தாழ்வு மனப்பான்மையிலிருந்து தன்னம்பிக்கையை நோக்கி!


ஒரு கணம் இன்றைய உலகத்தில் நடக்கும் அனைத்தையும் உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். இன்றைய உலகம் என்பது என்ன?

இன்று உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் 62 பேர்களிடம் இருக்கும் பணம் - உலகின் 350 கோடி மக்களிடம் உள்ள பணத்தை விட அதிகமாம்!

இன்றைய நவீன கால பன்னாட்டு முதலாளிகள், தங்களின் பெரு நிறுவனங்கள் மூலமாக (trans national corporate sector), உலக வளங்களையெல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டு போய், உலக நாடுகளைக் குப்பைத்தொட்டிகளாக மாற்றி விட்டு, சுற்றுப்புறச் சூழலைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கின்ற மாபாதகம்!


நுகர்வுக் கலாச்சாரம்! எல்லாவற்றையும் அனுபவித்து விட்டுச் செத்துப் போகச் சொல்லும் நுகர்வு வெறியூட்டல், மனிதனின் கீழான இச்சைகளுக்குத் தீனி போடும் சினிமாக்கள், கேளிக்கை விடுதிகள், போதைப்பொருட்கள், நிர்வாணப் படங்கள்! இவற்றின் விளைவாக, வெறி பிடித்த மிருகங்களை விடக் கீழ்த்தரமான கொடுஞ்செயல்களில் ஈடுபடும் மனிதப் பேய்கள்!

உலகளாவிய சந்தை! சந்தை என்பது இன்று உலகமயமாக்கப்பட்டு விட்டது! பெப்ஸி என்பது ஒரு பானம் அல்ல; அது ஒரு கலாச்சாரம்! இயற்கை உணவுகளிலிருந்து நம்மைத் திசை திருப்பி, பயம் காட்டி, கண்ட கண்ட செயற்கை உணவு வகைகளையெல்லாம் நம் தலையில் கட்டி, தீராத புதுப் புது நோய்களை வரவழைத்து, மருத்துவ மாபியாக்களைக் கொண்டு மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் கொடுமை!

வெள்ளையர்களின் நிற வெறி, ஸியோனிச மற்றும் பிராமணிய இன வெறி - காரணமாக இன அழிப்பு, மனிதப் படுகொலைகள், நாடுகள் ஆக்கிரமிப்பு, மக்கள் இலட்சக் கணக்கில் அகதிகளாக வெளியேற்றப்பட்டு அவர்கள் அனைவரும் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கின்ற கொடுமை!

உலகிலேயே இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்ற நாடுகளில் முன்னணியில் நிற்பது அமெரிக்கா. 54% அவர்களுடைய உற்பத்தி தானாம்!

மக்களை அழித்தொழிக்கின்ற ஆயுதங்களை உற்பத்தி செய்து கொள்ளை லாபத்துக்கு அவைகளை இரு தரப்பாருக்கும் விற்று விட்டு, அவர்கள் - ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு அழித்திடும் அரசியல் சித்து விளையாடல்களில் ஆனந்தக் கூத்தடித்துக் கொண்டு, அவைகளைப் பயன்படுத்துபவர்களையே - பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துன்ற கொடுமை!

**

இப்படிப்பட்ட நவீன உலகின் "சீரழிவுகள்" அனைத்துமே,   இந்த பூமிப்பந்தில் மனித வாழ்வு குறித்து கவலையுடன் சிந்திக்கின்ற நல்ல உள்ளங்கள் அனைவரும் அறிந்து வைத்திருப்பவை தான்!

ஆனால், இப்படிப்பட்ட இன்றைய உலகத்தை - முஸ்லிம்கள் எவ்வாறு நோக்குகிறார்கள்? எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? இதனை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை ஆய்வதே இப்பதிவின் நோக்கம்.

முஸ்லிம்களுடைய சிந்தனைப் போக்கை மூன்று விதமாக வகைப்படுத்திப் பார்க்கலாம்.

