அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம்!அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம்!

மர்யம் (அலை) அவர்களின் வாழ்விலிருந்து நாம் என்னென்ன பாடங்களைப் படித்துக் கொள்ள முடியுமோ, கிட்டத்தட்ட அதே போன்ற பாடங்களை நாம் அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் வாழ்விலிருந்தும் கற்றுக் கொள்ளலாம்.

இறைவனின் உத்தரவின் படி ஹள்ரத் இப்ராஹிம் (அலை) அவர்கள், தன் மனைவி ஹாஜரா (அலை) மற்றும் தன் கைக்குழந்தை இஸ்மாயில் (அலை) இருவரையும், மக்கள் யாருமே வசித்திராத அந்தப் பாலைவன மக்காவில் விட்டு விட்டுச் சென்று விடுகிறார்கள்.


இப்றாஹீம் (அலை) அவர்கள் சென்றதன் பின் ஹாஜரா (அலை) அவர்களின் கையிருப்பில் இருந்த ஈச்சம்பழமும் தீர்ந்து விட்டது. கைக்குழந்தையாகிய இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பாலூட்டுவதற்கும் பால் சுரக்கவில்லை. பசியின் காரணமாக குழந்தை இஸ்மாயீல் அழத் தொடங்குகிறது.

என்ன செய்வார் அன்னை? குழந்தை அழுவதைக் கண்ட அன்னையின் உள்ளம் பதறுகிறது. குழந்தையை அங்கேயே விட்டு விட்டு உணவு தேடி அங்குமிங்குமாக ஓடுகிறார்.

அங்கிருந்த மலைக்குன்று ஒன்றில் ஏறி ஏதாவது தெரிகிறதா என்று பார்க்கிறார். எந்தவிதமான அறிகுறியும் தென்படவில்லை. அந்த மலையிலிருந்து இறங்கி பள்ளத்தாக்கிலே ஓடி வேறொரு மலைக்குன்றில் ஏறிப் பார்க்கிறார். அங்கும் ஒன்றும் தென்படவில்லை!

அந்த இரு மலைக் குன்றுகளும் தான் ஸபாவும் மர்வாவும்.

பள்ளத்தாக்கிலே ஓடும் போது, வேகமாக ஓடுவதற்காக, தனது ஆடையை கரண்டைக் கால்களுக்கு மேல் உயர்த்திக் கொண்டு ஓடியதாக வரலாற்றில் நாம் பார்க்கிறோம்.

இவ்வாறு ஏழு தடவை, அங்கும் இங்குமாக ஓடி, மலை மேல் ஏறி - ஒன்றும் தென்படாத அந்த நிலையில் தான், அந்த சப்தத்தை அவர் உணருகிறார். இஸ்மாயீல் (அலை) அவர்களின் பாதத்தின் கீழ் இருந்தே அந்த சத்தம் வந்து கொண்டிருந்தது.

வானவர் ஜிப்ரீல் இறங்கி கிணறு ஒன்றை தோண்டி விட்டிருந்தார். இஸ்மாயீல் (அலை) அவர்களின் பாதத்தின் கீழ் நீர் ஊறத் தொடங்கியது. மகிழ்ச்சியுடன் நீர் இருக்கும் திசையை நோக்கி ஹாஜரா (அலை) அவர்கள் ஓடி வந்தார்கள். வறண்ட நிலத்தில் தண்ணீர் வற்றிவிடக் கூடாது என்பதற்காக தண்ணீரைச் சுற்றி கைகளால் ஒரு அரண் அமைத்தார்கள்.

பாடங்களுக்கு வருவோம்.

பாடம்  1:

இங்கேயும், அன்னை ஹாஜரா தன் கைக்குழந்தையுடன் தன்னந்தனியே!  அதுவும் பாலைவனத்தில். மலைக்குன்றுகளைத் தவிர்த்து நாலா பக்கமும், மணல் வெளி தான்! மக்களின் நடமாட்டத்துக்குக் கிஞ்சிற்றும் சாத்தியமில்லாத சூழல்!  ஹள்ரத் இப்ராஹிம் (அலை) அவர்கள், தன் மனைவியை விட்டுப் பிரிந்து செல்லும் சமயத்தில், அன்னை ஹாஜரா (அலை) கேட்கிறார்கள். "இது உங்கள் விருப்பமா? அல்லது இறைக் கட்டளையா? என்று.  அல்லாஹ் அவர்களுக்கு தன் மனைவியிடம் ஆறுதலாகப் பேசிடுவதற்குக் கூட அனுமதி அளித்திருக்கவில்லை! அதிசயம்! தன் கையை விண்ணை நோக்கி உயர்த்தியவர்களாக சைகை ஒன்றை மட்டும் காட்டி விட்டு, சென்று விடுகிறார்கள் கணவன் இப்ராஹிம் அவர்கள்.

"சரி, இது அல்லாஹ்வின் உத்தரவு தானே? அவனுக்குத் தெரியாதா எமது நிலை? என் குழந்தைக்கு உணவு இல்லை என்பது அவனுக்குத் தெரியும் தானே? யாரும் தென்படவில்லை. எதுவும் தென்படவில்லை. நான் என்ன செய்து விட முடியும்?" - என்று படுத்து உறங்கச் சென்று விட்டார்களா அவர்கள்? இல்லையே!

