பொருள் உண்டா? பொருள் ஏதும் இல்லையா?


நான் - "சொல்" ஒன்றைச் சொல்கிறேன். அதனை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஏனெனில் அந்தச் சொல்லுக்கு - பொருள் (meaning) ஒன்று இருக்கிறது! ஆனால் - என் வாயிலிருந்து புரிந்து கொள்ள முடியாத சப்தம் ஒன்றை நான் வெளிப்படுத்துகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது என்ன சப்தம்? இதற்கு எந்தப் பொருளும் (meaningless) இல்லையே! இவர் எதனை வெளிப்படுத்துகிறார்? - என்று வியப்பீர்கள்!

பொருள் பொதிந்த சொல் ஒன்றை நாம் பயன்படுத்துகிறோம் எனில் அந்தச் சொல்லுக்கு குறிப்பிட்ட ஒரு பொருளை நாம் முன்னமே கொடுத்து வைத்திருக்கிறோம் என்று பொருள். அதனால் தான் அதனை ஒருவர் பயன்படுத்தும்போது மற்றவர் அதனை அவ்வாறே "புரிந்து கொள்கிறார்".

இந்த உதாரணத்தை எதற்கு நாம் இங்கே முன் வைக்கிறோம்?

நாம் வாழும் இந்தப் பேரண்டத்தையும் இதில் நம் வாழ்க்கையையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பேரண்டத்தின் இருப்புக்கும், அமைப்புக்கும், இயக்கத்துக்கும், இதில் மனித இனத்தின் வாழ்க்கை ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பதற்கும் - ஏதேனும் பொருள் (meaning)  இருக்கிறதா? இல்லையா? (meaningless) - என்ற கேள்வியை உங்களுக்கு முன்னால் வைப்பதற்காகத்தான் - அந்த உதாரணத்தை நாம் இங்கே எடுத்துக் காட்டியுள்ளோம்.

இரண்டு பதில்கள் தயாராகக் காத்திருக்கின்றன!

ஒன்று : இந்தப் பேரண்டத்துக்கும், இதில் நம் வாழ்க்கைக்கும் ஒரு பொருள் இருக்கிறது! சமயம் சார்ந்த மற்றும் சமயம் சாராத தத்துவங்களில் சிலவும் - இந்தக் கருத்தை முன் வைக்கின்றன!

இரண்டு:  இந்தப் பேரண்டத்துக்கும், இதில் நம் வாழ்க்கைக்கும்  எந்த ஒரு பொருளும் கிடையாது! இங்கு இருப்பது எல்லாமே, அணுக்களும், அணுத்துகள்களும் - அவை ஒன்றோடொன்று தற்செயலாக மோதிக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் தாம்!  சமயக் கருத்தோட்டங்களை முற்றாக மறுப்பவர்கள்  எடுத்து வைக்கும் கருத்து இது!

இப்போது சிந்திக்க வேண்டியது நீங்கள் தாம்!

எந்தக் கருத்து உங்களுடையது? எதனால் அந்தக் கருத்தை ஏற்கிறீர்கள்?

இதில் நீங்கள் சிந்திப்பதற்கு நிறைய இருக்கிறது!

உதாரணம் உங்களுக்கு உதவும்!

நாம் முன்னர் குறிப்பிட்ட உதாரணத்தை மனதில் இருத்திக் கொண்டு நாம் வாழும் பேரண்டத்தையும், நம் வாழ்வையும் குறித்து சிந்தியுங்கள். 

Comments