நடுநிலையும் நிதானமும்!

உனக்கு எதில் நன்மை இருக்கிறதோ அதில் நீ ஆர்வத்துடன் ஈடுபடு என்பது நபிமொழிப்பகுதி ஒன்றின் கருத்தாகும்! (நூல்: முஸ்லிம்)

(Ihris 'alaa maa yanfa-uka)

அதே நேரத்தில் ஒருவருக்கு ஒன்றில் அளவு கடந்த ஆர்வம் இருக்கிறது; அதனால் அந்த ஆர்வத்தில் அவர் ஒரு தீவிரப் போக்கைக் கடைபிடிக்கிறார்; எனினும், அதனால் மற்றவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்ற நிலையில் கூட அப்படிப்பட்ட தீவிரப் போக்கை நபியவர்கள் அனுமதிப்பதில்லை!

பெண்மணி ஒருவர். அவருக்கு தொழுகையில் - இறைவனை வணங்குவதில் - அளவு கடந்த ஆர்வம். தொழுகின்றார். தொழுகின்றார். சோர்வடையும் அளவுக்குத் தொழுகின்றார். நின்று தொழ முடியவில்லை. சோர்வடைந்தால் சாய்ந்து கொள்வதற்காக கயிறு ஒன்றைக் கட்டி வைத்துக் கொள்கின்றார்.

நபியவர்கள் இதனைக் கண்ணுற்றால் அவர்கள் என்ன செய்வார்கள்?

பின் வரும் நபிமொழியைக் கவனியுங்கள்:

அனஸ்(ரலி) அறிவித்தார். நபியவர்கள் (பள்ளிக்கு) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. 'இந்தக் கயிறு ஏன்?' என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், 'இது ஸைனபு அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும்போது தொழ வேண்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து விட வேண்டும்' என்று கூறினார்கள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் - தொழுகையில் ஒருவரிடம் காணப்படும் தீவிரப்போக்கினால் "மற்றவர்களுக்கு" எந்த பாதிப்பும் இல்லை தான்! ஆனாலும் அதனை அனுமதித்திடவில்லை நபியவர்கள்! அது இறை வணக்கமாக இருந்தாலும் சரியே, தன்னையே வருத்திக் கொள்கின்ற ஒரு தீவிரப் போக்கு கூடாது என்பதே நபியவர்கள் நமக்குக் கற்றுத்தருவது!

அப்படியிருக்கும் போது ஒருவருடைய தீவிரப் போக்கினால் மற்றவர்கள் பாதிப்படைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனை நபியவர்கள் அனுமதிப்பார்களா?

நடுநிலையும், நிதானமும், நபியவர்கள் - நமக்குக் கற்றுக் கொடுத்தவை!

Comments