அபஸ அத்தியாயம் - ஓர் ஆய்வு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அபஸ அத்தியாயம் - ஓர் ஆய்வு

எஸ் ஏ மன்ஸூர் அலி

திருமறையின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் "மையக் கருத்து" ஒன்று இருக்கிறது என்பது விரிவுரையாளர்கள் சிலரின் கருத்தாகும். ஒரு அத்தியாயத்தில் பல விஷயங்கள் எடுத்துரைக்கப் பட்டிருந்தாலும், அவை அனைத்துமே ஒரே மையக்கருத்தைச் சுற்றியே அமைந்திருக்கும் எனும் கருத்தை முன்வைத்து திருமறை விரிவுரை நூல்களும் எழுதப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் இங்கே நாம் திருமறை எண்பதாவது அத்தியாயமான சூரத்துல் அபஸ - வை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

எம்மைப் பொருத்தவரை இந்த அத்தியாயத்தின் மையக் கருத்து:

மனித வள மேம்பாடு என்பதாகும்.

இறக்கியருளப்பட்ட சூழல்:

ஒரு சந்தர்ப்பத்தில் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மக்கத்து குறைஷி குலத் தலைவர்களை அழைத்து, அவர்களிடத்தில், தூய இஸ்லாத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் கண் பார்வையற்ற நபித்தோழர் -  அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவ்வழியாகச் சென்றார்.

நபி(ஸல்) அவர்களின் உபதேசம் தனது காதுகளுக்கு கேட்பதை உணர்ந்த உம்மி மக்தூம்(ரலி) அவர்கள், அந்தச் சபைக்கு  வந்தார்கள். “அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்களே  அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தவற்றை எனக்கு நீங்கள் கற்றுத்தாருங்கள்” என்று உரிமையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார்கள். நம் உத்தம நபி(ஸல்) அவர்களின் உன்னத தோழரல்லவா, கண் பார்வை தெரியாத காரணத்தால் அந்த சபையில் யார் யார் எல்லாம் உள்ளார்கள் என்பதும் அந்த சபையின் முக்கியத்துவமும் அவருக்கு தெரியவில்லை.

குறைஷிக் குலத்தினரிடம் முக்கியமாக ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும் போது இவர் வருகிறாரே, என்ற அதிர்வுடன் தன் முகத்தை கொஞ்சம் திருப்பிக்கொண்ட நபி(ஸல்) அவர்கள், தன்னுடைய பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தன் முகத்தை திருப்பிக் கொண்டார்கள் என்பது அருமைத் தோழர் உம்மி மக்தூம்(ரலி) அவர்களுக்கு தெரியாது என்றாலும், அல்லாஹ் இதனை கண்காணித்து, நபி(ஸல்) அவர்களுக்கு அறிவுரைக்கூறும் விதமாக இந்த அத்தியாயத்தை இறைவன் அருளினான்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

"அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
அல்லது அவர் நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
ஆயினும் அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்." (வசனங்கள் 1-10)

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித்தூதர் என்பதை நாம் அறிவோம். நபியவர்களின் இஸ்லாமிய அழைப்பை முதன் முதலில் செவியேற்றவர்கள் மக்காவில் வாழ்ந்து வந்த குறைஷியர்களே என்பதையும் நாம் அறிவோம். எனினும் நபியவர்களின் அழைப்பு எல்லோருக்கும் பொதுவானதே.

மக்காவில் அன்று வாழ்ந்து வந்த மக்களைப் பொருத்தவரை - அது அவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், அண்ணலாரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் எவரும் அன்றே அண்ணலாரின் "நபித்தோழர்" என்ற அந்தஸ்தை  அடைந்து கொண்டு விடுகிறார்.

அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் என்ற அந்த கண் தெரியாத மனிதர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டவர்களுள் ஒருவராகி விடுகிறார், ஆனால், மக்கத்துக் குறைஷித் தலைவர்களோ அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விடுகின்றனர்.