ஒன்று:

இவர்கள் தங்களை முற்போக்கு முஸ்லிம்கள் (Progressive Muslims)என்று அழைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் இஸ்லாத்தைக் கை கழுவி விட்டவர்கள் என்று சொல்லலாம். இவர்கள் இன்றைய உலகோடு ஒத்துப் போய் வாழ்ந்து விட்டுப் போய் விடுவோம் என்று முடிவெடுத்து விட்டவர்கள். மக்கள் கூட்டத்தில் கரைந்து போய் விட்டவர்கள்.

பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பார்கள். நம்பிக்கை, வழிபாடு, மார்க்க வரம்புகள் இவை எது குறித்தும் கவலைப்படாதவர்கள். இவர்கள் எத்தனை சதவிகிதத்தினர் என்றெல்லாம் நம்மிடம் கணக்கு இல்லை தான். ஆனால், எதிர்காலத்தில் ஒரு பெரும்தொகையான இளைஞர் கூட்டம் இந்த வகை பெயர் தாங்கி முஸ்லிம்களாகி மாறி விட மிக அதிகமான வாய்ப்புகளை முஸ்லிம்களே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக புதிய தலைமுறைப் பெண்களும் இந்தத் திசையில் அடித்துச் செல்லப்பட்டு விடுவார்கள் என்பது தான் வேதனை!

இரண்டு:

நவீன உலகத்தின் "சீரவிழினை" எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதை விடுத்து, தோல்வி மனப்பான்மையைச் சுமந்தவர்களாய், தங்களையும் சுருக்கிக்கொண்டு, மார்க்கத்தையும் சுருக்கிக்கொண்டு விட்டவர்கள். இவர்கள் தான் இன்றைய ஸலஃபிகள்.

இவர்கள் தாம் வாக்கிய வாத அணுகுமுறையாளர்கள். இவர்கள் தான் அடிப்படை வாதிகள் (fundamentalists). இதனை ஏதோ குற்றச்சாட்டாக வைப்பதாகக் கருதிக் கொண்டு விட வேண்டாம்.

சட்டங்களின் நுணுக்கங்களுக்குள் புகுந்து கொண்டு இது ஹலால், அது ஹராம், அது பித்அத், அது வழிகேடு, என்று - மக்களைத் திசைத் திருப்பி விட்டவர்கள்.

இவர்களின் இந்த மன நிலைக்குப் பின்னணியில் ஓர் உளவியல் உண்டு என்கிறார் பேராசிரியர் தாரிக் ரமளான் அவர்கள்.

அது என்ன உளவியல்? உதாரணம் ஒன்றுடன் விளக்குவோம்.

உங்கள் ஊரில் அடிக்கடி திருட்டு நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒரு எச்சரிக்கை உணர்வு வந்து விடும்  உங்களுக்கு! இரவு உறங்கச் செல்லு முன் எல்லாத் தாழ்ப்பாள்களையும் ஒரு தடவைக்கு இரு தடவை, சரிபார்த்து விட்டு உறங்கச் செல்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரமான இடத்துக்கு மாற்றி வைத்து, அடிக்கடி அவைகளைச் சரிபார்த்துக் கொண்டிருப்பீர்கள். அன்னியர்கள் யாராக இருந்தாலும் சந்தேகப்படுவீர்கள். வீட்டுக்கு வரும் அன்றாட பணியாளர்கள் உட்பட அனைவரும் உங்கள் சந்தேகக் கண்களிலிருந்துத்  தப்ப முடியாது.

இன்னொரு முக்கியமான விஷயம்: அனைத்து அதிகாரங்களையும்  "தந்தை" தானே வைத்துக் கொள்வார். பணம் அவர் கையில்! சாவிகள் அவர் கையில்! வீட்டில் எல்லாரையும் கட்டுப் படுத்துவார். எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவார்.

**

அதாவது பய உணர்ச்சி, கட்டுப்பாடுகளை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது! இந்த எளியதொரு உதாரணத்தை மனதில் கொண்டு - ஸலஃபிகள் பக்கம் திரும்புவோம்.

ஸலஃபிகள் உலகத்தை எப்படிப் பார்க்கிறார்கள்?

