நாம் திசை திருப்பப்பட்டு விட்டோம்!

தான் உருவாக்க நினைக்கும் ஒவ்வொன்றையும் திட்டமிட்டுப் படைப்பவன் இறைவன். ஒவ்வொரு படைப்பினத்தின் அளவையும் வடிவத்தையும் தீர்மானிப்பவன் அவனே. படைக்கப் பட்ட ஒவ்வொன்றும் சென்றடைய வேண்டிய இறுதி இலக்கையும் முடிவு செய்பவன் அந்த இறைவன் தான். அதனதன் இலக்கை நோக்கி அந்தப் படைப்பினங்களை வழி நடத்திச் செல்பவனும் அவனே தான்.

அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான். மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான். (குர்ஆன் 87: 2-3)
இந்த நான்கு அம்சங்களும் எல்லாப் படைப்பினங்களுக்கும் பொருந்தும். அது மிக மிகச் சிறிய அணுவாக இருந்தாலும் சரி, அல்லது மிக மிகப் பெரிய விண்மீனாக இருந்தாலும் சரி - அனைத்துப் படைப்பினங்களுக்கும் இது பொருந்தும்.


சான்றாக ஒரு அணுவுக்கு உள்ளே உள்ள மின்னணு ஒன்றையே எடுத்துக் கொள்வோம். மின்னணு ஒன்றைப் படைத்து, அதன் வடிவத்தை நிர்ணயித்து, அது சென்றடைய வேண்டிய இலக்கினை முடிவு செய்து அந்த இலக்கினை நோக்கி அதனைச் செலுத்துபவன் இறைவனே!

அது போலவே - நாம் வாழ்கின்ற பேரண்டத்தை இல்லாமையிலிருந்து உருவாக்கி, அதற்கு வடிவம் தந்து, அதன் இலக்கையும் நிர்ணயித்து, அதன் இறுதி இலக்கை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருப்பவனும் அவன் தான்!

இந்த நான்கு அம்சங்களையும் இறைவன் தன்னகத்தே வைத்திருப்பதால் எந்த ஒரு படைப்பின் அமைப்பிலும், அதன் செயல்பாட்டிலும் நாம் யாதொரு குறையையும் கண்டு விட முடியாது.

இதில் எந்த ஒரு படைப்பும் வீணுக்காகப் படைக்கப்படவில்லை. ஒன்றுக்கொன்று எந்த ஒரு தொடர்பு இல்லாமலும் படைக்கப்படவில்லை. அவை அனைத்தும் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கத்துக்குட்பட்டே செயல்படுகின்றன!

நமக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கின்ற நமது பேரண்டத்தின் எந்த ஒரு பகுதியை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டாலும் -
அவற்றில் இறைவனின் அறிவாற்றல் வெளிப் படும்!
அவற்றின் அழகு நம்மை வியப்பில் ஆழ்த்தும்!
அவற்றில் இறைவனின் கருணையும் தெரிய வரும்!

நாம் உள்ளிழுக்கும் காற்றில், நாம் அருந்திடும் தண்ணீரில், நமது உணவில், விண்ணில், கடற்பரப்பில், ஓசோன் மண்டலத்தில் - இவ்வாறு எங்கு நோக்கினும் - நாம் இறைவனின் அறிவை, அழகுணர்ச்சியை, கருணையைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு அணுவும் இறைவனின் கட்டுப்பாட்டின் கீழ்! விண்ணீல் சிதறிக் கிடப்பது போல் தோற்றமளிக்கின்ற விண்மீண்கள் அனைத்துமே - இறைவனின் கட்டுப்பாட்டின் கீழ் தான்!

அதனால் எங்கும் அழகு! எங்கும் இறைவனின் கருணை! எங்கும் வெளிப் படுகின்ற இறைவனின் அறிவாற்றல்! அதனால் எங்கும் அமைதி!
ஆனால் – மனிதன்? அவன் கதையே வேறு!
எப்படி என்கிறீர்களா? பார்ப்போம்.

நாம் திசை திருப்பப்பட்டு விட்டோம் 2 / 6

மனிதன் முற்றிலும் வித்தியாசமானவன். மற்ற படைப்பினங்களிலிருந்து முழுவதும் வேறுபட்டவன். பல சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்டவன்.

