ஹள்ரத் ஹன்ளலா (ரலி) அவர்களின் சந்தேகம்!

ஹன்ளலா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார்கள்.

அவர்கள் கூறுகிறார்கள்:

அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ''ஹன்ளலாவே! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு நான், ''ஹன்ளலா நயவஞ்சகராக ஆகிவிட்டார்'' என்று கூறினேன்.

அதற்கு அவர்கள், ''அல்லாஹ் தூய்மையானவன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.


அதற்கு நான், ''நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருக்கும் போது அவர்கள் நமக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டுகிறார்கள். எந்த அளவிற்கென்றால் கண்கூடாக (அவற்றை) நாம் காண்வதைப் போல் (மார்க்க சிந்தனையில் இருக்கிறோம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்து வந்துவிட்டால் மனைவிமார்களுடனும் குழந்தைகளுடனும் விளையாடுகிறோம்.

வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விஷயங்களை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன். அபூபக்கர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாமும் இப்படித் தான் இருக்கிறோம்'' என்று கூறினார்கள். ஆகையால் நானும் அபூபக்கர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம்.

நான், ''அல்லாஹ்வின் தூதரே! ஹன்ளலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு அவர்கள், ''என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள். நான், ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களுக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டும் போது கண்கூடாக (சொர்க்கம் நரகத்தை) காணுவதைப் போன்ற நிலையில் உங்களிடம் இருக்கிறோம். ஆனால் உங்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டால் மனைவி மக்களுடன் விளையாட ஆரம்பித்து விடுகிறோம்.

வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விஷயங்களை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக என்னிடம் நீங்கள் இருப்பதைப் போன்றும் இறை தியானத்திலும் நீங்கள் எப்போதும் திளைத்திருந்தால் வானவர்கள் (போட்டி போட்டுக்கொண்டு) நீங்கள் உறங்கச் செல்லும் இடங்களிலும் செல்லும் வழிகளிலும் உங்களிடம் கை கொடுப்பார்கள்.

எனவே ஹன்ளலாவே! சிறிது நேரம் (மார்க்க விஷயங்களில் கவனத்தைச் செலுத்துங்கள்) சிறிது நேரம் (மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள்)'' என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: ஹன்ளலா (ரலி) நூல்: முஸ்லிம் 4937

Comments