும்பிப் பார்த்து

கை சேதம் அடைகின்றான்!

ஐம்பது அறுபது என்று

ஆண்டுகள் உருண்டோடி விட்டனவே!

எதற்காக இங்கே வந்தோம்!

எதற்காக வாழ்ந்தோம்?

எதனைச் சாதித்தோம்?

இனி நாம் செல்லப் போவது எங்கே?

என்பன போன்ற காலம் கடந்த சிந்தனைகள்

மனிதனுக்கு அப்போது

நிச்சயமாக உதவிடப் போவதில்லை.

அடுத்து என்ன - அடுத்து என்ன என்று

அவசர கதியில் உலகம்

மிக வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது,

பணம் சேர்ப்பதிலும்,

சேர்த்த பணத்தைக் கொண்டு

வீடு நிறைய பொருட்களைக் குவிப்பதிலும்

தனது 'பொன்னான' நேரத்தைச் செலவு செய்து கொண்டிருக்கும்

மனிதனைச் சிந்திக்க வைப்பது மிகவும் கடினம்.

உலகெங்கிலும் நாம் நமது

இளந்தலைமுறையினர்க்கு

வழங்குகின்ற கல்வித் திட்டத்திலும்

'வாழ்க்கை' குறித்த பாடம்

சேர்க்கப் படவில்லை.

பெரும் பெரும் படிப்பு படித்தவர்களெல்லாம்

இன்று குற்றவாளிக் கூண்டில்!

வாழ்க்கை குறித்த சிந்தனை இன்றி

ஒரு கொள்கை வெற்றிடத்தைச்

சுமந்து கொண்டு

'எல்லாரையும் போல்

நாமும் வாழ்ந்து விட்டுப் போய்விடுவொம்'

என்று சமாதானம் செய்து கொண்டு

உண்மையைத் தேடும் முயற்சியைக்

கை விட்டு விடுகின்ற

ஒரு சமூகத்தின் எதிர்கால விளைவுகள்

பார தூரமானவை.

அழிவின் விளிம்பிற்கே

நம்மை இட்டுச் செல்பவை!

வாழ்க்கை சம்பந்தமான ஆய்வினை

மக்கள் எளிதில் ஒதுக்கி விடுவதற்கு

இன்னொரு காரணம்

வாழ்க்கை தொடர்பாகத் தரப்படுகின்ற

விளக்கங்கள் அனைத்தும்

சிக்கலானவை, மனதைக் குழப்புபவை

என்று அவர்கள் கருதுவதால் தான்.

எனினும் உண்மைகள் என்றும் எளிமையானவையே!

உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்வதற்கு

நமக்கு ஆர்வம் இருக்கிறதா

என்பதே இப்போது எழும் கேள்வி!


18. உலகே மாயமா? வாழ்வே மாயமா?
நமது உள்ளங்களை அழுத்திக் கொண்டிருக்கின்ற, நமது வாழ்க்கை சம்பந்தமான, அடிப்படைக் கேள்விகளுக்கான தெளிவான பதில்களை நாம் எங்கிருந்து பெறுவது? இப்படி இருக்கலாம், அப்படி அல்லாமலும் இருக்கலாம் என்பது போன்ற சந்தேகங்களுக்கு இடமளிக்கின்ற பதில்களை நமது உள்ளங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை.

நமது தேவை எல்லாம் நமது சந்தேகங்கள் எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாகத் தீர்த்து வைக்கின்ற தௌ;ளத் தெளிவான விளக்கங்கள் தான். அப்படிப்பட்ட தெளிவைப் பெற்ற பின்னரே உள்ளங்கள் அமைதி அடைகின்றன. அப்படிப்பட்ட தெளிவான வாழ்வியல் உண்மைகளை நாம் யாரிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும்?

ஒரு புறத்தில் தத்துவ ஞானிகள்! அறிவுலக மேதைகள்! மத குருமார்கள்! குறி சொல்பவர்கள்! இவர்கள் - இறைவனைப் பற்றி, மனிதப் படைப்பினைப் பற்றி, உலகத்தைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி, மரணத்துக்குப் பின் மனிதனின் நிலையைப் பற்றியெல்லாம் நிறையக் கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள்.

இவர்கள் சொந்தமாக சிந்தித்ததன் விளைவாக, ஆழமான தியானங்களில் மூழ்கியதன் வாயிலாக, தமது சொந்த வாழ்வில் - அவர்கள் சந்தித்த அனுபவங்கள் வாயிலாக - தமது கருத்துக்களை, உபதேசங்களை மக்களுக்குச் சொல்லிச் சென்றிருக்கின்றார்கள்!

ஆனால் அவர்களுடைய கருத்துக்களெல்லாம் சரியானவை தானா? உண்மையானவை தானா? சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை தானா? - அறுதியிட்டு அப்படிச் சொல்ல முடியவில்லையே! அவர்களின் சிந்தனையின் முடிவுகள் சரியாக இருக்கலாம் தான். ஆனால் தவறாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறதே!

சகோதரர்களே! வாழ்க்கை சம்பந்தப் பட்ட எந்த ஒரு கேள்விக்கும் சரி, அது குறித்த தெளிவான, சந்தேகங்களுக்குக் கொஞ்சமும் இடமளிக்காத விளக்கங்களை இந்தத் தத்துவ ஞானிகளால், அறிவுலக மேதைகளால் தரவே இயலாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்! ஏன் தர இயலாது?

ஏனென்றால், அவர்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு கருத்தும் அவர்களுடைய சொந்த சிந்தனையில் உதித்தவை! இரண்டு தத்துவ ஞானிகள் - ஒரே ஒரு விஷயம் குறித்துக் கூட ஒரே மாதிரியாக சிந்திப்பதில்லை!

எனவே ஒருவரின் கருத்து மற்றவரின் கருத்துக்கு முரண்பட்டு நிற்கின்றது! ஒரே விஷயம் குறித்து இரண்டு தத்துவ ஞானிகள் இரண்டு முரண்பட்ட கருத்துக்களைச் சொன்னால் எதனை ஏற்பது? எதனை ஒதுக்குவது?

எனவே சொந்த மூளையைக் கொண்டு சிந்திக்கின்ற தத்துவ ஞானிகளிடமிருந்தும், அவர்களைப் போன்ற மற்றவர்களிடமிருந்தும் நாம் - வாழ்வியல் உண்மைகள் பற்றிய உறுதியான அறிவைப் பெற்றுக் கொள்ள இயலாது.

இறைவனைப் பற்றி, இறைவனின் தன்மைகள் பற்றி - பல பல மூட நம்பிக்கைகளை உருவாக்கியவர்கள் சொந்தமாக சிந்தித்த தத்துவ ஞானிகளே! இறைவனை வழிபடுவது எப்படி என்ற விஷயத்தில் பல நூதனமான வழிமுறைகளை உருவாக்கியதும் இவர்களே!

நமது வாழ்க்கையை எவ்வாறு வடிவமைத்திட வேண்டும் என்பது குறித்து அவரவரும் தத்தமது மனம் போன போக்கில் - இதைச் செய்! அதைச் செய்யாதே! - என்று உபதேசங்களை அள்ளி வீசியவர்கள் இத்தகைய தத்துவ வித்தகர்கள் தாம்!

சான்றுக்கு ஒன்றைப் பார்ப்போமா? இறை நம்பிக்கையையே எடுத்துக் கொள்வோம்.

கடவுள் மூவர். படைத்தலுக்கு ஒரு கடவுள். காத்தலுக்கு ஒரு கடவுள். அழித்தலுக்கு ஒரு கடவுள். இது ஒரு கொள்கை.

உர்முஸ் என்று ஒரு கடவுளாம். இவர் 'நன்மைக்கான' கடவுள். நல்லவை அனைத்தையும் இவர் தான் படைக்கிறார். இன்னொரு கடவுள் அஹ்ரிமன். இவர் 'தீமைக்கான' கடவுள். தீமைகள் அனைத்தையும் இவர் தான் படைக்கிறார்.