மனிதனின் சிறப்புகளிலேயே மிக மிக முக்கியமான சிறப்பு, வேறு எந்த ஒரு படைப்பினத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு - தாமே ஒன்றைத் தெரிவு செய்து செயல்படுகின்ற சுய அதிகாரம் தான்! (freewill / freedom of choice / will power)

மற்ற எல்லாப் படைப்பினங்களையும் தன் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்ட இறைவன், மனிதனுக்கு மட்டும் ஏன் சுயமாக ஒன்றைத் தேர்வு செய்து செயல்படும் உரிமையை வழங்கிட வேண்டும்? அதற்கு ஒரு காரணம் இருக்கிறது! அதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது! மனிதப் படைப்பின் பின்னணியில் இறைவனின் மகத்தானதொரு திட்டம் இருக்கிறது!

இப்போது முதலில் நாம் குறிப்பிட்ட அந்த நான்கு அம்சங்களையும் (குர்ஆன் 87: 2-3) மனிதனிடத்தில் பொருத்திப் பார்ப்போமா?
- இறைவன் தான் மனிதனைப் படைத்தான்!
- இறைவன் தான் மனிதனின் வடிவத்தை அழகுற அமைத்துத் தந்தான்!
 - மனிதன் சென்றடைய வேண்டிய இலக்கினை இறைவனே தீர்மானிக்கிறான் !
- மனிதன் சென்றடைய வேண்டிய இலக்கை நோக்கி மனிதனுக்கு வழி காட்டி அழைத்துச் சென்றிட வேண்டிய பொறுப்பு இறைவனுக்கு உண்டு!
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.(குர்ஆன் 92:12)
இந்த பொறுப்பைத் தான் இறைவன் இறைத்தூதர்களை அனுப்பி வைப்பதன் மூலம் நிறைவேற்றித் தந்திருக்கின்றான்.

இப்போது மனித சமூகத்துக்கு முன்னால் இரண்டு பாதைகள்.

ஒன்று: இறைத் தூதர்கள் மூலம் அனுப்பப் பட்ட இறை வழிகாட்டுதலை ஏற்று நடந்திடும் பாதை!

மற்றொன்று : இறைவனின் வழி காட்டுதலைக் கண்டு கொள்ளாமல் தனது விருப்பப்படி செல்கின்ற பாதை!

இந்த இரண்டு வெவ்வேறு நிலைகளிலும் - என்னென்ன விளைவுகள் நிகழும் என்பதே இப்போது எழும் கேள்வி.

நாம் திசை திருப்பப்பட்டு விட்டோம் 3 / 6

இறைவனின் வழி காட்டுதலின் படி மனிதன் நடந்தால் என்ன நிகழும் என்பதைப் பார்த்திடு முன்பு, நமது வாழ்வோடு தொடர்புடைய ஒவ்வொரு படைப்பையும் குறித்து சற்று சிந்திப்போம்.
கதிரவனை கவனியுங்கள். 149.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கதிரவன் நமக்குப் போதுமான ஒளியும் வெப்பமும் தருகின்றது. இந்த தூரத்தை சற்று மாற்றி கற்பனை செய்து பாருங்கள். என்ன நிகழும்?
சந்திரனை கவனியுங்கள். 3, 83,000 கிலோ மீட்டர் தூரத்தில் நமக்கென்று ஒரு சந்திரன் சுழன்று கொண்டிருப்பதால் தான் நாம் பூமியில் "நடமாட" முடிகின்றது.
இவ்வாறு ஒவ்வொன்றாக கணக்கிலெடுத்து சிந்தித்துப் பாருங்கள். நாம் வாழும் இந்த பூமி, நாம் பெறுகின்ற மழை, நாம் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்று, நம்மைச் சுற்றி வளர்கின்ற தாவர உலகம், கால்நடைகள், நாம் உண்ணும் உணவு, குடிக்கின்ற நீர், இரவு-பகல், ஆண்-பெண் ஜோடி…..பட்டியல் நீண்டு கொண்டே போகும்! சொல்லப் போனால் அப்படி ஒரு பட்டியல் போட்டால் அதற்கு ஒரு முற்றுப் புள்ளியே வைக்க முடியாது!
(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகவே படைத்தான் (குர்ஆன் 2:29)
மனித வாழ்வோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளாலும் மனிதனுக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்று ஆய்வு செய்து பார்த்தால், அவை ஒவ்வொன்றும் நம்மை வியப்பின் உச்சத்துக்குத் தான் இட்டுச் செல்லும்!  

