எது தர்மம்?



ஆக்கம்: எஸ் ஏ மன்சூர் அலி

"சதகா" அல்லது "ஸதகா" எனும் அரபிச் சொல்லை ஆங்கிலத்தில் charity என்றும் தமிழில் தர்மம் என்றும் மொழிபெயர்க்கிறோம். ஸதகா எனும் இச்சொல்லின் மூல அரபிச் சொல் -  ஸாத்-தாள்- காஃப் - ஆகிய மூன்று எழுத்துக்களைக் கொண்டது. 

இந்த மூலச்சொல் பெயர்ச்சொல்லாக (noun) வரும்போது, அதற்கு பின் வருமாறு பொருள் கொடுக்கப்படுகிறது: Sadaqah – alms, charitable, gift, almsgiving, charity, voluntary contribution of alms. பொதுவாக இதனை தர்மம் என்று மொழிபெயர்க்கலாம். 

ஆனால், இதன் மூலச்சொல்லுக்கான வினைச்சொல் "ஸ-த-க" என்பதாகும். இதன் பொருள்: to speak the truth;  be sincere; to tell the truth; to prove to be true. அதாவது உண்மை சொல்தல், உண்மை பேசுதல் என்று பொருள் தருகிறது.

பெயர்ச் சொல்லின் பொருள்: தர்மம்

ஆனால் வினைச்சொல்லின் பொருள்: உண்மை

இது வியப்பை அளிக்கிறதா இல்லையா?

தர்மத்துக்கும் உண்மைக்கும் என்ன சம்பந்தம்?

ஆமாம்! உண்மைக்கும் தர்மத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது தான்!

சாதிக், சித்தீக் - என்ற பெயர்களுக்கெல்லாம், உண்மையாளர் என்று தானே மொழிபெயர்க்கிறோம்!

சிந்திக்க வேண்டிய விஷயம் தான் இது!

தர்மம் என்றால் என்ன? நம்மிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுப்பது தானே தர்மம்?

"நம்மிடம் இருப்பது" - என்பதன் "உண்மை" அதாவது யதார்த்தம் (reality) என்ன?

திருமறை அல்-பகரா அத்தியாயத்தின் துவக்கத்திலேயே இதற்கு விடை இருக்கிறது.

"நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து, அவர்கள் செலவு செய்வார்கள்!" ( அல்-பகரா 2: 03 )

அதாவது - நம்மிடம் இருப்பதெல்லாம் - "நமக்குச் சொந்தமானது" என்று எண்ணுவது உஂண்மையன்று!

மாறாக நம்மிடம் இருப்பதெல்லாம், இறைவன் நமக்களித்தது என்று எண்ணுவது தான் உண்மை! 

அப்படியானால், இறைவன் நமக்களித்ததிலிருந்து நாம் ஒன்றைப் பிறருக்குக் கொடுக்கிறோம் என்று கொடுத்தால் அதுவே உண்மையான தர்மம்! நம் செல்வத்திலிருந்து நாம் கொடுக்கிறோம் என்ற எண்ணத்துடன் கொடுத்தால் அது தர்மமே அன்று!

வானம் பூமி இவற்றுக்கு இடையில் உள்ள அனைத்தும் இறைவனுக்கே உரியது என்பதுவும் திருமறையில் திரும்பவும் திரும்பவும் வருகின்ற ஒரு கருத்து தான். அல் மாவூன் அத்தியாயத்தின் வசனங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

நபியே! இம்மார்க்கத்தைப் "பொய்ப் படுத்துபவனை நீர் அறிவீரா?" என்று துவங்கும் இவ்வத்தியாயம், அனாதைகளை வெறுட்டுபவன் தான் அவன் என்கிறது அதற்கடுத்த வசனம்.

சித்க் எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் தான் "கித்ப்" ஆகும். கித்ப் என்றால் பொய். ("யுகஃத்திபு பித்தீன்" - தீனைப் பொய்ப்படுத்துபவன்!)

திருமறையின் வேறு சில இடங்களில் இந்த - ஸ-த-க எனும் சொல்லை மொழிபெயர்க்கும்போது, உண்மைப்படுத்துதல் என்றும் சிலர் மொழிபெயர்க்கிறார்கள். தர்மம் என்றும் வேறு சிலர் மொழிபெயர்க்கிறார்கள்.

75: 31

فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ‏ 

ஆனால் அவன் உண்மையாக்கவும் இல்லை; அவன் தொழவுமில்லை.

ஆனால் அல்லாமா யூசுப் அலி அவர்கள் இதனை மொழிபெயர்க்கும்போது இவ்வாறு மொழி பெயர்க்கிறார்:

So he gave nothing in charity, nor did he pray!

அதாவது - charity - என்ற சொல்லைக் கொண்டு தர்மம் செய்திடவில்லை என்று உணர்த்துகிறார்!

**

அருமையான நபிமொழி ஒன்று இக்கருத்தின் ஆழத்தை நமக்கு அறியத்தருகிறது!