இன்றைய ஒட்டு மொத்த உலகமும் இஸ்லாத்துக்கு எதிரானது; இஸ்லாமிய வெறுப்பு என்பது இன்று ஒட்டு மொத்த முஸ்லிம் உலகையும் திக்கு முக்காட வைத்திருக்கிறது; இஸ்லாமிய வெறுப்பு என்பது உலக அளவில் நிறுவனமயப் படுத்தப்பட்டுப் பரப்பப்படுகின்றன.

அதாவது இஸ்லாம் பெரும் ஆபத்துக்குள்ளாகி இருக்கிறது! எனவே, இப்போதைய அவசர அவசியத் தேவை என்பதே, இஸ்லாத்தைப் பாதுகாப்பது தான்! எப்படிப் பாதுகாப்பது இஸ்லாத்தை?

நாம் முன்னர் சொன்ன உதாரணத்தில் சுட்டிக் காட்டப்பட்ட "பயம்" எனும் அதே உளவியலின் அடிப்படையில், சட்டங்களைக் கடுமையாக்குவதன் மூலம் தான்!

அப்படியானால், சட்டங்களைக் கடுமையாக்குவது எப்படி?

இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த அணுகுமுறை தான் வாக்கியவாத அணுகுமுறை! இந்த அணுகுமுறையின் மூலம் எளிய மக்களைக் கட்டுப்படுத்துவது சுலபம். ஒரு இறை வசனத்தையோ ஒரு நபிமொழியையோ காட்டி அப்படியே அதற்குக் கட்டுப்படுதலை எதிர்பார்ப்பார்கள்.

சின்னஞ் சிறிய விஷயங்களிலிருந்து, பெரிய விஷயங்கள் வரை - ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆதாரம்! ஆழமான சிந்தனையெல்லாம் ஒன்றும் கிடையாது! கட்டுப்பட்டு விடு சமூகமே! என்பது தான் இவர்களின் ஒரே எதிர்பார்ப்பு.

முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கை முழுவதிலும் தங்களின் "ஆதிக்கத்தை" செலுத்திட பத்வாக்களை அள்ளி வழங்கிக் கொண்டிருப்பார்கள். கேட்டால் மார்க்கத்தைப் பாதுகாக்கிறார்களாம்!

பெண்கள் பள்ளிக்குச் செல்லக் கூடாது! பெண்கள் நிகாப் மட்டுமே அணிந்து வெளியே செல்ல வேண்டும்!

முஸ்லிம்கள் பிற சமய மக்களோடு பழகுவதில் எத்தனைக் கட்டுப்பாடுகள் தெரியுமா? பிற சமய / சமயம் சாரா மக்களைச் சந்திப்பது, முகமன் கூறுவது, அவர்களின் விழாக்களில் கலந்து கொள்வது - எல்லாவற்றிலும் ஏகத்துக்கும் கட்டுப்பாடுகள்.

அடுத்து - ஒரு மிக மிக முக்கியமான விஷயமாகிய பன்மைத்துவ சமூகம் ஒன்றில் சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடு குறித்து இவர்கள் எப்படி சிந்திக்கின்றார்கள், அதனை எவ்வாறு அணுகுகின்றார்கள் என்பதை சற்று விரிவாகவே பார்ப்போம்.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள், அந்தந்த நாடுகளின் அரசியல் வாழ்வில் ஈடுபடலாமா என்ற ஒரு அடிப்படைக் கேள்வியை அவர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

சிறுபான்மையினராக வாழ்கின்ற முஸ்லிம்கள் அந்தந்த நாடுகளில் அரசியலில் ஈடுபடவே கூடாது என்று ஒட்டு மொத்தமாக மறுத்து விடுகிறார்கள் இவர்கள். அதற்கு அவர்கள் சொல்லும் ஐந்து காரணங்கள்

(1) இஸ்லாத்தில் “தேர்தல் முறை” என்று ஒன்று இல்லை (இது குர்ஆனில் உள்ள சொல்லும் அல்ல; தனிமனிதர் ஒருவருக்கும் அரசியல் தலைவர் ஒருவருக்கும் இடையே உள்ள உறவு என்பது ‘பைஅத்’ எனும் உடன்படிக்கை மட்டுமே);

(2) ஒருவர் (அரசியல்) பதவிக்கு ஆசைப்படுபவராக இருக்கக்கூடாது. நபிமொழி ஒன்றின் அடிப்படையில்: “அதிகாரத்தை யார் ஒருவர் கேட்கிறாரோ அல்லது அதனை அடைந்திட விரும்புகிறாரோ, அவருக்கு அதனைத் தரமாட்டோம்!”

