உலமாக்களும் பட்டதாரிகளும் ஒன்றிணைதல் சாத்தியமே!

P S அலாவுதீன் அவர்கள். ஃ பீ லிலாலில் குர்ஆன் முப்பதாவது பாகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர். நவீன காலச் சட்டங்களுக்கு இஸ்லாத்தின் அறைகூவல் எனும் அப்துல் காதிர் அவ்தா ஷஹீத் அவர்களின் நூலையும் மொழிபெயர்த்தவர்கள் அவர்கள் தான்.

எனக்கு மிக நெருங்கிய பழக்கம். மார்க்கம் படித்த மவ்லவிகளும், அறிவியல் கலைக் கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளும் பொது வாழ்வில் ஒன்று சேர்வதன் அவசியம் குறித்து தொடர்ந்து பேசி வந்தவர் அவர். பேச்சோடு நிற்காமல், அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் அயராது மேற்கொண்டவர். ஆனால் 1986 - ல் அல்லாஹ் அவரை அழைத்துக் கொண்டான்.

அவர் சிறியதொரு உதாரணம் சொல்வார்:


"நாங்கள் மவ்லவிகள் ஜும்ஆவிலே மார்க்கத்தை எடுத்துச் சொல்கிறோம். (அவர் ஜும் ஆ உரைகளைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!)

ஆனால் ஊர் நிர்வாகிகள் - "இதையெல்லாம் இங்கே பேசிடக் கூடாது" என்று எங்களைத் தடுத்து விடுகிறார்கள். நாங்கள் என்ன செய்திட முடியும்?

உங்களைப் போன்ற பட்டதாரி இளைஞர்கள் ஒரு பத்து பேர் சேர்ந்து கொண்டு - "மவ்லவி அவர்கள் பேசுவது என்ன தவறு? அவர் மார்க்கத்தைத் தானே சொல்கிறார்; அதனை நீங்கள் எப்படித் தடுக்க முடியும்? என்று களம் இறங்கினால் சீர்திருத்தத்துக்குத் தானாக வழி ஏற்பட்டு விடுமே!" என்பதே அவர்கள் ஏக்கமாக இருந்து வந்தது.

இந்த அடிப்படையிலேயே மார்க்க அறிஞர்களும் , ஏனைய பட்டதாரிகளும் ஒன்று சேர்வதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.

இன்று நாம் இன்னொரு கட்டத்துக்கு வந்துள்ளோம். Scholars of the Text and the scholars of the Context - ஆகிய இரு பிரிவாரும் ஒன்று சேர்ந்திட வேண்டியதன் அவசியத்தை நாம் மக்களுக்கு உணர்த்திட வேண்டிய கட்டத்துக்கு நாம் வந்துள்ளோம்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் - இன்று இருக்கக் கூடிய மவ்லவிகள் "அனைவரையும்" நாம் ஒரே அளவுகோல் வைத்து அளந்திட வேண்டிய அவசியம் இல்லை. முப்பது வருடங்களுக்கு முன்பே - அலாவுதீன் அவர்களின் கருத்தோடு ஒத்துப் போகக் கூடிய சுமார் 700 மவ்லவிமார்கள் இருந்தார்கள்!

இன்றைய காலத்தின் சவால்களைத் திறன்பட எதிர்கொள்வதற்கு, மார்க்கம் படித்த மவ்லவிகளும், பொதுக்கல்வி படித்த பட்டதாரிகளும் ஒன்றிணைய வேண்டியது மிக அவசியம்.

// இவ்விரு வகையினரையும் ஒன்று சேர்க்கும் பொறிமுறைதான் Transformation Reform க்கு துணைநிற்கிறது என அறிய முடிகிறது. இலங்கையிலும் இவ்வகையான மாற்றங்களை நோக்கி அவசரமாக நகரவேண்டியிருக்கிறது // என்கிறார் ஷெய்ஃ க்  ரிஷாட் நஜிமுதீன்.

"முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்;  ஜகாத்தைக் கொடுத்து வருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்." (9:71)

Comments