அபூதர் அல் கிஃபாரி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
"சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது ஒவ்வொரு மனிதன் மீதும் கடமையாகும்."

நான் (அபூதர்) கேட்டேன்: "இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எந்த ஒன்றையும் பெற்றிருக்காவிட்டால், எதிலிருந்து நாங்கள் தர்மம் செய்திட முடியும்?"

நபியவர்கள் பதிலளித்தார்கள்: "அல்லாஹு அக்பர் என்று சொல்வது, சுப்ஹானல்லாஹ் என்று சொல்வது, அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்வது, லா இலாஹ இல்லல்லாஹ் என்று மொழிவது, அஸ்தக்ஃபிருல்லாஹ் என்று சொல்வது இவை எல்லாமே தர்மத்தின் (ஸதகாவின்) வாசல்கள் தாம்" -  என்றார்கள்!

"நன்மையை ஏவுவது, தீமையை விலக்குவது, முட்கள், எலும்புகள், கற்கள் போன்றவற்றை மக்களின் பாதைகளிலிருந்து அப்புறப்படுத்துவது, ஒருவருக்குத் தேவைப்படும் பொருளின் பக்கம் - அது உங்களுக்குத் தெரியும் எனில், அவருக்கு வழி காட்டுவது, உதவிக்கு அழைக்கும் ஒருவருடைய கவலையைப் போக்கிட, வரிந்து கட்டிக்கொண்டு, ஒருவரால் ஆன மட்டும் விரைந்து செல்வது,  உங்களுடைய பலத்தைக் கொண்டு பலவீனர்களுக்கு ஆதரவளிப்பது - 

"இவை எல்லாமே தர்மத்தின் வாசல்கள் தாம்! தர்மம் என்பது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்; உங்கள் மனைவியுடன் உடலுறவு கொள்வதற்கும், உங்களுக்குக் கூலி இருக்கிறது."- இது அஹ்மத் எனும் நபிமொழி நூலில் பதிவாகியுள்ளது.

முஸ்லிம் எனும் நபிமொழி நூலில் மேலும் பதிவாகியுள்ளது: "இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தனது இச்சையைத் (தன் மனைவியிடம்) தணித்துக் கொள்வதற்குமா கூலி உண்டு?" என்று நபிதோழர்கள் கேட்டனர்.

நபியவர்கள் பதிலளித்தார்கள்: "ஒருவர் தம் இச்சையைத் தவறான வழியில் தணித்துக் கொண்டால், அவர் ஒரு பாவத்தைச் சுமந்து கொள்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது போலவே, அனுமதிக்கப்பட்ட வழிமுறையில் தன் இச்சையைத் தணித்துக் கொள்ளும்போது அவருக்குக் கூலி வழங்கப்படுகிறது!"

----

இந்த ஒரு நபிமொழியிலிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது:

ஒன்று: சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று சொல்வதெல்லாம் எப்படி தர்மத்தின் வாசல்கள் ஆகும் என்று ஒருவர் கேட்கலாம்.

சுப்ஹானல்லாஹ் என்று நாம் சொல்லும்போது இறைவன் தூய்மையானவன் என்பதை நாம் "உண்மைப் படுத்துகிறோம்"! அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லும்போது எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதை நாம் "உண்மைப் படுத்துகிறோம்!" அது போலவே இதர தஸ்பீஹ்களும்!

இரண்டு: இறைவன் நமக்குக் கொடுத்திருப்பவை பொருள் மட்டுமன்று! அபூதர் கேட்ட கேள்விக்கு அண்ணலார் பதில் சொன்னது இதனைத்தான்! பொருளைக் கொண்டு செய்வது மட்டும் தர்மம் அன்று! இறைவன் நமக்குத் தந்திருக்கும் ஆற்றல் (talents), உடல் வலிமை, அறிவாற்றல் - இவை அனைத்தையும் கொண்டும் நாம் "தர்மம்" செய்திடலாம். மற்றவர்களுக்கு நாம் செய்திடக் கூடிய ஒவ்வொரு சிறிய பெரிய உதவியும்  கூட தர்மம் தான் என்கிறார்கள் நபியவர்கள்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று என்னவென்றால், நமது ஆற்றல், அறிவு, உடல் வலிமை இவை அனைத்துமே - இறைவன் நமக்களித்தவை தாம் என்ற தூய்மையான எண்ணத்துடன் பிறருக்கு உதவி செய்திடும்போது மட்டுமே அவை அனைத்தும் தர்மம் ஆகும்! ஏனெனில் நமது ஆற்றல்கள் அனைத்துக்கும் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவனே என்பதை நாம் "உண்மைப்"படுத்துவதனால் தான்!

பெருமைக்காகவோ, பிறருக்குக் காட்டுவதற்காகவோ - அவ்வுதவிகள் செய்யப்படுமானால் அவை தர்மமும் ஆகாது! நாம் உண்மையை, உண்மைப்படுத்தவும் இல்லை!