மற்ற படைப்பினங்கள் மூலம் மனிதன் நன்மைகளை அடைய முடிவது எதனால்?
படைப்பினங்கள் அனைத்துமே இறைவனின்சட்டங்களுக்கு” அடி பணிந்து நடப்பதினால் தான்! இயற்கைச் சட்டங்கள் (natural laws) என்று அழைக்கப்பட்டாலும் அவை அனைத்தும் இறைவனின் சட்டங்களே (Divine Laws)!
அடுத்து - "சுதந்திரம்" வழங்கப் பட்ட மனிதனும் இறைவனுக்கு அடி பணிந்து நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்று பார்ப்போம். 
மற்ற படைப்பினங்கள் மூலம் மனிதன் அடைந்திடும் நன்மைகள் பன்மடங்கு பெருகி விடும்! அது எப்படி? 
இது ஏனெனில் - படைப்பினங்கள் அனைத்தும் இறைவனின் பாதையில். மனிதனும் இறைவனின் பாதையில் எனும்போது ஒரு ஒருங்கியைந்த இயக்கத்துக்கு அது வழி வகுக்கிறது. இறைவனின் "குடும்பத்தில்" எல்லாரும் ஓரணியில். எனவே நன்மைகள் பன்மடங்காகப் பெருகி விடுகின்றனஇதனையே திருக்குர்ஆன் “பரகாத்” என்ற சொல்லால் விளக்கப் படுத்துகிறது.
"அவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் இறை நம்பிக்கை கொண்டு இறையச்சமுள்ள போக்கை மேற்கொண்டு இருப்பார்களேயானால் வானம், பூமி ஆகியவற்றின் அருள்வளங்கள், பாக்கியங்கள் (பரகாத்) அனைத்தையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டிருப்போம்." (குர்ஆன் 7:96)
வழி தவறிச் சென்று விட்ட மனித சமூகம், இறைவனின் வழியின் பக்கம் சற்றே திரும்பி விட்டாலே போதும். என்ன நடக்கும் தெரியுமா?
நூஹ் நபி (அலை) அவர்களின் வரலாற்றிலிருந்து ஒரு இறை வசனம்: 
மேலும், 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" என்றும் கூறினேன். அப்படிச் செய்வீர்களாயின் அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான். இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான். (குர்ஆன் 71: 10 - 12 )

மக்கள் இறைவனை நம்பி, இறை பிரக்ஞையுடன் (ஈமான் மற்றும் தக்வா) வாழ்வதற்கும், வானம் - பூமியின் அருள் வளங்கள்  (பரகாத்) நம்மை வந்தடைவதற்கும் சம்பந்தம் இருக்கிறது.
 மன்னிப்புக் கேட்பதற்கும் மழை பொழிவதற்கும் சம்பந்தம் இருக்கிறது!

***
நாம் திசை திருப்பப்பட்டு விட்டோம் 4 / 6

அப்படியானால் இறை வழிகாட்டுதலைக் கண்டு கொள்ளாமல் மனித சமூகம் தன்னிச்சையாக செயல்பட்டால் என்ன தான் நிகழ்ந்து விடும்?

இறைவனின் படைப்புகள் எண்ணற்றவை. சின்னஞ்சிறிய அணுக்கள் முதல், பென்னம்பெரிய விண்மீன் மண்டலங்கள் வரை - எல்லாமே இறைவன் காட்டிய பாதையில் - அதாவது - இயற்கை விதிகளுக்குட்பட்டு - இம்மியளவும் பிசகாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதாவது இறைவனின் படைப்புகளில் 99.9999% இறைவனின் பாதையில். இறைவனின் படைப்பில் 0.00001% மட்டுமே உள்ள மனிதன் இறைவனின் பாதைக்குள் வர மறுப்பு.
என்ன நிகழும்?