இந்த இரு கடவுள்களும் ஒன்றுக்கொன்று ஓயாமல் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். சில சமயம் நல்ல கடவுள் வெற்றி பெறுகிறார். அப்போது நல்லவை நடக்கின்றன. சில சமயம் தீமைகளுக்கான கடவுள் வெற்றி பெற்று விடுகிறார். அப்போது தீமைகள் நடந்தேறி விடுகின்றன! இது ஒரு நம்பிக்கை!

ஒன்றே குலம். ஒருவனே தேவன். இது ஒரு தத்துவம்.

இவற்றில் எது சரி? எவையெல்லாம் தவறுகள்? இவற்றுள் எதனை ஏற்பது? எவைகளைத் தவிர்ப்பது?

ஒருவனே தேவன் என்ற கருத்தே சரியென்று வைத்துக் கொள்வோம் எனில் - இது ஏன் மற்ற கருத்துக்களைச் சொன்ன 'அறிஞர்களுக்குத்' தோன்றிடவில்லை?

இறைவனைக் குறித்தும், மனித வாழ்வு குறித்தும் மனிதன் எவ்வாறெல்லாம் சிந்திக்கின்றான் பார்த்தீர்களா?

சிந்தனையைக் குழப்புகின்ற, மனிதனின் அறிவுத் தாகத்தைத் தீர்த்திடாத இத்தகைய தத்துவங்களை ஏற்கும் ஒரு சமூக மக்களின் வாழ்க்கை எப்படிப் பட்டதாயிருக்கும்? தங்களுக்கே வழி தெரியாதவர்களெல்லாம் மக்களுக்கு வழி காட்டுவதாகச் சொல்லி வழி கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படிப் பட்ட 'ஞானிகளைக்' கண்ணை மூடிக் கொண்டு மக்கள் (படித்தவர்கள் உட்பட!) பின்பற்றுவதால் சமூகத்தில் மூட நம்பிக்கைகள் செழித்தோங்கும். அர்த்தமற்ற சடங்குகளை மக்கள் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பர்.

சிந்திக்கத் தொடங்கும் புதிய தலைமுறையோ - முன்னோரின் தத்துவங்களைக் குறித்து கேள்விகள் எழுப்பும். தெளிவான பதில்கள் கிடைக்காது. விளைவு?

கொள்கைக் குழப்பங்கள். அல்லது கொள்கை வெற்றிடம்! உண்மையைத் தேடிக் குழப்பத்தில் சிக்கிக் கொண்டவர்கள் மனோ வியாதிக்கு ஆட்பட்டு விடுவார்கள். இறைநம்பிக்கைக்கு எதிராக இறைமறுப்பு தலையெடுக்கும். எதற்காக வாழ்கிறோம் என்பது புரியாததால், வாழ்க்கைப் பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாமல் தற்கொலையை நாடுபவர்கள் அதிகரிப்பார்கள்!

'உலகே மாயம், வாழ்வே மாயம்' - என்ற புலம்பல் இதனால் தான்!


19. அனுபவி ராஜா அனுபவி?

சரி! இந்தத் தத்துவ ஞானிகளை ஒரு புறம் வைத்து விட்டு, நவீன கால அறிஞர்களிடத்தில் செல்வோமா? இவர்களில் நவீன கால சிந்தனையாளர்கள் (Modern Thinkers), அறிஞர்கள் (Scholars), விஞ்ஞானிகள் (Scientists) - போன்றோர் அடங்குவர்.

இவர்கள் - முன்னோர்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளை, தங்களது பகுத்தறிவின் திறமை கொண்டு, கேள்விகளை எழுப்பி, மக்களை சிந்திக்க வைத்து, மக்களின் அறியாமைகளை, மடமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் தான்! ஆனால் அத்தோடு நில்லாமல் மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்ற இறை நம்பிக்கையையும் தூக்கி வீசி எறிந்து விட்டார்கள்! அத்துடன் மனித வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து 'அவர்களின் அறிவு' பலத்தைக் கொண்டு பல கொள்கைகளை (இஸங்களை) வகுத்துத் தந்து விட்டார்கள்.

இவர்கள் கற்றுத் தருகின்ற பாடங்களை இப்போது பார்ப்போம். கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெறுவோமா?

இறைவன் இருக்கின்றானா?

இல்லை! இல்லவே இல்லை!

அப்படியானால் இந்த உலகம் தோன்றியது எப்படி?

ஒரு மிக மிகப் பெரிய வெடிப்பின் மூலம் (Big Bang) தானாகத் தோன்றியது

தான் இவ்வுலகமும் இன்ன பிற கோள்களும்!

அப்படியானால் இறைவன் மனிதனைப் படைக்கவில்லை என்கிறீர்களா?

இல்லை! இறை நம்பிக்கை சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் எல்லாம்

பழங்காலத்து மக்களின் கட்டுக் கதைகள்! முதலில் ஒரு செல் உயிர்

தானாகத் தோன்றி பின்பு பரிணாம வளர்ச்சி பெற்று -

குரங்கு, மனிதக் குரங்கு, இறுதியில் மனிதன் என்று

உயிரினங்கள் பல்கிப் பெருகி இருக்கின்றன என்பது தான் உண்மை!

அப்படியானால் - நமது வாழ்க்கைக்கு என்ன பொருள்?

வாழ்க்கை என்பது - இயற்கை நமக்குத் தற்செயலாகத் தந்து விட்ட ஒரு வாய்ப்பு!

இந்த வாய்ப்பு நமது மரணம் வரை மட்டுமே! மரணம் வருவதற்குள் நமக்குக் கிடைத்திட்ட இந்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் முழுவதும் பயன்படுத்திக் கொண்டு இயன்றவற்றையெல்லாம் அனுபவித்து விட வேண்டும்! குறிக்கோள், இலட்சியம், ஒழுக்கம், மார்க்கம் - என்றெல்லாம் பேசிக் கொண்டு நமது சுதந்திரத்துக்கு குறுக்கே யாரும் வந்திடுவதை - நாம் ஒரு போதும் அனுமதித்து விடக் கூடாது.

தங்களது அறிவு பலத்தைக் கொண்டு நவீன கால அறிஞர்கள் எப்படிப் பட்ட ஒரு வாழ்க்கையை மக்களுக்கு முன் சமர்ப்பித்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? ஆம்! தற்செயலாகக் கிடைத்து விட்ட வாழ்க்கை என்ற வாய்ப்பை முழுவதும் அனுபவித்து விடு - என்பது தான் நவீன உலகின் சித்தாந்தம்.

ஆனால் - எல்லாம் தானாகவே தோன்றியது, தற்செயலாகத் தான் நமக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்பதை மனித அறிவு ஏற்றுக் கொள்வதில்லை. எனவே - இந்த நவீன சித்தாந்தத்தின் அடிப்படையில் எழுப்பப் படும் சமூக அமைப்பிலும் கொள்கைக் குழப்பங்கள்! அமைதியின்மை! மனோ வியாதி! தற்கொலைகள்!

ஒழுக்கம் என்ற பேச்சுக்கே இத்தகைய சமூகத்தில் இடம் இருக்காது. எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என்ற மோகம் மனிதனை மிருகமாக்கி விடும். ஆண்-பெண் உறவு என்பது எல்லா வரையறைகளையும் தாண்டி முறை கெட்ட உறவு முறைகளுக்கு வழி வகுத்திடும். கட்டுப்பாடுகளை விரும்பாத ஒரு சமூக அமைப்பு திருமணம்-குடும்பம் என்ற கட்டுப்ப்பாட்டுக்குள் வந்து நிற்பது மிகக் கடினம்.

மது, போதைப் பொருட்கள், சூதாட்டம், இரவு நடனக் கேளிக்கைகள் - இதுவே அவர்களின் வாழ்க்கை முறையாகப் (Way of life) போய்விடும்! இத்தகைய வாழ்க்கை முறையைத் தான் இங்கே - நமது இளந்தலைமுறையும் காப்பியடிக்கத் துடிக்கின்றது!