மூன்று: இதுவும் முக்கியமான ஒன்று தான். மனைவியுடன் உடலுறவு கொள்வதிலும் ஒரு உண்மை பொதிந்துள்ளது! ஒருவனது "ஆண்மை" கூட அல்லாஹ் அவனுக்கு அளித்த ஒரு அருட்கொடைதான்! இறைவன் எனக்களித்த ஆண்மையைக் கொண்டு, அவன் அனுமதி அளித்த முறையில், தனது இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும்போது அதுவும் ஒரு தர்மமாகி விடுகிறது! 

மேலே நாம் குறிப்பிட்ட நபிமொழியை சற்று உற்று நோக்குங்கள். தஸ்பீஹ்களைத் தவிர்த்த மற்ற அனைத்து "தர்மங்களுமே" - பிறருடைய தேவைகளுள் ஏதாவது ஒன்றை நிறைவேற்றித் தருவது தான் (Need Satisfaction) என்பதைக் கவனியுங்கள்!

மனைவியுடன் உடலுறவிலும், அவரது தேவையை நிறைவேற்றித் தருதல் என்ற அம்சமும் அடங்கியுள்ளது என்பதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள வேண்டும்! அப்போது மட்டுமே உடலுறவும் ஒரு தர்மம் ஆகும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அதுவல்லாமல், ஒருவர் ஆண்மையைத் தனது ஆண்மை என்று பெருமிதப்பட்டுக்கொண்டு, அதனை என் மனைவியிடம் நான் நிரூபித்துக் காட்டுகிறேன் என்று ஒருவர் நெருங்குவார் எனில் - அது தர்மமும் ஆகாது! அது மட்டுமல்ல! இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

அந்த உடலுறவைப்பற்றி மனைவி என்ன எண்ணுகிறார் தெரியுமா? இவர், என் உடலைப் பயன்படுத்திக் கொண்டாரே தவிர என் தேவைகளை அவர் புரிந்து கொள்ளவே இல்லை!

(அது போலவே, ஒவ்வொரு மனைவியும், இறைவன் தமக்களித்த பெண்மையைக் கொண்டு தன் கணவனின் தேவையை நாம் நிறைவேற்றுகிறோம் என்றே எண்ணிட வேண்டும்.)

இன்னொரு நுட்பமான விஷயம். மனைவியைத் தவிர்த்த எந்த ஒரு உடலுறவாக இருந்தாலும், அதில்  சுய நலம் மட்டுமே எஞ்சியிருக்கும். விபச்சாரம் செய்பவன் - தன் இச்சையைத் தணித்துக் கொள்ளவே விழைகிறான். விபச்சாரிக்கும், தன்னிடம் வருபவனைத் திருப்தி செய்திட வேண்டும் என்ற எண்ணமும் இருப்பதில்லை! அது வெறும் உடல் சேர்க்கை மட்டும் தான்!

மனைவியிடம் உடலுறவு, அது மகத்தானது!

**

இறுதியாக நாம் சொல்ல வருவது என்னவெனில், தர்மம் செய்வதற்கு உளத்தூய்மை மிக அவசியம்!

நாம் செய்யும் தர்மங்கள் அனைத்தும் இறைவன் நமக்களித்தவையே என்பதை உண்மைப்படுத்தினால் அந்த தர்மம் - மகத்தானது: பல்கிப் பெருகக் கூடியது!

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (2:261)

மனத்தூய்மையுடன் செய்யப்படும் தர்மத்தின் மகத்துவத்தைப் பறைசாற்றும் இன்னுமொரு நபிமொழி: 

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான் எனும் நபிமொழியை நாம் அறிவோம். அந்த ஏழு கூட்டத்தார்களில் - "வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவரும்"- அடங்குவர்! (புகாரி, முஸ்லிம்)

மாறாக, "எனது" செல்வத்திலிருந்து "நான்" செலவு செய்கிறேன் என்று ஒருவர் கொடுத்தால் - அந்த தர்மத்தின் நிலை என்ன?

 நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. (2:264)

பெருமைக்கும், பிறருக்குக் காட்டுவதற்காகவும் செய்யப்படும் தர்மங்கள் நம்மை இறை நிராகரிப்பில் கொண்டு போய் நம்மை விட்டு விடும் என்று எச்சரிக்கிறது இவ்வசனம்.
"எவன் ஒருவன் பிறருக்குக் காட்டுவதற்காகவே தர்மம் செய்கிறானோ அவன் நிச்சயமாக இணை வைத்து விட்டான்!" - என்பதுவும் நபிமொழியே.

இறைவனுக்குச் சொந்தமானதைத் தனக்குச் சொந்தமானது என்று எண்ணுவதும் இணை வைத்தல் தானே?

நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.(6:162)

இறைவனே மிக அறிந்தவன்!

***

Comments