தப்லீக் ஜமாஅத் பற்றிய ஒரு சிறு விமர்சனம்


இது ஒன்றும் அவர்களைப் பற்றிய முழுமையான விமர்சனம் கிடையாது. ஆனால் அவர்களில் ஒரு சிலருடைய "மன நிலை" குறித்த விமர்சனம் மட்டுமே.

எனது நண்பர் ஒருவர். தப்லீக் ஜமாஅத்தில் கொஞ்சம் ஈடுபாடு உள்ளவர். மூன்று நாள் ஜமாஅத், நாற்பது நாள் ஜமாஅத், வெளிநாடு ஜமாஅத் எல்லாம் சென்று வருபவர் தான்.

சில நேரங்களில் அவரால், ஜமாஅத் பணிகளில் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாமல் போய் விடுமாம். வெள்ளி இரவு பள்ளியில் தங்குதல், உள்ளூர் ஜமாஅத்துக்கு நேரம் ஒதுக்குதல் போன்ற வழக்கமான பணிகளில் அவருக்குத் தொய்வு ஏற்பட்டிருக்கின்றது.

ஒரு தடவை, அவருடைய காரில் நீண்ட தூரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில், ஒரு சிறு விபத்து. வழியில் மரம் ஒன்றிலிருந்து அதன் கிளையோ, காயோ ஏதோ ஒன்று அவரது காரின் முன் பக்கக் கண்ணாடியில் விழுந்து, கண்ணாடி சுக்கு நூறாக அப்படியே நொறுங்கிப் போய் விட்டது. அது கொஞ்சம் செலவும் வைத்து விட்டது. அவ்வளவு தான்.

இதனை, அவரது இதர ஜமாஅத் சகோதரர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

"அவர் இப்போதெல்லாம் முன்பு போல் இல்லை. ஜமாஅத் பணிகளில் அவருக்கு அலட்சியம் வந்து விட்டது. அதனால் தான் அல்லாஹ் அவரைத் "தண்டித்து" விட்டான்!"

இது ஒரு இறை நம்பிக்கையாளனின் சரியான மன நிலையா என்பதே என் கேள்வி!

எம் சகோதரன் ஒருவனை - விபத்தொன்றிலிருந்து - அல்லாஹ் காப்பாற்றி இருக்கின்றான் என்று, இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக, அந்த சகோதரனைப் பார்த்து ஆறுதல் சொல்லி விட்டு வருவதற்கு பதிலாக, இது என்ன வக்ர புத்தி என்று தான் நான் கேட்கிறேன்.

இவர்களின் மன நிலையையும், நம் சகோதரிகள் - அலைபேசிகளைப் பயன்படுத்துவதை மிகக் கொச்சையாக பேசுபவரின் மன நிலையையும் நான் ஒன்றாகத் தான் பார்க்கிறேன்.

சமூகத்தைப் பற்றிய கவலை, கவலை என்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே, இவர்கள் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுபவர்களாக எமக்குத் தெரியவில்லை.

Comments