(3) ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிடம் மட்டும் தான் அரசியல் ரீதியான உறவு வைத்துக்கொள்ள முடியும்; அல்லாத போது அரசியலில் ஈடுபடுவதில் இருந்து அவர் முற்றிலும் விலகியே இருந்திட வேண்டும்.

(4) ஒரு முஸ்லிம் இஸ்லாமிய அரசியல் தலைமையை மதித்து நடந்திட வேண்டும் – அது அவ்வளவாக நல்லதொரு தலைமையாக இல்லாவிட்டாலும் சரியே; பின் வரும் திருக்குர்ஆனின் கட்டளைக்கிணங்க – “நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்;”

(5) மக்களாட்சித் தத்துவம் என்பது குர்ஆன் சொல்லாதது; இஸ்லாமிய அளவுகோள்களை அது மதிப்பதும் இல்லை; தாருல் இஸ்லாத்துக்கு வெளியே வாழ்கின்ற ஒரு முஸ்லிம், இஸ்லாமிய நெறிமுறைகளூக்கு எதிரான ஒரு அமைப்புக்கு ஆதரவளிப்பதிலிருந்து முற்றிலும் விலகியே இருந்திட வேண்டும்.

இது சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் சொல்லப்படும் கருத்து என்பதையும், இது முற்றிலும் ஒருவரை முடக்கிப்போட்டு விடும் எவ்வளவு குறுகிய வாதம் என்பதையும் நாம் கவனித்திட வேண்டும்.

இப்படிப்பட்ட சிந்தனைப் போக்கு மேற்கில் வாழும் முஸ்லிம்களிடத்தில் பரவலாகக் காணப்படுகிறது. பெட்ரோல் மன்னராட்சி அரசுகள் (குறிப்பாக சவூதி அரேபியா) இப்படிப்பட்ட சிந்தனைப் போக்கை ஆதரிக்கவும் செய்கின்றன. தக்க வைத்தும் கொள்கின்றன. இளைய தலைமுறைக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை அவர்கள் வாழும் சமூக அரசியல் சூழலிலிருந்து சுத்தமாகப் பிரித்தெடுத்து, வெறும் வணக்க வழிபாடுகளையும், சடங்கு சம்பிரதாயங்களை மட்டும் பின்பற்றக் கூடியவர்களாக அவர்களை ஆக்கி வைத்துள்ளனர்

(முஸ்லிம்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதே ஒரு அரசியல் தான் என்கிறார் தாரிக் ரமளான்!)

இதில் மிகப்பெரிய கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? இவர்களிடத்தில் எல்லாமே பைனரி தான்! அதாவது நான் சொல்வது மட்டுமே சரி! அப்படியானால் மற்ற அனைவரும் சொல்வது அனைத்தும் தவறு! நாங்கள் சொல்வது மட்டுமே நேர் வழி! எனவே மற்ற அனைத்தும் வழிகேடு!

இதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் என்ன தெரியுமா?

முஸ்லிம்களைக் கடும் உளவியல் ரீதியான அவஸ்தைக்கு ஆளாக்கியிருக்கிறது இந்த அணுகுமுறை! ஒரு குற்ற உணர்ச்சியுடனேயே வாழ்ந்திட வேண்டிய மன நிலை!

இவர்கள் ஏன் இப்படி மார்க்கத்தைக் குறுக்கி விட்டார்கள் தெரியுமா? இதுவும் உளவியல் தான்!

இதனைப் புரிந்து கொள்ள நாம் நபியவர்கள் நபித்தோழர்களுக்கு அளித்த பயிற்சி குறித்து நாம் கொஞ்சம் அலசிட வேண்டும்.