எனினும், இறைக் கோட்பாட்டை மறுத்து நிற்பவர்களில் ஒரு சிலர் ஒழுக்கமுடையவர்களாகத் திகழ்வதும் உண்மை தான்! ஆனால் ஒரு அறிஞர் குரிப்பிடுவதைப் போல "There are moral atheists; but there is no moral atheism". அதாவது ஒழுக்கமுள்ள நாத்திகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒழுக்கமுள்ள நாத்திகம் என்று ஒன்று கிடையாது!

சற்று சிந்தியுங்கள்! அறிவியல் துறையில் அளப்பரிய சாதனைப் படைத்த அறிஞர்களால், கம்ப்யூட்டர் என்றும் இன்டர்நெட் என்றும் அணுகுண்டு என்றும் ஏவுகணைகள் என்றும் அறிவியல் முன்னேற்றத்தில் புகுந்து விளையாடும் விஞ்ஞானிகளால் மனித வாழ்க்கைக்கு சரியானதொரு வழியை ஏன் காட்டிட இயலவில்லை?

இயற்கையின் அளப்பரிய ஆற்றல்களை மனித வாழ்வுக்குப் பயன்படுத்துவது எப்படி என்பதில் வெற்றி பெற்ற அவர்கள் மனித வாழ்க்கையையே கோட்டை விட்டு விட்டார்களே - இது ஏன்?

காரணத்தைக் கண்டுபிடிப்போம்!


20. அறிந்தவனிடமிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும்!
பொதுவாக மனிதன் - தன்னிடம் இருக்கின்ற ஐந்து புலன்களின் வழியாகத் தான் அறிவைப் பெறுகின்றான். வளர்த்துக் கொள்கின்றான். ஆனால் புலன் உணர்வுகளைக் கொண்டு 'அறிவியல்' அறிவைத் தான் வளர்த்துக் கொள்ள இயலுமே தவிர புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட 'அறிவைப்' பெற்றுக் கொண்டிட இயலாது.

புலன்கள் வழியே நாம் பெறுகின்ற அந்த 'அறிவியல் அறிவு' கூட எந்த அளவுக்கு உண்மையானவை? நம்பத் தகுந்தவை தெரியுமா? - இதோ கேள்வி-பதில்:

'மனிதா! நீ எப்படி அறிவைப் பெறுகிறாய்?'

'என் கண்களால் நான் பார்க்கிறேன். அதனால் அறிந்து கொள்கிறேன்.'

'உன் கண்களால் பார்த்து அறிந்து கொள்ளும் விஷயத்தில் உனக்கு சந்தேகமே கிடையாதே?'

' என் கண்களால் நானே பார்ப்பதை நான் ஏன் சந்தேகிக்க வேண்டும்?'

'அப்படியானால் 'கானல் நீருக்கு' நீ என்ன விளக்கம் சொல்கிறாய்? கண்ணுக்கு எதிரே இல்லாத நீரை உன் கண்கள் எப்படிக் காட்டியது?'

நண்பனே! உண்மையில் நாம் நமது கண்களால் ஒன்றைப் பார்த்து அறிந்து கொள்வது எப்படி தெரியுமா? நம் கண்களின் எதிரே உள்ள ஒரு பொருளின் பிம்பம் நமது விழித் திரையில் (Retina) தலை கீழாக விழுகிறது. அந்த பிம்பம் குறித்து மூளைக்குத் தகவல் அனுப்பப் படுகிறது. மூளை ஒன்றைப் புரிந்து கொள்கிறது. மூளை புரிந்து கொண்டது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.

கண்களால் நாம் பெறும் அறிவின் நம்பகத் தன்மை இவ்வளவு தான்! மற்ற புலன்கள் வழி நாம் பெறுகின்ற தகவல்களின் நிலையும் அதே தான்!

அதனால் தான் சொன்னார்களோ - 'கண்ணால் பார்ப்பதுவும் பொய் - காதால் கேட்பதுவும் பொய்' - என்று!

விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்களே ஆய்வுக் கூடங்களில். அந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை தானா? அவற்றில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை என்றால் - அதுவும் கேள்விக்குறி தான்! பின் ஏன் நேற்று சொன்ன ஒரு அறிவியல் கறுத்தை இன்று மாற்றிக் கொள்கிறார்கள்?

ஒளி நேர்கோட்டில் பரவுகிறது என்ற கருத்து இன்று எங்கே போயிற்று?

அணுவைப் பிளக்க முடியாது என்று அன்று டால்ட்டன் சொன்ன கோட்பாடு இன்று என்ன ஆனது?

அப்படியிருக்கும் போது இன்று சொல்லப்படுகின்ற அறிவியல் கோட்பாடுகளின் நாளைய கதி என்ன? அவை எதிர்காலத்தில் மாற்றப் படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? மாற்றங்களுக்கு ஆளாகும் அத்துனை அறிவியல் கோட்பாடுகளையும் வெறும் ஊகங்கள் என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது?

விஞ்ஞானக் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்து பாப்பர் என்ற விஞ்ஞானி என்ன கூறுகிறார் தெடியுமா?

"Theories are often bold conjectures!" - அதாவது அறிவியல் கோட்பாடுகள் பெரும்பாலும் துணிச்சலான கற்பனைகளே!

அறிவியல் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்துக் கவலைப் படாமல் - இயன்ற அளவுக்கு அதிகம் அதிகமான கோட்பாடுகளை அறிவியல் உலகுக்கு வழங்கிட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் டாவிஸ் என்ற விஞ்ஞானி.

"The world of science should be like a classical free enterprise market place with theories as commodities. When there is a demand for theories (of any sort) it is to the consumer's advantage to allow the largest possible supply...."

'விஞ்ஞான உலகம் என்பது சுதந்திரமான ஒரு வியாபரச் சந்தையைப் போல! இந்த சந்தையில் விற்கப்படும் பொருள்: விஞ்ஞானக் கோட்பாடுகள் தாம். ஒரு குறிப்பிட்ட வகைக் கோட்பாடுகளுக்கு 'கிராக்கி' ஏற்படும்போது, சந்தைக்கு - எந்த அளவுக்கு இயலுமோ - அந்த அளவுக்கு வகை வகையான கோட்பாடுகளை அனுமதிப்பது - அவைகளைப் பயன் படுத்துபவர்களுக்கு வசதி தானே!

நாம் கேட்பது என்னவென்றால் - அறிவியல் கோட்பாடுகளெல்லாம் 'வியாபாரப் பொருட்களா'? கிராக்கி இருக்கிறது என்றால் பொய்யான கோட்பாடுகளையும் 'விற்பனைக்குக் கொண்டு வந்து விடுவீர்களா?

ஆம்! இது தான் இன்றைய அறிவியல் உலகம்! இங்கே உண்மையும் பொய்யும் கலந்தே விற்பனை செய்யப் படுகின்றன! விழித்துக் கொள்ள வேண்டியது - நம்மைப் போன்ற 'வாடிக்கையாளர்கள்' தான்!

இது இப்படி இருக்க - என்னைப் படைத்தது யார்? நான் படைக்கப் பட்டதன் நோக்கம் என்ன? நமது துவக்கமும் முடிவும் என்ன? - என்பன போன்ற வாழ்வியல் கேள்விகளுக்கான விடைகளை இயற்பியல் ஆய்வுக் கூடத்திலோ வேதியியல் ஆய்வுக் கூடத்திலோ ஆய்வு செய்து கண்டு பிடித்து விட இயலுமா?

எனவே தான் சொல்கிறோம். அறிவு இரண்டு வகைப் படும்.

ஒன்று - புலன்களின் மூலமாகப் பெறப் படும் அறிவு.

