இயக்கங்கள் - ஒரு விமர்சனம்!

ஒரு தடவை - இஸ்லாமிய இயக்கங்கள், அவற்றின் செயல்பாடுகள், மற்றும் அவைகளின் இயக்க வெறி போன்ற விஷயங்கள் குறித்து இஸ்லாமிய அறிஞர் ஒருவரிடம் கலந்துரையாடினோம். அந்த கலந்துரையாடலில் இருந்து ஒரு சில பகிர்வுகள்:

இயக்கம் அல்லது கூட்டமைப்பு - இவைகளை நாம் பின் வருமாறு புரிந்து கொள்ளலாம்.

ஒன்று: நபியவர்கள் காலத்தில் - ஒரு குறிப்பிட்ட பணிக்கென ஒரு சில நபித்தோழர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பார்கள் நபியவர்கள். அவர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர். சில சமயம் நபியவர்களே தலைவரை நியமித்து அனுப்பி வைப்பார்கள்.


உதாரணமாக சொல்வதெனில் - குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுப்பதற்காக குழுவாக நபித்தோழர்களை நபியவர்கள் அனுப்பி வைத்திருப்பதை நாம் அறிவோம். அல்லது - ஒரு குறிப்பிட்ட திசையில் எதிரிகளின் நடமாட்டம் குறித்து தகவல் சேகரிப்பதற்காக ஒரு குழுவை அனுப்பி வைப்பதும் உண்டு.

ஆனால் நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் - அந்தப் பணி முடித்து அவர்கள் ஊர் திரும்பியதும், அந்த "ஜமாஅத்" கலைந்து விடும்! அவ்வளவு தான்.

இன்றைய இயக்கங்களை - நாம் இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது ஒவ்வொரு இஸ்லாமியக் கூட்டமைப்பும், சமூகத்தின் தேவைகளுள் ஒன்றை நிறைவேற்றுவதற்காகவே உருவாக்கப் படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இப்படிப்பட்ட உருவாக்கங்களுக்கு, நபியவர்களின் முன்மாதிரி இருக்கிறது என்பதைத் தான் நாம் சீரத்திலிருந்து புரிந்து கொள்கிறோம்.

ஆனால் - அதன் முதன்மையான நோக்கமாகிய "ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுவதற்காகத்தான்" என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, அந்த இயக்கம் தன் இருப்பை உறுதிப் படுத்திக் கொள்வது, பெரிது படுத்திக் கொள்வது, கட்டமைப்பில் அதீத கவனம் செலுத்துவது போன்றவற்றில் மித மிஞ்சிய கவனம் செலுத்தப் படும்போது, இயக்க வெறிக்கு நாம் வித்திட்டு விடுகிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு:

நாம் சீரத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில் - ஒரு குறிப்பிட்ட பணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு குழு, அந்தப் பணியை முடித்து ஊர் திரும்புகிறது என்று வைத்துக் கொள்வோம். மீண்டும் இன்னொரு பணிக்காக இன்னொரு குழு தேர்வு செய்யப் படும்போது, முதலில் அனுப்பப்பட்ட குழுவினரில் இருந்தவர்களை சேர்த்துக் கொள்வதற்கு அவர்களுக்கு எந்த விதமான தடையும் இருந்திடவில்லை.

அதாவது குர் ஆன் கற்றுக் கொடுக்க அனுப்பப் பட்டவர், அடுத்து இராணுவப்பணிக்கு அனுப்பப் படலாம். இராணுவப் பணிக்கென அனுப்பப்பட்டவர், வேறு சில பணிக்காக அனுப்பப்படலாம்.

