சூரா அல்-ஃபீல் முதல் சூரா அன்-நாஸ் வரை - ஓர் ஆய்வு! (பகுதி - 1)(குர்ஆனின் இறுதிப் பகுதியில் இடம் பெற்றுள்ள சூரா அல்-ஃபீல் முதல் சூரா அன்-நாஸ் வரை - ஒவ்வொரு அத்தியாயமும் அதற்கு அடுத்து வருகின்ற அத்தியாயத்துடன் எப்படி பிணைக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்கிறது இக்கட்டுரை.)

திருக்குர்ஆனில் யானை அத்தியாயம் என்பது ஒரு அத்தியாயம். சூரா அல் ஃபீல் என்று அதற்குப் பெயர். மக்காவின் இறையாலயம் கஃபதுல்லாஹ்வை இடித்துத் தள்ளும் தீய நோக்கத்துடன் யமனின் ஆட்சியாளன் ஆப்ரஹா 60,000 பேர் கொண்ட படை ஒன்றுடன் புறப்பட்டு வந்தான். இது நடந்தது 1400 ஆண்டுகளுக்கு முன்பு!

ஆனால் மக்காவின் அன்றைய குறைஷி குலத்தலைவர்களுக்கு, யானைகளுடன் கூடிய ஆப்ரஹாவின் பெரும்படையை எதிர்த்துப் போராடும் துணிவு இல்லை. அருகில் உள்ள மலைக் குன்றுகளில் போய் ஒளிந்து கொண்டார்கள்.

ஆனாலும் ஆப்ரஹாவின் தீய எண்ணம் நிறைவேறியதா என்றால் அது தான் இல்லை! அல்லாஹ் - தன் இறையாலயத்தைத் தானே பாதுகாத்துக் கொள்வது என்று முடிவு செய்து வைத்திருந்தான். தனது நேரடிப் பார்வையிலேயே அபாபீல் பறவைகளை அனுப்பி சிஜ்ஜீல் கற்களைக் கொண்டே அந்தப் படையை அழித்தொழித்தான் இறைவன்!

அந்தச் செய்தி அன்றிருந்த அரபுலகம் முழுவதும் அறிந்த செய்தியாகும். எனவே மறக்க முடியாத நிகழ்வைக் கொண்ட அந்த ஆண்டை "யானை ஆண்டு" என்று  அழைத்து வந்தனர். அதே ஆண்டில் தான் அண்ணல் முஹம்மது அவர்களும் பிறந்தார்கள் மக்காவிலே! இந்த சம்பவத்தைத் தான், யானை அத்தியாயத்தில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான் இறைவன்.

ஒரு நாற்பது ஆண்டுகள் கழிகின்றன. அண்ணல் முஹம்மது, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களாகப் பொறுப்பேற்று மக்களை இறை மார்க்கத்தின் பக்கம் அழைக்கிறார்கள். ஆனால் அவர்களை எதிர்க்கிறார்கள் அன்றைய குறைஷி குலத் தலைவர்கள்!

அப்படி எதிர்க்கின்ற மக்கத்துக் குறைஷியருக்குத் தான் யானை ஆண்டின் சம்பவத்தை நினைவூட்டிக் காட்டுகிறான் இறைவன்.

எதற்காக நினைவூட்டிட வேண்டும் அதனை?

இதற்கு விடையாகத்தான் அடுத்த அத்தியாயம் அல் குறைஷ் விளங்குகிறது!

**

யானைச் சம்பவம் நடந்து முடிந்ததும், மிக முக்கியமான "அலை" ஒன்று அரபுலகம் முழுவதும் வீசியது. அது என்ன தெரியுமா? அது தான் - குறைஷியருக்குச் சாதகமான அலை!

அன்று மக்காவின் குறைஷியருக்கான ஒட்டு மொத்த வருமானமே, அவர்கள் புரிந்து வந்த வியாபாரத்தின் மூலமாகத் தான்! அவர்களுக்கு விவசாயம் எல்லாம் ஒன்றும் தெரியாது! ஒன்று அவர்கள் கோடைக்காலத்தில் வடக்கு நோக்கி ஷாம் வரைக்கும் சென்று பொருளீட்ட்டுவார்கள். இன்னொன்று - குளிர்காலத்தில் தெற்கு நோக்கி யமன் வரைக்கும் சென்று பொருளீட்டுவார்கள்.எல்லாமே ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் தான்!

பாலைவனத்தில் வியாபாரப் பொருட்களுடன் பயணிப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல! எந்த நேரமும் கொள்ளையடிக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்துடன் தான் பயணம் செய்திட வேண்டும்.

ஆனால் யானை ஆண்டிற்குப் பிறகு குறைஷியருக்கு அந்த பயம் இல்லாமல் போய் விட்டிருந்தது! ஏன்?

"இவர்கள் மீது கை வைத்தால், யானைப் படைக்கு நேர்ந்த கதி எமக்கும் வந்து விடுமோ என்ற பயம் தான்! அதனால் - யானைப்படை வெற்றி - குறைஷியருக்கு ஒரு பாது காப்பு வளையத்தை போட்டுத் தந்திருந்தது!

