இணைத்துப் பேசுங்கள்! பிரித்துப்பேசாதீர்கள்!


முஸ்லிம்கள், "முஸ்லிமல்லாதவர்கள்" (Muslims, Non-Muslims) என்று கூறுவதைவிட, பிற சமயத்தவர்களை அவரவர் அடையாளங்களுடன் அழைத்துப் பேசுவதே சிறப்பு.

முஸ்லிம்களை Non-Hindus என்றோ Non-Buddhists என்றோ Non-Christians என்றோ அழைப்பதை நாம் விரும்ப மாட்டோம் தானே? நமது அடையாளத்தை அளவுகோலாக்கி, மற்றவர்களை அடையாளப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

ஒவ்வொருவருக்கும் அவரவர் அடையாளம் உண்டு! அவரவர்களுடைய அடையாளங்களுடன் அவர்களை அழைப்பதே - கண்ணியம் (dignity), பண்பு (ethics) மற்றும் மதித்தல் (respect) ஆகும்!


பெருந்திறளாக பலதரப்பட்ட மக்களும் ஒன்று கூடியிருக்கும் சமயங்களில் - "பிற சமய மற்றும் சமயம் சாரா சகோதரர்களே, சகோதரிகளே!" - என்று அழைத்துப் பேசுவது சாலச் சிறந்தது!

**

திருமறையில், பல இறைத்தூதர்கள் தம் மக்களை - எனது சமூக மக்களே (யா கவ்மீ!) என்றே அழைத்திருக்கின்றார்கள் என்று தான் நாம் பார்க்கின்றோம்.

அது போல நம்மைச் சூழ்ந்துள்ள பன்மைத்துவ மக்களை, "நம்முடன் இணைத்து" அழைப்பதே அழகு! அடிப்படை மனித உறவுக்கு இந்த பிணைப்பு முக்கியம்! இந்த அடிப்படையில் நாம் எனதருமைச் சமூகமே என்று அழைக்கலாம். தமிழ்ச் சமூகமே என்று அழைக்கலாம்.

**

நபி யூசுப் (அலை) அவர்கள் கூட சிறையில் இருந்த அந்த இரண்டு கைதிகளை – “யா சாஹிப இஸ்ஸிஜ்ன்!” - எனதருமைச் சிறைத் "தோழர்களே" என்றே அழைத்ததிலிருந்து கூட நாம் பாடம் கற்றுக் கொள்ள மாட்டோமா?

**

மக்களில் குறிப்பிட்ட சிலரை “இறைவன்” - காபிர் என்றோ இணை வைப்பவர் என்றோ சொல்லி அழைக்கலாம். ஏனெனில் அவன் இறைவன். ஆனால் - பிற மக்கள் மீது - இவர்கள் காபிர்கள் - என்று முத்திரை குத்தவோ, அவர்களைப் பற்றி முன்முடிவு செய்திடவோ (Judgmental) நாம் யார்?

அந்த அதிகாரம் இறைவன் ஒருவனுக்குத்தானே உண்டு! "அல்லாஹ்" அவ்வாறு சொல்லலாம். இறைத்தூதர்கள் கூடச் சொல்லலாம். நாம் சொல்லக் கூடாது! அப்படிச் சொல்வதை நான் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். அப்படிச் சொன்னால் அல்லாஹ்வின் அதிகாரத்தை நாம் கையில் எடுத்துக் கொள்கிறோம் என்றே பொருள்!

**

இல்லை, ஒரு பேச்சுக்குத் தான் கேட்கிறேன்.

ஹள்ரத் ஹன்ளலா (ரளி) அவர்கள் கூட தாம் முனாபிக் ஆகி விட்டோமா என்று தானே சந்தேகப்பட்டு ஓடினார்கள், ஏன்? அபூபக்ர் (ரளி) அவர்களுக்கும் கூட அதே சந்தேகம் வரத் தானே செய்தது.

ஹள்ரத் உமர் அவர்களும், நபியவர்கள் கொடுத்திருந்த முனாபிக் பட்டியலில் தன் பெயர் இருக்கிறதா என்று தானே அஞ்சியவராகத் தானே, அந்த பட்டியலை வைத்திருந்த நபித்தோழரிடம் போய் நின்றார்கள்.
ஏன் உங்களுக்கு மட்டும் பிறர் மீது முத்திரை குத்துவதில் அவ்வளவு ஆர்வம் என்று கேட்கிறேன்.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது, குறைஷிகள், முஹம்மத் ரசூலுல்லாஹ் என்று எழுதப்படுவதைக் கூட விரும்பாமல், முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்றே எழுதப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, அண்ணலார் அதனை ஒத்துக் கொண்டு, தம் கையாலேயே, தன் பெயரை அழித்து விட்ட "பணிவை" நீங்கள் அறிய மாட்டீர்கள்???

காபிர் என்பதற்கு நீங்கள் "வரைவிலக்கணம்" எல்லாம் தரத் தேவையில்லை! அந்தச் சொல் தங்களை இழிவுபடுத்துவதாக மற்றவர்கள் எண்ணும் சூழலில், அதனைத் தவிர்த்துக் கொள்வது தான் தூதர் காட்டிய பண்பு!

அழைப்புப்பணியில் விவேகம் என்பதும், அழகிய உபதேசம் என்பதும் உங்களுக்கு சுட்டுப்போட்டாலும் வரவே வராது!

Comments