வரலாற்றுப் பாடம் எதற்கு?

இஸ்லாத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை, சட்ட திட்டங்களை, நடைமுறைகளை அறிந்து கொள்வது எவ்வளவு அவசியமோ, அது போலவே இஸ்லாமிய வரலாற்றை அறிந்து கொள்வதும் அவசியம் ஆகும். ஏனெனில் வரலாற்றில் நாம் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைந்து கிடக்கின்றன.


"அறிவுடையோர்க்கு, இவர்களுடைய வரலாறுகளில் நல்லதொரு படிப்பினை நிச்சயமாக இருக்கிறது." (திருக்குர்ஆன் 12:111)

நமது முன்னோர்கள் செய்து காட்டிய சாதனைகளை, அவர்கள் கடந்து வந்த சோதனைகளை, அவர்கள் செய்த தியாகங்களை அறிந்து கொள்வதன் மூலம் தான் நமது இளைய தலைமுறையினர் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள இயலும்.

முற்காலத்தில் முஸ்லிம்கள் செய்து விட்ட தவறுகளையும், அவற்றின் விளைவுகளையும் தெளிவாக அறிந்து வைத்திருந்தால் தான், அதே போன்று தவறுகளை மீண்டும் செய்திடாமல் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.
சமூகத்தில் மேற்கொள்ளப்படும் நீண்ட காலத் திட்டங்களுக்கு வரலாற்றுக் கல்வி மிக அவசியமாகும்.

எது இஸ்லாமிய வரலாறு?

எல்லா இறைத் தூதர்களின் வரலாறும் - இஸ்லாமிய வரலாறு தான்! அறியாமை இருளில் மூழ்கிக்கிடந்த மக்களுக்கு இறைவன் வழங்கிய நேர்வழி என்னும் 'ஹிதாயத்'தைக் கற்றுக் கொடுத்தவர்கள் இறைத்தூதர்கள் தாம். அந்த இறைத்தூதர்களில் முக்கியமானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனைகளையும் படிப்பினைகளையும் அல்லாஹு தஆலா தனது இறுதி வேதமாம் குர் ஆனில் பதித்துப் பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்திருக்கின்றான்.

மனித இனத்தின் வரலாற்றை பலரும் பல விதங்களில் அணுகுகிறார்கள். ஆனால் ஒரு முஸ்லிம் நமது வரலாற்றை , வரலாற்றுச் சம்பவங்களை எப்படி அணுகிட வேண்டும் என்பதையும் தனது திருமறையிலே நமக்குக் கற்றுத் தந்திடத் தவறிடவில்லை!

இன்று பள்ளி மாணவர்களுக்கு வரலாறு என்பதும் ஒரு பாடம் தான். ஆனால் மாணவர்களுக்கு - வரலாற்று நாயகர்களைப் பற்றிய விபரங்கள், வரலாற்றுச் சம்பவங்கள், அவை நடைபெற்ற கால கட்டம் - இவைகள் தாம் போதிக்கப் படுகின்றனவே தவிர வரலாற்றிலிருந்து பாடம் படிப்பது எப்படி என்று சொல்லித் தரப்படுவதில்லை! எனவே - பெரும்பாலான மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடம் என்பது ஒரு "உப்பு சப்பு" இல்லாத (boring) பாடமாகவே காட்சியளிக்கிறது.

ஆனால் ஒரு வரலாற்று ஆசிரியர் - வரலாற்றுக் குறிப்புகளுடன், அதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளையும் சேர்த்துச் சொல்லிக் கொடுத்தால் - வரலாற்றுப் பாடமும் இனிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

Comments