இரண்டு - புலன்களுக்கு அப்பாற்பட்டவை பற்றிய அறிவு,

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட அறிவு என்பது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவைச் சார்ந்தது.

எனவே - வாழ்க்கை சம்பந்தமான தெளிவான அறிவை -

ஆளுக்கொரு கருத்தினை மனம் போன போக்கில் சொல்லிக் கொண்டிருக்கும் தத்துவ ஞானிகளின் சிந்தனைகள் மூலமாகவோ

ஐம்புலன்களை மட்டுமே நம்பி செயல் படுகின்ற அறிவியலாளர்கள் மூலமாகவோ

பெற்றுக் கொண்டு விட முடியாது!

அப்படியானால் - வாழ்க்கை சம்பந்தப்பட்ட அறிவை, அதாவ்து புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவை நாம் பெறுவது எங்கனம்?

இறைவனை நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பதே ஒரு விபத்துத் தான். ஆனால் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஏற்பவர்களுக்கு - புலன் உணர்வுகளுக்கு உட்பட்ட மற்றும் உட்படாத எல்லா அறிவுக்கும் ஆற்றலுக்கும் சொந்தக்காரன் அந்த இறைவனே என்பதைப் புரிந்து கொள்வதில் எந்த வித சிரமமும் இருக்கப் போவதில்லை.

ஆம்! எல்லா அறிவுக்கும் சொந்தக்காரனான அந்த ஆண்டவனிடத்தில் இருந்து தான் நாம் வாழ்க்கைக்கான மிகச் சரியான் அறிவைப் பெற்றும் கொள்ள முடியும்!


21. இறைவன் கற்றுத் தருகின்றானா?
ஒரு பக்கம் விண்ணை முட்டும் மலைகள். பனி படர்ந்த மலைத் தொடர்கள். அதற்கும் மேலே வெள்ளை கறுப்பு மேக மூட்டங்கள். அதற்கும் மேல் நீல நிற வானம். சில்லென்று வீசும் குளிர் காற்று, மலையடிவாரத்தில் அங்கும் இங்கும் ஓடித் திரியும் விலங்கினங்கள். பறந்து திரிந்திடும் பல வண்ணப் பறவைகள்...

இன்னொரு பக்கம் - சல சலத்து ஓடும் ஆற்று நீர். ஆற்றின் இரு மருங்கிலும் பட்டுக் கம்பளம் விரித்தாற்போல் பசுமை வயல்கள், எங்கோ நம்மை அழைத்துச் சென்றிடும் ஒற்றையடிப் பாதைகள், கரும்பச்சை நிறக் கோட்டைகளைப் போன்று தோற்றமளித்திடும் தூரத்து கிராமங்கள்....

பிறிதொரு பக்கம் - சிறு சிறு அலைகளுடன் கடல் - ஓர் அமைதி நீர்ப்பரப்பு. தூரத்தே அதனைத் தொட்டு நிற்கின்ற அடிவானம். காலையில் கதிரவன் உதிக்கும் நேரம் அல்லது மாலையில் அது மறையும் நேரம். இரவில் விண்மீன் சிதறல்கள். ஒளி உமிழும் நிலா....

இப்படிப்பட்ட இன்னும் இதுபோன்ற இயற்கைக் காட்சிகள் அனைத்துமே மனிதனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிடும் மகிழ்ச்சியை, குதூகலத்தை, அமைதியை, பரவசத்தை அவனுக்கு அள்ளி வழங்குகின்றன.

ஆனால் இதே இயற்கைச் சூழல் சற்றே மாறுபடும்போது, இதமான காற்று புயலாய் உருவெடுத்து விடும்போது, சலசலத்து ஓடும் நதிநீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடும்போது, அமைதியான பூமிப்பரப்பில் பூகம்பம் ஏற்பட்டு விடும்போது, எரிமலை நெருப்பைக் கக்கிடும்போது - தவித்துப் போய் விடுகிறான் மனிதன்.

இது ஏன்? மகிழ்ச்சியை வழங்கிக் கொண்டிருந்த இயற்கை - திடீரென துக்கத்தை அள்ளி வீசி விடுவது ஏன்? நம்மை மகிழ்விப்பதோடு ஏன் இயற்கை நின்றுவிடக்கூடாது?

இறைவனை நீங்கள் நம்புகிறீர்கள்! இறைவனே அனைத்தையும் படைத்தவன் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்.அந்த இறைவன் தான் அனைவரையும் காக்கிறான் என்பதையும் ஏற்கின்றீர்கள். அவன் எல்லா ஆற்றல்களுக்கும் சொந்தக்காரன் என்று நம்புகிறீர்கள்.

அப்படியானால் தனது ஆற்றலைக் கொண்டு நம்மை இயற்கைச் சீற்றங்களிலிருந்து ஏன் அவன் காத்திடவில்லை? இந்த முரண்பாட்டுக்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?

இதையே இன்னொரு கோணத்தில் சிந்திப்போம். மனிதன் நலமாய் இருந்திடும்போது தன்னையே பார்த்து மகிழ்கின்றான். தனது முகத்தைப் பார்த்து மகிழ்கின்றான். மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தனக்கு மதிப்பெண் போட்டுக் கொள்கின்றான்.

சாதனைகளை நிகழ்த்திடும்போது மகிழ்ச்சி. மணம் முடிக்கும்போதும், மனைவி வந்த பின்பும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. குழந்தைக்குத் தந்தையானால் மகிழ்ச்சி. சொத்துக்கள் குவியக் குவிய மகிழ்ச்சிப் பெருங்கடலில் நீந்துகிறான்.

ஆனால் அவன் வாழ்வில் சற்றே திசை மாறி திடீரென்று அவன் நோயுற்றால், விபத்தொன்றில் சிக்குண்டால், ஆபத்தொன்றில் மாட்டிக் கொண்டால், தான் சார்ந்த துறையில் நஷ்டங்களை சந்திக்க நேரிட்டால், எதிரிகளால் சூழப்பட்டால், நெருக்கத்தில் திடீர் மரணம் ஒன்று நிகழ்ந்தால் - நம்பிக்கை இழந்து நிராசை அடைந்து விடுகின்றான்.

பணம் இருக்கிறது - அமைதி இல்லை! மனைவி இருக்கிறாள் - மகிழ்ச்சி இல்லை! குழந்தைகள் இருக்கின்றன - நிம்மதி இல்லை. ஏன் இந்த முரண்பாடு? ஏன் நாம் மகிழ்ச்சியாகவே இருந்திட முடியவில்லை? கவலை இல்லாத வாழ்க்கை ஏன் மனிதனுக்குத் தரப்படவில்லை? ஏன் நோய்? ஏன் மரணங்கள்? ஏன் விபத்துக்கள்?

நல்லவர்களுக்கு மத்தியில் ஏன் கெட்டவர்கள்? ஏன் எல்லாருமே நல்லவர்களாக இருந்திடவில்லை? தான் வாழ ஆசைப்படும் மனிதன் பிறரை ஏன் கொல்லத் துடிக்கின்றான்? பிறரைக் கொல்வதற்கென்றே புதிது புதிதாக ஏன் ஆயுதங்களைக் கண்டுபிடிக்கின்றான்? ஏன் கொலைகள்? ஏன் போர்கள்?

மரணம். இந்த்ச் சொல்லைக் கேட்டாலே குலை நடுங்குகிறான் மனிதன். நிரந்தரமாக இங்கேயே வாழ்ந்திடப் போகின்றோம் என்று கட்டிய மனக் கோட்டைகள் திடீரென்று ஒரு நொடியில் - தனது கனவுகள் எல்லாம் - தகர்க்கப் படுவதைத் தன் கண் முன்னே காண்கின்றான். மரணம் - தனது கதையை முற்றாக முடித்து வைத்து விடுகின்றது என்ற எண்ணம் அவனுக்குள் நாராசமாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ஏன் மரணம்? ஏன் முடிவு?

