சூரத்துன் நபா சிந்தனைகளில் இருந்து கொஞ்சம் மட்டும்!


அத்தியாயத்தின் மையக்கருத்து: மரணத்துக்குப் பின் வாழ்வு உண்டா?

ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக படைக்கப்பட்டிருக்கின்ற ஆறு ஜோடிகளைப் பற்றி அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான். (பார்க்க வசனங்கள்: 6 - 16)

பூமி - மலைகள்

மனிதர்களில் ஆண்-பெண்

மரணமும் வாழ்வும்

இரவும் பகலும்

ஏழு வானமும் சூரியனும்

மழையும் தாவரங்களும்


இந்த ஜோடிகளை இங்கே ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம் - மரணத்துக்குப் பின் வாழ்வு என்பதை மறுத்து வந்த குறைஷியருக்குப் "புரிய" வைப்பதற்காகத் தான்!

படைக்கப்படுகின்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு "ஜோடி" இருப்பது போல - இவ்வுலக வாழ்க்கைக்கு ஜோடி மறுமை வாழ்க்கை தான்!

எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் உதாரணங்களை சற்று கவனித்துப் பார்ப்போம்.

பூமி முதலில் படைக்கப்படுகிறது. அது சாய்ந்து விடாமல் இருக்கும் பொருட்டு மலைகள் படைக்கப்படுகின்றன. பூமியை மலைகள் ஸ்திரப்படுத்துகின்றன!

அது போல ஆண் - பெண் ஜோடி படைக்கப்பட்டிருப்பது, அவர்கள் ஒருவருக்கொருவர் உற்ற துணையாக விளங்குவதற்காகத் தான்!

அது போலவே, உறக்கம், வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது. வாழ்க்கையின் அசதி -உறக்கத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறது.

அது போலவே - இரவு தான் முதலில் குறிப்பிடப்படுகிறது இங்கே. அதற்கு ஜோடியாகவே பகல் படைக்கப்பட்டிருக்கிறது. இரவின்றி பகலையும், பகலின்றி இரவையும் எண்ணிப்பார்க்கவே இயலாது!

அடுத்து ஏழு வானங்களைக் குறித்து விட்டு, சூரியனைப் பற்றி சொல்ல வருகிறான் இறைவன். நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் - ஏழு வானங்கள் இன்றி, சூரியன் நிலைபெறல் சாத்தியமில்லை! சூரியனின்றி, ஏழு வானங்கள் நிலைபெறுவதும் சாத்தியமில்லை!

இறுதியாக, மழையைப் பற்றிச் சொல்கின்றான். தொடர்ந்து அந்த மழையைப் பெற்றுக்கொண்டு முளைக்கின்ற தாவர இனத்தைப் பற்றி குறிப்பிட்டுக் காட்டுகின்றான். மழை தாவர உற்பத்திக்கு எவ்வளவு முக்கியமோ, அது போல, தாவரங்கள் மழை பொழிவதற்கு மிக அவசியம் என்பதை நாம் அறிந்தே வைத்திருக்கின்றோம்.

**

இந்த உதாரணங்களின் அடிப்படையில், இவ்வுலக வாழ்க்கைக்கு ஜோடியாக மறுமை வாழ்க்கை உண்டு என்பதை இறைவன் நிறுவிக்காட்டுகின்றான்.

மேலதிகமாக நாம் இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த ஆறு ஜோடிகள் ஒவ்வொன்றிலும், "எது முதலில்?" என்பதை சற்றே கவனியுங்கள்!

1 பூமி முதலில் - மலைகள் அடுத்து!

3 மரணம் முதலில், வாழ்வு அடுத்தது!

4 இரவு முதலில், பகலே அடுத்தது!

5 ஏழு வானங்களின் படைப்பைத் தொடர்ந்தே, சூரியனின் படைப்பு!

6 முதலில் மழை! தொடர்ந்து வருவது தாவர உற்பத்தி!

இப்போது இரண்டாம் உதாரணத்துக்கு வருவோம்.

திருக்குர் ஆனின் பல இடங்களில் ஆண்-பெண் இரு பாலரையும் தனித்தனியே குறிப்பிடப்பட்டிருக்கின்ற வசனங்களை நாம் பார்க்கலாம். ஆனால் இங்கே, உங்களை நாம் ஜோடியாக படைத்திடவில்லையா எனக் கேட்கிறான். ஏன் இங்கே ஆண் முற்படுத்தப்படவில்லை? சிந்தியுங்கள்!