சுருக்கமாக இங்கே சொல்வதென்றால் - நபித்தோழர்களை தன்னம்பிக்கை (confidence) உடையவர்களாக பயிற்றுவித்தார்கள் நபியவர்கள்!

இன்றைய ஸலஃ பிகள் முஸ்லிம்களைத் தோல்வி மனப்பான்மை (victim mentality) உடையவர்களாக மாற்றப் பார்க்கிறார்கள்.

நபித்தோழர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக விளங்கியதற்கு என்ன காரணம்?

இறைவனின் வழிகாட்டல் (வஹி) இது தான் என்று தெரிந்து விட்டால், "செவியுற்றோம், கட்டுப்பட்டோம்" என்று கட்டுப்பட்டு விடுவார்கள் நபித்தோழர்கள்.

ஆனால், அதே நேரத்தில், நபியவர்கள் எடுக்கின்ற ஒரு தேர்வு அல்லது ஒரு முடிவு, அது இறைவனின் வழிகாட்டுதல் அல்ல, அது நபியவர்களின் சொந்த முடிவு என்று தெரிய வந்தால், நபியவர்களுக்கே ஆலோசனை வழங்கும் அறிவும் துணிவும் அந்த நபித் தோழர்களுக்கு இருந்தது. மட்டுமல்ல. நபியவர்களே நபித்தோழர்களை இது விஷயத்தில் ஊக்குவிப்பவர்களாகவும், தனது கருத்தை மாற்றிக் கொள்ளக் கூடியவர்களாகவும் விளங்கினார்கள்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை, இது தான் பகுப்பாய்வுச் சிந்தனை (critical thinking) என்கிறார் தாரிக் ரமளான்.

இந்தப் பகுப்பாய்வுச் சிந்தனையே, நபித்தோழர்களுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது!

இந்தத் தன்னம்பிக்கையுடன் தான் அந்த நபித்தோழர்கள் வெளி உலகத்தை அணுகினார்கள். வெளி உலக சவால்கள் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவைகளைச் சந்திப்பதற்கு அவர்கள் தயங்கியதே இல்லை! நேரடி வழிகாட்டுதல் இல்லாத விடத்து, பொதுவான நல்லதொரு கருத்து அது எங்கிருந்து வந்தாலும் அதனை எடுத்துக் கொள்ளத் தயங்கியதே இல்லை! எதனை எடுத்துக் கொள்ள வேண்டும், எதனையெல்லாம் எடுத்துக் கொண்டு விடக் கூடாது என்பதில் எல்லாம் அவர்கள் மிகத் தெளிவாக இருந்தார்கள்.

இப்படிப்பட்ட தன்னம்பிக்கை இல்லாததினால் தான், வெளி உலகத்தை எட்டிப் பார்ப்பதற்கு பயந்தவர்களாக, எல்லாவற்றையும் உள்ளிழுத்துக் கொண்டு, மூடிக்கொண்ட சமூகமாக நம்மை மாற்றப் பார்க்கிறார்கள் நவீன ஸலஃபிகள்!


***

மூன்று:

நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்கள். இன்றைய உலக சூழ்நிலையை நன்றாகப் புரிந்து வைத்திருப்பவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்பவர்கள். இஸ்லாத்தையும், இன்றைய உலக சூழலையும் சேர்த்துக் கற்றிட ஊக்குவிப்பவர்கள்.

இவர்கள் பகுப்பாய்வுச் சிந்தனையுடன் (critical thinking) களத்தில் நிற்பவர்கள். எல்லாரையும் அரவணைப்பவர்கள். வரைமுறைகளுக்குட்பட்ட கருத்து வேறுபாடுகளை அனுமதிப்பவர்கள்.

இஸ்லாமிய சட்டங்களை அதன் உயர்ந்த நோக்கங்களோடு இணைத்துப் புரிந்து வைத்திருப்பவர்கள்.

ஒரு முஸ்லிம் எங்கிந்தாலும், அவன் அங்கே மதிப்புக் கூட்டுபவனாக விளங்கிட வலியுறுத்துபவர்கள். இறைத்தூதின் மிக அடிப்படை நோக்கமாகிய நற்பண்புகளைப் பரிபூரணப்படுத்தல் என்பதை மையப் புள்ளியாக்கி செயல்பட அழைப்பவர்கள்.

