இன்றைய தேவை - கலந்துரையாடல்கள்!

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு.” (குர்ஆன் 49:13)

ஒரு குறிப்பிட்ட சூழலில் பல தரப்பட்ட மக்களும் சேர்ந்து வாழ்கின்ற போது - அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்தல் அவசியம்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு அடிப்படைத் தேவை என்ன?


அது தான் பேராசிரியர் தாரிக் ரமளான் கூறும் மூன்றாவது C – FOR – COMMUNICATION!

அதாவது கருத்துப் பரிமாற்றம்!

இன்றைய நவீன உலகில் மக்களுக்கு முன்பாக நாலா பக்கங்களிலிருந்தும் தகவல்களும், செய்திகளும் கொட்டோ கொட்டு என்று கொட்டப்படுகின்றன!

ஆனால் அவற்றில் எது உண்மை, எது உண்மை இல்லை என்றெல்லாம் பிரித்துப் பார்த்துப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல!

இந்த சூழலில், சரியான புரிதல்களை ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக் கொள்ள மிக மிக அவசியமானது – கலந்துரையாடல்களே! கருத்துப் பரிமாற்றங்களே!

கலந்துரையாடல் என்று எதுவும் இல்லாத நிலையில், வந்து சேர்கின்ற தகவல்களை மக்கள் அப்படியே நம்பும் போது, தவறான புரிதல்களுக்கே அது வழி வகுத்து விடும்.

முஸ்லிம்களைப் பொருத்தவரை - நாம் வாயைத் திறந்து பேசினால், அவர்கள் காது கொடுத்துக் கேட்கத் தயாராகத் தான் இருக்கிறார்கள்! ஆனால் நாம் அப்படிப்பட்ட புரிதல்களுக்கான கலந்துரையாடல்களுக்குத் தயாரில்லை என்றால் - நம்மைப் பற்றிய கதைகளை கற்பனைகளை மற்றவர்கள் அப்படியே நம்புகின்ற சூழலை நாமே ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகி விடும்!

எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில் - இன்றைய "அழைப்புப் பணி" முயற்சிகள் அனைத்தும் "கலந்துரையாடல்" நிகழ்ச்சிகளாக மாற்றப்பட வேண்டும் என்பது தான்.

அழைப்புப்பணி நிகழ்ச்சிகள் அனைத்தும் - நம்மைப்புரிய வைத்திடவும், நமது மார்க்கத்தைப் புரிய வைத்திடவும் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஆனால் - மற்றவர்களை நாம் புரிந்து கொள்வதற்கு அங்கே வாய்ப்புகள் இல்லை.

ஆனால் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் மட்டுமே - நாமும் மற்றவர்களைப் புரிந்து கொள்ள முடியும். பிறருக்கும் நம்மைப் பற்றிப் புரிய வைக்க முடியும். இதுவே ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு (mutual understanding) செயல்பட வழி வகுக்கும். இத்தகைய புரிதல்கள் தான் ஒருவரை ஒருவர் மதித்துக் கொள்ள (mutual respect) வழி வகுக்கும்.

இவ்வாறு ஒருவரை ஒருவர் மதிக்கும் நிலையிலேயே, பொதுவான இலட்சியத்தை நோக்கி நாம் அனைவரும் பயணித்திட முடியும்.

பன்மைத்துவத்துக்கு இதுவே அழகு!

குறிப்பு: மதம் மாற்றுவது நமது வேலையே அல்ல! அது இறைவனின் வேலை! - நமது வேலை எல்லாம் புரிய வைப்பது மட்டும் தான்!

Comments