உங்கள் சிந்தனைக்காக ஆங்கிலத் திரைப்படம் ஒன்றிலிருந்து ஒரு காட்சி…
படத்தின் பெயர் நவீன யுகம் (Modern Times). கதாநாயகன் சார்லி சாப்லின். அப்படத்தில் வரும் ஒரு காட்சி.
குடும்பத்தைப் பிரிந்து வேலைக்குச் செல்கிறான் கதாநாயகன். அது ஒரு மிகப் பெரிய தொழிற்சாலை. எனினும் நமது கதாநாயகனின் வேலை மிக எளிதானது தான். ஒரு மிகப்பெரிய கூடம். அதனுள் ஒரு சிறிய அறை. சுழலுகின்ற உலோகப் பட்டை ஒன்று அந்த அறையின் ஒரு பக்கமாக உள்ளே நுழைந்து மறு பக்கம் வழியாக அடுத்த அறைக்குச் சென்று கொண்டிருக்கும்.

அந்த உலோகப் பட்டை மீது திருகு மறைகள் (Nuts) வரிசையாக வைக்கப்பட்டு அவை அறைக்குள்ளே வரும். நமது கதாநாயகன் செய்ய வேண்டியது எல்லாம் முதலில் வருகின்ற இரண்டு திருகு மறைகளை விட்டு விட வேண்டும்.
மூன்றாவது திருகு மறையை எடுத்து ஒரே ஒரு தடவை மட்டும் திருகி அப்படியே அந்த உலோகப் பட்டையின் மீது வைத்து விட வேண்டும். அது போலவே மீண்டும் வருகின்ற இரண்டு திருகு மறைகளை விட்டு விட்டு, மூன்றாவதை எடுத்து ஒரே ஒரு தடவை திருகி வைத்து விட வேண்டும். அவ்வளவு தான் வேலை. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வேலை. மணியடித்தால் அன்றைய வேலை முடிந்தது.

வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் நமது கதாநாயகனுக்கு அந்த திருகு மறைகள் எங்கிருந்து வருகின்றன, எதற்காக வருகின்றன, அவை எங்கே செல்கின்றன, எதற்கு அவை பயன் படுத்தப் படுகின்றன - இவை எதுவுமே தெரியாது!

அதே அறையில் அவரோடு சேர்ந்து இன்னும் ஏழெட்டு பேர். அவர்கள் அனைவருக்கும் அதே வேலை தான். அவர்களுள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூட முடியாது. அருகில் உள்ள தொழிலாளியிடம் பேச்சுக் கொடுத்தால் அந்த மூன்றாவது திருகு மறையைத் தவற விட்டு விடுவார். அப்படி அவர் தவற விட்டு விட்டால் தொழிற்சாலையின் எல்லா இயக்கங்களுமே நின்று போய் விடும்.

அப்படித்தான் ஒரு நாள். நமது கதாநாயகனை சந்திக்க அவனது தாய், அவனது காதலி, மற்றும் அவனது நண்பன் - மூவரும் தொழிற்சாலைக்கு வந்து விட்டனர். யந்திரத் தனமான ஒரு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டிருந்த நமது கதாநாயகனுக்கு அவர்களைக் கண்டதும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
தன்னை மறந்தான். தனது வேலையை மறந்தான். ஓடி வந்தான். தாயைக் கட்டிப் பிடித்தான். நண்பனைக் கட்டிப் பிடித்தான். "ஹலோ! எப்படி இருக்கிறீர்கள் நீங்கள் எல்லாம்? எங்கிருந்து வருகிறீர்கள்? எல்லாரும் நலம் தானா? பார்த்து நீண்ட காலமாகி விட்டதே! நீங்கள் யாரும் அருகில் இல்லாததால் நான் தவித்துத் தான் போய் விட்டேன். வாருங்கள், எல்லாரும் போய் தேநீர் அருந்தலாம்" என்று அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான்.

ஒரு சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். திடீரென்று தொழிற்சாலையின் சங்கு ஒலிக்கத் தொடங்கியது. அனைவரும் வெளியே ஓடி வந்தனர். காவலர்கள் சிலரும் உயர் அதிகாரிகள் சிலரும் நமது கதாநாயகன் வேலை பார்க்கும் அறைக்கு ஓடி வந்தனர். என்ன நடந்தது?
உலோகப் பட்டையில் வைக்கப் பட்ட திருகு மறைகளுள் ஒன்று திருகப் படாமல் வந்து கொண்டிருந்ததாம். அதனால் தொழிற்சாலையின் அனைத்து இயக்கங்களும் நின்று விட்டனவாம். பிடித்தார்கள் நமது கதாநாயகனை! திட்டித் தீர்த்தார்கள்! தண்டனையும் கொடுத்தார்கள்!