அதனால் குறைஷியர் எந்த வித பயமும் இல்லாமல் தங்கள் வியாபாரப் பொருட்களுடன் பயணம் செய்து பொருளீட்டுதல் மிகச் சுலபமாக ஆகி விட்டிருந்தது.

அப்படிப்பட்ட பாதுகாப்பு வளையத்தைப் போட்டுத் தந்த மக்காவின் இறைவனை வணங்குவதில், இறை மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் என்று கேட்பது தான் இந்த அத்தியாயம்!

**

அடுத்த அத்தியாயத்துக்கு வருவோம்.

இந்த மக்கா நகரின் இறைவனை வணங்குங்கள் என்று சொன்னான் அல்லவா இறைவன்? அந்த ஒரே இறைவனை வணங்குவதில் என்ன தயக்கம் குறைஷியருக்கு? இறை மார்க்கத்தை அவர்கள் ஏற்க மறுத்ததுடன் அதனை ஏன் எதிர்த்து நிற்கவும் செய்தார்கள்?

இங்கே தான் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இறை மார்க்கம் - தீன் - என்றால் - சிலை வணக்கம் உட்பட எல்லாவிதமான இணை வைப்புக் கோட்பாடுகளையும் நிராகரித்து, எல்லாம் வல்ல ஏக இறைவனை ஏற்றுக்கொண்டு அவனை வழிபடுவது தான் மார்க்கம் என்பதை - சற்றே ஒரு பக்கத்தில் வைத்து விட்டு, இறை மார்க்கம் என்றால் என்ன என்று அடுத்த அத்தியாயம் என்ன வரைவிலக்கணத்தைத் தருகிறது என்று பார்ப்போம்.

இந்த அத்தியாயம் இறை மார்க்கம் - தீன் - என்பதற்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு இலக்கணத்தைத் தருவதை கவனியுங்கள்.

இந்த மார்க்கத்தின் ஆணிவேரான கோட்பாடுகளுள் மிக முக்கியமானது என்ன தெரியுமா?

மனிதனின் "வாழ்வாதாரங்கள்" அனைத்தும் இறைவன் புறத்திலிருந்து வழங்கப் பட்டவையே! அவை அனைத்தும் எந்த ஒரு மனிதருக்கோ, அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ சொந்தமானதே அல்ல. பலம் மிக்கவன் பொருள்களைச் சேர்த்துக் கொண்டு இவை அனைத்தும் எனக்குத்தான் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை!

" நான் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவு செய்யுங்கள்!" என்பது தான் இம்மார்க்கத்தின் ஆணி வேர்!

பலவீனர்களால் பொருளீட்ட முடியாமல் போகலாம். சூழ் நிலைகள் பல குடும்பங்களை ஆதரவற்றவர்களாக ஆக்கி விடலாம். பலரை அனாதைகளாக்கி விடலாம். ஏழைகளாக்கி விடலாம்.

பலம் மிக்கவர்கள் "அளவுக்கு மீறி" பொருள் ஈட்டினால் அதில் ஏழைகளுக்கும் உரிமை இருக்கிறது என்பது தான் இம்மார்க்கத்தின் அடிப்படை!

இக்கோட்பாட்டை மறுத்து, பொருள்களை பலவீனர்களுக்கு வழங்கிட மறுப்பவர்கள் தான் இம்மார்க்கத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவர்கள் என்கிறது இந்த அத்தியாயம்.

இங்கே இன்னொரு கருத்தையும் முன் வைக்கிறான் இறைவன்.  "நாங்களும் இறைவனை வணங்குபவர்கள் தாம்" என்று பிறருக்குக் காட்டிக்கொண்டு, அனாதைகள் மற்றும் ஏழைகளின் உரிமைகளில் யாரெல்லாம் "கை" வைக்கிறார்களோ - அவர்களின் "ஆன்மிகம்" அழிவைத் தவிர வேறொன்றையும் அவர்களுக்குப் பெற்றுத்தராது என்று எச்சரிக்கவும் இறைவன் தவறவில்லை இந்த அத்தியாயத்தில்!

"நான் போட்டுத் தந்த பாதுகாப்பு வளையத்தினால் தான் எந்த வித பயமும் இன்றி பாலைவனப் பயணம் மேற்கொண்டு நீங்கள் பொருளீட்டினீர்கள். எனவே அது நான் உங்களுக்குக் கொடுத்தது தான்! அதிலிருந்து அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் கொடுக்கச் சொல்லும் எனது மார்க்கத்தை நீங்களே எதிர்ப்பது உங்களின் (குறைஷிகளின்) "நன்றி கெட்டத்தனம்" அல்லவா?" என்று  கேட்காமலேயே உணர்த்திக் காட்டுகிறான் குறைஷிகள் கைவிட்டு விட்ட மக்காவைத் தானே காப்பாற்றிய இறைவன்!  

இம்மூன்று அத்தியாயங்களையும் மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். இணைப்பு புரியும்!


**

தொடரும்!

Comments