**
திருமறையின் இந்த அத்தியாயத்தில், நமது ஆழ்ந்த சிந்தனைக்கு, இரண்டு விஷயங்களை முன் வைக்கின்றான் இறைவன்.

# ஒன்று: மனிதனின் வாழ்க்கை

"எப்பொருளால் அவனை அல்லாஹ் படைத்தான், என்பதை அவன் சிந்தித்தானா?"  (வசனம் - 18)


# இரண்டு: தாவரங்களின் வாழ்க்கை

"எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே, அது எவ்வாறு பெறப்படுகிறது என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்." (வசனம் - 24)

அல்லாஹ் ஏன் இந்த இந்த இரண்டு உதாரணங்களையும் இங்கே நம் கவனத்துக்குக் கொண்டு வருகிறான் என்று நாம் வியந்து நோக்க வேண்டியிருக்கிறது!

17 முதல் 23 வரை உள்ள வசனங்களை எடுத்துக் கொள்வோம்:

"நன்றி கெட்ட மனிதன் அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
எப்பொருளால் அவனை அல்லாஹ் படைத்தான்?
ஒரு துளி இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை அளவுப்படி சரியாக்கினான்.
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்" ஆக்குகிறான்.
பின்னர், அவன் விரும்பும்போது அவனை உயிர்ப்பித்து எழுப்புவான்.
இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை. (வசனங்கள் 17 - 23)

இதனைத் தொடர்ந்து அதற்கடுத்த ஒன்பது வசனங்களை எடுத்துக் கொள்வோம்.

"எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
அடர்ந்த தோட்டங்களையும்,
பழங்களையும், தீவனங்களையும்-
இவையெல்லாம் உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக." (வசனங்கள் 24 - 32)

17 முதல் 23 வரை உள்ள வசனங்களில், - மனிதன் படைக்கப்படும் விதம், அவனது அழகிய உருவ அமைப்பு, அவனது வளர்ச்சியில் இறைவனின் அக்கரை, அவனது உலக வாழ்வின் முடிவு - பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லி விட்டு, அவன் படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றிடவில்லை என்பதையும் சொல்லி முடிக்கின்றான் இறைவன்.  

அடுத்து, 24  முதல் 32 வரையுள்ள வசனங்களில்,  பல்வேறு விதமான தாவரங்களின் பிறப்பு, வளர்ச்சி, அவைகளின் பயன்பாடு ஆகியவற்றை விளக்குகிறான் இறைவன்.

அடுத்து, இந்த இரண்டு உதாரணங்களையும் நாம் சற்றே ஒப்பிட்டுப் பார்ப்போம்.

முதலில், மழையை எடுத்துக் கொள்வோம்.

மழை ஒரு அருட்கொடை. மழை நீர் தூய்மையானது. மழை நீர் விண்ணிலிருந்து இறக்கி வைக்கப்படுகிறது. வரண்ட பூமியிலே, மழை பெய்திடும்போது, பூமி, அதனை உள்வாங்கிக் கொள்கிறது. மழை நீர் பூமிக்குள் ஊடுருவிச் செல்கிறது.

அந்த வரண்ட பூமியில் பரவிக்கிடந்த பல்வேறு விதைகளும் முளைக்கத் தொடங்குகின்றன. அதாவது மழை நீர் என்பது அந்த விதைகளுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு!

இதனை, அப்படியே மனித வாழ்க்கையோடு ஒப்பிடுங்கள்.

உலகெங்கும், மனிதர்கள் அனைவரும் "வரண்டு போன" பூமியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இறைவன் தன் வழிகாட்டுதலை விண்ணிலிருந்து இறக்கி வைக்கின்றான்! அந்த வழிகாட்டுதல் தூய்மையானது! அந்த வழிகாட்டுதல் ஓர் அருட்கொடை!

“(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள். (வசனங்கள் 13-16)

ஊடுருவிச் செல்லும் மழை நீர்:

“பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து;” (வசனம் - 26)

அதாவது மழை நீர் பூமியைப் பிளந்து ஊடுருவிச் சென்று விதைகளை முளைக்கச் செய்கிறது.