குறிப்பாக ஆணாதிக்க சிந்தனையாளர்கள்!

மேலும் கவனத்திற்கு: ஆணுக்குப் பெண்ணே துணை! பெண்ணுக்கு ஆணே துணை! ஓரினச் சேர்க்கையாளர்கள் கவனிக்க!

"இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்." எனும் இறை வசனத்துடன் "திருமணம் எனது வழிமுறை!​"(அன்-நிகாஹ் மின் சுன்னதீ) எனும் நபிமொழியையும் இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும்.

மேலும், உங்களில் பருவம் எய்தியவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து விடுங்கள் எனும் நபிமொழியையும் சேர்த்தே கவனித்திட வேண்டும். அலைபாய்கின்ற உணர்வுகள் அடங்கிப் போக வைக்கும் அழகான வழிமுறையே திருமணம்.

மேலும், விவாக விலக்குக்கு ஆளானவர்கள், மறுமணம் செய்து கொள்வதே - அவர்களின் ஸ்திரத்தன்மைக்கு, சகீனா எனும் மன அமைதிக்கு (பார்க்க 30:21) வழி வகுப்பதாக ஆகும்.
ஆட்டம் காணும் பூமியை, மலைகள் உறுதிப்படுத்துவது போல - ஆணொ பெண்ணோ - துணையுடன் வாழ்வதே சிறப்பு!

மூன்றாவது உதாரணத்திலும், ஒரு நுட்பம் பொதிந்துள்ளது.

மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம். வசனம்: 9

இங்கே தூக்கத்தைப் பற்றித்தானே குறிப்பிடப்பட்டுள்ளது? வாழ்க்கை பற்றிக் குறிப்பிடவில்லையே? என்று ஒரு கேள்வி கேட்கப்படலாம்.

முஹம்மத் அஸத் அவர்களின் மொழிபெயர்ப்பு இதோ:

And We have made your sleep [a symbol of] death

இவ்வசனத்தில் வரும் சுபாத் என்பதற்கு மரணம் என்ற பொருள் உண்டு என்கிறார் அவர்.

“Zamakhshari, stressing the primary significance of subat as "cutting-off" (qat), i.e., "death"; Also the famous second-century philologist Abu Ubaydah Ma'mar ibn al-Muthanna, who (as quoted by Razi) explains the above Qur'anic phrase as an "analogue (shibh) of death".

அதாவது, உறக்கத்தை மரணத்தோடு ஒப்பிடுவதன் மூலம், எதனைப் புரிய வைக்கிறான் இறைவன்?
எவ்வாறு நீங்கள் தூக்கத்துக்குப் பிறகு எழுந்து நிற்கிறீர்களோ, அது போலவே மரணத்துக்குப் பின்னும் எழுந்து நிற்பீர்கள் என்பதைத்தான்!

பின்னர் ஏன் இங்கே "தூக்கம் அல்லது மரணம்" என்ற ஒன்றைப்பற்றி மட்டும் குறிப்பிட்டு விட்டு அதன் ஜோடியான "வாழ்வு" பற்றி இங்கே பிரித்துச் சொல்லப்படவில்லை?

அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களைப் படித்துப் பாருங்கள்:

எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
மகத்தான அச்செய்தியைப் பற்றி! எதைப்பற்றி அவர்கள் வேறுபட்ட கருத்துக்கள் கொண்டிருக்கிறார்களோ அதைப் பற்றி!

அதாவது - இங்கே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் விஷயமே Topic of discussion மரணத்துக்குப் பின் வாழ்வு உண்டா என்பது தானே?

அப்படியிருக்க, அந்த விவாதத்தை இந்த இடத்தில் வைத்து - மரணத்தையும் வாழ்க்கையையும் நாம் படைக்கவில்லையா என்பதை உடைத்துச் சொல்லாமல், விவாதத்தைத் தொடர்கின்றான் இறைவன்! இது தான் இறைவனின் ஸ்டைல்!

இந்த விவாதத்தை எங்கே வைத்து முடிக்கின்றான் தெரியுமா?

மறுமையில் மனிதர்கள் எழுப்பப்படுவதை அவர்கள் கிண்டலடித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்!
அவர்களுக்கு என்ன பதில்?

கடைசி வசனத்தின் கடைசிப் பகுதியைப் படியுங்கள்!

படிப்பினை: கிண்டலடித்தவர்கள் கிண்டலடிக்கப்படுவார்கள்!

Comments