தொழிற்சாலையின் ஏதோ ஒரு மூலையில் வேலை பார்த்து வந்த நமது கதாநாயகன் அந்தத் தொழிற்சாலையின் மிகச் சிறியதொரு இயக்கத்தில் தான் குறை வைக்கிறான். ஆனால் என்ன நிகழ்கிறது? அது ஒட்டு மொத்தத் தொழிற்சாலையின் செயல் பாட்டையும் பாதித்து விடுகின்றது.

இதே கதை தான் மனிதனின் விவகாரத்திலும்!

அதாவது மனிதன் தனக்கென ஒரு பாதையைத் தானே வகுத்துக் கொண்டு, இறை வழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழத் தலைப்பட்டான் எனில் ஒட்டு மொத்தப் பேரண்டத்தின் சீரான இயக்கத்தோடு அவன் மோதிடத் தலைப் படுகின்றான் என்றே பொருள்.

அதாவது மனிதத் தவறுகளின் விளைவுகள் மனிதனை மட்டும் பாதிப்படையச் செய்வதில்லை. மாறாக அவை பேரண்டத்தின் ஏனைய படைப்புகளின் செயல்பாடுகளையும் சீர் குலைக்கச் செய்து விடுகின்றன. இதனை ஒத்துக் கொள்ள நமக்கு என்ன தயக்கம்?

நமது உடலில் உள்ள ஒரு உறுப்பில் குறை ஏற்பட்டால் அது நமது ஒட்டு மொத்த உடல் நலனை பாதிக்காதா?

ஒரு சிலர் தான் புகைக்கிறார்கள். ஆனால் சுற்றுப் புறச் சூழலை அது கெடுத்து விடுவதில்லையா?

ஒரு வீட்டில் தீப்பிடித்தால் அது அந்த வீட்டோடு நின்று விடுமா?

ஒரு யந்திரத்தில் இணைக்கப் பட்டுள்ள ஒரு பற்சக்கரத்தின் ஒரே ஒரு பல் உடைந்து விட்டால், யந்திரம் தொடர்ந்து இயங்குமா?

ஒரு கப்பலின் கீழ்த்தட்டு மக்கள் அந்தக் கப்பலின் அடிப்பகுதியில் ஒரே ஒரு ஓட்டை போட்டால், கப்பலின் மேல் தட்டு மக்கள் கவலையின்றிக் கரை போய் சேர்வார்களா?

இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா - மனிதனின் தவறுகள் பேரண்டத்தின் ஏனைய பகுதிகளில் - குறிப்பாக மனிதனைச் சுற்றியுள்ள படைப்பினங்களின் இயக்கத்தைச் சீர் குலைக்கச் செய்து விடுகின்றன என்பதை?


நாம் திசை திருப்பப்பட்டு விட்டோம் 5 / 6

மனிதன் - இறை வழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழத் தலைப்பட்டான் எனில் அப்படி என்ன தான் நிகழ்ந்து விடும் என்பதை அறிந்திடு முன் ஒரு வேலை. இறைவன் வழி காட்டுகிறான், இறைவன் வழி காட்டுகிறான் - என்கிறீர்களே, எது தான் அந்த இறைவனின் வழி காட்டுதல் என்பதை முதலில் பார்ப்போமா?

திருக் குர் ஆனின் மூன்று வசனங்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

நபியே! இவர்களிடம் கூறும்: 'வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்.

எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்.

பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்.

வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்.

அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.

அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்.

அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள். நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை.

நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்.

அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும். நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். (குர்ஆன் 6:151 - 153)

இறை வழிகாட்டுதலின் மிக மிக அடிப்படையான அம்சங்களை இரத்தினச் சுருக்கமாக இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறான் இறைவன். இறை வழிகாட்டுதலின் இந்த அடிப்படைகளில் இருந்து இன்றைய உலகம் எவ்வளவு தூரம் விலகிப் போயிருக்கிறது என்பதைக் குறித்து விரிவாக அலசிட இது இடமல்ல. எனினும் சுருக்கமாக இது குறித்துப் பார்ப்போமா?

