இஸ்லாத்தில் சமூக நீதி



(இஸ்லாத்தில் சமூக நீதி குறித்த கட்டுரைகள் - முன்னுரை)

இஸ்லாத்தில் சட்டவியலும் சமூகவியலும்

இஸ்லாத்தின் சட்டவியலுக்கு ( islamic theology) நாம் கொடுத்து வருகின்ற முக்கியத்துவம் போல நாம் இஸ்லாத்தின் (islamic sociology) சமூகவியலுக்குக் கொடுப்பதில்லை என்பது வேதனையானதொரு விஷயம் ஆகும். இதனை இன்றைய பல இஸ்லாமிய அறிஞர்களே சுட்டிக்காட்டுகின்றனர். இவை இரண்டுமே, இஸ்லாம் எனும் நாணயத்தின் சரிசமமான இரண்டு பக்கங்கள்!

ஆனால், துரதிருஷ்டவசமாக, இன்னும் நாம் இஸ்லாமிய சட்டவியலில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம், இஸ்லாத்தை "ஒரு தவறான வடிவில்" (a distorted picture) தான் சமர்ப்பித்துக்  கொண்டிருக்கின்றோம்! பொதுவாக, தமிழகத்திலும், நம்மில் பலரும்  கூட, சட்டவியல் சிக்கலில் தான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றோம்.

இன்று அதிக அளவில் இஸ்லாத்தின் சமூகவியலை - ஆங்கிலத்தில் - எடுத்துப் பேசுகின்ற இஸ்லாமிய அறிஞர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் தான் உமர் சுலைமான் அவர்கள்.  இஸ்லாத்தில் சமூக நீதி (Social Justice in Islam) எனும் தலைப்பில் அவர்கள் ஒரு நாற்பது நபிமொழிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, நாற்பது அருமையான உரைகளை ஆற்றியிருக்கிறார்கள்.

இஸ்லாமிய சமூகவியலின் பக்கம் நாம் திரும்ப வேண்டும்; அது குறித்து கலந்துரையாடல்கள் நிகழ்த்தப்பட வேண்டும்; அதனை விவாதித்திட  வேண்டும்; அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே என் பெரு விருப்பங்களுள் ஒன்று!

இந்த நோக்கத்தை முன் வைத்துத் தான், உமர் சுலைமான் அவர்களின் உரைகளில் ஒரு சில பகுதிகளை தமிழ் கூறு நல்லுலகத்தின் பார்வைக்கு வைக்குமுகமாக, இஸ்லாத்தில் சமூக நீதி எனும் தலைப்பில், இன்ஷா அல்லாஹ், தொடர்ந்து எழுத உள்ளோம்.

***

முன் குறிப்பு ஒன்று:

நான் அநியாயம் செய்கின்றேனா?

இஸ்லாத்தில் சமூக நீதி என்பது - நமது முழு வாழ்வையும் தழுவியது. இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை ஒரே சொல்லில் அடக்கிச் சொல்ல வேண்டும் என்றால் அது நீதி என்ற ஒரே சொல் தான் என்று சொல்லி விடலாம்! Islam is synonymous with justice!

தனி மனித நீதியில் தொடங்கி,  உலகளாவிய மனித உரிமைகள் வரை - அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாமிய நீதியியல் கோட்பாடு.

ஆனால், எந்த ஒரு கிளை அம்சத்தையும் குறைத்து மதிப்பிட்டு விடாமல், இங்கே நாம் முதன்மையாக  முற்படுத்தும்  அம்சம் என்னவெனில் - தனி மனித நீதி குறித்துத் தான்! அதாவது, இதனை எழுதுகின்ற என்னில் தொடங்கி, இதனைப்படிக்கின்ற ஒவ்வொருவரும், தனக்குத் தானே, முதன் முதலில் கேட்டுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வியே: "நான் அநியாயம் செய்கின்றேனா?" - என்பது தான்!]

எஸ் ஏ மன்சூர் அலி

Comments