நம்மை நாமே விமர்சித்துக் கொள்வது எப்படி?

நாம் கவனம் செலுத்திட வேண்டிய இன்னொரு விஷயம் - நம்மை நாமே விமர்சித்துக் கொள்வது (self criticism) எப்படி என்பது குறித்துத் தான். இதற்குத் தேவை – Critical Mind - என்கிறார் தாரிக் ரமளான்.

Critical Mind என்பதை எப்படி விளக்கலாம் என்றால் - எந்த ஒன்றையும் - அது நம் மீது எழுப்பப்படுகின்ற எதிர்மறை விமர்சனங்களானாலும் சரி, நம் மீது சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டுகளாக இருந்தாலும் சரி, அவைகளைக் கண்ணை மூடிக் கொண்டு மறுத்து ஒதுக்கி விடாமல், அவைகளைப் பகுப்பாய்வு செய்து, உள்ளதை உள்ளபடி, உண்மையை, யதார்த்த நிலையை, எந்தவித தயக்கமும் இன்றி துணிவுடன் ஏற்றுக் கொள்ளும் அறிவார்ந்த மனநிலை என்று சொல்லலாம்.

நம்மை விமர்சிப்பவர்களை நாம் இரண்டு விதமாகப் பிரித்துப் பார்த்திட  வேண்டும் என்கிறார் - பேராசிரியர் தாரிக் ரமளான்.



ஒன்று: இஸ்லாத்தை அடியோடு வெறுப்பவர்கள். இவர்கள் வேண்டுமென்றே நம்மைக் குற்றம் சுமத்துபவர்கள். உள் நோக்கத்துடன் உண்மைகளைத் திரித்துப் பேசுபவர்கள். பொய்களை இட்டுக்கட்டி, மக்கள் நம்மை வெறுப்படையச் செய்பவர்கள்.

இரண்டு: ஆனால், இவர்களைத் தவிர்த்த பொது மனநிலை கொண்டவர்கள். நேர்மையானவர்கள். Genuine People. அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் பல தவறான செய்திகள் வந்து சேர்கின்றன.

ஊடகங்கள் மக்களுக்குத் தவறான தகவல்களைப் பரப்புகின்றன. அவற்றைப் பார்க்கின்ற சாதாரண மக்களிலிருந்து படித்தவர்கள் வரை முஸ்லிம்கள் என்றால் பயப்படத் தான் (being scared) செய்வார்கள். அவர்களின் மன நிலையிலிருந்து இதனை சிந்தித்துப் பார்த்தால் தான் இது நமக்கும் புரியும்!

இந்நிலையில் அவர்கள் நம்மை - முஸ்லிம்களை - சந்திக்கிறார்கள். அவர்களுக்குப்பல சந்தேகங்கள் வருகின்றன. நம்மைக் கேள்விகள் கேட்கின்றார்கள். சரியான விளக்கங்களை நாம் தந்து விட்டால், விருப்பு வெறுப்பின்றி , காய்தல் உவத்தல் இன்றி - ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

நமது சூழ்நிலையைப் பொருத்தவரை, அவர்கள் பெரியாரியவாதிகளாக இருக்கலாம். பகுத்தறிவுவாதிகளாக இருக்கலாம். பொதுவுடைமை வாதிகளாகவும் இருக்கலாம். அல்லது பொது மக்களாகவும் இருக்கலாம்.

இத்தகையவர்கள் எடுத்து வைக்கும் உள் நோக்கமற்ற சந்தேகங்களுக்கு, பூசி மெழுகாத உண்மைகளை எடுத்து விளக்க வேண்டியது நம் கடமை மட்டுமல்ல. அவர்கள் நம்மைப் பற்றி வைக்கின்ற "குற்றச்சாட்டுகளில்" உண்மை இருந்திட்டால், அதனை அட்டியின்றி ஏற்றுக் கொண்டு விடுகின்ற மன நிலை நமக்கு வேண்டும். இதனைத் தான் Critical Mind என்கிறார் தாரிக் ரமளான்.

உதாரணங்கள் சொல்லி விளக்க வேண்டும் என்றால் - இஸ்லாத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கிடையாது என்பது நமக்குத் தெரியும். இன வெறிக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை என்பது உண்மை தான். ஆனால் முஸ்லிம்களிடத்தில் பாகுபாடு இருக்கிறதா இல்லையா என்றால் என்ன பதில் சொல்வீர்கள்? நமது சமூகத்திலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இருப்பதை யார் தான் மறுத்திட முடியும்?

இஸ்லாம் பெண்களைப் பாதுகாக்கிறது. பெண்களை மிகவும் மதித்திடும் மார்க்கம் தான் இஸ்லாம் என்றெல்லாம் உரத்த குரலில் பேசுவதில் ஒன்றும் நாம் குறை வைப்பதில்லை. ஆனால் உள்ளே நடப்பது என்ன? ஆணாதிக்கமாக இருக்கட்டும், வரதட்சனையாக இருக்கட்டும், குடும்ப வன்முறையாக இருக்கட்டும், விவாக விலக்காக இருக்கட்டும்- பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம்?
இதனை விமர்சகர்கள் சுட்டிக் காட்டினால் அதனை ஏன் பூசி மெழுகி சமாளிக்க வேண்டும்? உண்மையை ஒத்துக் கொண்டு சீர்திருத்தத்தில் இறங்குவது தானே நேர்மையான முஸ்லிமுக்கு அழகு! அதனைச் செய்திடத் தவறுவதேன்?

இவ்வாறு நேர்மையான பதில்களை நாம் அளிக்கத் தவறினால், "தவறான" விளக்கங்களைத் தந்து மக்கள் மேலும் நம்மை வெறுத்திட வைக்கும் வேலை மிக இலகுவாக நடந்து முடிந்து விடும்! ஆனால் வேதனை. அது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது!

உண்மையை ஏற்றுக்கொள்ள ஏன் பலர் பயப்படுகிறார்கள் தெரியுமா? ஏனெனில் - நம்மில் பல பெரியார்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?

"இவன் குலம் அறுக்க வந்த கோடரிக் காம்பு!"

"இவனைப்பார், மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதைப் பார்!"

இளைஞர்கள் தான் இந்நிலையை மாற்றிட முன் வர வேண்டும்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. நாம் ஒரு தவறை, அல்லது ஒரு அநீதியை, ஒரு குற்றச் செயலைக் கண்டிக்கிறோம் என்றால் - அதில் நாம் எந்த ஒரு பாரபட்சமும் பாராது - அதனை யார் செய்தாலும் அதனைக் கண்டிப்பதில் நாம் தயக்கம் காட்டக் கூடாது.

பயங்கரவாதச் செயல் ஒன்று நடைபெறுகிறது என்று வையுங்கள். அதனைச் செய்தது அமெரிக்காவாக இருந்தாலும் கண்டிக்க வேண்டும். சவூதி அரேபியாவாக இருந்தாலும் கண்டிக்க வேண்டும். யூதர்கள் செய்திருந்தாலும் கண்டிக்க வேண்டும். முஸ்லிம்கள் செய்திருந்தாலும் கண்டிக்க வேண்டும்.

அநியாயங்களைத் தட்டிக் கேட்பதில், ஒரே அளவுகோள் தான் கடைபிடிக்கப்பட வேண்டும். நீதிக்கே குரல் கொடுத்திட வேண்டும், அது நமக்கே எதிரானதாக இருந்தாலும் சரியே, என்பது தான் இறை வாக்கு!

இப்படிப்பட்ட Critical Mind தான் இன்றைய அவசியத் தேவை!

Comments