ஒரு திருமணத்தைக் காப்பாற்ற பொய் சொல்லுங்கள்! தவறில்லை!


அபூ அஸ்ரா அல் துஆலி (Abu ‘Azrah al-Du’ali) என்பவர் ஹள்ரத் உமர் (ரளி)  அவர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர். இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்வார்; பின்னர் விவாகரத்து செய்து விடுவார். பின்னர் இன்னொரு பெண்ணை திருமணம் முடிப்பார்; கொஞ்ச நாளில் அவரையும் விவாகரத்து செய்து விடுவார். இந்தக் கதை தொடர்ந்து நடக்கவும், மக்கள் இவரைப் பற்றிப் பேசத் தொடங்கி விட்டார்கள். இவர் விவாகரத்துக்குப் பெயர் போனவர் என்று.

மக்கள் தம்மைப் பற்றி இவ்வாறு பேசுவதைக் கேள்விப்பட்டதும், அப்துல்லாஹ் இப்ன் அல்அர்கம் என்ற சகோதரரை அழைத்துக் கொண்டு தம் வீட்டுக்கு வந்தார் அவர். அவரை அருகில் வைத்துக் கொண்டு அபூ அஸ்ரா தம் மனைவியிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக, நீ என்னை வெறுப்பது உண்மை தானே, சொல்" என்றார்.

அந்த மனைவி, "அப்படியெல்லாம் இறைவனை முன்னிறுத்தி என்னைக் கேட்காதீர்கள்!" என்று மறுக்கவும், "இல்லை, நான் கேட்பேன் தான்!  சொல்!" என்றார் கணவர்.

"ஆமாம்! இறைவன் மீதாணையாக, நான் உம்மை வெறுப்பது உண்மை தான்!" என்று சொல்லி விட்டார் அந்த  மனைவி!

அபூ அஸ்ரா, அப்துல்லாஹ்விடம், "உமது காதில் விழுந்ததா?" என்று சொல்லி விட்டு அவரை அழைத்துக் கொண்டு ஹள்ரத் உமர் அவர்களிடம் வந்தார்.

"நான் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு  அநியாயமாக விவாகரத்து செய்து விடுவதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். என் மனைவி என்ன சொன்னார் என்று அப்துல்லாஹ்விடம் கேளுங்கள்", என்றார்.

அப்துல்லாஹ் நடந்ததைச் சொன்னதும், உமர் அவர்கள், அந்த மனிதரின் மனைவியை அழைத்து வாருங்கள் என்றார்கள்.

" நீங்கள் தான், உங்கள் கணவரை வெறுப்பதாகச் சொன்ன அந்தப் பெண்மணியோ?" - என்றார் உமர்.

அந்தப் பெண்மணி சொன்னார், "நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே! இறைவனின் கட்டளையை மீறித்  தவறு  என்று ஒன்றைச் செய்து விட்டால், உடன் பாவமன்னிப்புக் கேட்டு மீண்டு விடும் பெண்மணிகளில் நான் முதலாமவள் தான்!"

"அவர் இறைவன் மீதாணையாக என்று கேட்டு விட்டதால், நான் என்ன பொய்யா சொல்ல முடியும்? பொய் சொல்வது தவறு என்பதால் தான் நான் அவ்வாறு சொல்லிட வேண்டியதாயிற்று."

"பொய் சொல்!" - என்றார் உமர் அவர்கள்!


"உங்களது வாழ்க்கைத் துணையை எவரேனும் நேசிக்காவிட்டால், அதனை நீங்கள் சொல்லிக் காட்ட வேண்டாம்! ஏனெனில் பிரியம், பாசம், நேசத்தின் மீது அமைக்கப்பட்ட குடும்பங்களெல்லாம் மிக மிகக் குறைவானவையே!"

"மக்கள் - தங்களை அனுசரித்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருப்பதெல்லாம், அவர்களின் இஸ்லாத்தையும், இஹ்ஸானையும் முன்னிறுத்திக் கொண்டு தான்!" - என்று முடித்தார்கள் உமர் அவர்கள்!

அதாவது இறைவனுக்குக் கட்டுப்பட்டு ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டு போய்க் கொண்டிருக்க வேண்டியது தான் என்பதே உமர் அவர்கள் சொல்ல வருகின்ற நல்லுபதேசமாகும்!

(My reference: kalamullah.com // Their reference: al-Khara’iti’s book on character)

Comments