# இறை மறுப்பு, பல தெய்வக் கோட்பாடுகள் மற்றும் இறைவனைப் புறக்கணித்து விட்டு எழுதப் பட்ட நவீன விஞ்ஞானம், மற்றும் ஏராளமான நவீன இஸங்கள்....

# பெற்றோரை அவமதித்தல், அவர்களைக் கொடுமைப் படுத்துதல், அவர்களைக் கை விட்டு விடுதல்....

# கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை,மனிதனின் இயற்கையான இன விருத்தி அமைப்பில் இஷ்டத்துக்குக் கை வைத்தல்....

# மானக்கேடானவை எவை என்பதற்கு இலக்கணம் வகுத்துத் தருகின்ற - திரைப்பட உலகம், நிர்வாணப் படங்கள், விபச்சாரம், அழகிப் போட்டிகள், ஆபாச விளம்பரங்கள், ஓரினச் சேர்க்கை, மது, போதைப் பொருட்கள்....

# அன்றாட நிகழ்ச்சியாகிப் போய் விட்ட கொலை பாதகச் செயல்கள், இனப் படுகொலைகள், குழு பயங்கரவாதம், அரசு பயங்கரவாதம்....

# வெளியே தெரியாமல் சூரையாடப் படுகின்ற அனாதைகளின் சொத்துக்கள், சுரண்டப் படும் ஏழை நாடுகளின் வளங்கள்....

# சிறு வியாபாரிகள் முதல் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் வரை நடத்துகின்ற வியாபார மோசடிகள், தில்லுமுல்லுகள்....

# ஏழைக்கு ஒரு நீதி,பணக்காரனுக்கு ஒரு நீதி,வல்லரசுகளுக்கு ஒரு நீதி, ஏழை நாடுகளுக்கு ஒரு நீதி....

இவை தானே இன்றைய உலகம்!

விளைவு? இறைவனே என்ன சொல்கின்றான் என்று பார்ப்போமா?

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின. (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.(குர்ஆன் 30:41)

அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்:

# எந்தச் சமூகத்தில் மோசடிகள் நடக்கின்றனவோ அந்தச் சமூக மக்களின் உள்ளங்களில் இறைவன் கலக்கத்தை உண்டாக்கி விடுகின்றான்.

# எந்தச் சமூகத்தில் விபச்சாரம் பரவுகிறதோ அந்தச் சமூகத்தில் மரணங்கள் அதிகரித்தே தீரும்.

# அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்யும் ஒரு சமூகத்தில் உணவுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விடும்.

# எந்தச் சமூகத்தில் அநீதியான தீர்ப்புகள் வழங்கப் படுகின்றனவோ அந்தச் சமூகத்தில் - படுகொலைகள் அதிகரித்து விடும்.

# எந்தச் சமூகம் தங்களின் ஒப்பந்தங்களை முறித்து விடுகின்றனவோ அந்தச் சமூகம் எதிரிகளின் அடக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டு விடும்.

(ஆதாரம்: நபிமொழி நூல் - மாலிக்)

மேலும் அவர்கள் சொன்னார்கள்: நிலத்திலோ, நீரிலோ, கடலிலோ பொருளில் நஷ்டமேற்பட்டு அழிவு உண்டாவதெல்லாம் (ஏழைகளுக்குச் சேர வேண்டிய) ஜகாத்தினைத் தடுத்து வைப்பதின் காரணத்திலேயாகும். (ஆதாரம்: நபிமொழி நூல் - தபரானி)

இறை வழி காட்டுதலைப் புறக்கணித்தால் நீரிலும், நிலத்திலும் ஏற்படுகின்ற குழப்பங்களைக் கவனித்தீர்களா?
ஆக - நாம் சொல்ல வருவது என்னவெனில் மனிதனின் செயல்கள் மற்ற மனிதர்களையும் பாதிக்கும், இறைவனின் ஏனைய படைப்புகளையும் பாதிப்படையச் செய்யும் என்பதைத் தான். எனவே தான் தரையிலும் குழப்பம். கடலிலும் குழப்பம்!
***
நாம் திசை திருப்பப்பட்டு விட்டோம்! (6 / 6)

சரி! குழப்பம் நீங்கி அமைதி பெற என்ன வழி? சீர்திருத்தம். ஆம். மனிதன் ஏற்படுத்தி விட்ட குழப்பங்கள் அனைத்தையும் நீக்கிடும் சீர்திருத்தமே உடனடித் தேவை. சீர்திருத்தத்தின் முதல் படி என்ன?

