இந்தத் தவ்ஹீத் எனக்குப் போதும்!

இறைவன் எங்கே இருக்கின்றான் என்ற கேள்விக்கு வானத்தை நோக்கி கையை உயர்த்திக் காட்டிய சிறுமியின் தவ்ஹீத் எனக்குப் போதும்!

"உன் எஜமானின் ஆட்டை என்னிடம் கொடுத்து விடு. பணம் தருகிறேன்," என்றதற்கு ஆட்டிடையன் மறுத்து விட, "அட, உன் எஜமானனா வந்து பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எதிர் கேள்விக்கு "அல்லாஹ் எங்கே போனான்?" என்ற பதிலில் உள்ள சிறுவனின் தவ்ஹீத் எனக்குப் போதும்!


பாலில் தண்ணீர் கலக்க மறுத்து, "கலீபா பார்க்காவிட்டாலும், அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்!" என்று பொன்னெழுத்தால் பொரிக்கப்பட்ட அந்த சொல்லுக்குச் சொந்தக்கார சகோதரியின் தவ்ஹீத் எனக்குப் போதும்.

மும்பையில், அஷ்ரப் என்பவர் தனது பணம் நிறைந்த பயணப்பெட்டியைத் தொலைத்து விட, அதனைக் கண்டெடுத்துக் கொடுத்ததும், அஷ்ரப் கொடுத்த இரண்டு லட்சம் ரூபாயைப் பெற மறுத்து, "அல்லாஹ்வின் முகத்தில் எப்படி விழிப்பேன்!" என்று சொன்ன முஹம்மத் ஹனீப் எனும் சாதாரண ரயில்வே தொழிலாளியின் தவ்ஹீத் எனக்குப் போதும்!

"அகீதா" படித்து விட்டு, தாம் மட்டுமே சரியான மன்ஹஜில் இருப்பதாக பெருமை அடித்து, நீண்ட தாடி ஒன்றை வைத்துக் கொண்டு, மற்றவர்களை காபிராக்கி, முஷ்ரிக் ஆக்கி, வழி கெட்டவர்- வழிகெடுப்பவர் என்றெல்லாம் பட்டம் கட்டி , சதா நரக பயம் காட்டி, எதற்கெடுத்தாலும் பத்வா கொடுத்துக் கொண்டு - தற்பெருமை அடித்துக் கொள்ளும் ஸலபியாக, வஹ்ஹாபியாக, தவ்ஹீத்வாதியாக நான் ஆகிட விரும்பவில்லை!

Comments