ஓடுகிறார்கள். இந்த மலை உச்சியிலிருந்து அந்த மலை உச்சிக்கு! ஒரு தடவை பார்த்து விட்டால் தான் போதுமே! அது ஏன் மீண்டும் மீண்டும்? திரும்பவும் திரும்பவும் ஏறி ஏறிப் பார்த்தால், அதே வெட்ட வெளி தானே கண்ணுக்கெட்டிய தூரம் வரையில்!  உடலில் பலம் இருக்கு மட்டும் ஓடிக் கொண்டெ இருப்போம் என்று எண்ணி விட்டார்களோ?

ஏழு தடவை அங்கும் இங்குமாக ஓடிய பின் என்ன பலம் உடலில் மிஞ்சியிருக்கும்? வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். ஹஜ்ஜின் போதோ அல்லது உம்ராவின் போதோ, சபாவுக்கும் மர்வாவுக்கும் இடையில் ஏழு தடவை ஓடிய பின்னர் உங்கள் "பலத்தை" சோதனை செய்து பாருங்கள். அப்படி ஒரு களைப்பு ஒன்றை அனுபவிப்பீர்கள்!

அப்படி எல்லா பலத்தையும் இழந்து நிற்கின்ற அந்த நிலையில் தான், அன்னை ஹாஜரா அவர்களுக்கு ஸம் ஸம் தண்ணீரைக் காட்டுகிறான் அல்லாஹ்!

நமது பலவீனத்தை முன்னிட்டு, முயற்சியிலிருந்து "விதி விலக்கு" பெறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை மிகத் தெளிவாக உணர்த்தும் பாடம் ஒன்று உண்டு என்றால் அது இது தான்!

பாடம் இரண்டு:

நாம் முன்னர் பார்த்தது போலவே - அன்னை ஹாஜரா அவர்களின் "முயற்சிக்கும்" அதன் "விளைவாகிய" ஸம் ஸம் நீருக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் இல்லையே!  என்ன பாடம்?

"நீ முயற்சி செய்! கடுமையாக முயற்சி செய்! தொடர்ந்து முயற்சி செய்! ஆனால் உனக்கு எதைக் கொடுக்க வேண்டும், எப்படிக் கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்பவன் நான் தான் என்பதை மறந்து விடாதே!" என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறான் வல்லோன் அல்லாஹ்!

பாடம் மூன்று:

இதிலிருந்து தனி ஒருவருக்கான பாடத்தைப் படித்துக் கொள்வதோடு மட்டும் நின்று விடாமல், நமது கூட்டு வாழ்க்கைக்கான பாடத்தையும் நாம் கற்றுக் கொள்ளத் தவறி விடக் கூடாது. நாம் சிறுபான்மையினர், நாம் பலவீனமானவர்கள் என்ற சிந்தனைப் பாங்கினைத் தள்ளி வைத்து விட்டு, தன்னம்பிக்கையுடன் அன்னை ஹாஜரா (அலை) அவர்களைப் போல "தொங்கோட்ட" முயற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

குறிப்பு ஒன்று:

இந்தப் பாடங்களை ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மனங்களில் பசுமையாக விதைத்திடத் தானோ என்னவோ, ஹஜ் உம்ரா செய்யும் அனைவருக்கும் - "தொங்கோட்டம்" கடமையாக்கப்பட்டிருக்கின்றது என்றால் அது மிகையில்லை!

நபி (ஸல்) அவர்கள் ஹாஜரா (அலை) அவர்களின் இந்தச் சம்பவத்தைச் சொல்லும் போது "ஹாஜரா (அலை) அவர்கள் ஓடியதை நினைவு கூருவதற்காகவே நாமும் ஹஜ்ஜின் போதும் உம்ராவின் போதும் ஸபா-மர்வாவிற்கிடையில் ஓடுகிறோம்" என்று கூறியிருக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பு இரண்டு:

முயற்சி எதுவும் இன்றி உதவி என்று ஒன்று இல்லை என்பதை அழுத்தமாக நமக்குள் விதைக்க அல்லாஹ் "பலவீனமான" இரண்டு பெண்மணிகளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்பதையும் மனதில் வைப்போம்.

இதில் துணைப்பாடம் ஒன்றிருக்கிறது. அது - பெண்களின் "முயற்சியின்றி" தூதுத்துவப் பணி கூட முழுமை பெறாது என்பது தான்! பெண்களைப் பள்ளிவாசலுக்குக் கூட அனுமதிக்காதவர்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்!

தனித்து விடப்பட்டால் கூட, எந்த நிலையிலும், தன்னம்பிக்கை இழக்காமல், பெண்மணிகளால் எப்படிப்பட்ட சூழலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை நிரூபித்துக் காட்டத்தான், அல்லாஹ் ஹள்ரத் இப்ராஹிம் (அலை) அவர்களை, மனைவியையும், குழந்தையையும் விட்டு விட்டுப் போய் விடச் சொன்னான் போலும்!

குறிப்பு மூன்று:

இந்தப் பதிவு, திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளையும் பெற்றுப் போட்டு விட்டு, குடும்பத்துக்கு சம்பாதித்துப் போடாமல், ஊர் சுற்றுகின்ற பொறுப்பற்ற கணவன்மார்களுக்கு சமர்ப்பணம். ஏன் இதனை எழுதுகிறேன் என்றால், உளவளத்துணையாளர் என்ற முறையில், நான் நம் சமூகத்தில் அவதானிப்பதை மனதில் கொண்டு தான்!

Comments