மக்களுக்கு எது நன்மை, எது தீமை என்பதைப் பிரித்துக் காட்டுகின்ற அறிவை ஊட்டுவது தான். அதாவது கல்வி. அது மக்களுக்கு நன்மை பயக்கின்ற கல்வி.
இந்தக் கல்வியைப் பெற்றுக் கொள்பவன் சீர்திருந்துகிறான். பிறரை சீர்திருத்துகிறான்.

நீரில் வாழ்வனவும் நிலத்தில் வாழ்வனவும் அத்தகைய சீர்திருத்தம் ஒன்றுக்காக ஏங்கி நிற்கின்றன என்பதை அறிந்திட நீங்கள் வியந்து போவீர்கள்!

அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்:

மக்களுக்கு நன்மை பயக்கின்ற கல்வியைக் கற்றுத் தருகின்ற அறிஞனுக்காக - இறைவனும், அவனது வானவர்களும், புற்றுகளில் வாழ்ந்திடும் எறும்புகள் உட்பட எல்லா தரை வாழ் உயிரினங்களும், மீன்கள் உட்பட எல்லா நீர் வாழ் உயிரினங்களும் தங்கள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். (நபிமொழி நூல்: திர்மிதி)

மக்கள் பாதை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர் புறப்பட்டுச் செல்கிறார் மக்களை சீர்திருத்தம் செய்திட. மக்களுக்கு நற்போதனை அளித்திட. அவருக்கும் - புற்றுகளில் வாழ்ந்திடும் எறும்புகளுக்கும், தண்ணீரில் வாழ்ந்திடும் மீன்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அவை அவரை வாழ்த்திட வேண்டும்?
மனிதக் கரங்கள் செய்திட்ட குளறுபடிகளினால் அவைகளும் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும். எனவே மனிதன் சீர்திருந்தினால் தங்களுக்கும் விடிவு பிறந்திடும் என்று அவரை வாழ்த்திட முன் வந்தன போலும்!

இத்தகைய சீர்திருத்தத்தைத் தான் முஹம்மது நபி (ஸல்) உட்பட அனைத்து இறைத்தூதர்களும் செய்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களை "அகில உலகத்தாருக்கும் ஓர் அருட்கொடையாக நாம் அனுப்பினோம் என்கிறான் இறைவன். அகில உலகத்தாருக்கும் என்று இறைவன் சொல்வது ஏன் என்பது புரிகின்றதா?

சரி, குழப்பங்கள் தோன்றிட மனிதன் ஏன் காரணமாகி விடுகின்றான்? மனிதனின் ஒரு குறிப்பிட்ட மன நிலையே எல்லாக் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணம். அந்த மன நிலை எது தெரியுமா? கீழ்க்காணும் இறை வசனத்தைக் கூர்ந்து கவனியுங்கள்:

அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: 'எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)" என்று. அதற்கவன், 'நானும் உயிர் கொடுக்கிறேன். மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான். (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: 'திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான். நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான். தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (குர்ஆன் 2:258)

புரிகின்றதா?
***

சரி, மனிதன் ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள் சீர்திருத்தப் படாமலேயே விட்டு விடப் பட்டால் என்ன தான் ஆகும்?

மனிதனின் நன்மைக்காகவே படைக்கப் பட்ட ஏனைய படைப்புக்களைக் கொண்டே இறைவன் மனிதனைத் தண்டிக்கின்றான். கடும் புயலைக் கொண்டும், இடி முழக்கத்தைக் கொண்டும்,கடலைக் கொண்டும், நில நடுக்கத்தைக் கொண்டும், கல் மாறி பொழிந்தும் அந்த சமூகம் தண்டிக்கப் படுகின்றது. இத்தகைய தண்டனைக்காக அவர்கள் இறைவனைக் குறை சொல்லிட இயலாது. ஏனெனில்...