இது எதனை உணர்த்துகிறது என்றால், விண்ணிலிருந்து இறக்கி வைக்கப்படுகின்ற வழிகாட்டுதலை ஏந்தி வருகின்ற இறைத்தூதர்,

அந்த வழிகாட்டுதலை, மக்களின் உள்ளங்களில் ஊடுருவிச் சென்று  இறைச் செய்தியைச் சேர்ப்பிப்பதற்கு மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்கிறார் என்பதைத் தான்.

பின் வரும் இறை வசனம் இதனையே உணர்த்துகிறது.

(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்! (18:6)

தாவரங்களில் பல வித வகைகள்:

இறைவன் தாவரங்கள், மழையைப் பெற்று வளர்கின்ற நிகழ்வை விளக்கும்போது ( வசனங்கள் 24 - 32) எட்டு விதமான தாவர வகைகளைக் குறிப்பிட்டுச் சொல்கிறான்:

வித்துக்கள்;  திராட்சை; புற்பூண்டுகள்; ஒலிவ மரம்; பேரீச்சை; அடர்ந்த தோட்டங்கள்; பழ வகைகள்; தீவனங்கள்.
இது நமக்கு எதனை உணர்த்துகிறது என்பது ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயமாகும்.

மழை ஒன்று தான். ஆனால் அதனைப் பெறுகின்ற விதைகள் வெவ்வேறு.

ஒவ்வொரு விதைக்குள்ளும் இருக்கும் "சத்துக்கள்" வேறு.

ஒவ்வொரு விதையும் "வளர்கின்ற" சூழல்கள் வெவ்வேறு.

ஒவ்வொரு தாவரமும் வளர்ந்த பின் அதனால் கிடைக்கின்ற பலன்களும் வெவ்வேறு.

அது போலவே - இறை வழிகாட்டுதல் என்பது ஒன்றே ஆயினும், அதனைப் பெற்றுக் கொள்கின்ற தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களே!

அவர்களின் உள்ளாற்றல்கள் வெவ்வேறு!

அவர்களின் வளர்ச்சி என்பதும் வெவ்வேறு!

அவர்களின் "பலன்களும்" அதாவது பங்களிப்புகளும் வெவ்வேறு!
இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொன்றும் இருக்கிறது.

அது தீவனம் குறித்த விஷயம்.

மழையைக் கொண்டு – இறைவன் முளைப்பிக்கச் செய்த பல்வேறு தாவரங்களைக் குறிப்பிட்ட இறைவன் “புற்பூண்டுகளையும்” முளைப்பிக்கச் செய்ததாகக் குறிப்பிடுகின்றான்.

புற்பூண்டுகளின் பயன் என்ன? நமது கால்நடை பிராணிகளுக்கு அவை உணவாகின்றன! அவ்வளவுதான்! ஒரே ஒரு பயன் தான்! பல்வேறு விதங்களில் பயனளிக்கக்கூடிய தாவரங்களுடன் ஏன் தீவனங்களையும் படைக்கிறான் இறைவன்.

நமது கால் நடைகளுக்கு உணவாகிடுகின்ற புற்பூண்டுகள் இறைவனால் படைக்கப்படவில்லை எனில் என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். கால் நடைகள் என்னவாகும்? பால் உற்பத்தி என்னவாகும்? இந்த ஒரே ஒரு விஷயம் கூட மனித வாழ்வை எப்படியெல்லாம் பாதிக்கும் என்று ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

ஒரு சுவாரஸியமான விஷயம்:

தொழிற்சாலைகளில் மிகச் சாதாரண வேலைகளுக்கு அமர்த்தப் படுபவர்கள் factory fodders என்று தான் அழைக்கப்படுகின்றார்கள். Fodders என்றால் தீவனம் என்று தான் பொருள்.