இறைவனை நம்புபவர்களே! இறைவன் கருணையுள்ளம் கொண்டவன் என்று தானே ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? அந்தக் கருணையாளன் ஏன் நம்மைக் கவலையிலும் துக்கத்திலும் ஆழ்த்திட வேண்டும்? இந்த முரண்பாடான நிலைகளுக்கெல்லாம் என்ன காரணம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டுமா? வேண்டாமா?

மனிதன் இவற்றையெல்லாம் முதலில் தனது அறிவைக் கொண்டு இயன்றவரை சிந்தித்துப் பார்க்கிறான். ஆம்! மனிதனுக்கு அறிவு இருப்பது உண்மை தான். ஆனால் அவனது சிந்தனை அவனைத் தெளிவான விளக்கங்களுக்கு இட்டுச் செல்வதில்லை என்பதை உணர்கின்றான்.

நேற்று ஒன்றைச் சரி என்று எண்ணுவது இன்று அவனுக்குத் தவறாகத் தெரிகின்றது. சரி, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால், அவர்கள் தந்திடும் விளக்கங்கள் அவனை மேலும் குழப்புகின்றன. இந்தக் கட்டத்தில் தான் மனிதன் தனது அறிவின் குறையை உணரத் தொடங்குகிறான். தனது அறிவின் குறையை உணர்ந்திடும்போது தான் - அவனுக்கு அறிவுத் தாகம் ஏற்படுகின்றது.

இந்தக் கட்டத்தில் - இறைவனை நம்புபவர்களைப் பார்த்து மகத்தான கேள்வி ஒன்றைக் கேட்போம்.

'அறிவுத் தாகம் கொண்டு உண்மையைத் தேடி நிற்கின்ற மனிதனின் அறிவுப் பசியைத் தீர்த்து வைத்திட வேண்டியது எல்லா வல்லமையும் கொண்ட அந்த இறைவனின் கடமையா? அல்லவா?

நமது உள்ளங்களில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்ற சந்தேகங்களை நீக்கி வைப்பதற்கு எல்லாம் அறிந்த இறைவன் மறந்து விட்டிருப்பான் என்று எண்ணிட முடிகிறதா உங்களால்?

நமது எல்லா விதப் புறத் தேவைகளையும் நிறைவேற்றித் தந்திட்ட இறைவன், தனது படைப்பினங்களில் எல்லாம் மிகச் சிறந்த மனிதப் படைப்பு இருளில் சிக்கித் தவிக்கட்டும் என்று விட்டு விடுவான் என்று எண்ணிப் பார்த்திட முடிகின்றதா?

ஐயா! நமக்கு ஆக்ஸிஜன் தேவை. போதுமான அளவுக்குக் கிடைக்கின்றதா, இல்லையா? நமக்குத் தாகம் எடுக்கிறது? நீரைத் தருகின்றானா, இல்லையா? நமக்குப் பசிக்கின்றது. உணவளிக்கின்றானா இல்லையா அந்த இறைவன்? நமக்கு வெளிச்சம் தேவை. கதிரவனை நமக்கு அவன் அளித்திடவில்லையா?

நமக்கு ஓய்வு தேவை, இரவை அவன் நமக்கு வழங்கிடவில்லையா? கதிரவனில் இருந்து புறப்படும் ஒளிக்கதிர்களில் நமக்குத் தீங்கு இழைப்பவற்றை 'ஓசோன்' மண்டலம் கொண்டு தடுத்திடவில்லையா? நமது பாலியல் தேவைகளுக்கு இறைவன் நம்மை ஜோடி-ஜோடியாகப் படைத்திடவில்லையா?

இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் 'அருட்கொடைகளுக்கு' ஓர் அளவே கிடையாது என்பதை நாம் உணர்கின்றோம். இவ்வாறு நமக்கு எல்லாவற்றையும் குறைவற வழங்கிட்ட இறைவன் - இவையெல்லாம் எதற்காக என்று சொல்லாமல் கொள்ளாமல், நம்மைத் தவிக்க விட்டு வேடிக்கைப் பார்ப்பான் என்று எண்ண முடிகின்றதா?

நிச்சயமாக இறைவன் நம்மை தவிக்க விட்டு விட மாட்டான் என்று தானே ஆகின்றது. நமது அறிவுப் பசியைத் தீர்த்து வைத்திட வேண்டயது அவன் கடமை என்று தானே ஆகின்றது. மனித வாழ்க்கைப் பயணத்தில் 'இது தான் பாதை மனிதா' - என்று நம்மைக் கரம் பிடித்து அழைத்துச் சென்றிட வேண்டியது அவனது நீங்காப் பொறுப்பு என்று தானே ஆகின்றது!

இறைவன் நமக்குக் கற்றுத் தந்திட வேண்டியது அவன் கடமையே என்பதை ஏற்றுக் கொண்டால் - அவன் தனது கடமையிலிருந்து தவறியிருப்பான் என்று ஒருக்காலும் எண்ணி விட முடியாது தானே?

அப்படியென்றால் இறைவன் கற்றுத் தந்த அந்த 'வழிகாட்டுதல்' எங்கே?

22 இறைவனுக்குத் தூதர்களா?
மனிதனுக்கு அறிவு இருக்கிறது. ஆனால் அது குறை உடைய அறிவு. ஒரு அளவுக்கு உட்பட்ட அறிவு தான் அது. குறை உடைய அந்த அறிவைக் கொண்டு தெளிவான வாழ்வியல் உண்மைகளை மனிதன் புரிந்து கொண்டு விட முடியாது என்பதைப் பார்த்தோம்.

ஆனால் நம்மைப் படைத்த இறைவனின் அறிவு என்பது - எல்லா அறிவையும் உள்ளடக்கியது. கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் - ஆகிய முக்காலத்தையும் உள்ளடக்கிய அறிவு அவனது அறிவாகும். எல்லாம் அறிந்தவன் அவன் ஒருவனே. நமது வாழ்வின் இரகசியங்களை அறிந்தவன் அவன் ஒருவனே. ஏனெனில் வாழ்க்கையை நமக்குத் தந்தவனே அவன் தான்!

இப்போது கேள்வி என்னவெனில், நமது வாழ்க்கைக்குத் தேவையான, இறைவன் வசம் இருக்கின்ற அந்த அறிவு நம்மை எப்படி வந்தடையும் என்பது தான்.

நமது படைப்பின் துவக்கம், நமது படைப்பின் முடிவு, நாம் படைக்கப் பட்டதன் நோக்கம், நமக்கும் நம்மைப் படைத்த இறைவனுக்கும் இடையே உள்ள தொடர்பு, இறைவனின் தன்மைகள் - என்பன போன்ற மனித வாழ்வின் அடிப்படைக் கேள்விகளுக்கான அத்தகைய அறிவை உலக மக்களுக்குக் கொண்டு போய் சேர்த்திட இறைவனே தேர்ந்தெடுத்துக் கொண்ட வழிமுறைக்குப் பெயர் தான் 'இறைத்தூது'. ஆங்கிலத்தில் Prophethood.

அதாவது மனிதப் படைப்பின் வரலாற்றில் இப்பூவுலகில் முதல் மனிதன் நடமாடத் தலைப்பட்ட காலம் தொடங்கி - ஒவ்வொரு சமுகத்திலும் - ஒரு சில மனிதர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு வானவர் (Angel) மூலமாக 'செய்திகளை' அனுப்பி வைப்பதன் மூலம் - அந்த அறிவை மனித சமூகத்துக்குக் கொண்டு வந்து சேர்க்கிறான் இறைவன்! யார் யாரை இறைவன் தேர்வு செய்கின்றானோ அவர்கள் - இறைவனின் செய்திகளைத் தாங்கி நிற்பதால் - இறைவனின் தூதர்கள் என்று அழைக்கப் படுகின்றார்கள்.