"உண்மையில் அல்லாஹ் மனிதர்களுக்கு அணு அளவும் அநீதி இழைப்பதில்லை. எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்". (குர்ஆன் 10:44)

அக்கிரமக்காரர்கள் அழிந்து போனால் மக்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால் வானத்துக்கும் பூமிக்கும் என்ன வந்தது? கொடுங்கோல் மன்னன் பிர்அவ்னும் அவனுடைய படையினரும் செங்கடலில் வைத்து மூழ்கடிக்கப் பட்டனர்.

இதனைக் குறித்து இறைவன் இப்படிச் சொல்கின்றான்:

"பிறகு அவர்களுக்காக வானமும் அழவில்லை! பூமியும் அழவில்லை!" (குர்ஆன் 44:29)
ஏன் அழவில்லை? புரிகிறதா?

***

இது வரை நாம் விவாதித்தவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் -  மிக மிக உன்னதமான சீர்திருத்தப்பணி ஒன்றை இறைவன் நம்மீது பொறுப்பாக்கியிருக்கிறான் என்பதைத்தான்!

ஆனால் அதனை  முஸ்லிம்களாகிய நாமே இன்னும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை!

இந்தப் பணியை நாம் செய்யத்தவறி விட்டால் என்னவாகும்?

நாம் அறிந்த நபிமொழி தான் அது:

அல்லாஹ்வின் வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு கூட்டத்தாரைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது.

கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது).

அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள்.

அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்." - அறிவிப்பாளர்: நுஃமான் இப்னு பஷீர்(ரலி); நூல்: ஸஹீஹுல் புகாரி)

ஆனால், மகத்தான இந்த சீர்திருத்தப் பணியிலிருந்து நாம் திசை திருப்பப்பட்டு விட்டோம் என்பது தான் கசப்பான உண்மை!

யானையைப் பார்த்த குருடர்களைப் போல – இஸ்லாத்தின் ஏதாவது ஒரு பகுதியை மிகைப்படுத்தி, அதனையே முழு இஸ்லாம் என எண்ணிக்கொண்டு, மக்களைத் திசை திருப்பி விட்டோமா இல்லையா?

அசலை விட்டு விட்டோம். நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கிறோம்!

இஸ்லாத்தைப் பேசினோம். இஹ்ஸானை விட்டு விட்டோம்.

விவாதம் செய்தோம். விவேகத்தை விட்டு விட்டோம்.   

அறிவைப் பற்றிப் பேசினோம். பணிவைக் கற்கத் தவறி விட்டோம். 

பெயரளவில் ஒன்றுபட்டோம். உண்மையில் ஒன்றுபடத் தவறி விட்டோம்.

மையத்திலிருந்து ஒதுங்கினோம். எனவே ஓரம் கட்டப்பட்டு விட்டோம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் நாம் திசை திருப்பப்பட்டு விட்டோம்!

*** ***

பிகு: இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் எங்கிருந்து துவங்குவது?
அனைத்துக்கும் முதலாக இஸ்லாத்தின் சாறு (essence) என்பது என்ன என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

1 நாம் முதலில் எடுத்துக் காட்டிய அல் அன்ஆம் அத்தியாயத்தின் (6: 151-153) இந்த வசனங்களை மீண்டும் படித்து சிந்தியுங்கள்!

2 பனீ இஸ்ராயீல் அத்தியாயத்தின் (17: 23 – 35) இந்த வசனங்களை மீண்டும் படித்து சிந்தியுங்கள்!

3 நபி (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையை மீண்டும் படித்து சிந்தியுங்கள்.

இவற்றிலிருந்து தான் இஸ்லாத்தின் சாற்றை நாம் புரிந்து கொள்ள முடியும். இவைகளிலிருந்து தான் நாம் அனைவரும் திசைதிருப்பப் பட்டிருக்கின்றோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

இவைகளிலிருந்து தான் நாம் நமது சீர்திருத்தப் பணிகளைத் தொடங்கிட வேண்டும். 


ஆம்! அப்போது மட்டுமே ஒட்டு மொத்தக் கப்பலும் காப்பாற்றப் படும்!

Comments