அது போலத் தான் – மனித இனத்தின் வாழ்க்கை அமைப்பும். பல திறமைகளை உள்ளடக்கிய மனிதர்களுடன் ஒரே ஒரு திறமை கொண்டவர்களையும் சேர்த்தே இறைவன் படைத்திருகின்றான். ஏன்? மனித வாழ்க்கை சீராக நடை பெற்றிடத்தான்!

பல திறன் படைத்தவர்களை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம்

- யாரையும் திறமையற்றவர்கள் என்று ஒதுக்கித் தள்ளாதீர்கள். ஒரே ஒரு சிறிய திறமையை கொண்டே கூட ஒருவர் உலகுக்கு தனது பங்கைத் திறம்பட ஆற்றிட முடியும்.

எனவே அத்தகையவர்களை மட்டம் தட்டாதீர்கள். ஏனெனில் உங்களைப் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைத்த அந்த அல்லாஹு தஆலா தான் அவர்களையும் படைத்து உலகுக்கு அனுப்பி வைத்திருக்கின்றான் என்பதை மறந்து விட வேண்டாம்.

அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் முன்மாதிரியும் அப்படித்தான் இருக்கிறது. நபித்தோழர்களின் வரலாறுகளே இதற்குச் சான்று!

#மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

எவ்வாறு பல்வேறு விதமான விதைகளும், ஒரே மழை நீரைப் பெற்று, முளைத்து, வளர்ந்து, பூத்து, காய்த்து, கனிந்து - மனிதர்களுக்கும்,கால் நடைகளுக்கும் பயனுள்ளவையாக விளங்குகின்றனவோ, அது போல - பூமிப் பரப்பில் - பல்வேறு விதமான கோத்திரங்களைச் சேர்ந்த, பல்வேறு தனித்தன்மைகளுடன் விளங்கக்கூடிய மனிதர்கள் - விண்ணில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட தூய்மையான இறை வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டு - தன்னை வளர்த்துக் கொண்டு - பிறருக்குப் பயன் அளிப்பவர்களாக விளங்கிட வேண்டும் என்பது தான் மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் என்பதை இந்த அத்தியாயம் மிக அழகான ஒப்பீட்டுடன் விளக்குகிறது.

“இவையெல்லாம் உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக." (வசனம் - 32)

ஆனால் - மனிதர்களில் பலர் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை என்பதை இடித்துக் காட்டவும் செய்கிறது. நன்றி கெட்டவன் மனிதன் என்று தூற்றவும் செய்கிறது.

இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை. (வசனம் -  23).

 (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்! (வசனம் - 17).

**

ஒன்றைத் தேர்வு செய்திடும் சுதந்திரம் கொடுக்கப்பட்டவன் மனிதன்.

“அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.”  (வசனங்கள் 11-12)

அந்த சுதந்திரம் தாவரங்களுக்கு இல்லை! அது தான் வித்தியாசம்!

ஆனால் ஒருவன் அந்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் - அதன் விளைவுகளை அவன் தானே அனுபவிக்க வேண்டும்!

சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதன் விளைவு என்ன?

“ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.

அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள். (வசனங்கள் 40-42)

அதே வேளையில், இறைவன் வழங்கிய சுதந்திரத்தைச் சரியான வழியில் பயன்படுத்தி, மனிதர்களுக்கும் மற்ற் படைப்பினங்களுக்கும்  பயனுள்ளவனாக வாழ்ந்தால் - அதன் விளைவு என்ன?

“அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (வசனங்கள் 38-39)

இறுதியாக ஒரு விஷயம்.

இந்த சுதந்திரம் என்பது - ஒவ்வொருவருக்கும் வழங்கப் பட்டிருக்கும் வாய்ப்பு! இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பது என்பது ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு. ஒருவருக்கு இன்னொருவர் பொறுப்பேற்க முடியாது.

“ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.”  (வசனங்கள் 33 – 37)

நபிமொழி ஒன்றைக் கொண்டு நிறைவு செய்வோம்.

மனிதர்களில் சிறந்தவர்,  பிற மனிதர்களுக்குப் பயன்படுபவரே! (நூல்: தாரகுத்னி)

Comments