இறைவனை நம்ப மறுப்பவர்கள், இறைவனின் அறிவு, இறைவனின் தூதர்கள், இறைவனின் செய்தி - இவையெல்லாம் சுத்தமான கட்டுக் கதைகள். அவை வெறும் ஊகங்களாக (Guesswork) வேண்டுமானால் இருக்கலாமேயொழிய அவை முற்றான உண்மைகள் தாம் என்பதை நிரூபித்திட யாதொரு வழிமுறையும் கிடையாது என்கின்றனர்.

ஒரு அரசியல் தலைவரின் கருத்தாக ஒன்றைப் படித்தது நினைவுக்கு வருகிறது: 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பதே எனது கொள்கை; ஆனால் அந்த இறைவன் தனது தூதர்களை அனுப்புகிறான்; அவர்கள் மூலம் வேதங்களை அனுப்பி வழி காட்டுகிறான் என்பதை எல்லாம் பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது; இவையெல்லாம் நம்பிட இயலாத விஷயங்களாகத் தான் நாம் கருதுகிறோம்!'

மனிதனை விடுங்கள். மனிதனைத் தவிர்த்து மற்ற படைப்பினங்களை சற்று கவனிப்போம். கண்டம் விட்டு கண்டம் புலம் பெயர்ந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேரும் பறவைகள் பற்றி படித்ததுண்டா? அப்பறவைகள் உலகத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு - உணவுக்காகவும், சிறப்பான வாழ்க்கைக்காகவும் - நீண்ட தூரப் பயணம் மேற்கொள்கின்றன. அதற்கென அவைகள் பெரும் கடற்பரப்பைக் கடந்து செல்ல வேண்டியுள்ளன.

ஒரு நிலப் பரப்பை விட்டு இன்னொரு நிலப் பரப்பை நோக்கி கடல் கடந்து செல்கின்ற அப்பறவைகள் நீர்ப் பரப்பின் மேலே மிகக் குறைவான நேரமே பறப்பதற்கு வசதியாக மிகக் குறுகிய இடைவெளி கொண்ட பாதையை தேர்வு செய்து பறக்கிறதாம். இந்த அறிவு அப்பறவைகளுக்கு எப்படி வந்தது?

இறைவனை மறுப்பவர்கள் - தாமாகவே இந்த அறிவு அப்பறவைகளுக்குள் வளர்ந்திருக்க வேண்டும் என்பார்கள். அவர்களை விடுங்கள். இறைவனை ஏற்றுக் கொள்பவர்களைப் பார்த்து நாம் கேட்பது: இந்த 'வழிகாட்டுதலை' வழங்கியவன் இறைவனே என்று ஒத்துக் கொள்வதில் என்ன கடினம் உங்களுக்கு?

தேனீக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவை கட்டும் 'தொழில் நுட்பம்'நிறைந்த கூடுகளை கவனியுங்கள். அவைகளுக்குத் தேவையான பூச்சாறு (Nectar)- எங்கிருக்கிறது, எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதனை மற்ற தேனீக்களுக்கு அறிவித்திட அவை போடுகின்ற ஆட்டம் பாட்டம் (Bee Dance) - இவை அனைத்தும் இறைவன் காட்டித் தந்த 'உள்ளுணர்ச்சிகளே' என்று ஒத்துக் கொள்ள என்ன கடினம்?

எறும்புகளைக் கவனித்துப் பாருங்கள். அவைகளின் செயல்பாடுகளில் பல அதிசயம் அளிக்கும்.

சில் வண்டுகள் தனது துணையை அழைத்திட என்ன செய்கின்றன தெரியுமா? தமது சின்னஞ்சிறிய சிறகுகளை உரசித் தேய்த்து ஆண் வண்டு எழுப்பும் ஒலி - 600 டன் காற்றை அதிர வைத்து - அரை மைல் தூரத்திலுள்ள அதன் பெண் துணைக்குப் போய் சேருகிறதாம். பெண் துணையும் தமது இணக்கத்தை புதிரானதொரு முறையில் (some mysterious way) தெரிவித்திட, ஆண் வண்டு மிகச் சரியாக அங்கே வந்து சேர்கிறதாம்! விட்டில் பூச்சியும் இப்படித்தான் சமிக்ஞை (signal) அனுப்புகிறதாம்.

இயற்கையில் நம்மைச் சுற்றியே இத்தனை சான்றுகளைக் காணும் நாம், இறைவன் மனிதர்களில் சிலரைத் தேர்வு செய்து தனது வழிகாட்டுதலை சேர்ப்பிப்பதற்கு சாத்தியமே கிடையாது என்று எப்படி சொல்ல முடியும்?

இவ்வாறு இறைவனால் தேர்வு செய்யப்பட்டு, தனது வழிகாட்டுதல் வழங்கப்பட்ட இறைத்தூதர்களில் சிலர் தான் - ஆப்ரஹாம் எனும் இப்ராஹிம், ஜோஸப் எனப்படும் யூசுஃப், மோஸஸ் எனப்படும் மூஸா, டேவிட் என்றழைக்கப்படும் தாவுத், சாலமன் எனும் சுலைமான் ஏசுநாதர் என்றழைக்கப்படும் ஈஸா மற்றும் முஹம்மத் நபி ஆகியோர் ஆவர்!

இப்படிப்பட்ட இறைத்தூதர்கள், இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்ட வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய ஏடுகளும், நூல்களும் தான் இறை வேதங்கள் என்றழைக்கப்படுகின்றன!


23 நல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா?
மரணத்துக்குப் பின்பு வாழ்க்கை என்று ஒன்று உண்டா? அல்லது மரணத்தோடு ஒரு மனிதனின் கதை எல்லாமே முடிந்து விடுகிறதா?

இறைவனை மறுக்கும் பிரிவினர் - மரணத்துக்குப் பின் வரும் வாழ்க்கையையும் மறுக்கின்றார்கள். அப்படி ஒரு வாழ்க்கை கிடையாது, இருக்கவும் முடியாது என்பது அவர்கள் வாதம். மரணத்துக்குப் பின் வாழ்வு உண்டு என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்றும். யாராவது போய் பார்த்து விட்டு வந்தார்களா என்றும் கேள்விகள் எழுப்புகிறார்கள் அவர்கள்.

'மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுகிறது என்பதற்கு என்ன ஆதாரம் என்றும், யார் போய் பார்த்து விட்டு வந்து இவர்களுக்குச் சொன்னார்கள்' என்றும் - நாமும் திருப்பிக் கேட்கலாம். மேலும் இவர்களோடு விவாதத்தைத் தொடரும் முன்பு ஒரு விஷயம்.

'மரணத்துக்குப் பின்பு வாழ்க்கை இல்லை, மரணத்தோடு எல்லாமே க்லோஸ் (CLOSE) - என்ற நம்பிக்கை என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கே பார்ப்போம். இந்தக் கொள்கை ஏற்படுத்திய மிக முக்கியமான விளைவு - விரக்திக்கு இட்டுச் செல்லும் உலக வாழ்க்கையை நவீன மனிதர்களுக்கு வழங்கியது தான்! நிரந்தரமான ஒரு வாழ்வைத் தான் - மனிதன் விரும்புகிறான். 'மரணத்தோடு நாம் அழிந்து விடுகிறோம்' என்ற ஒலி நாராச ஒலியாகவே மனிதனுக்குப் படுகிறது.

மனோ தத்துவ மருத்துவர் ஒருவர் கூறுகிறார்:

'என்னிடம் வரும் நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் படித்தவர்கள், பட்டதாரிகள், வாழ்வில் பல வெற்றிகளை அள்ளிக் குவித்தவர்கள். அவர்கள் ஏன் மனோ வியாதிக்கு ஆளானார்கள்? திடீரென்று வருகின்ற மரணத்தோடு எல்லாமே முடிந்து போய் விடுகின்ற இந்த வாழ்க்கையில் எதைச் சாதித்து என்ன பயன் என்ற விரக்தி மனப்பான்மை அவர்களை திருப்தியற்ற வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுள்ளது.'

இவ்வுலக வாழ்க்கை என்பது என்ன?

