அநியாயம் ஒன்றைச் செய்து விடுவது குறித்துஅண்ணலாரின் மன நிலை!


(இஸ்லாத்தில் சமூக நீதி குறித்த கட்டுரை – 1 - C )

எஸ் ஏ மன்சூர் அலி 

இந்த பூமியில் நீதியை நிலை நிறுத்துவதற்கென்றே அனுப்பி வைக்கப்பட்ட அண்ணலார் அவர்கள், யாருக்கேனும் கிஞ்சிற்றும் "அநியாயம்" ஒன்றைச் செய்திடுவார்கள் என்று நாம் கற்பனை கூட செய்து பார்த்திட முடியுமா?

வாய்ப்பே இல்லை தானே?

ஆனால்,  அநியாயம் ஒன்றைச் செய்து விடுவது குறித்துஅண்ணலாரின் மன நிலை என்ன தெரியுமா?

அவர்கள், இது குறித்து அல்லாஹ்வை அஞ்சியிருக்கிறார்கள் அவர்கள் என்று அறிய வரும்போது வியப்பின் உச்சிக்கே நாம் சென்று விடுவோம்!   

தாம், தம்மை அறியாமலேயே, யாருக்கேனும் அநியாயம் ஒன்றைச் செய்து விடுவோமோ என்று  அஞ்சி நடுங்கியிருக்கிறார்கள் அண்ணலார் அவர்கள்! அநியாயம் செய்வதனால் ஏற்படுகின்ற விளைவுகளை அவர்கள் அறிந்து வைத்திருந்ததால் தான் அப்படிப்பட்ட இறையச்சம்!

அதனால் தானோ என்னவோ, ஒவ்வொரு நாளும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் போதெல்லாம், அவர்கள் தொடர்ந்து கேட்டு வந்த துஆக்களில் - இப்படியும் ஒரு பகுதி உண்டு:

"யா அல்லாஹ்! ..... நான் எவர் ஒருவருக்கும் அநீதி இழைப்பதை விட்டும், எனக்கு எவராலும் அநீதி  இழைக்கப்படுவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்..... (உம்மு சலமா (ரளி) அவர்கள் இதனை அறிவிக்கிறார்கள்)

O Allah! I seek refuge in You from... doing injustice or being done injustice to me.”

சுப்ஹானல்லாஹ்!

ஆனால், நம்முடைய நிலை என்ன?

நமது மேன்மைக்குரிய அறிஞர் பெருமக்கள் - தாம் அநியாயம் ஒன்றைச் செய்து விடுவது குறித்து எப்படி அஞ்சியிருக்கிறார்கள் என்பதற்கு இரு சான்றுகளைத் தருகிறோம்:

சுப்யான் அல் தவ்ரி (ரஹ்) அவர்கள் சொல்வார்களாம்.

"நாளை மறுமையில், நான் அல்லாஹ்வுக்கு மட்டுமே பதில் சொன்னால் போதுமானது என்றாகி  விடுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்."

நாளை மறுமையில், நம்மை மன்னிக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவனே! நாம் யாருக்கு அநியாயம் செய்தோமோ, அவர்களிடத்தில் , நாளை மறுமையில் போய், மன்னிக்கும் இயல்பை எதிர்பார்க்க முடியுமா என்ன?   

Sufyan At-Thawri used to say: “ I wish that on the day of Judgment the only One I will have to deal with is Allah.”

இமாம் ஷாபி (ரஹ்)அவர்கள் சொல்வார்களாம்: "எவருடைய மரணத்தோடு, அவரது பாவங்களும் மரணித்து விடுகின்றனவோ, அவனுக்கு அது நற்செய்தியாகும்!"

“Glad tidings to the one who has passed and their sins die with them.” 

Comments