பிற சமய / சமயம் சாரா மக்களுடன் பண்பாட்டியலைப் பகிர்ந்து (universal shared ethics) கொள்ள விழைபவர்கள்.

தாங்கள் வசிக்கின்ற நாட்டின் சிறந்த குடிமக்களாக விளங்குவதுடன், குடிமக்களின் பொறுப்புகளைச் சுமக்க வலியுறுத்துபவர்கள். அரசியலில் பண்பாடு கலந்து ஈடுபட ஊக்குவிப்பவர்கள்.

நீதிக்குக் குரல் கொடுத்திட ஏனையோருடன் இணைந்து செயல்படத் தூண்டுபவர்கள். அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்திட, நியாயத்துக்காகப் போராடிட ஏனைய சமயம் சார்ந்த / சமயம் சாரா மக்களுடன் சேர்ந்து களம் காண்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள் இவர்கள். இதற்கு ஆதாரமாக, நபியவர்களின் "ஹிள்புல் புளூல்" ஒப்பந்தத்தை எடுத்துக் காட்டுகிறார்கள்.

நல்லதொரு இலட்சியத்துக்காகக் களம் இறங்கும் போது, பிற சமய மக்களின் திறமைகளை நாம் பயன்படுத்திக் கொள்வதும் அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள் அவர்கள். நபியவர்கள் தனது ஹிஜ்ரத்தின் வழிகாட்டியாக, தமது எதிரி சமயத்தைப் பின்பற்றும் ஒருவரை நியமித்துக் கொண்டார்கள் என்பதை நினைவூட்டுகிறார்கள் அவர்கள். இதே வழிமுறையை, நபித்தோழர்களும், ஏன் நபித்தோழியர்கள் கூட பின்பற்றியிருக்கிறார்கள் என்பதும் சீரத் காட்டும் சான்றாகும் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். (உத்மான் பின் தல்ஹா அவர்கள்,  உம்மு சலமா (ரளி) அவர்களுக்குத் துணையாக மதினா வரை சென்று விட்டு வந்த நிகழ்வு).

மார்க்கத்தைத் தெளிவாகக் கற்றுணர்ந்து கொண்டால், பிற மக்களுடைய கலாச்சாரத்திலிருந்து எவைகளை எடுத்துக் கொள்ளலாம், எவைகளை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற குழப்பம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. நபித் தோழர்கள், அவர்கள் வெளியுலகை இப்படித்தான் அணுகினார்கள். தீமைகளைத் தவிர்த்து விட்டு, நன்மை அது எந்தக் கலாச்சாரத்தில் இருந்தாலும் அதனை எடுத்துக்கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டியதே இல்லை. அவைகளைத் தமதாக்கிக் கொண்டு அவைகளை மேலும் மெருகூட்டி அழகாக்கிக் காட்டினார்கள்.

“அல்ஹிக்மது லாள்ளதுன்......” எனும் நபிமொழி அது பலவீனமாக இருந்தாலும் அதன் கருத்து சரியே என்கிறார் தாரிக் ரமளான்.

வெளி உலக தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திக் கொள்ள நபியவர்கள் தயங்கியதே இல்லை என்பதை, அகழ் யுத்தத்தின் போது சல்மான் ஃபார்ஸி அவர்களின் அகழ் தோண்டும் யுத்தியை அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பதும் சீரத்தின் பாடம் தானே!

பொதுவாகவே - மனிதர்கள் யாவரையும் மதித்து வாழக் கற்றுக் கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம். (17:70).

ஏனைய மக்கள் மீது அன்பு செலுத்தாத வரை நீங்கள் நம்பிக்கையாளர்களாக ஆக முடியாது என்பது நபிமொழி. அகிலத்தார்க்கெல்லாம் அருட்கொடை - நபியவர்கள் என்கிறது திருமறை.