தொடர்ந்து வருகின்ற துயரங்கள், சோகங்கள், கவலைகள்,

முடிவே இல்லாத அநியாயங்கள், அக்கிரமங்கள், ஏமாற்று வேலைகள், மோசடிகள்,

நீக்கிட முடியாத பசி, பட்டினி, நோய், வறுமை -

இவைகளைக் கொண்டது தான் மனித வாழ்வா?

மனிதனுக்கு நிரந்தர அமைதியையோ, மகிழ்ச்சியையோ, தராத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா - என்ற சிந்தனை, உயிர்த் துடிப்புள்ள ஒரு மனிதனை செயலற்றவனாக ஆக்கி விடுகிறது. ஒரு கொள்கை வெற்றிடத்தை அவனுக்கு வழங்கி விடுகிறது!

நல்லவனாகவோ, தீயவனாகவோ வாழ்ந்து விட்டு ஒவ்வொரு மனிதனும் மரணமடைகின்றான். மரணம் தான் ஒரு மனிதனின் முடிவு என்றால் - நல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா?

மக்கள் மீது அக்கிரமம் புரிந்தவனும், அக்கிரமத்துக்கு ஆளானவனும் மரணமடைகின்றார்கள்! ஒடுக்குபவனும் ஒடுக்கப்பட்டவனும் மரணமடைகின்றார்கள்! மக்களின் செல்வத்தைச் சுரண்டி ஆடம்பர வாழ்வை அனுபவித்தவனும், சுரண்டப்பட்ட ஏழையும் மரணமடைகின்றார்கள்!

அப்பாவிப் பெண் சிசுக்களும், அவர்களை உயிரோடு புதைத்தவர்களும் மரணமடைகின்றார்கள்! பாவம் செய்தவனும், பாவங்களை ஏறெடுத்தும் பார்க்காதவனும் மரணத்தைச் சுவைக்கிறார்கள்!

தீயவன் தண்டனை அனுபவிப்பதில்லை! நல்லவன் துன்பங்கள் நீங்கி வாழ்வதும் இல்லை!

இது உங்களுக்கு நியாயமாகப் படுகின்றதா? மரணத்தோடு எல்லாம் முடிந்து போய் விடும் என்றால் 'நான் ஏன் நல்லவனாக வாழ்ந்திட வேண்டும் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

அரசு தண்டிக்கும் - சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்பார்கள். சட்டங்கள் எல்லாக் குற்றவாளிகளையும் தண்டித்து விட்டதா? அரசே குற்றம் செய்தால் அவர்களைத் தண்டிப்பது எப்படி? அரசுக்குத் தெரியாமல் நடக்கின்ற குற்றங்களுக்கு எப்படி தண்டனை தர முடியும்?

சரி! இறைவனை நம்பி, நல்லவனாக வாழ்ந்து, ஒழுக்கங்களைப் பேணி, தீமைகளை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவனுக்கு என்ன பரிசை இந்த உலகம் தந்து விட முடியும்? நீதி வழங்கப் பட வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்விலும் ஆழமாகப் பதிந்துள்ள வேட்கை!

அதனால் தான் அநீதிக்கெதிரான போராட்டங்களை நாம் மனித வாழ்வில் சந்திக்கின்றோம். ஆனால் அந்தப் போராட்டங்கள் எல்லாம் வெற்றியைச் சந்தித்ததா என்றால் அது தான் இல்லை! அது இந்த உலகத்தில் சாத்தியப் பட்டதே இல்லை!

எனவே தான், நீதிபதிக்கெல்லாம் மேலான நீதிபதியாகிய இறைவன் - மனிதர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி நீதியை நிலை நிறுத்துகிறான்!

மறுமை சாத்தியம் தானா என்று கேள்வி எழுப்பலாம்! பூமி வரண்டு கிடக்கிறது! மழை பொழிகிறது! பூமி சட்டென்று உயிர் பெற்றெழுகிறது! அது போலத்தான் மறுமையும்! நாம் முன்னரே குறிப்பிட்டபடி, இவ்வளவு பிரம்மாண்டமான அகிலத்தைப் படைத்துக் காக்கின்ற இறைவனுக்கு இறந்தவர்களை உயிர்ப்பித்து எழுப்பும் ஆற்றல் இல்லாமல் போய் விடுமா என்ன?

மறுமை என்று ஒன்று இல்லவே இல்லை என்று வைத்துக் கொண்டால் பின் வரும் மூன்றில் ஒன்று தான் உண்மை என்றாகி விடும்:

1 இறைவன் என்று ஒருவன் கிடையாது!

2 அல்லது இறைவன் என்று ஒருவன் இருந்து விட்டால் கூட - அநியாயங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இறைவனும் அநியாயக்காரனே!

3 அல்லது இந்தப் பூமியிலேயே நீதியை நிலை நிறுத்திடும் ஆற்றல் அற்றவன் இறைவன்!

இந்த மூன்றுமே பொய் என்பதால் - மறுமை உண்டு என்பதே உண்மை!

ஆம்! மறுமை என்பது சாத்தியம் மட்டுமல்ல! அது ஒரு சத்தியமும் கூட!


24 அது ஒரு பூவுலகமா என்பதே நம் கேள்வி?
நவீன கால அறிவியலாளர்களில் சிலரும், மேற்குலக சிந்தனையாளர்களில் பலரும் இறை நம்பிக்கையை மறுக்கும் நாத்திகக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள். அதற்கு அவர்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.

அவர்களின் இறைமறுப்புக்கு, அவர்கள் சொல்லும் ஒரு மிக முக்கியமான காரணம், இறைவனை நம்பக்கூடியவர்களிடத்தில் அறிவுக்குப் பொருத்தம் இல்லாத, பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளாத பல மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன என்பது தான்.

இதனை அவர்கள் எப்படி விளக்குகிறார்கள் தெரியுமா?

"மனித அறிவு வளர்ச்சியடையாத – முற்காலத்தில் – உலகில் இயற்கையாக நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் – மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி அல்லது சக்திகளைக் காரணம் காட்டி வந்தான் – அன்றைய மனிதன்! அந்த நம்பிக்கையே பல மதங்கள் உருவாகக் காரணமாக அமைந்தன."

"ஆனால் மனித அறிவு வளர்ச்சி அடைந்து பல நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் இயற்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் இறைவனே காரணம் என்று கூறுவது – மனித அறிவின் பிற்போக்குத் தனத்தையே காட்டுகிறது."

"விஞ்ஞானம் – இயற்கைப் பெருவெளியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லா அற்புதங்களுக்கும் காரணம் கண்டு பிடித்துச் சொன்ன பின்பும் எல்லாவற்றுக்கும் காரணம் இறைவன்…. இறைவன்…. என்று சொல்கின்ற பிற்போக்குத் தனத்தை என்னென்று சொல்வது?"

"இதனை விடுத்து விஞ்ஞானம்…. விஞ்ஞானம்…. என்ற முற்போக்குக் கொள்கையை (Positivism) மனிதன் ஏற்கும் போதே – நோய் பிடித்த சமுதாயத்தை (Sick society) உயிர்த்துடிப்புள்ள சமுதாயமாக (Dynamic society) மாற்றிட முடியும்!"

இதுவே மேற்கத்திய சமூகவியலாளர்களின் (Sociologists) தீர்க்கமான கருத்து!

இருக்கட்டும்!

உயிர்த் துடிப்புள்ள சமுதாயத்துக்கு அவர்கள் சுட்டிக் காட்டுவது எந்த நாடுகளைத் தெரியுமா?

இன்றைய மேலை நாடுகளை!

அங்கே எல்லாரும் படித்திருக்கிறார்கள்!

அங்கே எல்லாரும் அறிவியல் வழியாகவே (Scientific thinking) சிந்திக்கிறார்கள்.

அங்கே மூட நம்பிக்கைகள் குறைவு!