ஆனால் - இன்று அந்த நிலை இல்லை! அதற்குக் காரணம் - நோக்கம் பின்னுக்குத்தள்ளப்பட்டு, இயக்கத்தின் இருப்பே - இலட்சியமாக்கப்பட்டு விடுவதால் தான்! இதனைத்தான் இயக்க வெறி என்கிறோம். தப்லீக் கார்க்கூன் ஒருவர், ஜமாஅதே இஸ்லாமியின் தஃவா பணிக்குச் செல்வாரா? மேலும் உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மூன்று:

ஒரு சிலர் இயக்கங்களே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதுவும் தவறு. எந்த ஒரு பணியாக இருந்தாலும் கூட்டு சேர்ந்து செயல்படுவதையே மார்க்கம் நமக்குக் கற்றுத் தருகிறது. எனவே கூட்டமைப்புகள் அவசியமே.

நாம் சொல்ல வருவது என்னவெனில் -

கூட்டு சேர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை முக்கியப் படுத்துங்கள். Emphasize the importance of joint ACTIVITIES!

ஆனால் - இயக்கங்களின் இருப்புக்கும், அதன் கட்டமைப்புக்கும் அதீத முக்கியத்துவம் தராதீர்கள். Do not over - emphasize the importance of the existense and the structure of the movements.

அது போலவே - இயக்கங்களின் இருப்பையே முதல் நோக்கமாக யாராவது முன் வைத்தால் - அந்த இருப்பின் அதீத முக்கியத்துவத்தைக் குறைத்திடுங்கள்! De-emphasize the over-imposed importance for the existence of movements!

முடிவாக ஒரு விஷயம்.

நாடென்ன செய்தது எனக்கு - என கேள்விகள் கேட்பது எதற்கு?

நீ என்ன செயதாய் அதற்கு! என்று நினைத்தால் நன்மை உனக்கு!

- என்று சொல்லப்படுவது போன்று -

இயக்கம் என்ன செய்தது எனக்கு - என கேள்விகள் கேட்பது எதற்கு?

நீ என்ன செயதாய் அதற்கு! என்று நினைத்தால் நன்மை உனக்கு! -

- என்று நாம் சொல்லிட முடியாது!

காரணம்:

இயக்கம் இருப்பதே - "அமல்களுக்காகத்" தான்!

அந்த அமல்களுக்கான கூலிகளை அனுபவிக்க இருப்பவர்கள் அந்த அமல்களை உளத்தூய்மையுடன் செய்திட்ட தனி மனிதர்கள் தாம்!

இயக்கத்துக்கென்று கூலி எதுவும் கிடையாது!

இயக்க சகோதரர்களுக்கு மூன்று வேண்டுகோள்:

ஒன்று:

இந்த இயக்கத்தில் நான் இடம் பெற்றிருப்பதன் மூலம், எனது ஈமான் உறுதிப்படுகிறதா? என்னை நான் தூய்மைப் படுத்திக் கொள்ள முடிகிறதா? நான் வளர்கிறேனா? கூட்டமைப்பின் பணிகளுக்கு நான் இறைவனிடத்தில் கூலியை நிரம்பப் பெற்றுக் கொள்வேனா? - என்பதிலும்

இரண்டு:

இந்த இயக்கத்தில் நான் இடம் பெற்றிருப்பதன் மூலம், என் சகோதரர்களின் ஈமான் உறுதிப்படுகிறதா? என் இயக்க சகோதரர்கள் தங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்ள நான் அவர்களுக்கு உதவ முடிகிறதா? என் சகோதரர்கள் வளர்கிறார்களா? கூட்டமைப்பின் பணிகளுக்கு நாம் அனைவரும் இறைவனிடத்தில் கூலியை நிரம்பப் பெற்றுக் கொள்வோமா? என்பதிலும் தான் உங்கள் கவனம் இருந்திட வேண்டும்.

மூன்று:

உங்கள் இயக்கத்தைச் சாராத மற்ற சகோதரர்களும் வேறு ஒரு இறைப்பணியைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மனதில் வையுங்கள். இயன்றால் மற்ற இயக்கங்களின் பணிகளிலும் ஈடுபடுங்கள். அது உங்களின் பார்வையை இன்னும் விசாலமாக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது!

Comments