அறிவும் அழகிய பண்பும்!

அறிவும் அழகிய பண்பும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

அறிவுடையவனே அழகிய பண்புக்குச் சொந்தக்காரனாக மாறுகின்றான்.

அறிவைப் பெற்றுக் கொள்ளாமல் ஒருவன் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள இயலாது.

அறிவில்லாதவன் பிறருக்கு தன்னை அறியாமலேயே அநியாயம் செய்து விட வாய்ப்பிருக்கின்றது.


முஃமின்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; இல்லையேல் "அறியாமையினால்" குற்றமற்ற ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் "தீங்கு" செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:06)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இத்திருக்குறள் இடம் பெற்றிருக்கும் அதிகாரம் கூட "அறிவுடைமை" தான்!

அறியாமையையும் அநியாயம் செய்வதையும் இணைத்தே சொல்கிறது திருக்குர்ஆன்.

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம்) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் அநியாயம் செய்பவனாகவும், அறிவு கெட்டவனாகவும் விளங்குகின்றான்.(33:72)

இதையே இன்னொரு கண்ணோட்டத்தில் பார்ப்போம் - சீரத்தின் ஒளியிலிருந்து.

"நான் ஒரு ஆசிரியனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்!" - என்று சொன்ன அதே நபி (ஸல்) அவர்கள்
"நான் நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே அனுப்பப்பட்டுள்ளேன்!" என்றும் சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது.

***

பாடங்கள்:

1 பண்பில்லாதவன் - தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருப்பது மடத்தனம். "அபுல் ஹிகம்" "அபூ ஜஹ்ல்" ஆன ஒரு உதாரணம் போதும்!

2 அறிவூட்டும் ஆசிரியர்களுக்கு நற்பண்பு அவசியம். பள்ளி நிர்வாகிகள் கவனம் செலுத்துதல் அவசியம்.

3 குழந்தைகளுக்கு அழகிய பண்புகளின் அவசியத்தை - அறிவுக்கண்ணோட்டத்திலேயே ஊட்டிட வேண்டும்.  (intellectual approach to character development). பெற்றோர் ஆசிரியர் கவனிக்க!

4 மார்க்க அறிஞர்கள், சிந்தனையாளர்கள், இன்ன பிற துறை சார் வல்லுனர்களின் பேச்சிலும், எழுத்திலும் அழகிய பண்பாடு வெளிப்பட வேண்டும். (முகநூலில் உட்பட). அழகிய பண்புகளைச் சுமக்காதவர்களின் "அறிவுக்கு" எந்தவொரு மதிப்பும் மரியாதையும் கிடையாது!

Comments