அவர்கள் தொழில்நுட்பத்தில் வானளாவிய சாதனைகள் புரிகின்றார்கள்!

அவர்கள் தாம் உலகையே வழி நடத்திடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள்!

சுருங்கச் சொல்லின் – அவர்கள் தான் பூவுலக சுவர்க்கத்தை மேற்குலகில் நிர்மாணித்திருக்கிறார்கள்!

அவர்கள் காட்டும் ‘பூவுலக சுவர்க்கத்தை’ ‘ஆ’ வென வாய் பிளந்து பார்க்கின்ற நம்மவர்கள், அதே மேற்குலகக் கோட்பாடுகளை இங்கே இறக்குமதி செய்தால் நாமும் ஒரு சுவர்க்கத்தை உருவாக்கிடலாம் என்று மனக் கோட்டை கட்டுகிறார்கள்!

ஆனால் நமது கேள்வி என்னவென்றால்...

உண்மையிலேயே அது ஒரு பூவுலக சொர்க்கமா என்ன?


25 இறை மறுப்பின் சாதனைகள்!
நவீன மேற்குலக நாகரிகம் என்பது இறைவனை மறுத்து எழுப்பப்பட்ட ஒரு "நாகரிகம்" என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இது மறுக்க முடியாததொரு உண்மை.

தாழ்வு மனப்பான்மை பிடித்துப் போய் மேலை நாடுகளைக் காப்பியடிக்கத் துடிக்கின்ற நவீன தலைமுறையினர்க்கு, மேற்குலகம் அனுபவிக்கின்ற அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுதல் அவசியம்.

அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி J.R. Oppenheimer - அவர்களின் கூற்றுப் படி – மனிதன் – கடந்த 40 நூற்றாண்டுகளில் தொழில்நுட்பத்தில் அடைந்த வளர்ச்சியை விட இருபதாம் நூற்றாண்டின் 40 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி மிக அதிகம்!

இந்த தொழில் நுட்பம் மனிதனுக்கு செய்து கொடுத்த வசதிகள் எண்ணிலடங்காதவை.

கணினி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகையே ஒரு பெரிய கிராமமாகச் சுருக்கி விட்டிருக்கின்றது.

மனித உறுப்புகளை மாற்றுவது , சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாக மாறிக் கொண்டிருக்கிறது.

தூக்கத்தைக் குறைத்து – மனித ஆயுளை நீடிக்கச் செய்கின்ற ஆராய்ச்சி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.

செயற்கை முறையில் DNA - வைத் தயாரித்து ‘நாம் விரும்பும்’ குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியுமாம்!

தொழில் நுட்பம் தந்த பொருளாதார வளர்ச்சி மேலும் மனிதனை சுக போக வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

அமெரிக்கர்கள் விடுமுறையைக் கழிக்க என்று – ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகை பில்லியன் டாலர்கள் கணக்கில்!

மேலை நாடுகளில் – மனிதனின் வாழ்க்கைத் தரம் 1800 – ல் இருந்ததை விட ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறதாம்! அப்படியானால் – அவர்களுடைய மகிழ்ச்சி ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது, அவர்களுடைய வாழ்க்கை ஐந்து மடங்கு அர்த்தமுள்ளதாக ஆக்கப் பட்டிருக்கின்றது என்றா பொருள்?

அது தான் இல்லை!

மேற்குலக நாடுகளில் ஆண்டு தோறும் நடக்கும் குற்றங்கள் மில்லியன் கணக்கில் பதிவு செய்யப் படுகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாகரிகம் அடைந்த நாடுகளில் மதுவின் வளர்ச்சி வேகம் பயமுறுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. மதுவின் இந்த வளர்ச்சியில் பெண்களுக்கும் பங்குண்டு. மது குடிப்பதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.

ஆபாசப் படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முன்னணி வகிப்பவை மேற்குலக நாடுகளே! இப்படிப் பட்ட படங்களுக்கென்றே தனிப்பட்ட திரையரங்குகள் உள்ளனவாம். இயந்திர மயமான வாழ்க்கையை விட்டு – சற்றே வெளியேறி – இளைப்பாற நினைப்பவர்களைக் கவர்ந்து இழுக்கிறதாம் – இந்த ஆபாசப் படங்கள்.

சூதாட்டங்களும் – மனித நாகரிகத்தோடு சேர்ந்து வளர்ந்திருக்கின்றன! உலகின் மிகப் பெரும் சூதாட்ட நகரங்கள் (Gambling cities) அனைத்தும் ‘நாகரிக மயமான’ நாடுகளில் தாம் அமைந்திருக்கின்றன.

போதைப் பொருட்களைப் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும், அதற்கு அடிமையாகி விட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

நாகரிகத்துடன் தற்கொலை செய்து கொள்வதும் வளர்ந்துள்ளது! தொழில் மயமாதல், நகர் மயமாதல், குடும்பங்கள் உடைந்து போதல் – இம்மூன்று காரணிகளும் அதிகரிக்க அதிகரிக்க தற்கொலையும் அதிகரிக்கிறதாம்.

மன நோயால் பீடிப்பவர்களின் எண்ணிக்கையும் அப்படித்தான். உலகத்திலேயே அதிகமான மன நோய் நிபுணர்கள் இருப்பது ஹாலிவுட்டில் தானாம்.

இன்னும் ஒரே ஒரு செய்தியை சற்றே விரிவாக பார்ப்போம்.

கருக்கலைப்பு.

அமெரிக்காவில் சட்டரீதியாக கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்ட ஆண்டு 1973. ஆண்டொன்றுக்கு அங்கே நடக்கும் கருக்கலைப்பு பதினைந்து லட்சம். அதாவது பதினைந்து லட்சம் குழந்தைகள் கருவிலேயே கொலை!

இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் - இந்தக் கருக்கலைப்புகளில் அறுபது சதவிகிதம், இருபது வயதுக்குக் குறைவான திருமணமாகாத பெண்கள் செய்து கொண்டவை. கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இதே கதை தான்!

தி டைம் பத்திரிகை தரும் தகவல் படி உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகளில் மூன்றில் ஒரு பங்கினர் "கர்ப்பமாகி" விடுகிறார்கள் ஆண்டுதோறும்!

அமெரிக்காவில் வயது 12 க்கும் 17 - க்கும் இடைப்பட்ட திருமணம் ஆகாத இளம்பெண்களில் ஒரு பனிரெண்டு லட்சம் பெண்கள் "கர்ப்பம்" ஆகி விடுகிறார்களாம். இதில் பாதி குழந்தைகள் கருக்கலைப்பின் மூலம் கொல்லப்பட்டு விடுகிறார்கள்.

மீதிக் குழந்தைகள்? சட்டத்துக்குப் புறம்பாகப் பிறந்த குழந்தைகளாம்! Illegitimate Children!

போதுமா சகோதரர்களே!

இவைகளே இறைமறுப்பின் சாதனைகள்! இறை மறுப்பும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கல்வித் திட்டமும் , அறிவியல் தொழில் நுட்பமும், மனிதனுக்குச் சாதித்துக் கொடுத்தவை இவை தான்!

இதனையே இங்கே இறக்குமதி செய்யத் துடிக்கின்றனர் மேல் நாட்டு மோகம் கொண்ட நம்மவர்கள்.

கேட்கப்பட வேண்டிய கேள்வி என்னவெனில்....

இன்றைய உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற எல்லா சமூக அவலங்களையும், பிரச்னைகளையும் தீர்த்து வைக்கின்ற, மனித வாழ்வில் – அமைதியையும், நீதியையும், மனிதத் தன்மையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகின்ற ஆற்றல் - இறைநம்பிக்கைக்கு இருக்கிறதா அல்லது இறைமறுப்புக்கு இருக்கிறதா?

புதிய தலைமுறையினர் கவலையுடன் ஆழமாக சிந்திக்க வேண்டிய கேள்வி இது! தருணமும் இதுவே!

Comments