திருமண சீர்திருத்தம் - ஒரு கலந்துரையாடல்!


கண்ணியம் மிக்க எனது ஆசான் கணியூர் இஸ்மாயில் நாஜி அவர்கள் திருமண சீர்திருத்தம் சம்பந்தமாக சில ஆலோசனைகளைக் கேட்டிருந்தார்கள் முக நூல் பதிவு ஒன்றில். இதோ எனது கருத்துகள் என்று அவருக்கு பதிலாக எழுதியவை:

திருமணங்களில் அனுமதிக்கப்பட்டவையும் தவிர்க்கப்பட வேண்டியவையும்::

1 அழைப்பிதழ் வைத்து அழைப்பதில் எல்லாம் தவறே இல்லை; ஆனால் அது எளிமையாக இருந்தால் போதுமானது. ஆனால் சிலர் அதில் ஆடம்பரம் காட்டுகிறார்கள்.

2 நேரில் வந்து அழைத்தால் தான் வருவோம் என்ற பிடிவாதம் ஒன்று நிலவுகிறது சமூகத்தில். இந்த வலையுக காலத்தில், அலைச்சலைத் தவிர்த்தல் இரு வீட்டாருக்கும் சிரமங்களைக் குறைக்கும்.

3 பேருந்து அல்லது வேன் வைத்து ஊர் விட்டு ஊர் அழைத்துச் சென்று திருமணம் நடத்தப் படுவதிலும் மாற்றம் தேவை. குடும்பத்தினரை மட்டும் அழைத்து எளிமையாக திருமணம் நடத்தி விட்டு, அவரவர் ஊரில் விருந்து வைத்துக் கொடுத்தாலே போதுமானது.

4 எத்தனை பேரை அழைக்கலாம் என்பதற்கெல்லாம் அளவு கோல் போட முடியாது. ஒன்றை மட்டும் சொல்லலாம். "இத்தனை" பேரை அழைத்தாக வேண்டும் என்ற போலி கவுரத்துக்காக, கடன் பட்டு செலவு செய்வதை  அவசியம் தவிர்த்தாக வேண்டும். சிலர் வட்டிக்குக் கூட கடன் வாங்கி செலவு செய்கிறார்கள். இது சமூக அழுத்தம். சமூக அழுத்தத்துக்கு பலியாகி, சமரசம் செய்து கொள்பவர்கள் தான் நம்மில் அதிகம். நான் உட்பட!

5 ஒவ்வொன்றுக்கும் நபி மொழி கேட்காதீர்கள். நபியவர்களின் மவுனம், இறைவனின் கருணையாகும். இறையச்சம், தூய்மையான எண்ணம், நமது இதயம் ஆகியவை மட்டுமே அளவுகோல். எதற்கெடுத்தாலும் இது ஷிர்க் அது பித்அத் என்று முத்திரை குத்துவது மிகவும் தவறு. கலாச்சாரம் குறித்த ஒரு ஆழமான மறு பரிசீலனை இன்றைய தேவை.

6 நிகாஹ் நிகாஹ் மட்டும் தான். //அவர்கள் அனைவரையும் அழைத்து அடுத்த நலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வாக// அமைத்திட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை! இறைவன் மிக அறிந்தவன்.

7 இவை எல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியமான ஒன்று இருக்கிறது. மணப் பொருத்தம் பார்க்காமல் ஜோடி சேர்த்து வைத்து விடுவது!  ஒட்டு மொத்த திருமண சீர்திருத்தம் ஒன்றை வேண்டி நிற்கிறது சமூகம்.

7 இது விவாதம் இல்லை. கருத்து மட்டுஂமே. இதனை கலந்துரையாடல் என்று அழைக்கலாம். 

Comments