பன்மைத்துவத்தை அனுமதித்ததே நாம் தான் என்கிறான் இறைவன்! (49:13). ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காகத் தான் இந்த ஏற்பாடு என்கிறான் இறைவன். எனவே - இன்றைய உலகில் மற்றவர்களை, அவர்களின் பழக்க வழக்கங்களை, பண்பாட்டியல்களை, கலாச்சாரங்களைப் புரிந்து கொண்டு மதிப்பளித்து வாழ்தல் அவசியம் என்கிறார்கள் இன்றைய நவீன கால இஸ்லாமிய சிந்தனையாளர்கள்!

பாரம்பரிய இமாம்களின் ஆய்வுகள் அனைத்தும், அவர்கள் வாழ்ந்த காலச்சூழலைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டவாக்கங்கள் என்பதை சுட்டிக்காட்டி, அந்த இமாம்களின் ஆய்வுகளைப் புனிதப்படுத்தி அவைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற விழைவது சரியல்ல என்கிறார்கள் அவர்கள். அத்தகைய இமாம்களின் ஆய்வுகளிலிருந்து நாம் பாடம் படித்துக் கொண்டு, புதிய ஆய்வுகளை நமது சூழலுக்கு ஏற்ப மேற்கொண்டு துணைச் சட்டங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் நவீன ஆய்வாளரக்ள்.

நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களிடம் நாம் கவனித்திட வேண்டிய இன்னொரு மிக முக்கியமான கருத்தோட்டம் - பெண்களின் சமூகப் பங்களிப்பு பற்றியது. பெண்களின் பங்களிப்பு இன்றி நவீன காலத்தின் சவால்களைச் சந்திப்பதென்பது இயலாது என்பதை வலியுறுத்துபவர்கள்.

ஆணாதிக்கத்துக்கோ, குடும்ப வன்முறைக்கோ இஸ்லாத்தில் இடமில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்கள் அவர்கள். பெண்கள் பள்ளிக்கு வருவதை நபியவர்கள் தடுத்ததில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பெண்கள் பள்ளிக்கு வருவதையும் ஊக்குவிக்கிறார்கள் அவர்கள்.

**

இத்தகைய ஆய்வுகளுடன், முஸ்லிம் சமூகத்துக்குத் தன்னம்பிக்கை ஊட்டி, தம் சமூகத்துப் பிரச்னைகள் மட்டுமல்லாமல், இன்று உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற, கட்டுரையின் துவக்கத்தில் நாம் சுட்டிக் காட்டியிருக்கின்ற அனைத்து வித சீரழிவுகளிலிருந்தும், உலகத்தைக் காத்திட, பொதுச் சமூகத்து நல்லோர்களுடன் இணைந்து களம் காணும் வல்லவர்கள் அவர்கள்.

**

இப்படிப்பட்ட மூன்று வகையினரைத் தவிர்த்து ஏனையோர் நிலை என்ன?

பாரம்பரிய இமாம்களைப் பின்பற்றும் மத்ஹபு சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். இவர்களும் நவீன கால சிந்தனையை ஏற்பவர்கள் இல்லை. இவர்களில் ஒரு சாரார், மத்ஹப் வெறியர்களாக ஆகி விடுவதும் உண்டு.

தஸவ்வுப். மற்றும் சூபியிஸம் எனப்படும் ஆன்மிக சிந்தனையாளர்கள். இவர்களும் தனி மனித நல்லொழுக்கம், இறையச்சம் என்பனவற்றோடு தங்களை சுருக்கிக் கொள்பவர்கள் தாம். இஸ்லாமிய வெறுப்பை வென்றெடுக்கும் ஆற்றல் ஆன்மிகத்துக்கு மட்டுமே உண்டு என்று தங்களை மட்டுப்படுத்திக் கொள்பவர்கள்.

**

இப்போது கேள்வி என்னவெனில், இன்றைய முஸ்லிம் சமூகத்தை தாழ்வு மனப்பான்மையிலிருந்து தன்னம்பிக்கையை நோக்கி வழி நடத்திச் சென்றிடும் மன வலிமையும், அறிவாற்றலும், இவர்களில் யாருக்கு இருக்கிறது என்பது தான்!

பதிலை நீங்களே சொல்லுங்கள்!

Comments