மன்னிப்பு கேட்டுவிட்ட பின் சந்தேகம் கூடாது!

இறை நம்பிக்கையாளர்களின் தவறுகளை இறைவன் மன்னிப்பது குறித்து திருக்குர்ஆன் ஆய்வாளர் நுஃமான் அலி கான் பின்வரும் இறை வசனங்களை வைத்து விளக்குகிறார்:

ஹள்ரத் மூஸா (அலை) அவர்கள், தனது பனூ இஸ்ரவேல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு உதவப்போய், அவனது எதிரியை ஒரே குத்தில் வீழ்த்திட அவன் இறந்து போய் விடுகிறான்.  (பார்க்க குர்ஆன் 28:15)

உணர்ச்சி வசப்பட்டு ஒரு காரியம் செய்யப் போய் அது ஒரு கொலையில் முடிந்து விட்டதே என்று உணர்ந்த உடனேயே இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறார்கள் மூஸா (அலை).

நடந்து விட்டது ஒரு கொலை! அதனை இறைவன் மன்னித்தானா இல்லையா?


இறை வசனங்களைப் பாருங்கள்:

என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான் - நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.

என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்” என்று கூறினார். (குர் ஆன் 28:16-17)

இறைவன் மன்னித்து விட்டான் தான்! ஆனால் இன்னும் நபியாக அறிவிக்கப்படாத அந்த சமயத்தில்,  மூஸா (அலை) அவர்களுக்கு, அவர்களின் தவறை இறைவன் மன்னித்தானா இல்லையா என்பது எப்படித் தெரிய வரும்? வாய்ப்பே இல்லையே!

ஆனால் மூஸா (அலை) அவர்கள் "நீ என் மீது அருள் புரிந்ததன் காரணமாக" என்று சொன்னது   இறைவனின் மன்னிப்பைத்தானே குறிக்கிறது!

இதனை விளக்கும்போது நுஃமான் அலி கான் என்ன சொல்கிறார் என்றால் - தவறு செய்து விட்ட ஒரு இறைநம்பிக்கையாளன் முழுமையான மனத்தூய்மையுடன் இறைவனிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு விட வேண்டும். அதன் பின்னர் - இறைவன் நம்மை மன்னித்து விட்டான் என்றே எடுத்துக் கொண்டு விட வேண்டும். ஆனால் அதற்குப் பின்னரும் - இறைவன் நம்மை மன்னித்தானா இல்லையா என்று சந்தேகம் கொள்ளவே கூடாது என்பதைத் தான் இது உணர்த்துகிறது!

ஆனால் நம்மில் பலர் இப்படித்தான் இருக்கின்றோம். செய்யக்கூடாத தவறு ஒன்றைச் செய்து விட்டு, இறைவனிடம் மன்னிப்பும் கேட்ட பின்பு, இறைவன் நம்மை மன்னித்தானா இல்லையா என்ற சந்தேகத்திலேயே உழல்பவர்கள் நம்மில் பலர் உண்டு!

ஆனால் இந்த வசனங்கள் அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் ஒரு ஆறுதல்!  

அல்லாஹ் மிக அறிந்தவன்!

Comments